Sunday, October 30, 2022

யாருக்காக எழுதுகிறது இந்து தமிழ் திசை?

யாருக்காக அபாண்டமாக வலிந்து எழுதுகிறது 'இந்து தமிழ் திசை' ஏடு?

கவிஞர் கலி. பூங்குன்றன்

வயிறு குலுங்கச் சிரியுங்கள்!

அண்ணா 1968 அக்டோபர் 3ஆம் தேதி திருத்தணி முருகனைத் தரிசித்தாராம்! உண்மை என்னவென்றால் அந்தக் கால கட்டத்தில் அண்ணா அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பதுதான்.

'இந்து தமிழ் திசை' நாளேடு - 'தினமலர்' 'தினமணி'யோடு ஜோடி சேர்ந்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நடு நிலைபோல் நடித்துக் கொண்டிருந்த அதன் ஜிகினா வெளிறி விட்டது.

சில நாட்கள் முன் யாரோ ஒரு அநாமதேயத்தைத் தேடிப் பிடித்து தந்தை பெரியார் பற்றித் தப்பும் தவறுமாக உளறிக் கொட்டி கட்டுரையாக்கி மகிழ்ந்தது.

நேற்று வெளிவந்த ஏட்டிலும் (29.10.2021) "கடவுள் மறுப்பைக் கை விடுகிறதா திராவிட இயக்கம்?" எனும் தலைப்பில் தோழர் செல்வ புவியரசன் பொறுப்பு இல்லாமலும், ஆதாரமில் லாமலும் எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது, ஏதோ ஒரு திட்டத்தோடுதான் களத்தில் இறங்கியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

"கடவுள் மறுப்பைக் கைவிடுகிறதா திராவிட இயக்கம் என்ற கேள்வியைக் கேட்டு சகட்டு மேனியாகக் குற்றம்" சாட்டப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்து தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சி என்ற நிலையில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்!' என்பதை கொள்கையாகக் கொண்டு விட்டது. மதிமுக, அதிமுகவும் அந்த நிலைப்பாட்டில் உள்ளவைதான்.

இக்கட்சிகளில் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் உண்டு என்றாலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது அக்கட்சிகளால் அறிவிக்கப்பட்ட ஒன்று.

இந்த நிலையை, வேறுபாட்டைக் கூடப் புரிந்து கொள்ளாமல் தோழர் புவியரசன் எழுதுவது  ஏற்புடையதுதானா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக உள்ள ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும்.

சமூகப் புரட்சி இயக்கத்தையும், தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளையும் சமப் பார்வையில் பார்ப்பது சரியான சறுக்கல் சிந்தனை.

அண்ணாவைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பாளர்தான். கலைஞர் அவர்களும் அந்த நிலையில் உள்ளவர்தான். பல தடவை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த தூத்துக்குடி துறைமுகத் திட்டம், அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் - சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில்  ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசாமி கோயிலுக்கு வருமாறு முதலமைச்சர் அண்ணாவை   அழைத்தார், ஆனால் தான் கோயிலுக்கு வருவதற்கில்லை, வேண்டுமானால் தன் குடும்பத்தில் ஒருவரை அனுப்புவதாகவும் அண்ணா கூறினார். இத்தகவலை ஒன்றிய அமைச்சரே செய்தியாளர்களிடம் கூறியதுதான் முக்கியம் ('விடுதலை' 20.9.1967).

இந்தநிலையில் திருத்தணி ஆலயத்தில் மலைப்பாதையைத் திறந்து வைக்கச் சென்றபோது முருகனைத் தரிசித்தார் அண்ணா என்பது எல்லாம் எத்தகைய அபாண்டம்!

இதில் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்கும் ஓர் செய்தி உண்டு.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1968 அக்டோபர் 3 அன்று திருத்தணி ஆலயத்தில் மலைப் பாதையைத் திறந்து வைக்கச் சென்றபோது முருகனைத் தரிசித்தார் என்று எழுதுகிறார் எழுத்தாளர் செல்வ புவியரசன்.

