Monday, December 30, 2019

நாவலரது பிற்கால நிகழ்வுகள்-பகுதி - 2

பகுதி - 2
(1879-2001)
நாவலரது பிற்கால நிகழ்வுகள்
இராமநாதன் -பிறிற்றோ

சென்னப்பட்டணத்தில் படித்துவிட்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள். அதே சமயத்தில் சட்ட வல்லுநரான திரு. பிறிற்றோ அவர்களும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.  இலங்கைச் சட்டசபையில் இலங்கைப் பிரதிநிதித்துவத்துக்கு இருவரும் போட்டியிட்டனர். நாவலர் அவர்கள் இராமநாதன் அவர்களை ஆதரித்தார்கள். ஆறுமுக நாவலர் அவர்களின் ஆசீர்வாதத்தினால் சேர். பொன். இராமநாதன் அவர்கள் அரைநூற்றாண்டுக்கு மேல் சட்டசபை உறுப்பினராக இருந்தார். நாவலர் பெருமான் மீது மிகவும் பக்தி கொண்டவர் இராமநாதன் துரை அவர்கள்.

இறுதிப் பேச்சு

வண்ணார் பண்ணை சைவப் பிரகாச வித்தியாலயத்தில் 1879 வைகாசி மூல நட்சத்திரத்தன்று வண்ணார் பண்ணைச் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் நாவலர் அவர்களின் இறுதிப் பேச்சு இடம்பெற்றது. அங்கே இருந்த மக்களை நோக்கி, நான் உங்களிடத்திலே கைம்மாறு பெறுதலைச் சிறிது மெண்ணாது நம் சமயத்தவர் களோடும் பெரும்பகையை எடுத்து, முப்பத்திரண்டு வரு­ காலமாக உங்களுக்கு சைவ சமயத்துண்மையைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயங் குன்றிப்போமென்று பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் நான் உயிரோ டிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். இன்றும் என்னைப் போலவே படித்தவர்களும் சன்மார்க்கர்களுமாய் அனேகர் வருவார்கள். ஆனால் உங்களுடைய வைவைக் கேட்டுக் கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போலே ஒருவர் வரார்.

1879 கார்த்திகை (பிரமாதி வரு­ம்) மாதம் மக நக்ஷத்திரமும் சப்தமி திதியும் பொருந்த வந்த புண்ணியவேளையிலே ஸ்ரீ நடராஜபெருமானுடைய குஞ்சிதபாத நிழலை அடைந்தார்.

வித்தியாசாலையை நிர்வகித்தவர்கள்

1858 இல் திரு. மு. தில்லைநாத பிள்ளை அவர்களும் 1864 இல் வித்துவ சிரோமணி ந.ச.பொன்னம்பல பிள்ளை அவர்களும் 1866 இல் திரு. மா. வைத்தியலிங்கபிள்ளை அவர்களும் வித்தியாசாலைப் பொறுப்பை மேற்கொண்டு நடத்தியிருக்கின்றார்கள் என்று தெரிய வருகிறது. குறித்த வித்தியாலயத்தின் கல்வித் தொண்டில் குப்பிளான் செந்திநாதையர் அவர்கள் நாவலர் பெருமான் காலத்திலேயே அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

முகாமையாளர்கள்

நாவலருக்குப் பின் சீட பரம்பரையினரான திரு. ந.க. சதாசிவப் பிள்ளை தர்ம பரிபாலகராகக் கடமையாற்றினார். அவருக்குப் பின் தம்பு கைலாசப் பிள்ளை அவர்கள் கடமையாற்றினார்1.( 1935 இல் மனேஜர் த. கைலாச பிள்ளை அவர்கள் தமது உரித்தை மருகரான வேலணையூர் மு. சோமசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு வழங்கினார். அவருக்குப் பின்னர் அவரது மனைவியார் (கைலாசப் பிள்ளை அவர்களது மகள்) திருமதி. செல்வம் சோமசுந்தரம் நியமனம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு திரு.வி.முத்துக்குமாரு அவர்கள் மனேஜராக நியமனம் பெற்றார்.

காவியப் பாடசாலை

ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்களது பரிபாலன காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் பண்டித பரீட்சைகள் நடத்தப்பட்டன. கற்றறிந்த மாணவர்களுக்குப் பாரதி பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தார்கள்.
இது ஒருபுறம் இருக்க நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் காவிய வகுப்புகள் ஆரம்பமாயின. அவ்வகுப்பில் சேர்ந்து படித்தவர்களுக்கு உண்டியும் உறையுளும் இலவசமாக வழங்கப்பட்டன.  இலங்கைப் பல்கலைக் கழகத்தினரால் இலக்கியக் கலாநிதி என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பெற்ற பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தினால் இலக்கிய கலாநிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களும் நாவலர் காவிய பாடசாலையில் படித்தவர்களே. புலவர் சிகாமணி ஸ்ரீமத் அ. குமாரசாமிப் புலவர் அவர்கள் குறித்த வகுப்பின் பொறுப்பாசிரியராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தில் தலைமை ஆசிரியர்கள்

ஆசிரிய உலகில் புகழ்பூத்த பலர் இப்பாடசாலையில் காலத்துக்குக் காலம் தலைமை ஆசிரியராகளாகப் பணிபுரிந்தார்கள். பூமி சாத்திர நூல்களை அந்தக் காலத்தில் மாணவர்களது நலன் கருதி எழுதி வெளியிட்டவரான திரு. கா. இளைய தம்பி அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்து பணி செய்தார். அவரை அடுத்துத் தலைமை ஆசிரியராக இருந்தவர் திரு. ம. வைத்தியலிங்கம் அவர்கள்.

நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் மிக நீண்டகாலம் ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் சேவையாற்றிய பெருமை வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்களுக்கே உரியது. சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபராக ஒரு காலத்தில் பணியாற்றியவர் மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை புலவர் அவர்கள். அவர்களது முயற்சியாலும் தூண்டுதலாலும் சிதம்பரத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர் வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்கள். இலக்கணத்துறையில் மேதையான வித்துவானவர்கள் 1928 இல் இருந்து 1960 வரை பணியாற்றினார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் வித்துவானது சேவை நீடித்தது. பாடசாலை மாணவர்கள் மாத்திரமின்றி யாழ்ப் பாணத்தில் கல்வியில் ஆர்வமுடைய பலர் வித்துவானவர்களுக்கு மாணவர்களா யிருந்தார்கள். வித்துவானவர்கள் ஓய்வுபெற்ற பொழுது கல்விமான்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்துவான் அவர்களது சேவையை மிகவும் பாராட்டி விழா எடுத்து மகிழ்ந்தனர்.

பாடசாலைகள் சுவீகரிப்பு

பாடசாலைகளை அரசாங்கம் கையேற்கிற ஒரு காலம் பிறந்தது. உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளைச் சேர்ந்த முகாமையாளர்கள், கல்விமான்கள் எதிர்த்தபொழுதிலும் பாடசாலைகளைச் சுவீகரிக்கும் முயற்சியில் விடாப்பிடியாக இருந்தது அரசு. நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையையும் அரசு கையேற்க இருந்த சமயத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாவலர்  நோக்கத்துக்கு அமைவாக நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை சுதந்திரமாக இயங்க வேண்டுமென்ற குரல் பரவலாக எழுப்பப்பட்டது. எனினும் 1960 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாந் திகதி அரசாங்கம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையைக் கையேற்றது.
இப்படியானதொரு சூழ்நிலையில் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பதவியை ஏற்றார் பண்டிதர் வித்துவான் சைவப் புலவர் இ. திருநாவுக்கரசு அவர்கள்.

நாவலர் தர்மகர்த்தாசபை

அரசாங்கம் பாடசாலைகளைச் சுவீகரித்த சந்தர்ப்பத்தில், சில பாடசாலைகளின் சொத்துக்களைப் பேணும் வகையில் தர்மகர்த்தா சபைகளை நிறுவியது. நாவலர் பெருமான் அவர்களது தர்மத்தைப் பேணும் நோக்கில் நாவலர் தர்மகர்த்தா சபையும் ஏற்படுத்தப்பட்டது.

தர்மகர்த்தா சபைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு கல்விப் பணிப்பாளர் களுக்குக்குரியது. பாடசாலை அதிபர்கள் செயலாளராகவும் பொருளாளராகவும் பணிபுரிய வேண்டும் என்று அரசு விதி செய்தது. பாடசாலைத் தாபகர் நோக்கத்துக்கு அமைவாக அரங்கத்தவர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.

நாவலர் தர்மகர்த்தா சபையின் தலைவராக உதவி வித்தியாதிபதி திரு.சி.உ.சோம சேகரம் அவர்களும் காரியதரிசியாகத் தலைமையாசிரியர் திரு. இ. திருநாவுக்கரசு அவர்களும், நிர்வாகசபை உறுப்பினர்களாக சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்களவர்களும் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் திரு. ச. பொன்னு சுவாமி அவர்களும் நியமனமானார்கள்.
குறித்த நாவலர் தர்மகர்த்தா சபை செவ்வனே இயங்கி வருகிறது. தற்போது குறித்த சபையின் தலைவராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. செல்வ ராணி மகாலிங்கம் அவர்களும், செயலாளராக நாவலர் மகா வித்தியாலய அதிபர் திரு.ந.சிவராஜா அவர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியமணி அ.பஞ்சாட் சரம் அவர்கள், சைவப் புலவர் வ. கந்தசாமி அவர்கள் ஆகிய இருவரும் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். நாவலர் தர்மகர்த்தா சபை சார்பில் நாவலர் நோக்கங்களுக்கு அமைவாக தமிழ் வகுப்புகள், சமஸ்கிருத வகுப்புகள், திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பண்டித வித்வான் திரு. இ. திருநாவுக்கரசு அவர்களுக்குப் பின்னர் பண்டிதர் க. இராசையா, திரு. த.வேலுப்பிள்ளை, வித்துவான் க.ந.இரத்தினவேல், வித்துவான் இ.வைத்தியலிங்கம், திரு.வ.சிவஞான சுப்பிரமணியம், திரு. ஐ.துரைராசா ஆகியோர் முறையே அதிபர்களாக இருந்து பணிபுரிந்தார்கள். நாவலர் நோக்கங்களுக்கு அமைவாகப் பாடசாலையை நடத்தி வந்த பெருமை இவர்கள் அனைவருக்கும் உண்டு. நாவலர் வித்தியாசாலையில் அதிபராக இருந்து எதிர்பாராத விதமாக அமரத்துவம் அடைந்த திரு. ஐ.துரைராசா அவர்கள் பாடசாலை வளர்ச்சி கருதி நாவலர் தர்மகர்த்தாசபை யூடாக எடுத்த முயற்சிகள் எண்ணில்லாதவை. மேற்படி பாடசாலையின் நூற்றைம்பதாவது ஆண்டு பூர்த்தியை மிகவும் விமர்சையாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் விழா சம்பந்தமான முயற்சிகளில் உன்னிப்பாக ஈடுபட்டார்.

நாவலர் பாடசாலையின் பழைய மாணவரும், பிரதி அதிபராகப் பணி புரிந்தவருமான திரு. ந. சிவராஜா அவர்கள் தற்போது அதிபராகப் பணிபுரிகின்றார். நாவலர் பெருமான் நோக்கங்கள் நிறைவுபெற முன்னைய அதிபர்கள் எவ்வாறு சேவையாற்றினார்களோ அவர்களது கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு பணியாற்றி வருகின்றார் திரு. ந. சிவராஜா அதிபர் அவர்கள்.

விசேட வகுப்பு

நாவலர் பாடசாலைக்கு மிகவும் அண்மையில் வாழ்ந்தவர் வியாகரண சிரோமணி தி.கி. சீதாராம சாஸ்திரிகள் அவர்கள். கல்விமான்கள் சாஸ்திரிகள் அவர்களைச் சமஸ்கிருதக் கடல் என்று போற்றுவார்கள். பேரறிஞரான சாஸ்திரி களும் கோப்பாய் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்களும் நாவலர் பாடசாலையில் சமஸ்கிருத வகுப்புகளை நடாத்தி வந்தனர். அவர்களிடம் பாடங் கேட்டவர்கள் பலர் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார்கள் என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. நாவலர் காவியப் பாடசாலையில் சமஸ்கிருதக் கல்வியை பெற்ற அந்தணச் சிறார்கள் சைவக் குருக்கள்மாராக இங்கு விளங்குகின்றார்கள்.

திருமுறை வகுப்பு

சங்கீதபூ­ணம் பே. சந்திரசேகரம், சங்கீதபூ­ணம் உடுவில் ந. சண்முகரத்தினம் (இசைப் புலவர்), சங்கீதத்துறையில் விற்பன்னர்களாக விளங்கிய திருவாளர்கள் எஸ். நமசிவாயம், திரு. க. நடராசா, எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இசை வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தனர். பரதநாட்டியக் கலை வளர்ச்சிக்கு திரு. சி. எஸ். சரவணமுத்து அவர்களும் பக்கவாத்தியக் கலை வளர்ச்சிக்கு மிருதங்க வித்துவான் களான எம்.என். செல்லத்துரை, என். தங்கம் வயலின், எஸ்.வைத்தீசுவர ஐயர், எஸ். சோமாஸ் கந்தா, ஜீ.சண்முகானந்தம் முதலானவர்களும் பேராதரவு நல்கினார்கள்.

தமிழ் வகுப்பு

1953 ஆம் ஆண்டு வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்கள் தலைமையில் ஆரம்பமான தமிழ் வகுப்பில் வித்துவான் க. வேந்தனார், வித்துவான் வ.பொன்னையா, பண்டிதர் வ.மு.இரத்தினசுவர ஐயர், பண்டிதர் சோ. இளமுருகனார், வித்துவான் க. கணேசன், வித்துவான் க. கார்த்திகேசு ய.பு., , வித்துவான் லு.லு. நடராஜா ஆகியோர்கள் ஆசிரியர்களாக அமர்ந்து கற்பித்தார்கள். சைவ சித்தாந்த அறிஞர் தி.சி.நாகையா ய.பு. சைவ சித்தாந்த வகுப்பினை நடாத்தினார். பண்டித, பால பண்டித, பிரவேச பண்டித பரீட்சைகளுக்கு இங்கு கற்ற மாணவர்கள் தோற்றிச் சிறப்பாகச் சித்தியடைந்தார்கள்.

1961 இல் பண்டித வித்துவான் இ. திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. பண்டிதர் க. சரவணமுத்து, வித்துவான் ந. சுப்பையா பிள்ளை, புலவர் எஸ். கனகரத்தினம், வித்துவான் க. கணேசன், பிரம்மஸ்ரீ வை . ஆத்மநாத சர்மா, சைவப் புலவர் இ. செல்லத்துரை, சைவப் புலவர் வ. கந்தசாமி முதலானவர்கள் ஆசிரியர்களாக அமர்ந்து கற்பித்தார்கள்.
1983 முதல் பண்டித வித்துவான் இ. திருநாவுக்கரசு, வித்துவான் க. சொக்க லிங்கம் (சொக்கன்), பண்டிதர் ச. பொன்னுதுரை, கலாநிதி பண்டிதர் மு.கந்தையா, திருமதி. மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம், சைவப் புலவர் க.சி. குலரத்தினம், சைவப் புலவர் வ. கந்தசாமி என்பவர்கள் குறித்த தமிழ் வகுப்புகளில் கற்பித்து வந்தார்கள்.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இவ்வகுப்புகளைத் தொடர்ந்து நடாத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. எனினும் திருமுறை வகுப்பு, தமிழ் வகுப்பு, சமஸ்கிருத வகுப்புகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2001 விஜயதசமி முதல் தர்மகர்த்தா சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வகுப்புகளில் சமஸ்கிருத ஆசிரியராக பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் ய.பு. க்ஷிலிஐவி, பண்ணிசை ஆசிரியராக தேவார இசைமணி யூ. திருஞானசம்பந்தன், தமிழ்ப்பாட ஆசிரியர்களாக சைவப்புலவர் சு.செல்லத்துறை, சைவப் புலவர் வ. கந்தசாமி ஆகியோர் கடமையாற்றுகின்றனர். மேலும் வகுப்புகள் விருத்தியடையும் காலத்து வேறும் சில அறிஞர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க தேர்வுகளுக்கமைய பால பண்டித வகுப்புகளும் நடைபெறுகின்றன. குறித்த வகுப்புகள் அபிவிருத்தியடைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம் பெறும்.

முக்கிய நிகழ்வுகள்

1. நாவலர் நூற்றாண்டு விழாவினையயாட்டி திரு. வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய நாவலர் சரித்திரம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையின ரால் மறுபிரசுரமாக நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் வெளியிடப்பட்டது 1968.

2. நால்வர் குருபூசை, நாவலர் குருபூசை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

3. இலங்கைப்பல்கலைக் கழகம், நாவலர் காவிய பாடசாலையின் மூத்த பழைய மாணவரான பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களுக்கு இலக்கிய கலாநிதி என்ற பட்டத்தினைச் சூட்டி கெளரவித்தது. அதனையயாட்டிப் பண்டிதமணி அவர்களது நினைவாக சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமதை அப்பொழுதிருந்த கல்விப் பணிப்பாளர் (1986 இல்) திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

4. பாடசாலையில் அமைந்துள்ள நால்வர் கோயில் புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறத் தர்மகர்த்தாசபை உரிய நடவடிக்கைகளை எடுத்தது. கும்பாபிஷேகம் 03.04.1998 இல் நடைபெற்றது.

5. நாவலர் பெருமானுடைய சிலையைப் பாடசாலை வளவினுள் அமைப்பதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாவலர் தர்மகர்த்தா சபை எடுத்தது.

6. சேதம் அடைந்திருந்த பாடசாலை முகப்பு முன்போலப் புனரமைப்புச் செய்யப் பட்டுள்ளது.

நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட சைவத்தமிழ்ப் பாடசாலையாகும்.
வடமாநில உதவி வித்தியாதிபதியாகவும், நாவலர் தர்மகர்த்தா சபையின் தலைவரா கவும் சேவையாற்றிய திரு. ச. தணிகாசலம் அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின் றார் (1964):

‘ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஈழத் திரு நாட்டிலே அவதரித்தாராயினும் அவர் சைவத் தமிழுலகம் முழுவதும் போற்றும் ஐந்தாம் குரவர் என்பது உண்மையேயாம். அப்பெருமான் சைவத் தமிழுலகம், புறச்சமய இருளின் நீங்கி விழிப்படைந்து உய்தியடையும் பொருட்டு முதன்முதலாக நிலைநாட்டிய இந்தக் கல்விக் கழகம் சைவத் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வருகின்றது’.

(நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை வெளியீடு, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்).

இனி வருங்காலத்தில் இது இன்னும் பல துறைகளிலும் வளர்ந்து சிறந்து விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் திருவருள் பலிப்பாராக.
பெரியவர்களது  ஆசியின் பிரகாரம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை 1967 முதல் நாவலர் மகா வித்தியலயமாகத் தரமுயர்ந்து நிற்கின்றது.

ஆக்கம் : சைவப் புலவர் இ. செல்லத்துரை, ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்

வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலை வரலாறு (1848-2001) - பகுதி ஒன்று

வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலை
வரலாறு (1848-2001)
பகுதி ஒன்று : 1848 -1879
நாவலர் காலத்தின் நிகழ்வுகள்

ஆறுமுக நாவலரது அபிலாசைகள் 

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள், தமது பன்னிரண்டாம் வயசிலே ஆங்கிலம் படிப்பதற்காக, பார்சிவல் பாதிரியாரது ஆங்கிலப் பாடசாலையிலே சேர்க்கப்பட்டவர்கள். அன்று தொடக்கம் இருபத்தாறாம் வயசு வரை 14 வருட காலம் இப்பாடசாலையிலே முற்பகுதிக் காலத்தில் மாணவராகவும், பிற்பகுதிக் காலத்தில் தமிழ் ‡ ஆங்கில ஆசிரியராகவும் இருந்தவர்கள். இந்த இடத்திலும் அதன் சூழ்நிலைகளிலும் சாதக பாதக நிகழ்வுகள் பலவற்றைக் கண்டும், கேட்டும், தமது உண்மை நெறியிலே சிறிதேனும் தவறாது செயற்பட்டும் நன்கு அநுபவித்தவர்கள்.

