Thursday, March 14, 2013

பெரியாரும் வள்ளுவரும் - பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்


பெரியாரும் வள்ளுவரும்

பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்


‘நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையாரையும் அறிவாளிகளாகக் குறிப்பிட முடியும்’ என்று நம் பெரியார் (ஈ.வெ.ரா) போற்றும் பெரியார் யார் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பெரியார் அறிவாளி எனக் கருதிய திருவள்ளுவருக்காக முதன் முதலில் சென்னையில் தமிழறிஞர்கள் பலரைக் கூட்டி 1949 இல் பெரிய அளவில் மாநாடு ஒன்றினை சிறப்பாக நடத்தியுள்ளார். அம்மாநாட்டிலும் அதற்கு முந்திய ஆண்டில் திருவள்ளுவர் கழகச் சார்பில் நடந்த திருவள்ளுவர் மாநாட்டிலும் (1948 இல்) தந்தை பெரியார் பேசிய பேச்சுகள் வாயிலாகப் பெரியார்தாம் பெரியார் எனக் கருதிய  வள்ளுவரைப் பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது. அவற்றை நோக்குவோம்.

தெய்வப் புலவரா?

திருவள்ளுவருக்குரிய பத்து பெயர்களில் தெய்வப் புலவர் என்பது ஒன்று. தெய்வத் திருவள்ளுவர் (கீரந்தையின் திருவள்ளுவ மாலை), தேவிற் சிறந்த திருவள்ளுவர் (உறையூர் முது கூற்றனர் திருவள்ளுவ மாலை), என வருவதைக் காண்க. இதனை நம் பெரியார் மறுக்கிறார். பெரியார் பகுத்தறிவாதி, மேலும் நாத்திகர் கொள்கை உடையவர். எனவே ‘இன்றுள்ள மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வீக தன்மை என்பதாக ஒரு தன்மை மக்களுக்கு இருக்கிறது என்பதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாததால்தான் திருக்குறள் ஆசிரியருக்கு அத்தகைய தெய்வீகத் தன்மையை கொடுக்க முடியவில்லை’ என்று காரணம் கூறுகிறார் அவர்.

வள்ளுவர் உண்மைப் பெயரா?

திருக்குறள் இயற்றியவர் பெயர் திருவள்ளுவர் என்பது தான் வழி வழி வந்த கருத்து. இதுவரை வந்த எல்லா நூல்களும் எல்லா புலவர்களும் கொண்ட கருத்து இதுவே. இதனையும் பெரியார் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவர் கூறும் கூற்று: ‘வள்ளுவர் என்பது ஒரு சமூகத்தின் பெயர். ஒரு சமூகத்தினரின் பெயரே ஒரு தனிப்பட்ட நபரின் பெயராக அமையக் கூடும் என்று என்னால் கருத முடியவில்லை. அதுவும் தாழ்ந்த சாதி எனக் கருதப்படுமொன்றின் பெயரை ஒருவர் தம்முடைய பெயராக வைத்துக் கொள்ளக் கூடும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. திருக்குறளை உண்டாக்கியவரின் உண்மைப் பெயர் மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான் என்னுடைய கருத்து’. நூலாசிரியர்களின் பெயர்கள் மறைக்கப்படுவது பண்டைய வழக்கு தானே என்றும் வினவுகிறார் அவர்.

திருக்குறளின் நோக்கம் என்ன?

‘அறம், பொருள், இன்பம் வீடென்றும்  அந்நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவை ’எனத் திருவள்ளுவர் நூலின் நோக்கம் பற்றி மாமூலனார் எனனும் புலவர் திருவள்ளுவ மாலையில் கூறுகிறார். இதனைக் கோவூர் கிழார் முதலிய புலவர்களும் வழிமொழியக் காணலாம். ஆனால் பெரியாரோ, ‘ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய அக் கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்ப்ட  நூல் திருக்குறள்’ என்று தான் பெரியார் எண்ணுகிறார்.

மனுதர்ம மறுப்பு
மனுதர்மம் வர்ணாச்சிரம் தர்மத்தைக் காட்டிச் சாதியை வலியுறுத்துகிறது. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என் வருணப் பாகுபாட்டினை மனு கூறுகிறார். வள்ளுவரோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கூறி மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் என்று சொல்கிறார். ஆடு மாடுகளைப் பலியிட்டு யாகம் செய்தலை மனு கூற வள்ளுரோ, அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று என்று யாகத்திற்கு எதிராய் பேசுகிறார். மது, இறைச்சி, மீன், சமுத்ரா, மைதுனம் ஆகிய ஐந்தும் மோட்சத்தில் சாதனங்கள் என்பது மனு கூற்று. கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களில் வள்ளுவர் கள்ளுண்ணுதலையும் உயிர்க்கொலையையும் மறுத்துபேசும் மாண்பினைப் பார்க்கிறோம்.
‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்பது மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை கூற்று.