இதனைப் படிக்கும்பொழுது எவ்வளவு பொறுப்பு இல்லாமல் அபாண்டமாக எழுதுகிறார் ஒருவர் என்பதை அறிய முடிகிறது.

முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக 1968 செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்று 1968 நவம்பர் 6ஆம் தேதிதான் சென்னை திரும்பினார் - இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் எழுத்தாணி பிடிக்கும் இவர்களை.

அமெரிக்காவிலிருந்து திருத்தணி முருகனை கும்பிட்டார் என்பார்களோ!

இன்னொரு நகைச்சுவை, சென்னையில் நடந்த மதிமுக மாநாட்டில் கி.வீரமணி முன்னிலையிலேயே வைகோ முன் வைத்த கருத்தை துரை. வையாபுரி முழக்கமாக்கியிருக்கிறார். ('பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்" என்று துரை வைகோ கூறியதை வைத்துக் கொண்டே இப்படி எழுதுகிறார்).

எத்தனை மேடைகளில் ஏறினாலும் கி. வீரமணி கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால் அன்று வைகோ பேசியதன் உட்கருத்தை கி. வீரமணி ஏற்றுக் கொண்டார் என்றே அவரது சமீபத்திய புத்தகத்துக்கு 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" என்ற  தலைப்பு வைத்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார் புவியரசன்.

அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. "மொட்டைத்  தலைக்கும் முழங்காலுக்கும் விளக்கெண்ணெயில் துவைத்த நூலால் முடிச்சுப் போடும்" பேதைமைதான் என்னே, என்னே.

'டிரோஜன்' குதிரை என்பதற்கு அந்நூலிலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோமர் எழுதிய கிரேக்க இதிகாசமான இலியட் (Iliad) டில் டிராய்க் கோட்டைக்குள் கிரேக்கப் போர் வீரர்கள் ஒளிந்து கொண்டு நுழைவதற்காக உருவாக்கப்பட்ட குதிரை வடிவிலான பெரிய மரப் பொம்மை" என்று பாலபாடமாகச் சொல்லிக் கொடுத்த பிறகும் மக்குப் பிள்ளையாக ஏதோ கொள்கை தவறு நடந்து விட்டது என்று தர்க்கம் செய்ய ஆசைப்படலாமா?

ஒருக்கால் ஆர்.எஸ்.எஸை ஒரு தந்திரமான - சூழ்ச்சியான செயல்பாடு உடையது என்று கூறலாமா என்ற கோபத்தின் குடைச்சலில் எழுதப்பட்டதா?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாகக் கடைசியில் பெரியாரையும் கடிக்க ஆரம்பித்து விட்டது. 'தமிழ் இந்து'.

கடவுள் மறுப்பை ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்த பெரியாரும், அண்ணாவும் கூடத் தங்களது கொள்கையைக் குடும்பத்தினரிடத்தில் நடைமுறைப் படுத்த இயலாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நாகம்மைக்கு முதல் குழந்தை பிறந்து இறந்த நிலையில் அடுத்த குழந்தைப் பேறுக்காக வேண்டிக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்துப் போனதை பெரியார் பின்பு வானொலியில் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்! என்கிறார் தமிழ் இந்துக் கட்டுரையாளர்.

"மொட்டைதாதன் குட்டையில் விழந்தான்" என்று போகிற போக்கில் எதையும் எழுதலாமா?

எந்தப் பேட்டியில் எப்பொழுது கூறினார் என்று சொல்வதுதான் அறிவு நாணயம்.

கோயிலுக்குச் செல்லும் நாகம்மையாரை பெரியார் எப்படி திருத்தினார் என்பதை அறியாப் பிள்ளைகளும் அறிவார்கள் - ஆனால் தோழர் புவிக்குத் தெரியவில்லை என்பதா - இதன் பின்னணியில் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் கெட்ட நோக்கம் உள்ளது என்று கருதுவதா?