இவர்களது அநுபவ நிலையில் உண்டான அபிலாசைகள் குறிக்கோள்களை, அவற்றின் நல்லெண்ணங்களை, இவர்களுக்கு மாணவரான வே. கனகரத்தினம் உபாத்தியாயர் அவர்கள் நல்லூர் - ஆறுமுகநாவலர் சரித்திரம் என்ற தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :

‘கிறிஸ்துமத அனுசாரிகளாகிய பாதிரிமாராலே தாபிக்கப்பட்ட வித்தியாசாலை களிலே கருவி நூல்களோடு அவர்கள் சமய நூல்கள் படிப்பிக்கப்படுதலையும், சைவ சமயிகளாலே பற்பல விடங்களிலும் தாபிக்கப்பட்டிருக்கும் வித்தியாசாலைகளிலே கருவி நூல்கள் மாத்திரம் படிப்பிக்கப்படுதலையும் அவர் கண்டார்.  காணவே, சைவ சமயப் பிள்ளைகளுக்குக் கருவி நூல்களோடு சமய நூல்களும் படிப்பிக்கப்பட்டால், அவர்கள் தம் மதத்தில் நிலைத்து நிற்றல் மாத்திரமின்றி பர மதங்களையும் கண்டித்ததற்குச் சத்தியுடையராயும் வருவார்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்டார். அறியவே, அவ்விரு திற நூல்களையும் படிப்பித்தற் பொருட்டு தாம் ஒரு வித்தியாசாலை தாபித்தல் வேண்டும் என்று... தம் கருத்திற் கொண்டார்’.

‘...தமிழ், இங்கிலிஷ் என்னும் இரு பாஷைகளையும் அதிக கவனத்துடன் கற்கும் காலத்திலே, இங்கிலிஷ் கற்பிக்கிறவர்கள் மிக இலகுவாகப் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்கு... ஏது அப்பாஷை நூல்கள் கத்திய ரூபமாயிருத்தல் என்றும், தமிழ் படிப்பிக்கின்றவர்கள் அவ்வாறு செய்யாமைக்கு ஏது, இப்பாஷை நூல்கள் பெரும்பாலும் பத்தியரூபமாயேயன்றிக் கத்தியரூபமாய் இல்லாமையே என்றும், கத்திய ரூபமாயுள்ள அப்புத்தகங்கள் தானும் சுத்தத் தமிழ் நடையன அல்லவென்றும் அறிந்து கொண்டார்’.

‘.... அநேகர் சற்சமயமாகிய சைவ சமயத்தினின்றும் கிறிஸ்து சமயத்திலே பிரவேசித்தற்குக் காரணம், சைவ சமயத்துண்மையை அறியாமையினால் என்று அறிந்தார்... ஆதலால் எங்கள் சமயத்துண்மையை அவர்களுக்குப் போதித்தலின் மிக்க புண்ணியம் பிறிதொன்றும் இல்லை என்றும், அந்நிய தேசத்தார் இத் தேசத்திலே வந்து தமது சமயத்தை நம்மவர்களுக்கும் போதித்து, அவர்களைத் தம் மதத்தவர்களாக்குகின்றார்களே, நம்முடைய சமயம் நம்மவர்களுக்குப் போதிக்கப் பட்டால் அவர்கள் பர மதப் பிரவேசம் செய்ய மாட்டார்களே என்றும் தெளிந்து சைவப் பிரசங்கம் செய்வதற்கு உறுதி கொண்டார்’.

ஆலமர வித்துக்குள் ஆலமரம்

நாவலர் அவர்கள் குறிப்பிடுகின்றதான வித்தியாசாலை தாபித்தல், தமிழ் வசன நடை ஆக்குதல், சைவ சமயப் பிரசங்கம் செய்தல் ‡ முதலான பயன் தரும் குறிக்கோள்கள் எல்லாம், ‘ஆலமர வித்துக்குள் ஆலமரம்’ போல சைவ வித்தியா சாலை மாணவர்களுக்குள்ளும் அவைகள் அடங்கி நிலைபெற்றுத் தோன்றி நின்று, அவர்களது பிற்காலத்திலும் வளர்ந்து விரிந்து பரவி, நற்பயன்களையே பெறுவார்கள் என்ற எண்ணத்தினால் நான், சைவத்தைப் பிரகாசிக்கின்ற ஒரு வித்தியாசாலையைத் தாபிக்க வேண்டியது மிகமிக அவசியம் என வலியுறுத்தினார் போலும்!

சைவப் பிரகாச வித்தியாசாலை தாபிதம்

அவர்கள், அவ்வாறு அவசியம் என வலியுறுத்தினாராயினும், அதற்குரிய மூலதனம், கட்டடம், தளபாடம் முதலான வளங்கள் அவர்களிடத்தில் இல்லாமை யினால், அச்செயலைக் கைவிட வேண்டிய அவலநிலைமையும் உண்டாக்கக் கூடும்; அப்படி அறிந்திருந்தும், கீலக வருடம் ஆவணி மாதம் 5 உ (21.08.1848) சுக்கிர வாரமும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியும் இரேவதி நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்திலே விருச்சிக லக்கனத்தில் வண்ணார் பண்ணை- வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எதிரரேயுள்ள வீட்டிலே, இந்தச் ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’யைத் தாபித்தார்கள். இங்ஙனம் தாபித்தமை, அவர்களது உறுதியான மனத்தூய்மையும் அதன் துணிவும் திருவருளோடு சேர்ந்திருந்த  தன்னம்பிக்கையும் சுயதேச‡மத‡ பாஷாபிமானங் களில் நிறைவுற்ற உணர்வும் தருகின்ற நற்றுணையே யல்லாமல், வேறு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சை.பி.வி. சாலையின் இடமாற்றம்

நாவலர் அவர்கள் இவ்வித்தியாசாலையிலுள்ள சைவ சமய மாணவர்களுக்குக் கற்பித்தலிலும், சைவ சமயிகளுக்குப் பிரசங்கம் செய்தலிலும் தமது வாழ்நாள் முழுதையும் போக்கல் வேண்டும் என்ற பேராசையினாலே அடுத்த புரட்டாசி மாதத்தில் தம் உத்தியோகத்தைப் பரித்தியாகம் செய்து, தமது நிலைமையை மாற்றியது போல, இவர்களால் தாபிக்கப்பட்ட வித்தியாசாலையும், ஏழு மாதம் வரை அவ்விடத்தில் நடாத்திய பின், ‘ஏதோ ஒரு காரணத்தினால்’ வண்ணை வைத்தீசுவரன் கோயில் மடத்திலே இடமாற்றம் செய்யப்பட்டது.

இவ்வித்தியாசாலையின் ஆசிரியர் நிலைமை

முன்பு தாபிக்கப்பட்ட வித்தியாசாலையிலும், இவ்வித்தியாசாலையிலும் படிப்பித்தவர்கள்,  நாவலர் அவர்களும், அவர்களுக்குப் பழைய மாணவர்களுமே யாவார். இந்த ஆசிரியர்கள், நாவலருக்கு மாணவர்களாதலால், வேதனம் இல்லாமலே கற்பித்தவர்கள். ஆயினும் சில நாள்களுக்குப் பின், நாவலர் அவர்கள், இவ்வாசிரியர்களின் வாழ்க்கை நலன் கருதி (தங்கள் ‘வளம்’ இல்லாத காரணத்தி னால்) பிடியரிசி தண்டி, அதன் மூலம் பெற்ற பொருள் கொண்டு வேதனம் கொடுத்து வந்தார்கள். அதற்குப் பின், பிடியரிசி வரவு, தண்டற் கூலிக்குத் தானும் போதாமை கண்டு அதனையும் கைவிட்டமையால், அவ்வாசிரியர்களுக்குள் சிலர், வறுமை காரணமாக நீங்கிவிட, ஏனையோர் படிப்பித்து வந்தார்கள்.

சைவப் பிரகாச வித்தியாசாலையின் நிலையான கட்டடத் தாபிதம்

வண்ணை-வைத்தீசுவரன் கோவில் மடத்தில், இடமாற்றம் செய்திருந்த இவ்வித்தியாசாலையும் தற்காலிகமே. இது நிரந்தரமாய் நிலையானதாய் அமைய வேண்டியிருந்தது. அதற்குத் தேவையான தனம் மாத்திரமன்று, கட்டடத்தைக் கட்டுதற்குரிய ‘காணிநிலம்’ கூட, நாவலர் அவர்களிடத்தில் இல்லை. இவற்றின் நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டவரும், வண்ணார் பண்ணையில் உள்ள வர்த்தகர்களுள் அதி கெளரவம் உடையவருமாகிய திரு. அ.ஆறுமுகச் செட்டியார் அவர்கள், செளமிய வருடம் ஐப்பசி மாதத்தில் (... 10.1849) ஒரு நிலத்தைத் தரும சாதனம் செய்து வழங்கினார்கள். அந்த நிலத்திலே புண்ணியவான்கள் சிலரின் உதவியுடன் அவ்வித்தியா சாலையின் நிரந்தரமான கட்டடத்தைக் கட்டி முடித்து, அதிலேயே சாதாரண வருடம் தை மாதத்தில் (...1.1850) ஆரம்பித்து நடைபெற லாயிற்று.

சைவ வித்தியாசாலைக்குரிய சைவத் தமிழ் வசன நூல்களும் தமிழ்ச் சங்க நூல்களும்

சைவப்பிரகாச வித்தியாசாலை தாபிப்பதற்கு முந்திய பாடசாலைகளில் படிக்கும் புத்தகங்களில், எழுத்துப் பிழை சொற்பிழை வசனப் பிழைகளே பொதிந்தவை களாகக் காணப்பட்டன. இச்சைவப் பிரகாச வித்தியாசாலையிற் படிக்கும் மாணவர் களுக்குக் கருவிநூல் உணர்ச்சியும், சைவ சமய நூல் உணர்ச்சியும் ஊட்டத்தக்க நல்ல புத்தகங்கள் சிலவேனும் காண்பதற்கும் அரியனவாயின. இக்காரணங் களினால் இம்மாணவர்களுக்கு ஏற்றனவும் சிறந்தனவுமான புதிய நூல்களை ஆக்கியும், முந்திய தமிழ்ச்சங்கம் ஆராய்ந்து வழங்கிய அருந்தமிழ் ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்தும் அவற்றை அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் நாவலர் அவர்களுக்கு உண்டாயிற்று. அதனால் ‘வித்தியாநுபாலன இயந்திர சாலை’ ஒன்றைத் தாபித்து, ஆங்கில பாஷையில் இருக்கும் பாலபாடங்கள் போலத் தமிழ்ப் பாஷையிலும் பாலபாடங்கள் செய்தால், அவைகள் சுயசமயமாகிய சைவ சமயத்தையும் நற்றமிழ் மொழியையும் அனுஷ்டிக்கும் தமிழ் மாணவர்க்கும், பெற்றோருக்கும், பிறருக்கும் மிகப்பிரயோசனம் உள்ளனவாய் இருக்குமென நினைத்து, முதலாம் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், மூன்றாம் பாலபாடம், முதற்  சைவ வினாவிடை, இரண்டாம் சைவ வினாவிடை, பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் இலக்கணச் சுருக்கம் முதலானவற்றை ஆக்கியும், திருக்குறள் தொல்காப்பியம் முதலானவற்றைப் பரிசோதித்தும் அச்சிட்டு வெளியிட்டார்கள்.

இவ்வித்தியாசாலைக்கு - ஆரம்ப முதலீடும், வர்த்தக சாலையும், ஆசிரியர் களுக்குரிய வேதனமும்

நாவலர் அவர்கள், ‘தமது  வித்தியாசலை எந்நாறும் நிலைபெறும் பொருட்டு, ‘முதல்’ சேர்க்க வேண்டுமென்று நினைந்து, இதற்குச் சில வரு­ங்களுக்கு முன்னே நிருபங்கள் எழுதிப் பற்பலவிடங்களுக்கும் அனுப்பியிருந்தார்கள். கொழும்பிலுள்ள சிரேட்ட பிரபுக்களுள் ஒருவராகிய திரு. இ. நன்னித்தம்பி முதலியார் அவர்கள் நள வரு­ம் பங்குனி மாதம் (...........) 400 உ ரூபா அனுப்பியிருந்தார்கள். அத்தொகையையே முதலாக வைத்து பிங்கள வருசம் மாசி மாதம் 14உ  (பிப்ரவரி 1858) அவ்வித்தியசாலையிலே ஒரு சபை கூட்டி, அதன் வரலாற்றைப் பிரசங்கித்தார்கள். அப்போது வந்திருந்த பிரபுக்கள் தங்கள் தங்களால் இயன்றளவு உபகரித்தார்கள்’.

இவர்களின் உதவிகளால் வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையின் பொருட்டு ஒரு வர்த்தக சாலையும் விலைக்கு வாங்கப்பட்டது. மேலும், அநேக வரு­ங்களாக வேதனம் பெறாது படிப்பித்து வந்த உபாத்தியாயர்கள், கலாயுத்தி வரு­ம் சித்திரை மாதம் முதலாக, அப்பொருளின் உதவி கொண்டு வேதனம் பெற்றுப் படிப்பித்து வந்தார்கள்.

நாவலர் காலத்தில் நியமிக்கப் பெற்ற வண்-சை.பி.வி.சாலை அதிபர்கள்
நாவலர் அவர்கள் இருக்கும் காலத்தில் வண்ணை- சைவப் பிரகாச வித்தியாசாலைக்கு முதல் உபாத்தியாயராய் (அதிபராய்) இருந்தவர்கள் - இருவர்.

இவர்களுள் ஒருவர் திரு. மு.தில்லைநாத பிள்ளை. இவர் நியமிக்கப் பெற்ற காலம்: 1858.

இவர், பிரபவ வருசம் ஆனி மாதத்தில் தேகவியோகம் அடைந்த பின் நியமிக்கப் பெற்ற மற்றொருவர் திரு. மா.வைத்தியலிங்க பிள்ளை. இவர் நியமிக்கப் பெற்ற காலம் : 1866-67.

வண்‡சை.பி.வி. சாலைக்குத் தொடர்பான வேறு வித்தியாசாலைகள்
இந்தச் சைவப் பிரகாச வித்தியாசாலைக்குத் தொடர்பாய் இருக்கும் வித்தியா சாலைகள் நான்கு. அவை : சிதம்பர- சைவப்பிரகாச வித்தியாசாலை, கோப்பாய் - வித்யாசாலை, புலோலி - வித்தியாசாலை, வண்ணார் பண்ணை - சைவ ஆங்கில வித்யாசாலை என்பன.

இவற்றுள், சிதம்பர சைவப் பிரகாச வித்யாசாலை, சிதம்பரத்திலே உள்ள மேலை வீதியில் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்திலே, இரத்தாட்சி வரு­ம் ஆவணி மாதம் 6 ஆம் நாள் கட்டடம் கட்ட ஆரம்பித்து, அடுத்த புரட்டாதி மாதத்தில் நிறைவேற்றி, ஐப்பசி மாதம் 28 ஆம் நாள் தாபிக்கப்பட்டது.
கோப்பாயிலே ஒரு வித்தியாசாலையை, வண் - சைவப்பிரகாச வித்தியாசாலை யின் பொருள் கொண்டும், புலோலியிலே மற்றொரு வித்தியாசாலையை அவ்வூர் மக்களின் பொருள் கொண்டும், ஆங்கீரச வருடத்தில் தாபிக்கப்பட்டன.

வண்ணார் பண்ணை - சைவ ஆங்கில வித்தியாசாலையை, இவ்வண்ணார் பண்ணையில் உள்ள மக்களின் வேண்டுகோட்படி, பிரசோற்பத்தி வரு­ம் தை மாதம் (1872) அவ்வூரிலேயே தாபிக்கப்பட்டது. இது, பிற்காலத்தில் கற்பித்தற்குரிய வேதன நிதியம் குறைந்தமையினாலும் அக்கால அரசினரது உதவி செய்யாமை யாலும் அக்கால அரசினரது உதவி செய்யாமையாலும் ஸ்ரீமுக வருடத்தில் கைவிடப் பட்டது.

ஆறுமுக நாவலரின் கல்விப் பணி

நாவலரின் கல்விப் பணி
(வண்ணை சைவப பிரகாச வித்தியாசாலை 150 ஆம் ஆண்டு விழா மலர்)

கல்விச் சூழ்நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் வருவாயினைப் பெருக்குவதற்கும் செலவினைச் சுருக்குவதற்கும்  வழிகளை வகுத்துச் சிபார்சு செய்வதன் பொருட்டு வில்லியம் கோல்புறூக் (William Coebrooke), கமெறன் (C.H. Cameron)  ஆகிய இருவரைக் கொண்ட கொமிசன் ஒன்றினை ஆட்சியாளர் நிறுவினர். அவ்விரு கொமிசனரும் 1831 ஆம் ஆண்டில் தாம் சமர்ப்பித்த அறிக்கையில் கல்வித்துறையிற் பல மாற்றங்கள் உண்டாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் செய்த சிபார்சுகளில் அரசினர் நடத்தும் தாய்மொழிப பாடசாலைகளை மூட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

இதன் விளைவாக 1843 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் அரசினர் நடாத்தும் தமிழ்ப் பாடசாலைகள் மூடப்பட்டன. இதன் பயனாக வெசுலியன் மிசனறி, அமெரிக்கன் மிசனறி முதலிய சமய இயக்கத்தினர் நடாத்தும் தமிழ்ப் பாடசாலைகளுக்கே சைவ சமயத்தைச் சார்ந்த பிள்ளைகளுஞ் சென்று படிக்க வேண்டிய இக்கட்டான நிலை நேர்ந்தது. இம்மிசனறிப் பாடசாலைகள் முழுவதும் கிறீஸ்துவ சமயப் பின்னணியில் நடாத்தப்பட்டன. ஒருவர் கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்திருப்பதே அவர் கல்வி கற்பதற்குரிய முதன்மையான தகுதிப்பாடாக அப்பாடசாலை அதிகாரிகள் கருதினர்.

மேனாட்டுப் பாதிரிமாரும்,  ஈழத்துக் கிறீஸ்தவரும் சேர்ந்து கற்பித்து வந்த இப்பாட சாலைகளில் மாணவர் பலர் காலப்போக்கில் தமது சமயத்தை விட்டுக் கிறீத்துவர் ஆகும் இடர் ஏற்பட்டது. ஆட்சியாளரின் சமயம் என்ற வகையில் கிறீஸ்துவ சமயம் நன்கு வளர்ந்தது. அம்மதத் தொண்டரும் கோவில்களை விடக் கல்விச் சாலைகளை தம் மதத் தொண்டிற்குச் சிறந்த இடமெனத் துணிந்தனர். நாளடைவிற் பாடசாலை களும் பெருகின. உணவு, உடை, நூல், எழுதுங்கருவிகள் முதலியவற்றுடன் இலவசக் கல்வியும் அப்பாடசாலைகளில் வழங்கப்பட்டது. கல்வித்துறையில் மேனாட்டுச் சமய இயக்கங்கள் ஆற்றிய தொண்டு தமிழ் நாட்டுக்கு வந்த சமண, பெளத்தரின் கல்வித் தொண்டினைப் பெரிதும் ஒத்துள்ளது.

ஊணோடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடுமெண்ணும் எழுத்திவை- மாணொடு
கேட்டெழுதி யோதிவாழ்வார்க் கீந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரித்து (ஏலாதி, 63)

இச் செய்யுளிற் கணிதமேதையார் நன் மாணாக்கர்க்கு வாண், உடை, எழுத்தாணி, புத்தகம் முதலியவை கொடுப்போர் நற்கதி அடைவர் என்று கூறி யுள்ளதை நோக்குக.

கல்விப் பணிகள்

நாவலர் இச்சூழலில் தமது ஆங்கிலக் கல்வியை 1841 ஆம் ஆண்டில் முடித்துக் கொண்டு, இதற்குப் பின் பீற்றர் பேர்சீவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பிப்பதிலும் அவருக்குக் கிறீத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் துணையாகினார். தனித்து எண்ணவும் செயலாற்றவும் நாவலர் உரிய வயதை அடைந்ததும் சைவ சமயப் பிள்ளைகள் புறச் சமயச் சார்பான பாடசாலைகளிற் கல்வி பெறுவதால் ஏற்படக் கூடிய தீமைகளை உணர்ந்தார். அச்சூழலை மாற்றத் தலைப்பட்டார். அப்பொழுது அவருக்கு மாத வருவாய் மூன்று பவுண் ஆகும். 1846 ஆம் ஆண்டில் கு. ஆறுமுகஞ் செட்டியார் உதவிய நிலத்திற் பள்ளிக்கூடம் ஒன்றினை எழுப்பு வித்தார். இப்புதுப் பள்ளிக்கூடத்துக்குச் சைவப் பிரகாச வித்தியாசாலை எனப் பெயரிட்டார்1.