கடவுள் வாழ்த்து கூறும் கருத்து யாது?

வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை என்பது பெரியார் கருத்து. கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல் வேண்டும் என்பதையும்  உயர்வான மனிதத் தன்மைகளையே கடவுள் வாழ்த்து அதிகாரம் கூறுகிறது என்பதையும் பெரியார் கருத்தாகக் கொள்ள வேண்டியுள்ளது.

வான்சிறப்பு அதிகாரம் வழங்கும் செய்தி  யாது?

கடவுளை வாழ்த்துவது - வணங்குவது தான் கடவுள் வாழ்த்து என்பதைக் கடிந்து நின்ற பெரியார் வான் சிறப்பு என்னும் அதிகாரம் மழையின் பெருமை பேசுவது என்னும் கருத்தையும் மறுக்கிறார். மக்கள் ஒழுக்கமாயிருந்தால் மழை பெய்யும் என்று இன்றைய மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து வள்ளுவர் மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ்தல் கூடும் . கஷ்டமின்றி வாழ்தல் கூடுமானால்தான் மக்களிடையே நிலை பெற முடியும்.

பெண்வழிச் சேறல் தவறா?

பெண்ணின் இன்பம் கருதித் தம் மனையாள் ஏவலுக்கு ஏற்ப நடத்தல் பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரம் என்பர் (91).  பெரியார் ஈ.வெ.ரா, திருவள்ளுவர் பெண்களை இழிவு செய்பவரா என்னும் கேள்வி கேட்டுத் தெளிவான விளக்கம் தருவதைக் காண்க: ‘திருவள்ளுவர் பெண்களை அய்ந்து வகையாக, அதாவது தாய், தகப்பன் பாதுகாப்பில் கல்யாணமாகாமல் கன்னிகளாக இருந்து வரும் பெண்கள், கல்யாணமாகி இல்லற வாழ்வில் ஈடுபட்டு வரும் பெண்கள், விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் விலைமகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தான் தோன்றித் தனமாக சுதந்தரமாக வாழ்ந்து வரும் பெண், கணவனை இழந்த விதவைப் பெண் என்று பிரித்தே பேசுகிறார். பெண்வழி சேறல் சுதந்தரர்களாகிய பெண்களையே குறிக்கிறது; அவர் வழிச் சேர்ந்த ஆடவர்களுக்குக் கேடு சம்பவிக்கும்’. எனவே பெண்களைப் பற்றி இழக்காக ஒரு வார்த்தை கூடத் திருவள்ளுவர் பேசவில்லை என்பது பெரியார் கருத்து.

எல்லாப் பொருளும் திருக்குறளில் உண்டா?

திருவள்ளுவ மாலையில் மதுரைத் தமிழ் நாகனார் என்னும் புலவர் எல்லாப் பொருளும் இதன் பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று கூறியுள்ளார்.

திருக்குறளில் இல்லாத - சொல்லாத பொருளே இல்லை. எல்லாப் பொருளும் சொல்லப்பட்டுள்ளன என்பது இப் புலவர் கருத்து. இன்னும் சிலர் இதனைக் கூறுகின்றனர். ஆனால் பெரியாரோ இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். திருக்குறள் மீது எனக்கு  அளவற்ற பற்றுண்டு. என்றாலும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளே எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் எனறோ மதவாதிகள் வேதத்துக்குச் சொல்வது போல் நான் கூறவில்லை. இன்றையக்கருத்துக்கேற்பச் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் இருக்கலாம். பெரியார் கருத்து நியாயமானது. நடைமுறைக்கு ஏற்றது. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்பதுதானே குறள்.

யார் யாருக்குத் திருக்குறள்?

திருக்குறளில் ஓர் அரசன், ஒரு விவசாயி, ஒரு வியாபாரி, ஒரு துறவி, ஒரு பொது நலத் தொண்டர் ஒரு மந்திரி, ஒரு காதலர், ஒரு காதலி, ஒரு தலைவி. எல்லாருக்கும் அறிவுரை வழங்கப் பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றில்லை கூட மூட நம்பிக்கை புகுத்தப்பட்டிருக்க வில்லை என்பது பெரியார் கருத்தாகும்.