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஒரு தரப்பினர் மட்டுமே முழுமையாகப் பின்பற்ற முடியும். அவர்களிலும் ஒரு பகுதியினரே அவரை அடி பிறழாது தொடர முடியும் என்று கூறி 'மங்களம்' பாடி கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.

கடவுளை மறுப்பதற்கு பகுத்தறிவுச் சிந்தனையும், துணிவும் தேவை. இதனைப் பெரும்பாலோர் ஏற்பர் என்று பெரியாரும் நம்பவில்லை. அதனாலே அந்தக் கொள்கை குறைபாடு உடையது என்று பொருள் அல்ல.

உண்மையைச் சொல்லப் போனால் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்பவர்கள்கூட உண்மையிலேயே நடைமுறையில் கடவுளை நம்புகிறார்களா? என்பதை சிந்தியுங்கள்!

கடவுள் பார்த்துக் கொள்வார் என்றால் கரோனா தடுப்பூசி ஏன்? சங்கராச்சாரியாரே சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்குச் சென்றுதானே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.

புட்டபர்த்தி சாயிபாபா மாதக் கணக்கில் வைத்தியம் பார்த்துக் கொள்ளவில்லையா!

இந்த இரட்டை வாழ்க்கை இல்லாதவர்கள்தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள். இதனை ஒரு பலகீனமானது என்றோ, வெற்றி பெற முடியாதது என்றோ எழுதுவது - கருதுவது எல்லாம் முதுகெலும்புள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.

"மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அவரது மகன் துரை.வைகோவும் பெரியார் திடலுக்கு வந்த போது வைகோவுக்கு அருகில் கி. வீரமணியும், துரை வையாபுரிக்கு  அருகில் அன்பு ராஜும் நின்று கொண்டிருந்த காட்சியே வாரிசுகளைக் களத்தில் இறக்குவது குறித்த கேள்விக்குப் பதில் சொல்லி விட்டதாம்" - எழுதுகிறார் தோழர்.

திராவிடர் கழகத்தை வலிந்து தாக்கும் தரத்தைத் தன் தலைமேல் சுமந்து கொண்டுள்ளார் என்பதற்கு இது ஒன்றே போதும்.

தலைவர் வீரமணி அவர்களுக்குப் பக்கத்தில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் நின்று கொண்டிருந்தாரே அது தோழர் புவியரசனுக்குத் தெரியாதோ! இதை மறைப்பதன் மூலம், எழுத்தாளரின் உள்நோக்கம் பளிச்சென்று புரிகிறது.

தோழர் அன்புராஜ் திராவிடர் கழகத்தின் மூன்று பொதுச் செயலாளர்களுள் ஒருவர். வைகோவும், அவரது மகனும் வந்த நேரத்தில் அவர் இருந்தார். அது குற்றமா? இருந்தாலும் அவர் எப்படி வரவேற்கலாம் என்கிறாரா?

தோழர் அன்புராஜ் அங்கு இல்லாதிருந்து, வேறு ஒரு கழகத் தோழர் இருந்திருந்தால் அவர்தான் தி.க.வின் அடுத்த தலைவர் என்பாரோ? இவர் யாருக்காக எழுதுகிறார்? இதனால் பயன் யாருக்கு? என்பது எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரைப் பற்றி ஒரே ஒரு வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பற்றி கால் வரி கண்டித்து எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதே நேரத்தில் அரசு நிகழ்ச்சியிலோ, கல்விக் கூடங்களின் நிகழ்ச்சியிலோ கடவுள் வாழ்த்துப் பாடப்படும் போது, தள்ளாத வயதிலும், தனியாக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் இரண்டு தோழர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு, கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி முடிக்கப்படும் வரை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்த தலைவரின் பண்பாட்டின் உச்சத்தையும் இணைத்து எழுதுமா இவர்களின் எழுதுகோல்கள்?

என்ன செய்வது அனுமார்கள் இராமாயண காலத்திலிருந்தே  இருந்து தொலைக்கிறார்களே!