This petition was published in the Ceylon Observer of 14th March 1853))

 இப்பெயரே இப்பாடசாலை எழுந்த நன்னோக்கத்தினை விளக்கும். கிறீஸ்தவப் பாடசாலைகள் யாவும் தத்தம் மிசனறிப் பெயரினால் வழங்கின. அவை தம் சமய நோக்கினைப் பெயரளவிலும் உணர்த்தின. நாவலரும் இம்முறையினைத் தழுவித் தம் சமய நோக்கினைப் பெயரளவிலும் உணர்த்தின. நாவலரும் இம்முறையினைத் தழுவித் தம் சமய நோக்கங் கொண்ட கல்வி முறையினை வெளிப்படுத்தினார்.

இந்நோக்கத்திற்கேற்ப நாவலர் தமது சைவப் பிரகாச வித்தியாசாலையில் திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், கொலை மறுத்தல், திருச்செந்தி னிரோட்ட கயமக அந்தாதி, அருணகிரி அந்தாதி, திருவாதவூரர் புராணம் முதலிய சமய நூல்களையும், நாலடியார், திருக்குறள், நீதிநெறி விளக்கம், வாக்குண்டாம், நல்வழி முதலிய நீதி நூல்களையும் பாட நூல்களாக்கினார்2.

நாவலர் வண்ணார்பண்ணையில் 1848 ஆம் ஆண்டில் நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலை பல வழிகளில் ஏனைய தமிழ்ப் பாடசாலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. இவ்வித்தியாசாலையில் ஏழு வகுப்புகள் தொடங்கப் பெற்றன. தரத்தில் மிகக்கூடிய வகுப்பு முதலாம் வகுப்பென்றும், தரத்தில் மிகக் குறைந்த வகுப்பு ஏழாம் வகுப்பு என்றும் வழங்கப்பட்டன.

நாவலர் வெசுலியன் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரான பீற்றர் பேர்சீவல் தூண்டுதலினாற் கீழ்வகுப்புக்களிற் பாடங்கற்பித்தார். இவ்வாறு மேல் வகுப்பு மாணக்கர் கீழ் வகுப்புக்களுக்குப் பாடங் கற்பிக்கும் முறையினை (Monitorial System) டாக்டர். பெல்(Dr. Bell) என்பவர் முதன் முறையாகக் கண்டுபிடித்தார்3.

பாடசாலை ஆசிரியன் வேதனச் செலவினைச் சுருக்குவதற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டமையால் இதனைப் பல பாடசாலை அதிபர்கள் பின்பற்றினர். நாவலரும் தாம் அடைந்த அனுபவத்தினையயாட்டித் தம் வித்தியாசாலையில் தம்மிடம் ஏற்கனவே கற்ற சதாசிவப் பிள்ளை, சுவாமி நாதயைர், நடராசையர், விசுவநாதையர், ஆறுமுகப் பிள்ளை கந்தசுவாமிப் பிள்ளை, ஆறுமுகச் செட்டியார் ஆகிய எழுவரையும் ஏழு வகுப்புகளில் ஒவ்வொன்றுக்கும் வேதனமின்றி உழைக்கும் ஆசிரியராக நியமித்தார். நாவலர் பாடசாலையினை மேற்பார்வையிடும் மேலதிகாரியாகவும், ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்.  பாடசாலையில் மாணாக்கர் கற்பதற்குரிய நூல்கள் யாவும் ஏட்டுச் சுவடியில் இருப்பதனை உணர்ந்தார். ஏட்டுச் சுவடியிலிருந்த பெரிய புராணத்தின் செய்யுட் பொருளினை வசன நடையில் எழுதினார். திருச்செந்தினி ரோட்டக யமக அந்தாதி முதலிய கடின செய்யுட்களின் பொருளினை மாணாக்கர் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு அவற்றுக்கு உரை எழுதினார்.  கீழ் வகுப்பு மாணாக்கர் சைவ சமயப் பின்னணியிற் படிப்படியாகத் தமிழறிவு பெற உதவும் பால பாடங்கள் மூன்றினையும் புதிதாக எழுதினார். இவைகளையும் நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் அச்சேற்றி மாணாக்கர்க்கு உதவும் பொருட்டு அச்சுப்பொறி ஒன்றினை மானிப்பாய் நன்னித் தம்பி முதலியார் பொருளதவி கொண்டு நிறுவினார். பாடசாலை தொடங்கி மூன்றாண்டுகள் தாம் எழுதிய உரை நூல்களையும், கிடைப்பதற்கருமையாகவிருந்த கொலை மறுத்தல், நன்னூல் முதலியவற்றையும் அச்சிட்டார்4.

பாடசாலையினை நடாத்துவதற்குப் போதிய பணஞ் சேரவில்லை. இலவசமாகக் கல்வி, நூல்கள், உணவு முதலியவற்றினை மாணாக்கருக்கு வழங்குவது என்னும் நோக்கத்தினை நாவலர் வருவாய் குன்றிய காரணத்தினால் நிறைவேற்றாதுவிடவில்லை. மாணாக்கரின் பெற்றோரிடத்தும் உறவினரிடத்தும் பெற்ற பச்சை அரியினைப் பணமாக்கிப் பள்ளிக்கூடத்தினை நடாத்தி வந்தார்5.

தனிப்பட்ட ஒருவர், தமக்கென எந்த நன்மையுங் கருதாது தங்குறிக்கோள் வாழ்க்கையிலே கல்வி நிலையங்களை நிறுவதலே யாமென எண்ணத்திலும், மொழியிலும் செயலிலும் காட்டி வந்ததைப் பொதுமக்கள் பாராட்டினர். ஆனால், அவருக்கு வேண்டிய நேரத்திற் கைகொடுத்துதவப் பின்வாங்கினர். 1852 ஆம் ஆண்டில் நம் பாடசாலைக்கு அளிப்பது போல சேர் வில்லியம் ஆண்டேசன்(Sir William Anderson) என்னுந் தேசாதிபதிக்குக் கற்றோர் உள்ளம் நெகிழக்கூடிய வகையில் விண்ணப்பம் ஒன்றினை எழுதினார்6.

இவ்வாண்டில் இவர் வித்தியாசாலையில் 189 மாணாக்கர் கற்றனர். இவரின் விண்ணப்பத்திற்கு அரசாங்கத்தினர் இரங்கவில்லை. இதற்குக் காரணம் நாவலர் தமது விண்ணப்பத்தில் தற்சமய நோக்கக் கல்வி முறையினை எள்ளளவும் அரசாங்கப் பரிசோதகர், பள்ளிக்கூட கொமிசன் உறுப்பினர்கள் ஆகியோரின் விருப்பத்திற்கிசைய மாற்றியமைக்கத் தயாராயில்லை எனக் குறிப்பிட்டமையே வால்ற்றர் செந்தால் முதலிய கல்வி இயக்குநர்கள் நாவலரின் பாடசாலை நடக்கும் முறையினைத் தம்அறிக்கைகளில் எள்ளி நகையாடிக் குறிப்பிட்டிருந்தனர். அதனால்  நாவலர் உள்ளந் தளரவில்லை. தமது குடும்ப நண்பரும் யாழ்ப்பாண அரசாங்க அதிபருமாகிய றசல் (H.S.O. Russel)என்பவரைத் தம் பள்ளிக்கூடத்தை பார்வையிட்டு அவர் தம் கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டினார்.  இந்நிகழ்ச்சி 1869 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அப்பொழுது நாவலர் இந்தியாவில் வாழ்ந்து வந்த வராகையால் யாழ்ப்பாணம் கச்சேரியில் பிஸ்கால் கந்தோரில் மொழி பெயர்ப் பாளராய்க் கடமை யாற்றி வந்த திரு. W.  இராமலிங்கம் பிள்ளை என்பவர் வாயிலாக றசல் துரைக்குத் தம் வேண்டுகோளினைத் தெரிவித்தார்.  றசல் துரை அக்காலத்துக் கல்வி இயக்குநராகக் (Director of Public Instruction) கடமையாற்றி வந்த லாறி(J.S. Laurie)  என்பவருடனும் பாட சாலைப் பரிசோதகருடனும் (Inspector of School) நாவலரின் பாடசாலையினைப் பார்வையிட்டார். அப்பாடசாலையில் பாட நூலாக்கப்பட்டிருப்பது பற்றியும் மாணவரது அறிவுக்கூர்மை பற்றியும் நாவலர் தம் பாடசாலையின் இருபதாண்டு வளர்ச்சியைக் குறித்து வெளியிட்ட அறிக்கையில் உணர்த்தப்படும் அந்நோக்கு பற்றியும் வியந்து ஓர் அறிக்கையினை உதவினார்7. அவ்வறிக்கையுடன் கல்வி இயக்குனர் தமது சிபாரிசுக் குறிப்புகளையுஞ் சேர்த்து அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தார். 1870 ஆம் ஆண்டு தொடக்கம் வண்ணார் பண்ணைச் சைவ பிரகாச வித்தியாசாலைக்கு அரசாங்க உதவிப் பணம் அளிக்கப் பட்டது8.

 கல்வி இயக்குநர் லாறி, நாவலர் பாடசாலைக்கு உதவிப்பணம் வழங்குவதற்கு விதித்த நிபந்தனைகள்9 வருமாறு :

1. இப் பாடசாலையை நிறுவியவரின் நோக்கத்துக்கு உரிய மதிப்பு அளிக்கப்படும். பாடசாலையிற் போதிக்கப்படுஞ் சமயக் கல்விக்கு ஊறுவிளைவிக்கப்படமாட்டாது.

2. ஆயினும்  சமயக் கல்விக்குரிய காலம் பரந்து செல்லாமல் குறிப்பிட்ட கால அளவுக்குள் அடங்குதல் வேண்டும். உதாரணமாகக் காலையில் ஒரு மணி நேரத்தில் அக்கல்வியினைப் போதிக்கலாம்.

3.சமயக் கல்வி வகுப்புகள் முடிவடைந்தவுடன் சமயச்சார்பற்ற உலகியற் கல்விக் குரிய வகுப்புகள் நடைபெறுதல் வேண்டும். இவ்வகுப்புகளில் கல்வித் துறையி லிருந்து, கொள்விலைக்குப் பெறக்கூடிய பாடநூல்கள் படிப்பிக்கப்படல் வேண்டும்.

4. பாடசாலை உபயோகத்துக்கென விளக்கப்படங்களும் கரும்பலகைகளும் வழங்கப்படல் வேண்டும்.

1870 ஆம் ஆண்டில் நாவலர் நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலை இரண்டாந்தரப் பாடசாலையாகப் (B Grade) பதிவு செய்யப்பட்டது.

அக்காலத்தில் பரீட்சை முடிபினையயாட்டி உதவிப்பணம் வழங்கும் முறை  (Payment by Results) வழக்கிலிருந்தது. 1870 ஆம் ஆண்டில் இப்பாடசாலை யிலிருந்து 158 மாணவர்கள் சோதிக்கப்பட்டனர். முதலாம் வகுப்பிலுள்ள எழுபத்தொரு மாணாக்கரும், இரண்டாம் வகுப்பிலுள்ள அறுபத்தொரு மாணாக்கரும், மூன்றாம் வகுப்பிலுள்ள இருபத்தாறு மாணக்கரும் வாசித்தல், எழுதுதல், கணக்கு ஆகிய முத்திறப் பரீட்சைகளிற் சித்தியடைந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரின் கல்விக்கெனப் பத்துப் பென்ஸ்  (10 Pence)  உதவிப் பணமாக மொத்தம் 48 பவுண் 2 ´ல்லிங்ஸ் 6 பென்ஸ்($48.2sh.6d) வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இருநூற்றறுபது மாணாக்கர் இப்பாடசாலையிற் பயின்று வந்தனர்10.

1872 ஆம் ஆண்டில் இப்பாடசாலையில் மாணாக்கிகளும் சேர்க்கப்பட்டனர்11.

இவ்வாண்டில் அரசினர் ரூபா 806.25 சதம் உதவிப் பணம் அளித்தனர்12.

1848 ஆம் ஆண்டிலிருந்து 1870 ஆம் ஆண்டு வரையும் நாவலர் இப்பாடசாலையிலுள்ள அரசினர் உதவியின்றிப் பொதுமக்கள் உதவிய அற்ப பொருளுடன் நடாத்திய திறமை வரலாற்று முக்கியத்துவம் உடையது.

நாவலர் என்னும் கல்விமானுக்கு யாதும் ஊராகும். 1864 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்கள் உபகரித்த பொருளுடன் சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியசாலையயான்றை நிறுவினார். கல்வி பற்றி நாவலர் கொண்ட முயற்சிகள், வண்ணார்பண்ணையிலும் சிதம்பரத்திலும் வேதாகம பாடசாலையினையும் மடத்தினையும் நிறுவிச் சைவப் பிரகாசகர்களை உருவாக்க நினைத்தார். இக்குறிக்கோளுடன் 1868, 1870 ஆம் ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் சிறப்பாகச் சைவ அபிமானிகளுக்கும் பொருளுதவுமாறு விண்ணப்பம் அச்சிட்டு வழங்கினார்13.

சமய சாத்திரக் கல்வி முறையிற் போதிக்கப்படாமலிருந்து வருவதைக் குறித்தே இவ்வாறு வேதாகம பாடசாலையயான்றினை நிறுவ விழைந்தார். அவ்வுத்தமோத்தம தருமத்தின் பொருட்டு எண்பதினாயிரம் ரூபாவினை மக்களிடம் எதிர்பார்த்தார்.  இத்தொகையுடனற்றிச் சேரும் பொருக் கிசைய நடாத்தவும் விரும்பினார். ஆனால் நாவலர் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பொருள் சேரவில்லை. இதனால் அவர் இந்நோக்கத்தினைக் கைவிட நேர்ந்தது.
நாவலர் ‘தமிழ் கற்றலின் கண்ணும் தமிழ்க் கல்வியையும் சைவ சமயத்தையும் வளர்த்தலின் கண்ணும் ஊக்கங் கிளரா வண்ணம் தடைவிளைகின்றதே’ என்று கவலையுற்ற நாட்களோ பல. அவர் ‘தமிழ்க் கல்வியிலும், தமிழ்க் கல்வியையும் சைவ சமயத்தையும் வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளிலும்’ போக்கிய காலத்தினை ‘இங்கிலீ´லே போக்கி உத்தியோகமும் செல்வமும் பெற்று’ வாழ்வதை விரும்ப வில்லை. தமிழ்க்கல்வியும் சைவ சமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய தலந்தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரசாரஞ் செய் வித்தலுமேயாம் என்பதை நடைமுறையிற் செய்துகாட்ட முனைந்தார்.

1865 ஆம் ஆண்டில் திருவாடுதுறை ஆதினத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகர் என்னும் உபயகுரு மூர்த்திகள் சிதம்பரத்துக்கு எழுந்தருளினார். நாவலரின் பாடசாலையினைப் பார்வையிடுவதற்கு ஏற்கனவே ஒழுங்குகள் செய்யப் பட்டிருந்தன. நாவலர் அப்பொழுது சென்னையில் இருந்தார். நாவலர் சென்னை யிலிருந்து சிதம்பரத்துக்கு விரைந்து சென்றமை தம் பாடசாலையின் நன்மையைக் கருதியன்று. ‘அவர்களுக்கு வித்தியாசாலையைக் காட்டி அவர்களாலே செயற் பாலனவற்றை வெகுஜன சமூகத்திலே பிரசங்கிக்கின், அவர்கள் இனியாயினும் தங்கள் தலங்களில் இப்படி வித்தியாசாலைகளைத் தாபித்துக் கல்வியறிவொழுக்கங் களையும் சமயத்தையும் வளர்த்தல் கூடுமே என்றெழுந்த பேராசையாலும். நான் சென்னபட்டணத்தை விடுத்தலால் எனக்கு விளையும் நட்டத்தை எட்டுணையேனும் நோக்காது, புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தேன்’ என்ற கூற்று14 நாவலரின் உயர்ந்த நோக்கத்தினை விளக்கும்.

1871 ஆம் ஆண்டில் வண்ணார் பண்ணையில் யோன் கில்னர்(Rev. John Kilner) என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணவர்கள் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாவலர் அப்பிள்ளைகளின் நன்மையினைக் கருதி ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையினை வண்ணார் பண்ணையில் 1872 ஆம் ஆண்டில் நிறுவினார்.

போதிய பணமில்லாமையாலும் பிள்ளைகள் பலர் சேராமையாலும் இவ் ஆங்கிலப் பாடசாலை நான்காண்டுகளே நடைபெற்றது15. வயது முதிர்ந்தோர் கல்வியையும்(Adult Education) நாவலர் மறந்துவிடவில்லை. நல்லூர்க் கந்தசுவாமி கோவில், வண்ணார் பண்ணைச் சிவன் கோவில், கைலாச பிள்ளையார் கோவில், தில்லைச் சிவன் கோவில் தாம் தாபித்த சைவப் பிரகாச வித்தியாசாலைகள் முதலிய இடங்களில் புராண விரிவுரைகளும் சமயப் பிரசங்கங்களும் நிகழ்த்தி முதியோர்க்கும் கல்வி வளர்ச்சியில் உபகாரியானார். அவரது சமயக் கல்வியறிவு பொது மக்களிடையே பரவியது.

எல்வெற்றியசு (Helvetius)  மத்தியூ அர்னொல்டு(Mathew Arnold) தயானந்தா, அநாகரிக தர்மபாலா முதலிய கல்விச் சீர்திருத்தவாதிகளுக்கு நாவலர் தம் கல்வித் தொண்டில் இணையானவர். கல்வி பற்றி நாவலர் கூறுவனவற்றிற் சிலவற்றினை நோக்கின் இவ்வுண்மை வலியுறும்.

கல்வி பற்றி கருத்துக்கள்

நாவலர், கல்விப் பற்றிக் கொண்ட கருத்துக்கள் யாவை? அவர் சைவ சமயத்தினை வளர்ப்பதற்குத் தமிழ்க்கல்வி ஒரு கருவியயனக் கருதினார். ‘இவை களெல்லாவற்றிற்கும் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்’16, ‘தமிழ் கற்கப் புகுஞ் சைவ சமயிகள் முன்னர் பால பாடங்களைப் படித்துக் கொண்டு...’17 முதலிய கூற்றுக்கள் இதனை வலியுறுத்தும்.

கற்றற்குரிய நூல்கள்

கற்றற்குரிய நூல்களான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு, இலக்கணம், கணக்கு முதலிய நூல்களுமாம்18.

கல்வியின் பயன்

கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக்குப் பயன் ஒழுக்கமுமாம்.

கற்றோர் கடமை

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன் மாணாக்கர் களுக்கு கல்வி கற்பித்தலும், எல்லோருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம் மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்பு டையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர்20.

கல்விமுறைகள்

நாவலர் நன்மாணாக்கர் நல்லாசிரியரைத் தேடி அடையும் முறையையும் அவர் வழி ஒழுகி நூல்களை அணுகும் முறையையும்  அவற்றினைக் கற்க வேண்டிய மரபினையும் தாம் வகுத்த கல்வி முறையில் விளக்குகின்றார். ‘இளமையில் கல்’ என்ற ஒளவை வாக்கினை உணர்ந்த நாவலர் இளம் மாணாக்கருக்குத் தம் மூன்றாம் பால பாடத்திற் கற்கும் முறைகள் பற்றிப் போதித்தவற்றுட் பல இக்காலக் கல்வி முறைக்கும் பெரிதும் உகந்தனவாகக் காணப்படுகின்றன. அவை காலங்கடந்தும் கற்கப்படும் என்பதற்கு ஐயம் இல்லை. அவர் வாக்குகள் வருமாறு :

கல்வியை நல்லாசிரியடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும்.  கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங் கேட்ட பொருட்களைப் பல தரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியவுரை அடுத்து அவைகளைக் குறைவு தீரக் கேட்டலும், ஒரு சாலை மாணாக்கர் பலருடனும் பல தரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும் அவர் வினவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும் ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்கும் கடன்களாம்.

நூல்களிலே சில நாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லவராத லும் அரிது. பல நாட் பழகினாலும் மந்தர்களாயினும் பலவற்றில் வல்லவராவார்.

பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும்.( கல்வி மூன்றாம் பால பாடம்).

முடிவுரை

நாவலர் காலத்தில் பண்டிதர், வித்துவான் முதலிய பட்டங்களை வழங்கும் பரீட்சைச் சபைகள் இயங்கவில்லை. இந்நிலையினைக் கண்டு நாவலர் ‘தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமையின் வழுவாது பரீட்சை செய்து, அதில் வல்லவர் களென நன்கு மதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமும் கொடுக்கும் சபையார் இக்காலத்தில் இல்லாமையால், தமிழ்க் கல்வியில் வல்லவர் களும் வல்லவர்களல்லாதவர்களும் ஒப்ப மதிக்கப்படுகிறார்கள்’ என வருந்திக் குறிப்பிடுகிறார்21.

‘நீ சமஸ்கிருத பாடம் ஒப்பித்துவிட்டாயா?’ (முதலாம் பால பாடம், 23 ஆம் பாடம்) என்றற்றொடக்கத்து வாக்கியங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, நாவலர் வகுத்த கல்வி முறையை நோக்கில் அறிவியற் கலைகளுக்கு அப் பாடத்திட்டத்தில் இடமிருக்க வில்லையயன்றும், மாணாக்கர் பாடங்களை மனனஞ் செய்து ஒப்பிக்கும் கல்வி முறையே அவர் பாடசாலையில் நிலவியது என்றும் நாவலர் கல்வி கற்பிக்க வகுத்த கல்வி விதிகளிலும் முறைகளிலும் குறைபாடுகளை விட பல நிறைவுகளையே அவர் வகுத்த கல்வித் திட்டத்திற் காண்கிறோம். பல ஆண்டுகளாக மாணாக்கர்க்கு உண்டி, நூல், கல்வி முதலியன வழங்கியும் ஆசிரியர்களை வேதனமின்றிக் கடமையாற்றச் செய்தும், ஊக்கத்துடன் பல நூல்களை அச்சிட்டும், பாட சாலைகளை நிறுவியும் அவற்றினைப் பலவிடங்களில் ஆங்காங்கு நிறுவும்படி பலரைத் தூண்டியும், பாட நூல்களுக்கு உரை, வசனம், சூசனம் ஆகியன எழுதியும், புதிய நூல்களை எழுதியும், பல சமஸ்கிருதத்திலிருந்த சாத்திர நூல்களைத் தமிழிற் சமய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உபகாரமாகுமாறு எழுதி அச்சிற் பதிப்பித்தும் உழைத்த நாவலரை, நாம் அவர் செய்த பணிகளை நினைவுகூர்ந்தால் மறக்க முடியுமா? ஆகையால் நாவலரின் கல்விப் பணிக்கு ஈடும் எடுப்புமுளதோ?

எல்லாத் தானங்களினும் வித்தியா
தானமே சிறந்தது.
 - நாவலர்

(ச. தனஞ்சயராசசிங்கம் அவர்கள் எழுதிய நாவலர் பணிகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.)

(1,2,4,5,6 Canther Arumugam’s petition to Sir William Anderson, 11th August, 1852. This pettition was published in the Ceylon Observer of 14th March 1853).
(3 Ranjit Ruberu. T., Education in Colonial Ceylon, Kandy Printers, Kandy, 1962, p.117)
(7.Ceylon Patriot, 13th October, 1870).
(8,10 Report of the Director of  Public Instruction for 1870. Appendix E.11.
Ceylon Administrative Reports, Colombo, 1871)
(9 Jaffna Freeman, April 23, 1869)
(11,12 Report of the Director of Public Instruction for 1872. Ceylon Administrative Reports, Colombo 1873).
13,14 த. கைலாசப் பிள்ளை, ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மீ
(15    அ) Jaffna New, March 1st, 1871
         ஆ) Ceylon Patroit, December 30, 1871
        இ) த. கைலாசப் பிள்ளை, ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மாதம்
16. க. ஆறுமுக நாவலரின் விக்கியாபானம், விபவ ரு­ம் சித்திரை மாதம்
ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மாதம்
17, 19 தமிழ்ப்புலமை திருக்கோவையர், ஆறுமுக நாவலர் பதிப்பித்தது.
முத்தமிழ் விளக்கவச்சுக் கூடம்
சென்னப்பட்டணம், ரெளத்திரி வரு­ம், ஐப்பசி மீ; அனுபந்தம்
18,20 கல்வி மூன்றாம் பாலபாடம், க. ஆறுமுக நாவலர்.
21.தமிழ்ப்புலமை திருக்கோவையர், ஆறுமுக நாவலர் பதிப்பித்தது.
முத்தமிழ் விளக்கவச்சுக் கூடம்
சென்னப்பட்டணம், ரெளத்திரி வரு­ம், ஐப்பசி மீ; அனுபந்தம்

திருமயிலை திரிபந்தாதி முகவுரை : உ.வே.சாமிநாத அய்யர்

திருமயிலை திரிபந்தாதி
இராமையர்
முகவுரை :உ.வே.சாமிநாத அய்யர்

கணபதி துணை
முகவுரை
தேவாரம்
திருநாவுக்கரசு நாயனார்
திருச்சிற்றம்பலம்

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சள் மாமயி லாடு துறையுறை
அஞ்ச லாளுமை பங்க னருளிலே.

கவிஞர்கள் தாம் பிறந்த இடங்களிலும், பழகிய வேறிடங்களிலும் உள்ள தெய்வங்களையும், தம்மை ஆதரித்தோர்களையும் பாராட்டி முறையே பக்தியாலும் செய்ந்நன்றி யறிவாலும் தங்கள் உள்ளக் கருத்தை அமைத்துப் பிரபந்தங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றை இயற்றுதல் இயல்பு.

அவற்றால் அவர்களுடைய மனநிலைகளும் கொள்கைகளும் சரித்திரங்களும் கால இயற்கையும் பல நீதிகளும் புலப்படும். பெருங்காப்பியங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைப் பிரபந்தங்களால் எளிதில் அறிந்து கொள்ளலாமென்று அறிஞர் கூறுவர். பழைய காலத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பிரபந்த வகைகளும் இன்றியமையாத பாடங்களாகக் கற்பிக்கப் பெற்று வந்தன. அம்முறையால் நாளடைவில் உண்டான பயன் மிக அதிகம்.

அத்தகைய பிரபந்தங்கள் தமிழில் 96 வகைப்படும். அவற்றுள் ஒவ்வொரு வகைகயிலும் அவ்வக் காலங்களுக்கேற்ப பலராற் செய்யப்பட்ட நூல்கள் பல. அந்தாதி யயன்பது அப்பிரபந்த வகைகளுள் ஒன்று. அது முதற் செய்யுளின் ஈற்றடியிலுள்ள இறுதிச் சீர் முதலியவற்றை அடுத்த செய்யுளின் ஆதியாகக் கொண்டு மண்டலித்து வருவது. அது வெண்பாக்களாலேனும் விருத்தங்களா லேனும் கட்டளைக் கலித்துறைகளாலேனும் நூறு செய்யுட்களால் இயற்றப்படும் ; இந்த அளவிற் குறைந்து வருவனவும் உண்டு. கலம்பகம் முதலியனவும் அந்தாதி யாகச் செய்யப்படுமேனும் அந்தாதியாக வருதலொன்றையே சிறப்பிலக்கணமாகக் கொண்டமையால் அஃது அப்பெயர் பெற்றது. மனப்பாடஞ் செய்வதற்கு அனுகூல மாக இருத்ததற்கும் அப்பிரபந்தம் ஏற்பட்டிருக்கலாமென்று தோற்றுகிறது. நிற்க.

திருமயிலை திரிபந்தாதி யயன்னும் இந்நூல் நூறு கட்டளைக் கலித்துறை களாலாகியது. சொல்லணியாகிய திரிபு இதனுள் அமையப் பெற்றிருத்தலின் இஃது இப்பெயர் பெற்றது. ஒவ்வோரடியின் முதலெழுத்தொழிந்த எழுத்துக்கள் சிலவும் பலவும் ஒத்துப் பொருள் வேறுபட்டு வருவது திரிபாகும். திரிபு திருகலென்றும் வழங்கும்.

இதனை இயற்றியவர் இராமையரென்பவர் ; இவர் அந்தண குலதிலகர். இவருடைய ஊர் மாயூரம். இவர் தமிழிலக்கணங்கள் ஐந்தையும் கற்றுத் தேர்ந்தவர். இவை, ‘கயிலையயான் றீசன்’ என்னும் இந்நூற் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். இவர் இயற்றிய வேறுநூல் திருநாகைக காரோணத்தைச் சேர்ந்த நாகூரின் தலபுராணம். அஃது இவருடைய இளமைப் பிராயத்தில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்று அதன் நடையால் தோற்றுகின்றது. அதனாற் சில வழக்கங்களும் ஆலய வழிபாட்டு முறையும் விழாக்களின் நிகழ்ச்சி முறையும் பிற அரிய வி­யங்களும் விளங்கும்.
குலோத்துங்க சோழனுலாவின் உரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் சேறாடி யயன்பது (விருதாவளி - அரசர் முதலியோர் பெறும் பட்ட வரிசை) விருதாவளியைச் சேர்ந்ததென்று அந்நூலிலுள்ள பிரயோகத்தால் விளங்கிற்று.

இதன் ஆசிரியர் சிவபக்தி மிக்கவரென்பதும் செய்யுட்களை வருத்தமின்றிப் பாடும் இயல்பினரென்பதும் இயற்கை வளத்தை அறிந்து அனுபவித்தவரென்பதும் இவ்வந்தாதியால் விளங்குகின்றன.

மயிலையயன்பது சோழநாட்டின்கண், காவிரிக்குத் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய ஒரு சிவஸ்தலம் ; மாயூரமென்று இப்பொழுது வழங்கப்பெறும். மயிலை யயன்னும் பெயர் இத்தலத்தின் மற்றொரு பெயராகிய மயிலாடுதுறை யயன்பதன் மரூஉவாகும்.

தொண்டை நாட்டிலுள்ள மியலாப்பூரென்னும் சிவஸ்தலத்திற்கும் மயிலை யயன்னும் பெயருண்மையின், அது வடமயிலை யயன்றும், இது தென் மயிலை யயன்றும் வழங்கும். (இந் நூல், 8,37,70,86,88 ஆம் செய்யுட்களைப் பார்க்க). முருகக் கடவுளின் தலமாகிய மயிலாசலத்திற்கும் மயிலையயன்னும் பெயருண்டு.

இந்த மாயூரம் நாவலந்தீவில் மிகப் புகழ் பெற்றதாதலின் இதன் விசேடங் களைச் சுருக்கமாக இங்கே எழுதலானேன்.

ஸ்காந்தம் முதலிய மகா புராணங்களிலும், மகேதிகாசமாகிய சிவரகஸ்யத்தி லும், துலாகாவேரி மாகாத்மியத்திலும், ஸ்ரீசிதம்பர புராணம் முதலிய தல புராணங்கள் பலவற்றிலும் இத்தலம் பலபடச் சிறப்பித்துப் பாராட்டப் பெற்றுள்ளது. வடமொழியில் ஸ்ரீமாயூர புராணம் ஸ்ரீரி­ப தீர்த்த மாகாத்மியம் முதலிய நான்கு புராணங்களும், அவற்றின் மொழி பெயர்ப்பாகப் பொன் விளைந்த களத்தூர் ஆதியப்ப நாவலரென்பவர் சற்றேறக்குறைய 350 வருடங்களுக்கு முன்பு இயற்றிய புராண மொன்றும், என்னுடைய ஆசிரியரும் திருவாடுதுறை யாதீனத்து மகாவித்துவானுமாகிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் 60 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்ட புராணமொன்றும், இந்த அந்தாதியையன்றி ஸ்ரீ அபயாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களும், தென்மொழி வடமொழிகளிற் சிறந்த ஸங்கீத வித்துவான்களால் இயற்றப்பட்ட பல கீர்த்தனங் களும், பல ஸ்தோத்திரங்களும், தனிப்பாடல்களும் இத்தலத்திற்கு அமைந்திருக் கின்றன.
பிரமதேவர் பூசித்தமையின் பிரமலிங்கமெனவும், தேவர் முதலியோர் எண்ணியவற்றை வரையாதருளிச் செய்தமையின் ஸ்ரீவதானீசுவரர் அல்லது வள்ளலாரெனவும், தட்சன் புத்திரியாக அவதரித்தமை பற்றி வந்த திருநாமமாகிய தாட்சாயணி யயன்பதை அவன் பாலுள்ள வெறுப்பினால் நீக்கிக கொள்ள நினைத்து மயில் வடிவம் பெற்றுப் பூசித்து வழிபட்ட அம்பிகைக்கு ஆண் மயிலாக வும் ஆடியருளிக் காட்சியளித்துப் பின்பு தாண்டவமாடி அனுக்கிரகம் செய்தமையின் கெளரீ மாயூர நாதர், கெளரீ தாண்ட வேசுவரர் அல்லது மாயூரநாதர் எனவும் ஸ்வாமியின் திருநாமங்கள் இங்கே வழங்கும். இன்னும் வெவ்வேறு காரணங் களால் வந்த விருத்தர் (கிழவர்) முதலிய பல பெயர்களுமுண்டு.

மிகவும் அச்சமுற்றுத் தன்னைச் சரணடைந்த ஒரு மயிலுக்கு அபயமளித்துப் பாதுகாத்தமையின், அபயப் பிரதாம்பிகை, அபயாம்பிகை, அஞ்சல்நாயகி, அஞ்சலை யயன்னும் திருநாமங்கள் அம்பிகைக்கு இங்கே வழங்கலாயின.
இந்த ஸ்தல விருட்சம் மா.

இத்தலத்தின் திருநாமங்கள் : பிரமபுரம், பிரமவனம், கெளரீ மாயூரம், மாயூரம், மயிலாடுதுறை, மயிலை, சூதவனம் முதலியன. துறையயன்பது தீர்த்த விசேட முள்ள இடத்தைப் புலப்படுத்தும் ஒரு பெயர்.

தீர்த்தங்கள் : அகஸ்திய தீர்த்தம், அநவித்யாஸரஸ், விரு­ப தீர்த்தம், கணேச தீர்த்தம், காசியப தீர்த்தம், இந்திரன் முதலிய திக்பாலகர் தீர்த்தங்கள், பாபநாச தீர்த்தம், பிரமதீர்த்தம் முதலிய 86 தீர்த்தங்களுள்ளன.

வரு­ந்தோறும் ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு தினத்தும் ஸ்ரீ மாயூரநாதர் ஸ்ரீ அபயாம்பிகையுடன் காவேரிக்கு எழுந்தருளிக் காலையில் விரு­ப தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளும் மகிமை வாய்ந்த ஸ்தலமாதலின், ஐப்பசி மாதம் முப்பது தினங்களிலும் ஸ்ரீ காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களிலிருந்து வந்து ஸ்நானஞ் செய்துவிட்டுச் செல்லும் லட்சக்கணக் கான பக்த ஜனங்களின் தொகுதி யாவருடைய உள்ளத்தையும் கனியச் செய்யும். அக்காட்சி பக்தியில்லாதவர் களுக்குப் பக்தியை யுண்டு பண்ணும்; தெய்வமில்லை யயன்பவர்களுக்கும் புநர்ஜன்ம மில்லை யயன்பவர்களுக்கும் அவை உண்டென்னுங் கருத்தைப் பிறப்பிக்குமென்பதிற் சிறிதும் ஐயமில்லை.

விரு­ப தீர்த்தத்தில் கங்கை வந்து நீராடுவதற்கு அறிகுறியாக ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் பகல் பதினைந்து நாழிகை வேளையில் இந்த விரு­ப தீர்த்தத்தி லிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்குந் தீர்த்தம் மிகுந்த தூய்மையோடு பல வருடங்களிருத்தலை நேரே அறிந்து பார்த்தோர் பலர்.
இந்த ஸ்தல தரிசனத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் காவேரிப் பிரவாகத்தை வடியச் செய்து துறையைக் காட்டி அவரை இங்கே வரவிடுத்தமையின், கிழக்கேயுள்ள திருவிளநகரில் (1) துறைகாட்டும் வள்ளலெனவும், நல்ல வாக்கை விரும்பித் தவஞ்செய்த ஸ்ரீபிருகஸ்பதி பகவானுக்கு அதனை யருளிச் செய்தமையின் இதன் தெற்கேயுள்ள தாருகா வனத்தில் (பெருஞ்சேரியில்) (2) வாக்குக் காட்டும் வள்ளல் (வாகீசர்) எனவும், ஒரு சமயத்தில் வழிதெரியாமல் மயங்கிய தேவர்களுக்கு வழிகாட்டி யருளினமையின் மேற்கேயுள்ள மூவலூரில் (3) வழிகாட்டும் வள்ளல் (மார்க்கஸகாயர்) எனவும், சிவ ஞானத்தை விரும்பித் தவஞ்செய்த ஸ்ரீ விரு­பதேவருக்கும் ஏனையோர் பலருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய மோனமுத்திரை காட்டிச் சிவஞானத்தை உபதேசித் தருளினமையின் உத்தர மாயூரத்தில் வள்ளலார் கோயிலில் (4) கைகாட்டும் வள்ளலெனவும் திருநாமங் கொண்டு வள்ளலாகிய ஸ்ரீ மாயூரநாதர் வீற்றிருக்கின்றனர்:

1) ‘காவிரித்துறை காட்டினார்’ (திருவிளநகர்த் தேவாரம்) ; ‘துறை காட்டும் வள்ளலோ வென்றிறைஞ்சினர்’ ; (2) ‘வாக்கருள் வள்ளலென்று, பெருக்க வெவ்வுலகுமேத்தப் பிறங்கினானனைய மூர்த்தி’; (3) ‘வழிகாட்டும் வள்ளலோ வென்றுரைத்தனர்’ ; (4) ‘இடபமுன் பெற்றார் போல வெண்ணிலார்க் கருளுநீரா, லுடனம ரவன்கை காட்டும் வள்ளலென் றொருபேர் பெற்றான்’ (மாயூரப் புராணம், மாயூரவள்ளல் நாற்றிசை வள்ளலாகிய படலம்.)

இதன் எல்லை, ஒரு யோசனையயன்றும், எட்டு வீரட்டத்துள் காலஸம்ஹார க்ஷேத்திரமாகிய திருக்கடவூரும் தட்சயாகஸம்ஹார க்ஷேத்திரமாகிய திருப் பறியலூரும் கஜஸம்ஹார க்ஷேத்திரமாகிய வழுவூரும் காமதகன் க்ஷேத்திரமாகிய திருக் குறுக்கையும் இதனெல்லைக்குள் உள்ளன வென்றும் இத்தலபுராணங்கள் கூறாநிற்கும். இது, ‘பாரவாவுமா, யூரவெல்லையுட், சார வானர்வா, யாரவேத்திட’, ‘இட்ட மாயவீ, ரட்ட நான்கெனிற், பட்ட மான்மியம், சட்ட யார் சொல்வார்’ (மாயூரப் புராணம், காமன் புசைப் படலம், 17‡8) என்பவற்றால் அறியப்படும்.

ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப் பேறு பெற்ற ஸப்த மாதாக்கள் தனித்தனியே பூசித்துத் தவஞ்செய்து கொண்டிருந்த ஏழு சிவஸ்தலங்கள் இதன் பக்கத்தேயுள்ளன. அவற்றுள், 1) பிராமி பூசித்த ஸ்தலம் திருத்தான்றோன்றீசம் (சுயம்புநாதர் கோவில்); 2) மாகேசுவரி பூசித்தது கருணாபுரி (கருணாம்பேட்டை); 3) கெளமாரி பூசித்தது கஞ்சாறு (ஆநந்த தாண்டவபுரம்) ; 4) வைஷ்ணவி பூசித்தது பசுபதீசுவரம் (வள்ளலார் கோவிலுக்கும் தருமபுரத்திற்கும் இடையிலுள்ளது); 5) வாராகி பூசித்தது சக்திபுரி (கழுக்காணிமட்டம்) ; 6) இந்திராணி பூசித்தது தருமபுரம் ; 7) சாமுண்டி பூசித்தது வள்ளலார் கோயில் . இது r புராணத்திலுள்ள சத்தபுரப்படலத்தால் அறியலாகும்.

ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப பேறுபெற்ற இந்திரன் முதலிய திக்பாலர்களும் மற்றைத் தேவர்களும் அகத்தியர் முதலிய பல முனிவர்களும் ஏனையோர் பலரும் தத்தம் பெயரால் பிரதிட்டித்துப் பூசித்த சிவலிங்கங்களும் தீர்த்தங்களும் இத் தலத்தைச் சூழப் பல உள்ளன.

மேற்கூறிய தேவர் முதலியோர்களையன்றிக் கழுகு, கிளி, குதிரை, நரி, பூனை, யானை, வானரம், கரம் முதலிய அஃறிணைகளும் ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப பேறுபெற்றனவென்றும் அந்த புராணங்கள் தெரிவிக்கின்றன.
மயில் வடிவம் நீங்கி இயற்கையான திருவுருவமுற்ற அம்பிகையின் பிரார்த்த னைப்படி சபையயான்றை நிருமித்து அதில் ஸ்ரீ மாயூரநாதர் தாண்டவமாடி யருளி விஷ்ணு முதலிய தேவர்களின் பிரார்த்தனையின்படி அம்பிகையை இங்கே திருமணஞ் செய்தருளினர். அந்தச் சபைக்கு ஆதிசபையயன்பதும் அத்தாண்ட வத்திற்குக் கெளரீ தாண்டவமென்பதும் திருநாமங்கள்.

மேற்கூறிய திருமணம் வரு­ந்தோறும் துலாமாஸ உத்ஸவத்தில் ஏழாவது திருநாளின் மாலையில் நடைபெற்று வருகின்றது. ‘மயிலாடுதுறையு மணாள னாரும்’ என்னுந் தேவாரமும் இதனை நன்கு புலப்படுத்தும்.

கங்கையின் பிரிவாற்றாமையினால் ஸ்ரீகாசி விசுவநாதர் தம்முடைய பரிவாரங்களுடன் இங்கே எழுந்தருளி விரு­ப தீர்த்தத்தின் தென் பக்கத்திற் கோயில் கொண்டிருக்கின்றனர்.

முக்தியை விரும்பிப் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று தவஞ்செய்து வந்த தம்பதிகளாகிய நாதசன்மா அநவித்தை யயன்பவர்கள் முடிவில் திருவையாற்றை யடைந்து தவஞ்செய்து ஸ்ரீஐயாறப்பர் கட்டளையின்படி இத்தலத்திற்கு வந்து தவஞ் செய்ய, ஸ்ரீ மாயூரநாதர் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ததன்றி எம்மைத் தரிசித்த பலனை உங்களைத் தரிசித்த பின்பே யாவரும் அடையக் கடவரென்றும் அருளிச்செய்ய, கேட்ட அவர்கள் பேரானந்தமுற்றுத்தாம் இங்கே பிரதிட்டித்துப் பூசித்த சிவலிங்கங்களில் ஐக்கியமாயினர்; அவர்கள் பிரதிட்டித்த சிவலிங்கங்கள் அவர்கள் பெயராலேயே வழங்கப்பெற்று வருகின்றன. அவற்றுள் அநவித்தை ஐக்கியமான லிங்கமென்பதற்கு அறிகுறியாக அதற்கு இக்காலத்தும் புடவையே சாத்தப்பட்டு வருகின்றது. ஸ்ரீ மாயூரநாதரையும் ஸ்ரீ அபயாம்பிகை யையும் தரிசிப்போர் ஸ்ரீ சண்டிகேசுவர சண்டிகேசுவரிகளைத் தரிசித்த பின்பு இவ் விரு மூர்த்திகளையும் தரிசிப்பது இத்தலத்தில் வழக்கமாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இஃது இத்தல புராணத்திலுள்ள நாதசன்மா அநவித்தை முக்தி யடைந்த படலத்தால் அறியலாகும். ‘தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்த பின்பும் வேறிருவர்க், கண்டாய்விற் போற்றவருள் காலூரும்’ (திருவிடைமருதூருலா).

நாதன்சன்மா அநவித்தை யயன்பவர்களுடன் இத்தலத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீஐயாறப்பர் இங்கே ஸ்ரீ மாயூரநாதர் கோயிலின் மேலை ரத வீதியின் மேற்கே பரிவாரங்களுடன் கோயில் கொண்டெழுந்தருளி ஸப்தஸ்தான உத்ஸவமும் கொண்டருளிகின்றனர். அந்த உத்ஸவம் இக்காலத்தும் சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகின்றது. அந்த ஸ்தானங்களின் பெயர்கள் வருமாறு : 1) புழுகீசுவரம் (தனியூர்), 2) ஸித்தவனம் (சித்தர்க்காடு), 3) மூவலூர், 4) சோழம்பேட்டை (இது புருஷாமிருகம் பூசித்த விசே­முடைய ஸ்தலம்), 5) வள்ளலார் கோயில், 6) காசி விசுவநாதர் கோயில், 7) ஸ்ரீ மாயூரநாதர் கோயில்.
அகத்திய விநாயகரைக் காப்பிலும், ஸ்வாமியின் திருநாமங்களுள் வள்ளலென்பதை, ‘மயிலையுறை வள்ளல்’, ‘பிறைமோலிதிகழ் வள்ளல்’, ‘செய்சூழ் மயிலையில் வள்ளல்’ (காப்பு, 16,35,40,41,44,70,100) என்பன முதலிய வற்றாலும் மணாளனென்பதை, ‘தனியந கைக்கு மணாளா’, ‘சிலையமலைக்கு மணாளர்’ (29,40) என்பவற்றாலும், மாயூரநாத ரென்பதை, ‘மாயூர நாத மயிலையி லீச’ (11) என்பதனாலும், விருத்தரென்பதை, ‘மயிலைப் பதியகலா முதியன்’ (51) என்பதனாலும், காவிரியின் பெருமையை, ‘உத்தர கங்கையினோங்கிய பொன்னி’, ‘பொன்னித் துறை’, ‘தூயகமான கனகாவிரி நதி’, ‘நித்திலங்க டீரம் பரவுந் திருக்காவிரி’, (7,23,59,88) என்பவற்றாலும், சிவபெருமான் நடனஞ் செய்ததை, ‘அரங்கந்தண் மயிலையிலொன்று கொண்டாடுமையர்’, ‘மயிலைப் பானன்று மன்றுட் கோதினடந்தக வாடினன்’, ‘நடனஞ்சமுகந்தருக்குறச் செய்திடுநாதனும்’, (9,67‡8) என்பவற்றாலும், அகத்தியர் பூசித்ததை, ‘இலைய மலைக்கு, மனமுற யோகத்திருக்கவல்ல, மலைய மலைக்குறு மெய்த்தவன் போற்று மயிலை வள்ளல்’, ‘அன்புடைக்கும் பமுனி பூசை கொண்டவர்’, (40,86) என்பவற்றாலும், இந்திரன் வழிபட்டதை, ‘அங்குலிசன்றாழ் மயிலையி லீசர்’ (99) என்பதனாலும், உமை மயிலாகப் பூசித்ததை, ‘கவுரியயழின் மயிலாய் முன்பரவத்தர்’ (65) என்பதனாலும், உமாதேவிக்கு மயிலுருவத்தை நீக்கி மாயூரநாதர் பழைய உருவத்தை அருளியதை, ‘மயிற்காய மாய வுருத்தீர்த்துமைக்க வடிவளித்தோன்’ (95), என்பதனாலும், திருமால் பூசித்ததை, ‘பலரங்கந்த மலர் கொண்டரி பணிபாதர்’, ‘பணிப் பாயலையகலான்றாழ் மயிலைப் பரமன்’ (9,53) என்பவற்றாலும், நாதசன்மா பூசித்ததை, ‘நாதசன்மா வணங்கற்புத’ (11) என்பதனாலும், பிரமதேவர் பூசித்ததை, ‘பிரமன் பணிமயிலைத் தல சங்கர்’ (22) என்பதனாலும், இத்தலத்தைச் சேர்ந்த வீரட்டானங்களுள் பறியலில் நிகழ்ந்த தக்க யாக சங்காரத்தை, ‘தனைத் தள்ளிச் செய்த மகத்தினத்து வருந்தின மாக்கினன் மாமனுக்கே’, ‘தமையன்றித்தக்க செய்த பொங்குமகந் தகர்த்தார்’ (10,37) என்பவற்றாலும், வழுவூரில் நிகழ்ந்த கஜசங்காரத்தை, ‘முகிலொத்துருமத்தி யன்றீர்ந்தாய்’, ‘மதமுகத்தினந்தத்துவக் கன்றுரித்தோன்’ (6,10,18,25,63, 83,86,96) என்பன முதலியவற்றாலும், குறுக்கையில் நிகழ்ந்த காமசங்காரத்தை, ‘இக்குமதனை வென்றோர்’, ‘காமனைக் காய்ந்தவனும்’ (22,68) என்பவற்றாலும், கடவூரில் நிகழ்ந்த காலசங்காரத்தை, ‘கொடுங் காலனுங் குன்ற மோதினர்’, ‘அந்தகன் வீழ மோதினன்’, ‘முன்பந்தனைய முனிந்தோன்’ (55,84,97) என்பவற்றாலும் இந்நூலுள் ஆசிரியர் புலப்படுத்தி யிருக்கிறார்.

இதன்பாலுள்ள செய்யுட்களிற் சில அகப்பொருளிலக்கண அமைதியையும் சிலப் புறப்பொருளிலக்கண அமைதியையும் பெற்றுள்ளன. ஸ்ரீ மாயூரநாதரைக் கிளவித் தலைவராகக் கொண்டு கூறப்படுவன புறப்பொருளிலக்கணத்துட் பாடாண்டிணை யிலுள்ள கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம் (புறப் பொருள் வெண்பாமாலை, 236) என்னும் துறையின்பாற் படுவனவாகும். கருத்து விளங்க வேண்டி அச்செய்யுட்களுக்குக் குறிப்புரையில் அகப்பொருட் கிளவித் துறைகளே காட்டப் பெற்றிருக்கின்றன. இம்முறை ஆன்றோர்கள் உரையில் முன்பு கண்டதே.

அகத்துறை பயின்ற செய்யுட்கள் : 4, 9, 15, 18, 9, 23, 25-8, 31, 34, 36-9, 42,44,46-9,52,55-6,60‡63, 65-7, 69-75, 79, 82-6,92, 94, 96-9.

புறத்துறை பயின்றவை : 5, 8, 17, 24, 29, 32‡3, 35, 41, 43, 57‡8, 76, 80, 87, 89, 93,95.
78 ஆம் செய்யுள் யமகமாகவும், 12, 72 ஆம் செய்யுட்கள் இரண்டடி மடக்கு களாகவும் அமைந்துள்ளன.

சில செய்யுட்களில் ஒரே சரித்திரத்தை நான்கு அடிகளிலும் திரிபில் தொடர்ந்து அமையுமாறு இவர் பாடியிருத்தல் அறிந்து மகிழத்தக்கது; இந்த ஆற்றல் கவிஞர்களிற் சிலர்பாலே அமைந்திருக்கும்.

தூதுக்குரியவற்றுள், அன்னப்பறவை 8,57 ஆம் செய்யுட்களிலும், வண்டு 32,93 ஆம் செய்யுட்களிலும், பாங்கி விடுதூது 89 ஆவதிலும் வந்துள்ளன.

இதில் இடையே கூறப்பட்ட வேறு தலங்கள் ; தில்லை 9, கூடல், ஐயாறு 80.
இந்த ஸ்தலத்தைப் பற்றிக் கூறப்படும் வேறு விசேடங்கள் : நீர்வளம், 7,23, 46, 50, 59, 77, 89 ; நிலவளம் 25, 31, 35, 39, 56, 62, 64, 68, 73-4, 76, 89, 98; சோலைவனம், 10, 17,20,29, 44, 49, 61, 66, 73‡4,81, 91, 100 ; கிடங்கு 3 ; மதில், 4;  ஆவணம் 5, 14 ; கோபுரம் 4, 58.
மனையிற் பழகுகிள்ளை தாங்கா வியம்புகன் மாமயிலை (32) என்பதனால் இத்தலம் கல்வி மிகுதியாக நிறைந்திருந்த இடமென்பதும், ‘மெய்யர் மகச் சடங்கிடையாகுதி பெய்யுமயிலை’ (85) என்பதனால் வேள்வி புரிபவர் இங்கிருந்தன ரென்பதும் குறிப்பிக்கப்படுகின்றன.

இந்நூலிற் பயின்ற பழமொழிகள் : வெடிப்பிற்கவிழ்ந்த நீர்போல (26) ; ஏரி உடைந்தாற் போல (32); இலவுகாத்த கிள்ளை போல 73.

வேறு சில வி­யங்கள் : மணஞ்செய்கையில் ஆறு கணிதல், 70 ; துயரக் கண்ணீர் சுடுதல், 60 ; தேயம் பதினெட்டு, 16 ; பஞ்சாக்கினி மத்தியில் தவஞ் செய்தல், 34.
இதனுள் ஆதங்கம், சித்தம், நீடம் முதலிய வடசொல் ஒரு மொழிகளும், அதிகாந்திச் சிகரம், தனுபங்குரம் முதலிய பல தொடர்மொழிகளும் காணப் படுகின்றன. இதனால் ஆசிரியர் வடசொற்களை ஏற்றவாறு அமைத்துப் பாடும் இயல்புடையாரென்பது அறியப்படும். சில வடசொற்கள் திரித்தும் வழங்கப் பட்டுள்ளன. அவற்றில் சில வருமாறு : அவத்தர் 65, அவராதி 13 ; இரமை 31 ; இலாவம் 17 ; கணிகம், 87 ; கந்தர்ப்ப வேள்வி, 52 ; சருமந்தர, 43 ; சிரசு, 54 ; பத்தசனம், 15 ; பறுவதந்நதனை, 71 மனது 96 ; வாதை 75.

சில சொற்களும் சொற்பிரயோகங்களும் : ஆட்டி, 96 ; ஆயல் , 66 ; உரும்,6 ; ஒடிச்சு, 56 ; ஒயில், 95 ; கண்ணிவாய்க்கால், 87 ; கமைந்து, 60 ; கெஞ்ச, 3 ; சனியன், 24 ; சினை ‡ கர்ப்பம், 62 ; தத்து, 10 ; தனம், 30, 46 ; தூரி ‡ தூரிகை, 85; தெறுகுது, 87 ; படவு, 72 ; படுகை 76 ; லக்கு, 42.

இவர் சில சிலவிடங்களில் ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றை இறுதி குறைத்தும் வழங்குவர்.

இந்நூற் செய்யுட்களுள், சிலவற்றில் தந்நகரம் வரவேண்டிய விடத்தில், றன்னகரமும் றன்னகரம் வரவேண்டிய இடத்தில் தந்நகரமும் திரிபலங்காரம் நோக்கி வந்தனவெனக் கொள்க. பிற வேறுபாடுகளுக்கும் அவ்வலங்காரமே காரணமாகும்.

இந்நூலாசிரியர் வாக்காகிய நாகூர்ப் புராணத்தில் இந்நூலிற் கண்ட சில சொல்வழக்கும் கருத்தும் காணப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு :

மயிலையந்தாதி
காப்பு, பிதாமகன்பால் வருகும்பமாமுனி; (இது பிரமன் அகத்தியரை நோக்கிக் கூறியது; ‘தந்தை யாகிநாந் தனையனா நின்னிற் றன்னிலெய துவததி சயமோ’ நாகூர்ப் புராணம், சமுத்திர ராசன் பூசித்த.32.
ஒரு கோட் டிருகும்ப மும்மத நால்வாய்க் களபம் ; ‘ஒருமருப் பிரண்டு கும்பத், தருவிமும் மதத்து நால்வாயைங்கர னடிகள் போற்றி’ r கடவுள். 4.
2. தத்துவந்தனை யாய்ந்தே ... பிறவாமை பெறுதி நெஞ்சே : ‘தத்துவங்க ளாய்ந்து சிவ ஞானமெய்திச் சார்வர்முத்தி’ r சந்திரதீர்த்த 51.
16. பதிதன் : பவமுறு பதிதரே r புன்னாக. 63.
34. அஞ்சாரலின் மெயத்தவஞ் செய்யினும் ; ‘பஞ்சாக்கினி யினாப்பண் மானவர் தவமுயன்றால்’ r புன்னாகவன .71.
42. லக்கிட்ட... அம்பு ; ‘அம்பிலக்கை நோக்கி யயய்யின்’ r நாகராசன். 58.
52. கந்தர்ப்ப வேள்வி : ‘கந்தர்ப்பர் சங்கீதம் பாட’ r இந்திரன் பூசித்த.50.
54. சிரசு : ‘சிரசின்மீது கொடு’ r நாகராசன் பூசித்த.66.
61. மலினம் ‡ கருமை. ‘விடஞ்சேர் மலின கந்தரம்’ r சமுத்திர. 38.
76. மிக்கென் றோதப் படுகை வலியமன்பர்க் கருளுத்தமனே : ‘நற்கைவல்லிய, முத்தியைக் கொடுக்கு மீச’ r நாகரசா. 56.

இந்நூல் சம்பந்தமாக இரண்டு நிகழ்ச்சிகள் உண்டு. அவற்றுள் ஒன்று :

ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது இளம் பிராயத்தில் பல ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுத் திருவாடுதுறை ஆதீனத்தில் 14 ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரவர்களைத் தரிசிக்கப் போகும் வழியிற் பட்டீச்சரத்தில் தங்கிய காலத்து அவ்வூரார் பசுபதி பண்டாரமென்னும் ஒரு தமிழ் வித்துவானைக் கொண்டு பரீட்சித்த பொழுது அவர் இந்நூலிலுள்ள, ‘நன்கொடிச்சிக்கை’ (56) என்னும் செய்யுளைக் கூறிப் பொருள் வினவினார். பிள்ளையவர்கள் இந்நூலை அதுவரையிற் பாராமலிருந்தும் உடனே அச் செய்யுளின் பொருளைத் துறையுடன் விரைவில் நன்கு விளக்கவே, அதைக் கேட்டவர்கள் பலரும் அவர்களுடைய கல்விப் பெருமையை அறிந்து பாராட்டுவா ராயினர். அதன்பின்புதான் அவர்கள் புகழ் கும்பகோணம் முதலிய இடங்களிற் பரவியது. இது, பட்டீச்சரத்திலிருந்த வெள்ளைவாராணம் பிள்ளை யயன்பவராலும் பிள்ளையவர்களாலும் கூறப்பட்ட செய்தி.

மற்றொன்று :

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் சிதம்பரத்தில் இருக்கும் பொழுது பிள்ளையவர்களுடைய மாணாக்கர்களில் ஒருவராகிய தேவிகோட்டை வன்றொண்டச் செட்டியாரென்பவர் அவர்களிடம் இந்நூற்சுவடியைக் காட்டினார். நாவலரவர்கள் அதைப் பிரித்துப் பார்க்கையில், ‘வலவருமைக்கு’ (30) என்னும் செய்யுள் அகப்பட்டது. அதைப் படித்துப்பார்த்து நடையின் நயம் முதலியவற்றை உணர்ந்து மகிழ்ந்து வேறு சில செய்யுட்களையும் படித்து இன்புற்று, ‘இந்நூலை அச்சிட்டால் தமிழ் படிப்பவர்களுக்கு நல்ல பயனை அளிக்கும்’ என்றார்களாம். இச்செய்தியை அச்செட்டியாரவர்கள் வாயிலாய் அறிந்தேன்.

இந்த இரண்டு செய்திகளுமே இந்நூலை யான் தேடுவதற்கும் படித்ததற்கும் காரணமாயின.

இந்நூலின் மூலத்தை மட்டும் சென்ற சருவசித்து வருடம் பங்குனி மாதம் (1888) கும்பகோணத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.

பிள்ளையவர்களிடத்தில் படிக்கப் போய் முதலிற் சிலமாதம் இருந்து பாடங்கேட்ட இடம் மாயூரமாதலால் அத்தல சம்பந்தமான இந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்ததைக் குறித்து மிகவும் இன்புறு கின்றேன்.

இந்நூலின் ஏட்டுச் சுவடிகளைக் கொடுத்துதவியவர்கள் : 1) சோழன் மாளிகை ஸ்ரீ இரத்தினம் பிள்ளையவர்கள், 2) மாயூரம் கீழைவீதி ஸ்ரீ வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள், 3) ஸ்ரீ முத்துச்சாமி பிள்ளையவர்கள், 4) பட்டீச்சரம் ஸ்ரீ வெள்ளைவாரணம் பிள்ளையவர்கள். முத்துச்சாமி பிள்ளையவர்களின் ஏட்டுப் பிரதி மிகப் பழையதாக இருந்தது. அதிற் சில சொற்களுக்குப் பொருளும் வரையப் பட்டிருந்தன. முத்துசாமி பிள்ளையவர்களின் ஏட்டுப் பிரதி மிகப் பழையதாக இருந்தது. அதிற் சில சொற்களுக்குப் பொருளும் வரையப்பட்டிருந்தன. அவை இந்நூலாசிரியரால் எழுதப்பட்டனவோ அன்றி அவரிடம் பாடங்கேட்டவரால் எழுதப் பட்டனவோ தெரியவில்லை.