நாகரீகம் எது?

‘பெயக்கண்டும் நஞ்சுண்ட டமைவர் நயத்தக்க
நாகரீகம் வேண்டு பவர்’ என்னும் குறளுக்கு ஒருவன் நமக்கு வி­ம் கொடுக்கிறான் என்பதை நாம்  அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டால் அவன் மனம் என்ன வேதனைக்குள்ளாகுமே என்று ஒருவன் தாட்சண்யப் படுவது தான் நாகரிகம் எனப் பொருளுரைக்கிறார் பெரியார். மற்றவர் மனம் நோகாமல் இருக்கச் செய்வதுதான் நாகரீகம் என்பது பெரியார் கருத்து. பழகிய நண்பர் நஞ்சு கொடுத்தால் மறுக்காது உண்டு அவரோடு பொருந்தி இருப்பதே உயர்ந்த கண்ணோட்ட முடையவர் என்பதான் வழி வழி வந்த உரை. இதனைப் பெரியார் எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும் வகையில் உரைத்துள்ளார்.

அந்தணரும் பார்ப்பாரும் ஒருவரா?

பிற்காலத்தில் பார்ப்பாரையும் அந்தணரையும் ஒருவராகக் கருதும் போக்கு வளர்ந்துள்ளது. இதற்குச் சமயமே காரணம். ‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’, ‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ முதலிய தேவாரப் பாடல் அடிகள் இதற்குச் சான்றாகும். ஆனால் திருவள்ளுவர் அந்தணரையும் பார்ப்பாரையும் வேறுபடுத்திப் பேசுவதாகப் பெரியார் கருதுகிறார். உயர்வான குணங்களையுடைய  மனிதனைக் குறிப்பிடும் ¼Vதும் துறவியைக குறிப்பிடும் போதும் வேறு வார்த்தையைக் (அந்தணர் என்போர் அறவோர்) கூறிவிட்டுப பார்ப்பனர்களைப் பார்ப்பான் என்றே வள்ளுவர் கூறியிருக்கிறார். அதுவும் வேதம் ஓதுபவனையே பார்ப்பான் என்று விழைகிறார் வள்ளுவர்.

முரண் தீர்க்கும் முயற்சி

‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்’ என்னும் குறள் குடி செயல் வகை என்னும் அதிகாரத்தில் உள்ளது (8). குடும்பத்தை உயர்த்தும் கடமையிலுள்ளோர் காலம், மானம் கருதக் கூடாது என்பது இக் குறளின் கருத்து. பெரியார் பொதுநலத் தொண்டர்கள் - மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலமோ நேரமோ பார்ப்பது தவறு, மானம் மரியாதை இவற்றைச் சிந்திக்க ஆரம்பித்தால் அந்தக் காரியம் கெட்டுப் போய்விடும் என்று பொருள் உரைக்கிறார்.

இப்படிச் சொன்ன பிறகு பெரியார்,

‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதி
எண்ணி இடத்தால் செயின்’ என்னும் குறளையும்,

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’ என்னும் குறளையும் நினைத்துப் பார்க்கிறார்.

இப்படிச் சொல்ல வேண்டியதன், முரண்படப் பேச வேண்டியதன் காரணம் என்ன? என்னும் கேள்விக்கு விடை பகர்கிறார் பெரியார்.

மானமும் பெருமையும் அவனவன் சொந்தத்திற்குரிய சங்கதிகள். சொந்தச் சங்கதிகளைப் பற்றிக் கவலையுடையவர்கள் காலம் மானபிமானத்தைப் பார்ப்பது, சிந்திப்பது சரியே. ஆனால் ஒரு பொது நலத் தொண்டனைப் பொருத்தவரையில் அவனுக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை. அவன் தன்னை தான் மறக்க வேண்டும். தன்னைத் தான் மறந்தவனுக்கு மானமேது? அவமானம் ஏது? எந்தப் பொதுக் காரியவாதியும் அப்படித்தான் இருப்பார். பொதுக் காரியத்தில் ஈடுபடுவார் யாராவது தம் கெளரவத்தையும் பற்றிச் சிந்திக்கிறார் என்றால் பொதுக் காரியவாதியாக மாட்டார். தன் சொந்தக் கெளரவ வாதியாகத் தான் நாம் அவரைக் கருத வேண்டும் என்று தெளிவுபடுத்தி முரண்பாட்டினைப் போக்குகிறார். தொண்டறம் பேணும் தகைமையாளரல்லவா பெரியார். அவர்தம் வாழ்வில் மானம் கருதாது செய்த மாண்புடைய செயல்கள் பலப்பல அன்றோ! திருக்குறளுக்கு எத்தகைய தெளிவுரை தருகிறார் பெரியார் பாருங்கள். எவ்வளவு ஆழமாகக் குறளைப் படித்துச் சிந்தித்துள்ளார் என்பதையும் நாம் நோக்க வேண்டும்.

