Wednesday, September 22, 2010

பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்

பெரியார் மொழிக் கொள்கை வகுக்க வில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை மணியரசன் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

“தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும்.

ஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர் களல்லாத, அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப் பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பது தான் ஆட்சி மொழியாகவும் கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழி யாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது”.


ஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், “தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களை தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கினார். (‘மொழியும் அறிவும்’ 1957-1962).

1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.

ஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.

இன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)

தமிழ் வழிக் கல்வியை விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திரு.டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான குழு அமைக்கப் பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில் ஒரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள் அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன் அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.

இப்போது திருவாரூரில் மருத்துவர் ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில் எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று வரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும் தந்ததில்லை. ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம் கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி படிப்பிற்கான அனைத்து தமிழ் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள். மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம் மருத்துவர் ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு. அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவை யெல்லாம் நான் கூற காரணம், மருத்துவர் ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை என்பதால் தான்.

புதுச்சேரியில் மருத்துவர் அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை. இதையயல்லாம் பெரியார், அவர் காலத்தில் செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ் புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களைவிட சம்பளம் குறைவு என்றால் போராடி உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று கூறுகிறார்.

அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரியார் மாட்டிக் கொண்டார் என்று. உடனே கேள்வி கேட்கிறார், “உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா?” என்று.

பெரியார் நன்றாகவே அடைமொழி போடுகிறார், அதாவது “அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்” என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமே யில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான் என்றுதான் கூறுகிறார்.

தமிழறிஞர்களுக்காக வருத்தப்படுகிறார், “தமிழ் மொழிக் களஞ்சியங்களான ‘மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்?”

பெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில் பெரும்வாழ்வு வாழவில்லை என்பதுதானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம் சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் “சைவத்தை நிலை நிறுத்திய மூடநம்பிக்கைக் கeஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்” என்று கவலைப்படுகிறார்.

காலஞ்சென்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது வாழ்கின்ற அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,

“காலம் செல்லாத இன்றையத் தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பர நாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜமாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன? அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன்? அன்னக் காவடி பஞ்சாங்கப்பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான்” என்று வேதனைப்படுகிறார்.

பெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம் சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா? இல்லை. புரிகிறது. அதனால்தான் அடுத்து , ‘பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம், தமிழ் அகராதி எழுதிய அறிஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்து ஒளி வீசியவர்கள். இவர்களைக் ‘காலஞ்செல்லாத தமிழ்க் களஞ்சியங்கள்’ என்று பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ‘ஒரு டஜன் உருப்படிகள்’ என்று பெரியார் கூறுவது தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப் பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு”. என்று எழுதுகிறார் பெ.மணியரசன்


இறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான குரலையும் கவலையும் பெரியார் தெரிவிக்கிறார்,

“பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள் எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள்.”(விடுதலை தலையங்கம் 5.4.1967)

பெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும் “உருப்படிகள்” என்ற சொல்லையும் “காலஞ்செல்லாத” என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து குழுப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.

மேலும் பெரியாரோடு இருந்ததால்தான் சாமி.சிதம்பரனார், புலவர் குழந்தை, பொன்னம்பலனார் மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.

மறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், “மரியாதைக்குரிய பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம் அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூற முடியுமா?“ (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார்.

மறைமலையடிகளைக் குறிப்பிடும் போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும் தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார். சுப.வீ அவர்களை வாளாகக் கொண்டு பெரியார் மீது வீசுகிறார் பெ.மணியரசன். இவரும் இரவிக்குமார் மாதிரி சிந்தனை செய்கிறாரோ என்ற அய்யமும் அதனால் இரவிக்குமார் மாதிரி மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய் விடுவாரோ என்றக் கவலையும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

-முற்றும்

புலவன் என்றால் சொந்த புத்தி இல்லாதவன், புளுகன்

தமிழ்ப்புலவர்களைப் பற்றி இன்னமும் கூறுகிறார் பெரியார்,

“நான் தமிழை அறியாதவனல்ல. தமிழ்ப்புலவர்களை மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல. தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல”.


“இன்றையப் புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிடிகல் புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் தமிழ் அறிவு உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கை நீட்டாத தமிழ்ப் புலவர்கள் குறைவென்றே சொல்லுவேன்”.

“மீனாட்சி சுந்தரம் பிள்ளையை எனக்குத் தெரியாது. சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும். சாமி வேதாச்சலத்தையும் தெரியும். கலியாண சுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த் தென்றல்களையும் தெரியும்”.


“ஒரு சமயத்தில் நாங்கள் காங்கயம் சேஷாசல நாயுடு, முத்துசாமிக் கவிராயர், சங்கரதாஸ் (சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆனபின்) இவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு சிரித்து கை தட்டினார்கள். இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்”.


“சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு எல்லாம் மாதம் ரூ 15 முதல் ரூ 30 வரை சம்பளம் தான் சாதாரணமாக இருக்கும். அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருகச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும்.


புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரை வேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார்”.

இப்படி கூறிய பெரியார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்,

“இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி , அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்பராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப் பார்கள்”.


“இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராளமாக ஆகி விட்டார்கள். பூச்சும் பொட்டும் நாமமும் தான் இருக்கிறது. அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்”.


“எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும்”.


“அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக் கல்வி (தமிழ்)

அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்

திடமு³மோ கனமாடக் கழைக் கூத்தாடச்

செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்

சனியான தமிழைவிட்டு தையலார் தம்

இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை

என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே ”

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத்தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்க் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்திக் காட்டியிருக்கிறார்”. (விடுதலை தலையங்கம் 16.3.1967)

-தொடரும்

தமிழை,தமிழனைக் கெடுத்தவர்கள் தமிழ்ப் பண்டிதர்களே!

ஆங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார், “வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘அடிமை வாழ்வே ஆனந்தம்’ என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு. சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது”.

“தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயயாழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வடமொழியோ அல்ல”.

வீட்டு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள் என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.

மேலும் பெரியார் கூறுகிறார், “அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான்”. பெரியார் இப்படி ஒப்பிட்டுக் கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது”.

பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டது தான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,

“தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.


சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள்.அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை யிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்”.

இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,

“தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,

“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்”.

தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.

தமிழைப் பற்றி கூறும் போது, “தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல” என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.

“மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது”.

“உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன”. (குடி அரசு 26.1.1936).

-தொடரும்

தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்

தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,

“அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.


இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.


வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல”.

தனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

“அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை”. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

“இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா?” என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

“நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா?” என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.



“தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புரு­னுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே! இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­ஷனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.


‘மோட்சம்’ என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? நெறி, கோள் என்றால், வெறி ஏது? ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? ‘பதிவிரதம்’ என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம்’ என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன?


தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை”.

மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

-தொடரும்

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத் தான் குறிக்கிறது

தமிழை ‘நமது தகைமைசால் தமிழ்’ என்று அழைத்து அது பற்றியும் பெரியார் கூறுகிறார்.

“ ‘தமிழ்’ என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன.


இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன”.


“வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத் திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களுக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும் படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆசசார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும் , அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது”.


“ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்”.

இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார், தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்:

“நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர் களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது”.

இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.

மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்றதை “தொலைந்தது சனியன்” என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.

“வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்”.

இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

-தொடரும்

ஜாதியைக் குறிக்கும் சொல் தமிழில் இல்லை

மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க ‘மொழி’ முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ‘ஒலிக் குறிப்பு’ என்று கூறலாம்”.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், “ஒருவரை பார்த்து, ‘உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, ‘நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது”.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும் விளக்கம் கூறுகிறார்,

“மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்ல வென்றும் உங்களுக்கு விளக்கிக் காட்ட விரும்புகிறேன்”


என்றால்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், “யாழ்ப்பாணத்தான், ‘அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள்’ என்று கூறுவதை, திருநெல்வேலியான், ‘அவா அப்பமே வந்தா’ என்பான். கிராமத்தான், ‘அவியயா அப்படியே வந்தாங்கோ’ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம்” என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

“மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத் திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள ‘ஹ’ போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் து³Èத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.


உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன் அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் ‘ழ’, ‘ள ’ இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்”.

‘ழ’, ‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த பெ. மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார்,

“இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக் கருத்து இருந்ததில்லை என்பது தான்”.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, “அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்” என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் “ஜாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்கங்ளேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் ஜாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் ஜாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள், வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப பாருங்கள்” என்று கூறியுள்ளதையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்.

“எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசிய மாகும்”.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ. மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

-தொடரும்

பெரியாரின் மொழிப்பார்வை

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து, நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

தமிழ் மொழியை தாய்மொழி என்பதும், அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

-வே. மதிமாறன்

***

சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ நூல் குறித்து ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகஸ்ட் 2005 இதழில், திரு. பெ.மணியரசன் எழுதியிருந்தார். சுப.வீ யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

‘பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது’ என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார். பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல்.

‘பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.’ இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான். அதில் உள்ள தெலுங்கு பேசுபவர்களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.

‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. மூட நம்பிக்கை மொழியென்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு.’ என்று பெ. மணியரசன் எழுதியவற்றிற்கு எல்லாம், பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன்.

பெ. மணியரசனின் பெரியார் மீதான் அவதூறுகளை மறுத்து, 2005 ல் நான் எழுதிய நூலினை உங்களுக்கு தொடராக தருகிறேன்.இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.

-கவி, சிங்கப்பூர்.

-தொடரும்

Tuesday, September 7, 2010

தரங்கை பன்னீர்செல்வம் நூல் வெளியீட்டு விழா

http://periyarparvai.blogspot.com/


தரங்கையாரின் நூல் வெளியீட்டாளர் கவி அவர்களைச் சிறப்புச் செய்கிறார் ஆசிரியர் மன்றத் தலைவர் திரு.க.மீனாட்சிசுந்தரனார்.

ஏற்புரை நிகழ்த்துகிறார் வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பால் உரை தொகுப்பாசிரியரும் தரங்கையாரின் தமிழத்தேன் நூல் வெளியீட்டாளருமாகிய கவி. மேடையில் நன்னிலம் பேரூராட்சித் தலைவர் திரு.மணிமாறன் அவர்கள்

தரங்கையாரின் தமிழத்தேன் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் அறப்பால் உரை நூல்களை வெளியிடுகிறார் அமைச்சர் உ.மதிவாணன். (24.01.2010)