இக்காலத்திற் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பொருட்டு இந்நூல் குறிப்புரையுடனும் ஸ்தல விசே­ம் முதலிய செய்திகளுடனும் இப்பொழுது பதிப்பிக்கலாயிற்று.

இதனை ஆராயுங்காலத்தும் பதிப்பிக்கும் காலத்தும் உடனிருந்து ஸஹாயஞ் செய்தவர் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா.ஜகந்நாதையர்.
இப்படியே நான் பாடங்கேட்டனவும் ஆராய்ந்து வைத்திருப்பனவுமாகிய பல பிரபந்தங்கள் முதலியவற்றைக் குறிப்புரைகளுடன் முறையே பதிப்பித்து வெளிப்படுத்த எண்ணியிருக்கிறேன். திருவருள் நிறைவேற்ற வேண்டும்.

சென்னை, 29.5.30
இங்ஙனம் 
வே. சாமிநாதையர்.

நகரத்தார்களின் பொதுநோக்கு : தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் எம்.ஏ.,

நகரத்தார்களின் பொதுநோக்கு
தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் எம்.ஏ., 
தமிழ் விரிவுரையாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் அனைவரும் சைவ சமயத்தினராக விளங்குகின்றனர். அதன் பயனாகச் சைவ சமயத்தின் பொதுநோக்கு அவர்கள் பாலும் விளங்கக் காண்கிறோம். முதலியார், நாயுடு, பிள்ளைமார் போன்ற பிற சமூகத்தினர்களில் சைவநெறிப் பட்டவர்களும், வைணவ நெறிப்பட்டவர்களுமாக இரு சாரரும் உளர். இன்னும் சில சமூகங்களில் கிறித்துவர்கள், இந்துக்கள் ஆகிய இரு சமயத்தினரும் உள்ளனர். நகரத்தார் பால் இவை போன்ற பிரிவினை கிடையாது. அனைவரும் சைவரே. ஆயினும் காழ்ப்பற்ற சமர நோக்கத்தால் திருமாலை வழிபடுவதிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

நகரத்தார் சமூகத்தினர் பல திருமால் கோயில்களை உருவாக்கிப் பேணி வருகின்றனர். செட்டி நாட்டின் முதன்மை வாய்ந்த நகரமாகிய காரைக்குடியில் கல்லுக்கட்டி மேல் கரையில் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. காரைக்குடிக்கு அடுத்த அரியக்குடியிலிருக்கின்ற சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு, நகரத்தார் பல இலட்ச ரூபாய்களைச் செலவிட்டுள்ளனர். தேவகோட்டை நகரத்தார் வடகலைப் பெருமாள் கோயில், தென்கலைப் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் கட்டியுள்ளனர். இக்கோயில்களின் திருப்பணிகளும் அன்றாடப் பூசை நடைமுறைகளும், வைணவர்களல்லாத சைவர்களாகிய நகரத்தார்களின் பொருளுதவியால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.

மேலும் அரண்மனைச சிறுவயல் நகரத்தார் தம் செலவில் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். கீழச் சிவற்பட்டி, கொற்றமங்கலம், செம்பொன்னூர், பாகனேரி ஆகிய ஊர்களிலும் நகரத்தார், பெருமாள் கோயில்களைக் கட்டி யுள்ளனர். நாட்டரசன் கோட்டை நகரத்தார்கள், அலர்மேலு மங்கைத் தாயார் உடனிருக்கும் வேங்கடேசப் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர்.
வைணவத் தலமாகிய திருக்கோட்டியூர்க் கோயில் திருப்பணிகளிலும் அதன் திருவிழா நிகழ்ச்சிகளிலும் இவ்வினத்தவர்க்குச் சிறப்பான பங்குண்டு. வைணவர் போற்றும் தலமாகிய திருமெய்யத்திலிருக்கின்ற சத்திய மூர்த்தி கோயிலிலுள்ள கல் திருமேனிகளுக்கு இராமச்சந்திரபுரம் தீ.நா.முத்தையா செட்டியாரவர்கள் தைலக் காப்பிட்டுள்ளார்கள். அரிமேளத்திற்கு அருகேயுள்ள கடையக்குடிப் பெருமாள் கோயிலில் நடைபெறும் கசேந்திர மோட்ச விழாவிற்கு நகரத்தார் பெண் மக்கள் பெரிதும் விரும்பிப் போய் வருகின்றனர்.
பர்மாவில் கல்வி வளரும் கம்பை என்னும் சிற்றூரில், நாயுடு சமூகத்தினர் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். இக்கோயிலின்கண் நகரத்தார்களும் சில திருப்பணிகள் செய்துள்ளனர்.  தில்லை நடராசப் பெருமான் எல்லையிலா இன்ப நடம் புரியும் பொன்னம்பலத்திற்கு அணிமையில் கோவிந்தராசப் பெருமானின் கோவிலொன்று உளது. அக்கோயில் சிதைந்து இடிந்துவிழும் நிலையிலிருந்த போதும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டமை காரணமாகப் பழுதுபார்க்கப்படாதிருந்தது. அவ்விரு திறத்தாரையும் அமைதியான முறையில் உடன்படச் செய்தவர் நகரத்தாராகிய அண்ணாமலை அரசரே ஆவார். அதன் பயனாகக் கோவிந்தராசருக்குப் புதிய கற்கோயிலமைந்து 1934 இல் குடமுழுக்கு நடைபெற்றது.

நகரப் பெருங்கோயிலாகிய இளையாற்றாங்குடியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலைக் கழனிவாசற்குடியார் என்ற பிரிவைச் சேர்ந்த நகரத்தார் கட்டியுள்ளனர். இரணியூர் நகரப் பெருங்கோயிலில் இரா நாராயணப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
நகரத்தார் குடும்பங்கள் பலவற்றில் இராமர் படம் வைத்து வழிபடுவதை இன்றும் காணுகிறோம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து, இராமாயணக் கதையை இரவுதோறும் படித்து, அத்திங்களின் இறுதியில் பட்டாபிடேக விழாக் கொண்டாடும் வழக்கம் இன்றும் செட்டிநாட்டில் பல குடும்பங்களில் நிலவுகிறது. இவர்கள் தம்பாலுள்ள இராமாயண ஏடுகளை மிகுந்த பக்தியுடன் பேணிப் போற்றுகின்றனர். இப்புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைதோறும் பலருக்கும் விருந்திட்டு மகிழ்கின்றனர்.
தனி ஒருவர் இல்லத்திற்குள்ளேயே பெருமாள் கோயில் ஒன்று இருக்கும் காட்சியையும் தேவகோட்டை நகரில் கண்டேன். உயர்திரு.பி.எஸ். சாத்தப்ப செட்டியார் அவர்கள் 1943 இல் தம் மாளிகையில் ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதனருகே பூசகர்க்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கு இரண்டு காலப் பூசை நடைபெற்று வருகிறது. மூலவிக்கிரகம் கல்லாலும், உற்சவ விக்கிரகம் தங்கத்தாலும் ஆனவை.

நகரத்தார் வாழுமிடங்களில் அனைத்துச் சமயத்தவர்களும் அன்பு வாழ்வு வாழ்கின்றனர். நகரத்தார் தமது சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள். பழக்க வழக்கங்களிலும் சமயம் மொழி கலை பண்பாட்டுத் துறைகளிலும் அவர்களை பழமை விரும்பிகள் (ளீலிஐவிerஸழிமிஷ்ஸeவி) எனலாம். சமூகக் கட்டுப்பாடுகட்கு உட்படும் மனப்பான்மை படைத்தவர்கள். பிற சமயத்தவர்கள் தத்தம் சமயங்களில் எவ்வளவு பற்றுக் கொண்டிருப்பினும் அக்காரணத்திற்காக அவர்களை இந்நகரத்தார் வெறுப்பதில்லை. ஆனால், தமது சமய வாழ்வுக்குப் பிறருடைய சமயப்பற்று குறுக்கே வருமாயின், அப்போதுதான் அதனை வெறுத்தொதுக்க முற்படுவர்.

மதுரையை ஆண்ட இந்து மன்னரான திருமலை நாயக்கர் கிறித்துவ சமயம் மதுரையில் கால்கொள்ள இடம் கொடுத்தார். தஞ்சையை ஆண்ட இடைக்காலச் சோழ மன்னர்கள் நாகையில் பெளத்த விகாரம் ஒன்று அமைக்க ஆதரவு தந்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மராட்டிய மன்னர்கள் நாகூர் ஆண்டவர் மசூதிக்கும் வேளாங்கண்ணியிலும் தரங்கம்பாடியிலும் உள்ள கிறித்துவத் தேவாலயங்களுக் கும் உதவி செய்துள்ளனர். இங்ஙனம் இம்மன்னர்கள் தமது சமரசப் பொது நோக்கைப் புலப்படுத்தியிருப்பதுபோல மன்னர் பின்னோரான நகரத்தார் வணிகர்களும் தனிப்பட்ட முறையிலும் பொது முறையிலும் பிற மதச் சார்புடையவர்களால் நடைபெறுகின்ற அற நிறுவனங்கட்கும் கோயில்கட்கும் இந்தியாவிலும் பர்மாவிலும் ஏனைய நாடுகளிலும் நன்கொடைகள் வழங்கித் தமது சமரச மனப்பான்மையை நிலைநிறுத்தியுள்ளனர்.

பிறரும் தம்மைப்போல வாழ எண்ணும் இப் பெருந்தன்மை மிக்க பொதுநோக்கு போற்றுதற்குரியதாகுமன்றோ!

தண்டாயுதபாணி வழிபாடு

தண்டாயுதபாணி வழிபாடு

நகரத்தார்கள் அனைவரும் சைவராக இருந்தும் வெளிநாடுகளில் அவர்கள் சிவபெருமானைவிட தண்டாயுதபாணிக்கே மிகுதியாகக் கோவில் கட்டியும் விழா எடுத்தும் வருகின்றனர். இதற்குக் காரணம் சிவாலயங்கள் சிவ ஆகம விதிப்படி நிறுவப்பட்டு அவ்வாறே சிவபெருமான் வழிபடப் பெற வேண்டும். அந்த ஆகம முறைகளை வெளிநாடுகளில் கடைப்பிடிக்க இயலாது. முறை தவறி நடக்க நேரின் ஏற்படும் அபசாரத்துக்கு- சிவ அபசாரத்துக்கு- நிவர்த்தி செய்ய வழியில்லை. மேலும், சிவலிங்கத்தைப் பூசை செய்வது கிரகஸ்த சிவாச்சாரியார்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். சான்று திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம். தொழில் செய்யும் தொலை தூரங்களில் நியமநிஷ்டையுடன் இருப்பதிலுள்ள இன்னலை நகரத்தார்கள் உணர்ந்திருப்பதிலிருந்து அவர் களுடைய அடக்கமும் பக்தியுணர்ச்சியும் புலனாகும்.

மன்னிக்கும் தன்மை தண்டாயுதபாணிக்கு உண்டு. தாங்கள் செய்யக் கூடிய சிறு தவறுகளை மறந்து மன்னித்துத் தங்களை வாழ வைக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு, இவர்கள் சிறப்பிடம் தந்துள்ளனர். கோவில் கட்டுவதற்கு முன் அல்லது கோவில் கட்ட இயலாத சிறு ஊர்களில் தண்டாயுதபாணி படத்தை வைத்து வழிபடுவதே வழக்கம்.

முருகன் என்றும் தண்டாயுதபாணி என்றும் சுப்பிரமணியர் என்றும் தமிழ் மக்கள் போற்றும் இறைவனை வட இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவர். கல்கத்தாவில் ஒரு பெரிய அறிஞர் நகரத்தார் தொடர்பால் தமிழ் மொழி பயின்று, சுநீதி குமார் சாட்டர்ஜி என்ற தம் பெயரை நன்னெறி முருகன் என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

வீடுகளில் பூசை போடும்போது, வேல் ஊன்றிப் பூசை போடுவதும் அதற்குச் சுப்பிரமணியர் பூசை என்று பெயரிடுவதும் மரபு. சுப்பிரமணியருக்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களும் செட்டியார் சமூகத்தில் வழங்கக் காணலாம். நகரத்தார்கள் வாழும் சில ஊர்களில் ஏற்கெனவே சிவன் கோவில்கள் ‡ சிவகங்கை ஜமீன்தார் முதலியவர்களால் கட்டப்பட்டிருந்தன. அவ்வூர்களில் நகரக் கோவில் கட்ட முடிவு செய்த போது, நகரத்தார்கள் தண்டாயுதபாணிக்கே கோவில் கட்டியுள்ளனர். கல்லுப்பட்டி, கூழிபிறை, கோனாபட்டு, நெற்குப்பை ஆகிய ஊர்களிலும் உலகம்பட்டி ஞானியார் மடத்திலும் நகரத்தார்கள் சுப்பிரமணியர்க்குக் கோவில்கள் அமைத்துள்ளனர்.
-‘கண’

மலாயாவில் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணி: முருகு சுப்பிரமணியன்,

மலாயாவில் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணி
முருகு சுப்பிரமணியன், 
ஆசிரியர், தமிழ்நேசன், மலாயா

மலாயா இன்று உலக நாடுகளிடையே செல்வ நிலையில ஓங்கி நிற்பதற்கு மூலகாரணம் ரப்பர். ரப்பர் மரங்களில் பால் வடித்து அவற்றைப் பனங்காய்க்கும் மரங்களாக விளங்கச் செய்யும் மகத்துவம் தமிழ்ப் பட்டாளிகளுக்கு உண்டென்றால் ஆதியில் ரப்பர்த் தோட்டங்களைப் பயிர் செய்ய மூலதனம் கொடுத்த பெருமை புகழ்படைத்த தமிழ் வணிகர்களான தனவணிகர்களையே சாரும்.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழிக்கு முழுமையான இலக்கியமாகக் காட்சியளிக்கும் செட்டியார் சமூகத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்து முதலியன கொண்டு பாய்மரக் கப்பலில் வந்திருக்கின்றனர். சரித்திரங்களும் இலக்கியங்களும் உறுதிப்படுத்தும் செய்தி இது. ஆதிநாளில் இவர்களில் ஒருவரான ‘சந்திரதத்தன்’ என்பார் தம் சொந்த மரக் கலத்தில் மலாயா வந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பியதாக மணிமேகலை கூறுகிறது.

ஆனால், செட்டியார்கள் மலாயாவில் ‘கொடுக்கல் வாங்கல்’ ஆரம்பித்து ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஆகின்றன. மலாக்காவிலேயே அவர்கள் முதன் முதலில் குடியேறினர். பினாங்கு 130 ஆண்டுகளுக்கு முன்னதாகவும், சிங்கப்பூருக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் செட்டியார்கள் வந்தனர்.
மலாக்காவில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான ஒரு சில தோட்டங்கள் நீங்கலாக மற்றத் தோட்டங்கள் எல்லாம் செட்டியார்களிடமிருந்து பணம் பெற்றுப் பயிர் செய்யுப் பட்டவையே. அந்நகரை அலங்கரிக்கும் கட்டிடங்களில் பெரும் பான்மை இவர்களின் பணத்தால் கட்டியனவாகவே இருக்கும்.
மலாக்காவில் தன் சேயான் என்னும் சீனத்தவக்கை மேனாட்டிலிருந்து ரப்பர்க் கொட்டைகளை வரவழைத்துப் புக்கேலிந்தான் என்னும் இடத்தில் முதன் முதலில் ரப்பர்த் தோட்டம் போட்டார். அவருக்குப் பண உதவி செய்தவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்.

மலாயாவில் செட்டியார்கள் போட்டிருக்கும் மூலதனம் தற்சமயம் 20 கோடி வெள்ளிக்கு மேல் இருக்குமென்று மதிப்பிடப்படுகிறது.

‘இந்நாட்டில் இப்போதுள்ள பெருத்த பணக்காரர்கள் என்று கூறக்கூடிய சீன முதலாளிகள், தோட்டச் சொந்தக்காரர்கள், ஈயச் சுரங்க அதிபர்கள், மற்றும் பெரும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வாகனங்கள், ரதங்கள், நகைகள் மற்றும் கோவில் தளவாடங்களுக்கும் குறைவில்லை. மிகவும் பூரணமாகக் கோவில் காரியங்கள் நடந்து வருகின்றன.

மலாயாவில் சைவம் தழைப்பதற்கு நிலைக்களனாக விளங்குபவை நகரத்தார்களின் கோயில்களே. தமிழ்ப் பண்பாட்டின் இருப்பிடமாகவும் அவை திகழ்கின்றன. கூட்டங்கள் முதலியன நடத்தவும், திருமணம் முதலிய பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் இக் கோயில்கள் பெரிதும் பயன்படுகின்றன.
ஊர் வாரியாக நகரத்தார்களின் கோவில்களும் அவற்றின் திருவிழாக்களும் வருமாறு :

1.அலோஸ்டார் தண்டாயுதபாணி கோவில் - மாசிமகம்
2. கூலிம் தண்டாயுதபாணி கோவில்                 - தைப்பூசம்
3.பினாங்கு தண்டாயுதபாணி கோவிலும்
சிவன் கோவிலும்                                         - தைப்பூசம்
4.வாலப்பூர் தண்டாயுதபாணி கோவில்         - வைகாசி விசாகம்
5.சுங்குரும்பை தண்டாயுதபாணி கோவில்         - பங்குனி உத்திரம்
6.தைப்பிங் தண்டாயுதபாணி கோவில்                 - ஆடிவேல்
7.ஈப்போ தண்டாயுதபாணி கோவில்                 - வைகாசி விசாகம்
8.தெலுக்கான்சன் தண்டாயுதபாணி கோவில் - சித்திரா பெளர்ணமி
9.கோலாலம்பூர் தண்டாயுதபாணி கோவில் - பங்குனி உத்திரம்
10.கிள்ளான் தண்டாயுதபாணி கோவில்         - திருக் கார்த்திகை
11.சாவி ( நிபோங் திபால்)பாரிட் புத்தார்
நகரத்தார் நிர்வாகம்
        தண்டாயுதபாணி கோவில்                                - சித்திரா பெளர்ணமி
12.சிரம்பான் செல்வ விநாயகர் கோபில்                - ஆவணி விநாயக                                                                    சதுர்த்தி
13.மலாக்கா பொய்யாத விநாயகர் கோவிலும்
சன்னாசி மலை தண்டாயுதபாணி
கோவிலும்                                                         - மாசிமகம்
14. மூவார் தண்டாயுதபாணி கோவில்                 - திருக்கார்த்திகை
15. பத்துபகாட் தண்டாயுதபாணி கோவில்
16. சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில்        - தைப்பூசம்
17. தாப்பா தண்டாயுதபாணி கோவில்

மலாக்காவில் உள்ள பொய்யாத விநாயகர் கோவில் மலாயாவிலேயே மிகப் பழமையானது. மலாக்காச் செட்டியார்கள் டச்சுக்காரரிடம் நிலம் பெற்று 1781 இல் கட்டி முடித்தது அந்த ஆலயம். அதனை மலாக்காச் செட்டியார்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைத்தனர். அது முதல் மலாக்கா நகரத்தார்களின் நிர்வாகத்தில் பொய்யாத விநாயகர் கோவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செட்டியார்கள் ஏற்று நடத்திவரும் கோவில்களும் மலாயாவில் பல உண்டு.
மலாயாவில் நகரத்தார் சமூகம் ஆற்றிவரும் தெய்வத் திருப்பணி சைவ சமய வரலாற்றில் எப்பொழுதும் ஒளி வீசித் திகழும்.