திருக்குறள் ஒன்றே போதும்

திருக்குறளின் பெருமையைப் பெரியார்க்கு எடுத்துரைத்தவர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார். அவரும் பெரியாரும் வேடிக்கையாகவும் விதண்டாவாதமாகவும் பேசிக் கொள்ளும் போதெல்லாம் நாயக்கர் திருக்குறளைக் கொண்டுதான் மடக்குவாராம். அவரின் விளக்க உரையால்  திருக்குறளின் பெருமையைப் பெரியார் உணர்ந்தாராம். மக்களுக்கு அறிவை உண்டாக்கத் திருக்குறள் ஒன்றே போதும் என்று பெரியார் தெளிந்ததாகக் கூறுகிறார். ‘அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை’ என்கிறார். அவர் ஆசை நிறைவேற நாம் பாடுபடுவோமாக.





என் பேராசிரியர் மு.வ.
நினைவலைகள்

பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொழுதார்க்கு வார்த்தை சொலச் சற்குரு வாய்க்குமே என்பதற் கேற்ப எனக்கு முற்பிறவியில் இந்தத் தொழுகையினைச் செய்ததன் பயனாக என்னவோ என்தமிழ்க்கல்விக்கு இப்பிறவியில் நல்ல பேராசிரியர்கள் வாய்த்தார்கள். அழகப்பா கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படிக்கும் போது பேராசிரியர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்  எனக்குப் பேராசிரியராக இருந்து பாடம் பயிற்றினார். பிறகு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரிடம் கல்வி பயின்றேன். எம்.லிட். ஆய்வுக்கு மேற்பார்வையாளராகப் பேராசிரியர் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களும், முனைவர் பட்டத்திற்கு மேற்பார்வையாளராக பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் அவர்களும் இருந்து வழி காட்டினார்கள். இவர்கள் நால்வருமே பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகப் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நால்வரில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களுடன் எனக்கிருந்த தொடர்பு பற்றிய சில நினைவலைகளை விளக்குவதே  இக்கட்டுரை.

பள்ளியிறுதி  வகுப்பு (1954) முடித்து அழகப்பா கல்லூரியில் சேர்வதற்குக் காத்திருந்த காலப் பகுதியில் நண்பர் ஒருவர் டாக்டர் மு.வ.அவர்களின் தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு முதலிய தலைப்பிட்ட நூல்களைப் படிக்கக் கொடுத்தார். இந்நூல்களைப் படித்த பின் என் இதயத்தை மு.வ. அவர்கள் கவர்ந்தார். பிறகு அழகப்பா கல்லூரியில் சேர்ந்ததும் எல்லாவற்றையும் படித்து ஒரு குறிப்பேட்டில் என் உள்ளம் கவர்ந்த கருத்துக்களையும் வரிகளையும் எழுதி வைத்து மனப்பாடம் செய்து வந்தேன். பொறியியல் துறையில் நுழைவதற்கேற்ற கணக்கு, இயற்பியல், வேதியியல், பாடங்களை எடுத்துப் படித்து வந்த எனக்கு மு.வ. அவர்களிடம் தமிழ் கற்க வேண்டும் என்னும் வேட்கை படிப்படியாக வளர்ந்தது. பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடங்களும் தூண்டு கோலாக இருந்தன. இடைநிலைத் தேர்வில் பொறியியல் சேர்வதற்குத் தகுதி பெற்ற நிலையிலும் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் மு.வ. அவர்களிடம் தமிழ் கற்க முயற்சி மேற்கொண்டேன். என் குடும்பத்தார், உறவினர்கள் தமிழ் படித்து என்ன சம்பாதிக்க முடியும்? வாத்தியார் வேலை எவ்வளவு பணம் ஈட்ட முடியும்? எனக் கேள்விகள் எழுப்பியும் நான் தமிழார்வத்தினாலும் மு.வ. அவர்களிடம் பயில வேண்டும் என்பதாலும் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். என் உறவினர் திரு. உ.மு.சுப.லெ.மெய்யப்ப செட்டியார் அவர்கள் என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் கச்சாபிகேச முதலியார் வழியாக அப்போது கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியை அணுகி நான் அக் கல்லூரியில் ய.பு. (க்ஷிலிஐவி) தமிழ் வகுப்பில் 1956 இல் சேர்ந்தேன். என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் டாக்டர் மு.வ.அவர்களைச் சந்தித்த பின்னரே அவ்வகுப்பில் சேர்ந்தனர். நான் ஒருவன் தான் மு.வ. அவர்களைச் சந்தித்த பின்னர் சேரும் வாய்ப்பினைப் பெறவில்லை.

கல்லூரியில் சேர்நத ஒரு வாரத்தில் எனக்குத் திருமணம். எனவே திருமண அழைப்பிதழுடன் முதன் முதலில் மு.வ. அவர்களை, அவர்கள் இல்லத்தில் (30, செல்லம்மாள் தெரு) சந்தித்தேன். மு.வ. அவர்கள் என்னை வரவேற்றுத் திருமண அழைப்பிதழ் கண்டு வியப்புற்று நலம் விசாரித்தார்கள். பிறகு விவரங்களை எடுத்துச் சொல்லி விடுமுறை பெற்று என் சொந்த ஊர் சென்றேன். திருமணத்திற்கு வாழ்த்துக் கடிதம் மு.வ. அனுப்பியிருந்தார்.
ய.பு. (க்ஷிலிஐவி) மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ஏனைய பாட ஆசிரியர்கள் விடுமுறை எடுத்த நிலையில் எப்போதாயினும் மு.வ. வந்து வகுப்பு எடுப்பார். அவர் வகுப்பு எடுக்க மாட்டாரா என ஏங்கி இருந்த நிலையில் எனக்கு அது தமிழ் விருந்தாக இருந்தது. அப்போது நான் அங்கு பணியாற்றிய பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் , வானொலி நிலைய இயக்குநராகச் சென்றார். பேராசிரியர் க. அன்பழகனார் சில மாதங்கள் எங்களுக்குப் புறநானூறு பாடம் பயிற்றுவித்த பின்னர் கட்சிப் பணிக்குச் சென்றார்.

நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டுகளில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் எங்களுக்கும் மு.வ. அவர்கள் நற்றிணைப் பாடம் பயிற்றுவித்தார். சங்க இலக்கியப் பாடல்களை மு.வ. அவர்கள் படிக்கும் விதமும் அவற்றிற்கு எளிய முறையில் பொருள் கூறும் போக்கும், மேற்கோள், நயம் சொல்லும் இயல்பும் என உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும் பெற்றியன. அக்காலத்தில் மு.வ. அவர்கள் எழுதிய நூல்களை வெளிவரும் நாளை அறிந்து பாரி நிலையம் சென்று வாங்கி வந்து படித்து முடித்தால் தான் என் உள்ளம் ஆறுதல் பெறும். மு.வ. அவர்கள் விரிவுரையின் போது சொல்லிய ஒவ்வொரு சொல்லையும் விடாமல் குறிப்பு எடுத்து விடுவது என் வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் மு.வ. என்று நான் சொல்ல மாட்டேன். டாக்டர் மு.வரதராசனார் னி.பு.,னி.நு.ஸி., Pஜு.ம்.,   என்று சொல்லித்தான் நிறுத்துவேன் என என் நண்பர்கள் சொல்லி க் கேலி செய்வார்கள். கல்லூரியில் படிப்பு முடிந்ததும் எனக்கு ஒரு நல்ல சான்றிதழ் தம் கைப்பட எழுதிக் கொடுத்தார்கள். முத்து முத்தான கையயழுத்து, அடித்தல் திருத்தல் இல்லாத பாங்கு. அது நான் வேலை வாய்ப்புப் பெற அடித்தளமாக இருந்து உதவியது.

நான் அதிராம்பட்டினம் காதர் மொகைதீன் கல்லூரியில் ( 1959-60)  தமிழ்ப் பயிற்றுநர் மிற்மிலிr பணி செய்து கொண்டிருந்த நிலையில் எனக்கு ஆண்மகன் பிறந்தான். அம் மகனுக்குப் பெயர் வைத்தருளுமாறு மு.வ. அவர்களுக்கு கடிதம் வழி வேண்டுகோள் விடுத்தேன். மு.வ. அவர்களும் வாழ்த்தியதுடன் அருள் மொழி எனப் பெயரிட்டுக் கடிதம் எழுதியிருந்தார். சேக்கிழார் ஆகிய கவியரசர் ‡ இராசஇராச சோழன் ஆகிய புவியரசர் இருவர் பெயரும் இணைந்த நிலையில் அருள் மொழி எனப் பெயர் அமைந்தது அறிந்து மகிழ்ந்தேன்.