மலாயா சரித்திரம் - சுவாமி சத்தியாநந்தா

மலாயா சரித்திரம்
 - சுவாமி சத்தியாநந்தா
1.9.1949 இல் எழுதிய முன்னுரை

‘மலாயா சரித்திரம்’ என்னும் பெயரிய இந்நூலுக்கு முகவுரை ஈந்துள்ள கனந்தங்கிய எச்.எல்.ஹாட்ஜ் பி.ஏ. (லண்டன்), எம். ஆர்.எஸ்.டி. (ஐக்கிய மலாயக் கல்வி இலாக்கா இந்தியப் பகுதி உதவியதிகாரி) அவர்கள் இந்நாட்டிலுள்ள தமிழ்ச் சிறுவர்களது தாய்மொழிக் கல்வி வளர்ச்சியிலும், தமிழ் ஆசிரியர்களது மேம்பாட்டிலும், இன்னும் பொதுவாக இந்திய மக்களின் நலத்திலும் கொண்டுள்ள ஆர்வத்தை யாவரும் அறிவர்; இவற்றின் பொருட்டு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் பலரும் நன்கறிவர். திரு.ஹாட்ஜ் அவர்களுடைய மேலான நோக்கம், அவர் ஆற்றும் அரிய தொண்டு இவற்றிற்காக மலாயா வாழ் தமிழ் மக்களும் பிறரும் அன்னாருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்களென்பது எனது துணிபு.

1937 ஆம் ஆண்டு முதல் சிங்கை விவேகானந்த ஆண் பாடசாலை, சாரதாமணி பெண் பாடசாலை இவற்றிற்கு அத்தியட்சராகவும் மேல் வகுப்பு ஆசிரியராகவுமிருந்து யான் பணி செய்துவந்த வேளையிலே, ‘இந்தியாவுக்கும் மலாயாவுக்குமிடையே தொன்று தொட்டு இருந்துவரும் சரித்திர சம்பந்தமான தொடர்பையும் மலாய் நாட்டின் பொது வரலாற்றையும் விளக்கத்துடன் எடுத்துக் கூறும் இந்நாட்டுச் சரித்திர நூல் ஒன்று மலாயாவிலுள்ள தமிழ்ப் பள்ளிக் கூடங்களின் உபயோகத்திற்கு அவசியம் வேண்டும்’ என்ற கருத்தை திரு. ஹாட்ஜ் அவர்கள் என்னிடம் கூறினார்கள். இக்கருத்தினை என்னால் இயன்ற அளவு நிறைவேற்றலாமென எண்ணங் கொண்டேன்.

எனவே, அறிஞர் ஆராய்ச்சிக்காரர்கள் பலரால் ஆங்கிலத்திலே எழுதப்பட்ட மலாயா சரித்திர சம்பந்தமான நூல்களையும் இன்னும் இவ்வி­யம் பற்றிப் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் எனக்கு அவகாசம் கிடைத்த போதெல்லாம் படித்து, தகுந்த குறிப்புகளைச் சேகரித்து வந்தேன்.

இக்குறிப்புகளில் பெரும்பாலான என்னிடம் கல்வி பயின்ற உயர்தர வகுப்பு மாணவ மாணவிகளுக்குப் புகட்டப்பட்டவை. பிறகு இக்குறிப்புகள் அனைத்தையும் தொகுத்து, தொடுவாய்ப் பகுதிகளின் தமிழ்ப் பள்ளிக் கூடங்களது உதவிக் கண்காணிப்பாளர் திரு. தி.ப. கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய முகவுரையுடன் திரு. உ.இராமசாமி நாடார் அவர்கள்தம் செலவில் ஒரு நூல் வடிவமாகச் சிங்கை ஸ்டார் பிரஸில் அச்சிட்டு, 1941 இல் வெளியிட்டேன்.

அந்நூலுக்குத் தேவையான கையயழுத்துப் பிரதிகளைத் தயாரிப்பதில் என் மாணாக்கருள் ஐவரான ச. பாலசுப்பிரமணியம், பி.துரைராஜு, மு.காந்திநாதன், கோ.முருகையன், க. சிவநேசன் என்பவர் மிகவும் துணைபுரிந்தனர்.

இவர்களுடன் ஸ்ரீலஸ்ரீ சுவாமி ஆத்மராம், பி.ஏ. அவர்கள் கையயழுத்துப் பிரதிகளைப் பார்வை யிட்டுச் சில திருத்தங்கள் செய்து உதவினார்கள். அந்நூலின் பாங்கிற்குரிய கருத்துகள் சில, திரு.ஹாட்ஜ், திரு. கோபாலாகிருஷ்ணன் இவர்களால் நல்கப் பட்டவை. இனி, அதனுள் அச்சிடப்பட்ட படங்களில் அநேகம் ஜொகூர் பாரு ஆங்கிலக் கல்லூரி ஆசிரியர் திரு. செ. சுப்பிரமணியம் அவர்களால் தந்து உதவப் பட்டவை.

1945 ல் முடிவுற்ற இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு மலாயாவில் பல மாறுதல்கள் நிகழலாயின. எனவே யான் முன்னர் யாத்த மலாயா சரித்திர நூலினை மாறிய நிலைக் கொவ்வ முற்றும் புதுக்கி எழுத முற்பட்டேன். இந்நாட்டுச் சரித்திரம் பற்றி அறிஞர் சிலர் அண்மையிலே எழுதிய நூல்களை ஆராய்ந்து, புது வி­யங்கள் பல சேர்த்து, மலாயா சரித்திரம் என்ற இந்நூலை எழுதினேன். இவ்வேலையில் அன்பர்களும் என் மாணாக்கர்களுமான திரு. இரா. சண்முகம், திரு. எஸ். மார்ட்டின், திரு. பி.துரைராஜு, திருமதி க.அ.மங்களம் ஆகியோர் பெருந்துணை புரிந்தனர். ஐக்கிய மலாயாக் கல்வி இலாக்கா இந்தியப் பள்ளிக் கூடங்களின் கண்காணிப்பாளர் திரு. லே. தி.ராஜன், பி.ஏ., எல்.டி., அவர்கள் இந்நூலின் இறுதியிலுள்ள சில பாடங்களைத் தொகுப்பதற்குத் துணை புரிந்தது மன்றி, அவற்றிற்குரிய சில ஆங்கில நூல்களும் தந்துதவினார்கள். ஐக்கிய மலாயாப் பொதுஜன உறவு இலாக்காக்காரர் சில பட ‘புளோக்குகள்’ கொடுத்துதவி னார்கள். மலாக்கா திரு. உ.அரு. அருணாசலஞ் செட்டியாரவர்கள் மலாக்கா சம்பந்தமான படங்களின் விவரங்கள் குறித்துக் கொடுத்து உதவி புரிந்தார்கள். கோலாலம்பூர் மனோன்மணி விலாச புத்தக சாலையார் இச்சரித்திரத்தை அச்சிட்டுத் தமிழ்த் தொண்டு புரிய முன் வந்துள்ளனர்.

மேலே சொல்லப்பட்டவர்கள் எல்லோரும் எனது முயற்சியில் பங்கு பற்றியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்நூலின் செம்மைப்பாட்டுக்கான சூழ்தல்கள் எங்கிருந்து வரினும் அவற்றை உவகையுடன் ஏற்றுக் கொள்வேன்.

கோலாலம்பூர் சுவாமி சத்தியாநந்தா
1.9.1949

திவ்வியப் பிரபந்த உரைகளின் தனித்தன்மைகள்: டாக்டர் தெ.ஞானசுந்தரம் எம்.ஏ.பிஎச்.டி.

திவ்வியப் பிரபந்த உரைகளின் தனித்தன்மைகள்
டாக்டர் தெ.ஞானசுந்தரம் எம்.ஏ.பிஎச்.டி.

வைணவர் தந்த செல்வம்

இராமானுசரால் சிலரது தனிவுடைமையாக இருந்த திவ்வியப பிரபந்தங்கள் பொதுவுடைமை ஆயின. அவருக்கு முன்னே திவ்வியப் பிரபந்த விளக்கங்கள் மறையவர் குலத்தில் பிறந்த சிலருக்கே ஆசிரியன்மாரால் சொல்லப்பட்டு வந்தன. இந்நிலையினை மாற்றிய பெருமை இராமானுசரையே சாரும். அவர் திருவாய் மொழியின் பொருளை எல்லோருக்கும் விளக்க வேண்டும் என்று பணித்தார். அதன் விளைவாக முதலில் திருவாய்மொழிக்கும் பின்னர் மற்ற நூல்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக உரைகள் எழுத்து வடிவில் மலர்ந்தன.
இராமானுசரின் ஏற்பு மகனாகவும் மாணாக்கராகவும் திகழ்ந்த திருக்குருகைப் பிரான்பிள்ளான் வரைந்த ஆறாயிரப்படியே வைணவம் கண்ட முதல் உரையாகும். அதன் பின்னர் நஞ்சீயரும், பெரிய வாச்சான் பிள்ளையும், நம்பிள்ளையும், வாதிகேசரி அழகிய மணவாளசீயரும் முறையே ஒன்பதினாயிரப் படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு, பன்னீராயிரப்படி ஆகிய உரைகளைத் திருவாய்மொழிக்குத் தந்தனர். ஏனைய நூல்கள் அனைத்திற் கும் பெரிய வாச்சான் பிள்ளை உரை கண்டார். அவற்றுள் பெரியாழ்வார் திருமொழிக்கு அவர் தீட்டிய உரையில் முதல் நானூறு பாக்களுக்கு உரிய பகுதி கிடைக்காமல் மறைந்து போயிற்று. அப்பகுதிக்குத் திருவாய்மொழிப் பிள்ளையும் மணவாள மாமுனிகளும் உரை எழுதினர். இவை தவிரத் திருப்பள்ளியயழுச்சிக்கும் திருவிருத்தத்துக்கும் நம் பிள்ளை உரையும், திருப்பாவைக்கும் அமலானாதி பிரானுக்கும் அழகிய மணவாள பெருமாள் நாயனார் உரையும், கண்ணி நுண் சிறுத்தாம்புக்கு நஞ்சியர், தம்பிள்ளை ஆகியோர் உரைகளும், ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்னும் திருநெடுத்தாண்டகப் பாட்டிற்குப் பட்டர் உரைத்த விரிந்த உரையும் கிடைத்துள்ளன. இவையே திவ்வியப் பிரபந்தங்களுக்கு அமைந்த பழமையான உரைகள் ஆகும்.

கூட்டுப்பயிர்

உரை உலகத்தில் ஒப்பற்று விளங்குவன வைணவ உரைகள் என்பது அறிஞர் துணிபு. இதற்குக் காரணம் அவ் உரைகள் தனி மனிதர்களின் படைப்புகள் அல்ல.  இலக்கிய நெஞ்சமும் சமயப் பிடிப்பும் கொண்ட வைணவ அறிஞர்கள் பலர் சேர்ந்து வளர்த்த கூட்டுப்பயிர்கள். ஆசிரியன்மார் திருமாளிகைகளில் (இல்லங்களில்) மறைவாகச் சிலருக்கே சொல்லப்பட்டு வந்த விளக்கங்கள் இறைவன் திரு முற்றங்களில் இராமானுசர் காலம் முதல் நிகழலாயின. இத் திருமுற்றப் பள்ளிகளில் மறையவர்களுக்கு மட்டுமேயன்றி மற்றைக் குலத்தார்க்கும் பெண்ணுக்கும் பேதைக்கும் இடம் கிடைத்தன. பாசுரங்கள் விளக்கப்படும் போது கேட்டிருந்தார் தம் உள்ளத்தில் பளிச்சிட்ட கருத்துகளையும் எடுத்துச் சொன்னார்கள்.

(திருவாய்மொழி 6:4:5 இன் ஈட்டுரையிலும் மூன்றாம் திருவந்தாதி 91 ஆம் பாட்டின் உரையிலும் உறங்காவில்லிதாசர் சொன்னவையும், பெரிய திருமொழி 10:2:1 இன் உரையில் நம்பிள்ளை நஞ்சீயருக்குச் சொன்ன திருத்தத்தையும் காண்க.)

அவ்வாறு சொல்லப்பட்ட அழகிய விளக்கங்களை முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் பாங்கு ஆசிரியர்களாக விளங்கிய சமயத் தலைவர்களிடம் நிறைந்திருந்தது.

இராமானுசருக்கு முன் இருந்த சமயத் தலைவரான ஆளவந்தார் திருமாலையாண்டானுக்குச் சொல்லிவைத்த உரை நயங்களும், இராமானுசர், எம்பார், கூரத்தாழ்வான், அமுதனார், திருநறையூர்அரையர் முதலானோர் கொண்ட உரைகளும் சொன்ன கருத்துகளும் ஈட்டுரையிலும் பெரிய வாச்சான் பிள்ளை உரையிலும் பொதிந்து கிடக்கின்றன. ஓர் உரையில் ஒருவர் தந்த விளக்கமாகச் சொல்லப்படுவது பிறிதோர் உரையில் பெயரின்றி இடம் பெற்றிருந்ததைக் காணலாம். இவற்றால் இவ் உரைகளை அக்கால அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையின் விளைச்சல் என்பது பொருந்தும்.

புதிய சங்கமம்
இவ் உரைகளில் வடமொழி  வேதக் கருத்துகளும் தமிழ் மண்ணில் உலாவிய ஆழ்வார்களின் தூய சிந்தனைகளும் ஒன்றாகக் கலந்தன. இது புனித சங்கமம் மட்டும் அன்று; புதிய சங்கமும் கூட! வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் கருத்துகளோடு வடமொழி மறைக் கருத்துகளை இணைத்து எழுதுவதனை ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்தனர். இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

வைணவ சமயக் கோட்பாடுகள் செம்மையாக உருப்பெற்று வேரூன்றத் தொடங்கிய காலம். பல கிளைகளாகப் பிரிந்து கிடக்கும் வேதங்களின் பொருள்களை விளக்குவதில் சிக்கல்களைச் சிந்தித்த காலப்பகுதி அது. வேததத்தில், ‘பரம் பொருள் ஒன்றே உள்ளது’ என்னும் அத்வைதக் கொள்கையினை வற்புறுத்தும் தொடர் களும், ‘பரம்பொருள் வேறு ; உயிர் வேறு’ என்னும் துவைதக் கொள்கையினை வற்புறுத்தும் தொடர்களும், இவ் இரு தொடர்களையும் இணைத்து இசைவிக்கும் தொடர்களும் காணப்படுகின்றன.

இவற்றை முறையே அபேத, பேத, கடக சுருதிகள் என்பர். இப்படி வேறு பிரித்துச் சொல்லும் தொடர்களையும் ஒன்று படுத்திச் சொல்லும் தொடர்களையும், இணைத்து இசைவிக்கும் தொடர்களைக் கொண்டு ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே விசிட்டாத்வைதம். இவ்வாறு ஒற்றுமைப்படுத்திக் காட்டும் பணியின் ஆசிரியன்மார்களுக்கு ஆழ்வார்களின் பாசுரங்கள் துணை புரிந்தன.

ஆழ்வார்களின் பாசுர விளக்கொளியில் வேதங்களை உற்று நோக்கிய போது அவர்களுக்குப் பல தெளிவுகள் உண்டாயின. ‘பரம்பொருள் வேறு; உயிர்களும் உலகங்களும் வேறு. ஆனால் பரம்பொருளுக்கு அவை உடலாக அமைகின்றன. எனவே பரம்பொருள் அவற்றோடு கூடிய நிலையில் ஒன்றாக இருக்கின்றான். இறைவனும், உயிரும், உலகமும் உள்ள பொருள்களே’ என்னும் விசிட்டாத்தைவக் கோட்பாட்டினை  ஆழ்வார்களின் பாசுரங்கள் நன்கு விளக்கின.

இவற்றின் துணை கொண்டு வேதப் பகுதிகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை உண்டாயிற்று. ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்னும் வேதாந்த தேசிகரின் பாசுரமே இதற்குத் தக்க சான்று.

எனவே உண்மைப் பொருளை அறுதியிடுவதற்கு வடமொழி வேதங்களைப் போல ஆழ்வார்களின் பாசுரங்களும் மேற்கோள்கள் (பிரமாணங்கள்) என்று கருதினர். இதனை வற்புறுத்தும் வகையில், வேதம் வேறு, ஆழ்வார்கள் பாசுரங்ள் வேறு அல்ல ; வேதமே ஆழ்வார்களின் பாடங்களாகப்புதிய பிறப்பெடுத்தன என்று எழுதினர். இக் கருத்தினாலேயே இவற்றைத் தமிழ் வேதம் என்று கூறி வடமொழி வேதங்களோடு ஒப்ப வைத்து ‘உபய வேதாந்தம்’ என்று போற்றினர். தங்கள் விளக்கங்களில் வடமொழி மறை முடிபுகளும் ஆழ்வார்கள் சிந்தனைகளும் பல இடங்களில் கைகோத்துச் செல்வதனை எடுத்துக்காட்டினர். இதனால் இவ் உரைகள் வடமொழி மேற்கோள்கள் மிகுந்தனவாய், இரு பெருஞ் சிந்தனையோட்டங்களின் சங்கமமாய்த் திகழ்கின்றன.

நம்மாழ்வார்,
தகுங் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகுஞ் சோதி மேலறிவார் எவரே
என்று ‘மிகும் சோதி’யாகப் போற்றுகிறார்.

உப நிடதங்களும் நாராயணனை மேலான ஒலி வடிவினனாகவே சொல்லுகின்றன என்பதனை,

‘பரஞ் ஜ்யோதி ருபஸம்பத்ய’ (பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம் பொருளினை அடைந்து)

‘நாராயண பரோ ஜ்யோதி’ (பரம் பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும் நாராயணனே) என்று, நாராயணானு வாகம் முதலியவற்றில் வரும் தொடர்களைக் காட்டி விளக்குவர் (திருவாய்மொழி, 2:2:5-36).

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண் ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
என்னும் திருவாய்மொழி

 இறைவனை மண்ணுலகத்திற்கும் விண்ணுலகத் திற்கும் கண்ணாகச் சொல்கிறது. இதே கருத்து யசுர் வேதத்திலும்,

‘சக்ஷுர்த் தேவாநாமுத மர்த்யநாம்’ (விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்) என்று வருதலைக் காட்டுவர். (திருவாய் மொழி, 1:8:3-36).

‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ என்னும் திருவாய்மொழிப் பகுதியினை விளக்குமிடத்தில் இதனையே வினையடியாகப் பிறவாத பெருமான் விழைவடியாகப் பல வகையாகப் பிறக்கிறான். அதனைப் பெரியோர்கள் அறிவார்கள்
(அஜாய மாநோ பஹூதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜா நந்தி யோநிம்)

என்று வேதம் புகல்கிறது என்று ஒப்பிட்டுக் காட்டுவர் (திருவாய்மொழி, 2:9:5-36).

இவ்வாறு அங்கங்கே வேதக் கருத்துகள் விரவி வருதல் காணலாம்.

இதிகாச விருந்து

வேதம், இதிகாசங்கள், புராணங்கள், திருவாய்மொழி ஆகியன ஒரு கருத்தினை வெவ்வேறு வகையில் விளக்குவன என்பது இவர்தம் கருத்து. இதனை, இவற்றை இறைவனுடைய வெவ்வேறு வடிவங்களோடு ‘பரத்வம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாசங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி’ என்று ஈடு ஒப்பிட்டுச் சொல்வதால் அறியலாம். (திருவாய்மொழி, 5:7:11 - 36). இவ் இதிகாசங்களிலும் இராமாயணத்திலும் இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பெரியவாச்சான் பிள்ளை தமது உரையில் ‘ஸ்ரீராமாயணம் அவிழ்த்துக் காட்டாத இடம் நாடல்ல, கொடுவினைத் தூறு’ என்கிறார். (திருவாய்மொழி, 7:5:2-24). எனவே இவர்கள் பாசுரப் பலாச்சுளைகளை இராமாயணத் தேனிலும் பாரத நெய்யிலும் தோய்த்துப் பரிமாறினர்.

நம்மாழ்வார் இறைவனை நோக்கி ‘உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை’ என்று வேண்டுகிறார். இதில் பொன்னடி என்பதற்குக் கல்லுக்கும் சைதந்யம் (உயிர்) கொடுக்க வல்ல அடியன்றோ என்று அகவிசை வரலாற்றினை இணைத்து உரை வரைகிறது ஈடு (திருவாய்மொழி,2:9:10-35).

கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று
என்னும் பாசுரத்தில் ‘வள்ளி மருங்குல் என்றன் மடமானினை’ என்பதற்கு, ‘அவனைக் கொடு வந்த விச்வாமித்ரனைச் சொல்லுகிறது. இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது’ என்று பெரிய திருமொழியில் உரை எழுதப்பட்டுள்ளது. (பெரிய திருமொழி, 3:7:1 உரை).