1960 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது மு.வ. அவர்கள் பல்வேறு கல்விப் பணி தொடர்பாக வரும் போதெல்லாம் விருந்தினர் விடுதியில் சந்திப்பேன். என்னுடைய எம்.லிட். பட்டத்திற்கு புறநிலைத் தேர்வாளராக மு.வ. அவர்கள் இருந்தார்கள். அவருடன் டாக்டர் எஸ்.எம். கத்ரேயும்  இருந்தார். மு.வ. அவர்கள் கோடை விடுமுறையின் போது பெங்களூர் சென்று தங்குவது அக்கால வழக்கமாக இருந்தது. எனவே அவர் வசதி கருதி என்னுடைய எம்.லிட்.பட்டத்திற்குரிய நேர்முகத் தேர்வு பெங்களூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் நிமித்தம் பேராசிரியர் தெ.பொ.மீ.யுடன் நான் பெங்களூர் சென்றேன். அப்போது தண்.கி. வெங்கிடாசலம் பெங்களூரில் பேராசிரியராக இருந்ததால் எங்களுக்கு விருந்தோம்பிச் சிறப்பித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகமொழியியல் துறை இணைப் பேராசிரியராக இருந்த போது அத்துறையின் சார்பாக மொழியியல் அறிஞர்  எல்.வி. இராமசாமி அய்யர் அவர்களின் திராவிட மொழி ஒப்பியியலாய்வுக்குரிய பங்களிப்பு பற்றிய ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதற்கு நான் செயலாளராகப் பணியாற்றினேன். அதற்கு வரவேண்டிய சிறப்பு விருந்தினர் ஒரு கன்னடப் பேராசிரியர் எதிர்பாராத விதமாக வர இயலவில்லை. எனவே அப்போது அங்கு வந்திருந்த பேராசிரியர் மு.வ. அவர்களைச் சிறப்பு விருந்தினராக இருந்து எல்.வி. இராமசாமி அய்யர் படத்தைத் திறந்து வைக்குமாறு  நானும்  பேராசிரியர் அகத்தியலிங்கனாரும் வேண்டினோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் படத்தைத் திறந்து வைத்து அய்யர் அவர்ளின் பங்களிப்புப் பற்றி அரியதொரு சொற்பொழிவாற்றி மு.வ. அவர்கள் சிறப்பித்தார்கள். அப்போது என் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தேன். வந்து என் குடும்பத்தினரோடு  அளவளாவி விருந்துண்டு சென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும்.

நான் மலேயாப்  பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் பணியாற்றிய போது மு.வ. அவர்கள்  மதுரை பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தார்கள். ஒரு முறை தமிழகம் வந்த போது அவர்களைத் துணை வேந்தர் அலுவலகத்தில் கண்டு சந்தித்துரையாடி மகிழ்ந்தேன். அப்போது அவர்களுக்கு ஒரு பார்க்கர் பேனா ஒன்றை அன்பளிப்பாகக்  கொடுத்தேன். அன்பு போதும் அளிப்பு வேண்டாம் எனக் கூறி அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்.
பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது நான் மு.வ. அவர்களின்  இறப்புச் செய்தி வந்தது. பல்கலைக் கழகப் பணி ஒன்றின் காரணமாக அவர்களின் இறப்புச் சடங்கில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று.

சிங்கப்பூர் வந்த பணியாற்றத் தொடங்கிய பின்னர் பாடநூலாக்கக் குழுவின் மதியுரைஞராகப் பணியாற்றிய சூழலில் உயர்நிலைப் பள்ளிப் பாட நூல் ஒன்றில்  மு.வ. அவர்களைப் பற்றிய பாடம் ஒன்றை எழுத ஆவன செய்தேன். என் பேச்சு, எழுத்து, விரிவுரை எல்லாவற்றிலும் மு.வ. அவர்களின் கருத்துகளைச் சொல்லும் போதெல்லாம் என் பேராசிரியர் எனப் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். டாக்டர் மு.வ. அவர்களின் மாணவன் என்பது என் வாழ்வில் பெற்ற பெரும் பேறு! அதனால் முன்னுக்கு வந்தவன் நான் என்பதில் ஐயமில்லை.