இதில் இராமபிரானை விசுவாமித்தரன் மிதிலைக்கு அழைத்துச் சென்ற செய்தி நயமாகப் பின்னப் பட்டுள்ளது.

தலைமகள் வண்டினை நோக்கி, ‘என் நிலைமை உரையாயே’ என்று வேண்டுகிறாள். இதில் ‘உரையாயே’ என்பதன் உரையில், ‘ஒரு கந்தர்வன் துர்யோதநனைக் கட்டிக் கொண்டு போகா நிற்கச் செய்தே தர்மபுத்ரன் பேரைச் சொல்லிக் கூப்பிட, அவனை பின்னை ஆந்ருசம்ஸ்யத்தாலே (இரக்கத்தாலே) மீட்டான் என்னை நின்றது ; அங்ஙனன்றிற்கே தன்னை ஆசைப்பட்டுப் பிரிந்திருந்து நோவுபடுகிறபடியைக் கேட்டால் உதவாத ஸ்வபாவனோ என்கிறாள்’ என்று பாரத நிகழ்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது. (பெரிய திருமொழி, 3:6:1 உரை).

மெய்யனாரும் விரும்பித் தொழுவார்க் கெல்லாம்
பொய்யனாரும் புறமே தொழுவார்க் கெல்லாம்
என்பது திருவாய்மொழி.

இதற்குச் சொற் பொருள் வரைவதனோடு ‘க்ருஷ்ணாச்ரயா ; க்ருஷ்ணபலா ; என்று இருப்பார்க்கு மெய்யனாய் இருக்கும் படைத் துணை வேண்டி வந்த துர்யோதநனுக்கு நராயண கோபாலர்களை அடையக் கொடுத்தானாய், தான் பாண்டவர்களுக்காக நின்று அத்தகைய அழியச்செய்கையாலே பொய்யன் ஆகும்’ என்று பாரத மேற்கோள் விரவி எழுதுவர் ஈட்டுரைகாரர். (திருவாய்மொழி, 9:10:8-36).

‘நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே’ என்னும் பாடலில் ‘ஞாலத்தே’ என்பதற்கு, ‘பரமபதத்திலே (வைகுந்தத்திலே) இருந்து அஸ்த்தாதே பயசங்கை (அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுதல்) பண்ணுகிறேனோ? ப்ரஹ்மாஸ்த்ர ப்ரயோகம் பண்ணுவார், நாக பாசத்தையிட்டுக் காட்டுவார், அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத் தேடுவார், பொய்யாசநம் இடுவார் ஆகிய தேசத்திலே வர்த்தியா நின்றால் (வாழா நின்றால்) நான் அஞ்சாதே செய்வது என்?’ என்று உரை தீட்டப்பட்டுள்ளது. இதில் முன்னிரு செயல்களும் இராமாயணத்திலும் பின்னிரு செயல்களும் பாரதத்திலும் வருவன என்பது வெளிப்படை.

இவையேயன்றிச் சில இராமாயண பாரதச் செய்யுள்களை மேற்கோள் காட்டி விளக்கிச் செல்வது ஈட்டிலும் பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய் மொழி உரை தவிர்த்த ஏனைய உரையிலும் காணலாம்.

மாணிக்கப் பேழை

இவ் உரைக்காரர்கள் தங்கள் அருளாசிரியன்மாரிடத்து  எல்லையற்ற மதிப்பும் ஈடுபாடும் உடையவர்கள். அவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் நிறைந்த மாணிக்கப் பேழையாகத் தங்கள் உரைகளை அமைத்துள்ளனர். நாதமுனிகள், மணக்கால் நம்பி, ஆளவந்தார், எம்பெருமானார், எம்பார், கூரத்தாழ்வான், பட்டர், பிள்ளை திருநறையூர் அரையர், சிறியாத்தான் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உரைகளில் காணப்படுகின்றன.

நாதமுனிகள், ஒரு நாள் அரசன் ஒருவன் சாமந்தன் (படைத்தலைவன்) தலையிலே அடியையிட்டு யானைக் கழுத்தில் புக்கபடியைக் கண்டு, தேவாதி தேவனாகிய திருமால், பிரமன் முதலானோர் தலையிலே இப்படியல்லவா அடியிட்டுப் பெரிய திருவடியின் மேலே ஏறியருளுகிறான் என்று எண்ணிச் சிந்தை மயங்கினார் என்கிறது ஈடு. (திருவாய்மொழி, 4:4:8-36). இதனால் அவரது உணர்வுமயமான வாழ்க்கையை உணர முடிகிறது. அரண்மனையில் வாழ்ந்த ஆளவந்தாரை மணக்கால் நம்பி எளிதில் சந்திக்க முடியவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அரண்மனைக்குத் தூதுவளைக் கீரையைக் கொடுத்து வந்து இடையில் நிறுத்திப் பின்னர்க் கொடுத்து அதன் வழியாக ஆளவந்தாரைச் சந்தித்து அவருக்கு மெய்ப் பொருள் விளக்கம் செய்தார் என்றும் குரு பரம்பரைகள் கூறும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘ஆளவந்தார்க்குப் பச்சையிட்ட மணக்கால் நம்பியையும் போலே’ எனவும், இரத்து சொல்லுகைக்கு மணக்கால் நம்பியோடு ஒப்பர் எனவும் வரும் உரைக்குறிப்புகள் அமைந்துள்ளன. (திருவாய்மொழி, 6:8:1-36, 9:3:5-36).

இராமானுசர் நெடிதுநாள் வாழ்ந்தவர் என்பதனை, ‘எம்பெருமானாரைப் போலவே நூறாண்டு ஸ்ரீவைஸ்ணவ ஸ்ரீயோடேயிருந்து’ என்னும் உரைத்தொடர் காட்டுகிறது. (5:1:11-63).

  ‘சிறுவண்டே’ என்னும் சொற்றொடருக்கு, ‘கார்ய வாய்ப்புப் பெருந்து எம்பார் திருமேனி போலே வடிவு சிறுத்திரா நின்றனவாயிற்று’ என்று எழுதப்பட்டுள்ள உரையால் எம்பார் சிறிய வடிவினர் என்பது விளங்குகிறது. (பெரிய திருமொழி, 3:6:2).

மேலும் கூரத்தாழ்வான் பெருங்கல்வி வாய்ந்தவர் என்பதும், (திருமாலை, 6 உரை), பட்டர் அழகிய மணவாளப் பெருமான் என்னும் திருப்பெயரை இனிது நவில்வார் என்பதும்  (திருவாய்மொழி, 6:5:7-36), பிள்ளை திருநறையூர் அரையர் மேன்மைக் குணமுடையார் என்பதும் (திருமாலை,8 உரை), சிறியாத்தான் இரக்கம் மிக்கவர் என்பதும் (பாவை, 1, மூவாயிரப்படி உரை) உரைக் குறிப்புகளால் விளங்குகின்றன.

கற்பனைக் காட்சிகள்

கவியரசர்தம் பாக்கள் படிப்பவர் நெஞ்சிலும் அவர் பெற்ற அனுபவத்தினைத் தோற்றுவிக்க வல்லன. உயர்ந்த கவிஞர்களின் சொற்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் கவிதை நெஞ்சங்களால் மட்டுமே அச்சொற்களின் வாயிலாகக் கவிஞர்கள் பெற்ற அனுபவங்களையும் கண்ட காட்சிகளையும் உணரவும் காணவும் இயலும். அத்தகைய கவிதை நெஞ்சம் இயல்பாகவே வாய்க்கப் பெற்றவர்கள் இவ் உரைக்காரர்கள்.

இவர்கள் சொற்களில் படிந்து ஆழ்ந்து ஒன்றி நிற்கும் தவத்தால் கண்டறியாதன காணும் பேறுபெற்றனர்.

கண்ணபிரான் வெண்ணெய் திருடி உண்ட செய்தியினை,
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி- அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன்போல் கிடந்தானை

என்று பாடுகிறது சிறிய திருமடல்.

கண்ணன் வெண்ணெய் களவு கண்டு மோர்க்குடத்தை உருட்டிவிட்டான். யாரேனும் காணப் போகிறார்கள் என்று பதறி விழுந்தான். விழுந்த இடம் முன்பு படுத்த  படுக்கையாயிற்று. களவு கண்டான் என்று சொல்லினும் ‘படுக்கையோடேயே எழுந்திருந்து களவு கண்டது’ என்னும்படி கால்போட்ட இடத்தே கால்போட்டுக் கை போட்ட இடத்தே கைபோட்டுக் கிடந்தான். அப்போது தான் உருட்டிய மோர் படுக்கையிலே வந்து பாய்ந்து நனைக்கச் செய்தேயும் அறியதவனாய்க் கிடக்கிறான். இப்படி அப்பகுதிக்கு ஓவியக் காட்சிபோல் அழகிய உரை வகுத்துள்ளார் பெரிய வாச்சான் பிள்ளை.
இதில் மோர் வந்து பாயை நனைப்பதாகப் பாட்டில் நேரடியாகச் சொல்லப்பட வில்லை. ஆனால் அவர் ‘மோரார் குடமுருட்டி’, ‘ஓராதவன் போல் கிடந்தான்’ ஆகிய சொற்றொடர்களின் துணையால் மோர் வந்து அவன் படுக்கையை நனைக்கும் காட்சியினைக் கற்பனையில் கண்டு உரைக்கிறார்.

‘பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப’ என்று வயல்வளம் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. (திருப்பாவை,3).

இவ் அழகிய தொடர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உள்ளத்தில் ஆண்வண்டும் பெண் வண்டும் உறங்கி உணர்ந்தெழும் காட்சியினைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. மது அருந்தியதாலும், புல்லிக் கிடந்த கலவியாலும் பிறந்த புகர் முற்றும் வடிவிலே புலப்படுமாறு இருக்கும் வண்டுகள் மிக்க ஆர்வத்தோடு புக்கு மலரின் ஊற்றின் பத்தாலே நஞ்சு உண்டாரைப் போலே கிடந்து உறங்குகின்றன. பின்பு உணர்ந்து எழுந்த போது, ‘என்னை நீ எழுப்பிற்றிலை, என்னை நீ எழுப்பிற்றலை’ என்று ஒன்றுக்கொன்று ‘சீறுபாறு’ என்னா நிற்கின்றன என்று அதனை அவர் சொல் லோவியமாக்கிச் செல்கிறார். இதில் வண்டுகள் படுக்கை வாய்ப்பாலே நெடிது உறங்கிப் பின்னர் விழித்து ஒன்றோடொன்று பிணங்கும் காட்சியினைக் ‘கண்படுப்ப’ என்னும் சொல்வழிக் கண்டுரைக்கிறார்.

இத்தகைய இடங்களில் விளக்கங்கள் நூலற்ற காற்றாடிபோல் மூலத்தினின்றும் விலகி எங்கோ பறப்பது போலத்தோன்றும். ஆனால் உண்மையில், தாயின் மடியிலிருந்து மெல்லக் கீழே இறங்கிக் குழந்தை தெருவில் புழுதியில் விளையாடிய போதிலும் அவள் பார்வை வட்டத்திலிருந்து விலகாமல் இருப்பது போலவே இவ் உரைகளும் மூலத்தின் பொருள் வளாகத்துக்குள்ளேயே அமைகின்றன.

உவமைக் களஞ்சியம்

தம் கருத்தை விளக்குவதற்கு உரைகாரர்கள் எல்லாரும் உவமைகளைக் கையாளுவது பொதுவான இயல்பு. இவ் உரையாசிரியர்கள் விளக்கத்திற்காக மட்டுமின்றி அழகுக்காகவும், சுவைக்காகவும் கூட உவமைகளை இடையிடையே காட்டிச்செல்வர். பெருமிதமான அரசவாழ்க்கை முதல் துள்ளித் திரியும் கன்றுக் குட்டியின் வாழ்க்கை ஈறாகப் பல்வேறு துறைகளினின்றும் உவமைகளைத் தெரிந்தெடுத்துள்ளனர்.

ராஜாக்கள் கறுப்புடுத்து (மாறுவேடமிட்டு) புறப்பட்டால் அந்தரங்கர் (மெய்க் காப்பாளர்) அபேக்ஷித்த தசையில் (வேண்டும்பொழுது) முகங்காட்டுகைக்காக பிரியத் திரிவர். அதுபோல (திருவாய்மொழி, 1:8:9-36),

‘ராஜகுமாரன் புழுகு நெய்யிலே பூவைத் தோய்த்துச் சூடுமாபோல’ (திரு விருத்தம், 40 உரை)

‘கூறு செய்த ஊரிலே கையும் கைத் தளையமாய்த் திரிவாரைப்போல’ (பெரிய திருமொழி, 1:5:8 உரை)

‘வெள்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தே விடுமாபோலே’ (அமலனாதி பிரான், 1 பெரி.உரை)

‘கர்­கனானவன் (உழவன்) பயிர்த் தலையிலே குடில்கட்டி நோக்குமா போலே’ (பெரிய திருமொழி, 1:2:1 உரை)

‘கிண்ணகத்தில் (வெள்ளத்தில்) இழிவார் கைகோத்துக் கொண்டிழிய ஆள்திரள் பார்த்திருப்பாரைப் போலே’ (பெரிய திருமொழி, 3:1:1 உரை)

‘க்ஷாம காலத்தில் (பஞ்ச காலத்தில்) ப்ரஜைகள் (பிள்ளைகள்) ‘சோறு சோறு’ என்னுமாபோலே’ ( திருவிருத்தம், 69 உரை)

‘வழிபறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச்சீரையை (பணமுடிப்பை) அவிழ்த்துப் பார்த்து இதுதப்பப் பெற்றோமே என்று உசுப்பாரைப் போலே’ (பெரிய திருவந்தாதி, 25 உரை)

‘மாதாப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமா போலே’ (திருமாலை, 19 உரை)

‘புதிதாக வைதவ்யம் (கைம்மை) வந்தவர்கள் ஆள் கிளம்புவதற்கு முன்னே மனிதர் முகத்திலே விழியாமே போமா போலே’ (திருவிருத்தம், 24 உரை)

‘பால் குடிக்க நோய் தீருமா போலே’ (பெரிய திருமொழி, 5:8:10 உரை)

‘குழக்கன்று செருக்காலே துள்ளுமா போலே’ (பெரிய திருமொழி, 3:2:7 உரை)

இவை போன்ற நூற்றுக்கணக்கான உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவை அவர்தம் பரந்த அறிவைக் காட்டுவதோடு அக்காலச் சமுதாய நிலையினைக் காட்டும் பல கணிகளாகவும் திகழ்கின்றன.

இலக்கியத்தேன் துளிகள்

சொல்வதனை அழகுறச் சொல்வது ஒரு தனித்திறன். வைணவ உரை யாசிரியர்கள் சொல்லின்பத்தில் தோய்பவர்கள். அங்கங்கே இருபொருள் தரும் சொற்களைக் கையாண்டு தொடர்களைத் தொடுத்துச் செல்வர். இவ் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியில் அமைந்த தொடர்களை இலக்கிய இன்பம் நல்கும் தேன் துளிகள் எனலாம்.

பெருமாள் மீது காதல் கொண்ட தலைமகள் உடம்பில் பசலை படர்ந்தது ; கண்களில் நீர் நிறைந்தது. ‘கேழ் அவ் ஒண் கண்ண நீர் கொண்டாள்’ என்கிறாள் திருத்தாயார். இதனை விளக்குமிடத்துத் தலைமகளின் தாய், ‘தாமரையிலே முத்துப் பட்டாற் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிற இருப்பைக் காட்டில் எறித்த நிலவாக்குவதே! இவ் இருப்புக்கு க்ரு´ பண்ணி (முயற்சி செய்து) பல வேளையிலே (பயன் பெறும் நேரத்திலே) இழப்பதே ; பொன்னும் முத்தும் விளையும் படியிறே க்ரு´ பண்ணிற்று’ என்று கூறுவதாக உரை வரையப்பட்டுள்ளது (திருவாய்மொழி, 2:4:10-86). இதில் பொன் என்பது பொன்னாகிய உலோகத்தை யும், பசலை நிறத்தையும், முத்து என்பது முத்தாகிய மணியையும் கண்ணீரையும் குறிக்கும் வகையில் இருபொருள்பட அமைந்திருத்தல் காணலாம்.

பெருமான் தன் கையில் சங்கம் ஏந்தி நிற்கிறான். அதற்குப் பாஞ்சசன்னியம் என்பது பெயர். ‘கூனற் சங்கத் தடக்கையன்’ என்கிறார் நம்மாழ்வார். ‘கூனற் சங்கம்’ என்பதற்கு ‘வாயது கையதாக அநுபவிக்கிறவனே’ என்று இருபொருள் அமைய உரை கூறுகிறது ஈடு (திருவாய்மொழி, 4:5:9‡36). இத் தொடர் முறையே வாயிலும் கையிலுமாக இருப்பவனே என்றும் வாய்ச்சுவையைத் தனதாக்கிச் சுவைப்பவனே என்றும் பொருள் தருகிறது.

இத்தகைய தொடர்களை வடமொழியில் ‘ரசோக்திகள்’ என்பர்.

உணர்ச்சி வெள்ளம்

பாசுரங்களில் தலைமகள், தாயார் கூற்றாகவும், ஆழ்வாரது கூற்றாகவும் வரும் பகுதிகளுக்கு அவர்கள் உள்ளத்து உணர்ச்சியை ஒட்டி விரிவாக வரையும் உரைகள் உணர்ச்சி வெள்ளமாகத் திகழ்கின்றன. வினாக்களின் தொகுதியாக அமைந்து கற்பார்தம் கருத்தினை ஈர்த்து நிற்கின்றன.
சான்றாக, ‘கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்’ என்று தலைமகள் கூற்றாக வரும் திருநெடுந்தாண்டகத் தொடரின் உட்பொதிந்துள்ள உணர்ச்சியினைப் புலப்படுத்தும் பகுதி வருமாறு :

‘பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால் வந்த ஆபத்தில் ரக்ஷிக்கலாகாதோ? கல்வர்­த்தில் (கல் மழையில்) அகப்பட்டாரையோ ரக்ஷிக்க லாவது? ... துக்க வர்­த்தில் (துயர மழையில்) அகப்பட்டாரை ரக்ஷிக்கலாகாதோ? ஒரு ஊராக அகப்பட நோவுபட்டாலோ ரக்ஷிக்கலாவது? அவ் ஊராகப் பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷணத்துக்கும் மலையை எடுக்கணுமோ? மலையை எடுத்த தோளைக் காட்ட அமையாதோ? என வருதலைக காணலாம் (திருநெடுந்தாண்டகம், 13 உரை).

இவ்வாறே ‘ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தவனே’ என்னும் (திருவெழு கூற்றிருக்கை, அடி 9 உரை) திருவெழுகூற்றி ருக்கைத் தொடருக்கும், ‘மண் கடந்த வண்ண! நின்னை யார் மதிக்க வல்லரே’ (திருச்சந்தவிருத்தம், 27 உரை) என்னும் திருச்சந்த விருத்தத் தொடருக்கும் உணர்ச்சி அலையயறியும் உரைகள் தீட்டப்பட்டுள்ளன.

இவையே யன்றிப் பதசாரம் கூறல், அடைமொழிகளுக்கும் இடைச் சொற் களுக்கும் நுட்பமாக விளக்கம் தருதல் முதலான பல இயல்புகளும் இவ் உரையாசிரியர்களிடம் மேலோங்கி நிற்றலைக் காணலாம். அவை விரிப்பின் பெருகும். சுருங்கச் சொன்னால் வைணவ உரைகள் சில புதிய பெரு வழிகளை உரை கூறும் உலகில் அமைந்துள்ளன எனலாம்.

(இவர் தஞ்சை மாவட்டம் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். குடந்தை அரசினர் கல்லூரியில் இளங்கலையும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையும் பயின்றவர். 1982 ஆம் ஆண்டு வரை சென்னைக் கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்தவர். இதுபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையயழுத்துச் சுவடித் துறையில் அயற்பணி அடிப்படையில் இணைப் பேராசிரிய ராகப் பணிபுரிகிறவர்.  இவரது ‘வைணவ உரை வளம்’ என்னும் ஆய்வேட்டிற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பேச்சும் எழுத்தும் இவருக்குப் பிடித்தமான பணிகள். இப்பொழுது திருமங்கை மன்னன் பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய மணிப்பிரவாள  உரையினைத் தமிழாக்கம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்).