அகவை 55
மலேசியாவில் பணி ஓய்வு அகவை 55.
எனக்கு வருமான ஓய்வை கொரானா தந்திருக்கிறது!
1989 இல் ஆகஸ்ட் மாதம் வணிகவியல் முதுகலை (எம்.காம்) தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 4 ஆவது நாள் செவ்வாய் கிழமை சென்னைக்கு வேலை தேடி நண்பனுடன் பகலில் பயணம்.
நாடிச் சென்ற நண்பரை அன்று சந்திக்க முடியாததால் சென்னை சென்ட்ரல் தொடரி நிலையத்தில் இரவு படுக்கை.
இரவு 12 மணிக்கு காவல் துறையினர் விசாரித்துவிட்டு, 'பிளாட் பார்ம் டிக்கெட்' எடுத்து உள்ளே போய் உறங்கச் சொல்லி அறிவுரை.
விடியற்காலை 4 மணிக்கு எழுந்து கழிவறைக்குள் சென்று வரும் போது 'டிக்கெட் பரிசோதகர்' டிக்கெட் கேட்க, நான் என் நண்பனைத் தேட, ஏற்கனவே நண்பனை வெளியே அவர்கள் அனுப்பிவிட ,நான் டிக்கெட் இல்லா பயணியாக ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட, காலை 9 மணிவரை காவல்துறை ஆய்வாளருக்காக காத்திருக்க, என் நண்பன், ஆய்வாளருடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
உடன் காவல் ஆய்வாளர் என்னை அழைத்து 'நீ எம். காம் படித்திருக்கியா?' என்றார்.
'ஆம் சார். வேலை தேடி சென்னை வந்தேன்' என்று சொல்ல, அவர் என்னை மேலும் கீழும் பார்க்க, நான் என் சட்டைப்பையிலிருந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழக அடையாள அட்டையைக் காட்ட, அதில் எங்கள் துறை தலைவரின் (பேரா. மேத்யூ) கையயழுத்தைப் பார்த்த காவல்துறை ஆய்வாளர், 'நீ மாத்யூ மாணவனா? 'என்று அக்கறையுடன் விசாரித்து 'நானும் அவரிடம்தான் படித்தேன்' என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்த படி, நலமுடன் அனுப்பி வைத்தார்.
நன்றி கூறிவிட்டு என் நண்பனுடன் சைதா பேட்டை நோக்கி வந்தேன்.
' கலைஞர் பொன் விழா வளைவு' வழியாக உள்ளே நுழைந்து கடைசியாக இருந்த எங்கள் சென்னை நண்பரின் அறையில் தங்கினோம்.15 நாட்கள் நாங்கள் இலவயமாகத் தங்குவதற்கு உதவி செய்தார். என் நண்பனுக்கு மேனாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனிடம் வேலை வாங்கிக் கொடுத்தார். எனக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக சொன்னார்.
நான் ஞாயிற்றுக் கிழமை தினந்தந்தி வாங்கி, வேலை வாய்ப்பு விளம்பரப் பகுதியில் வந்த விளம்பரத்தைப் பார்த்து சென்னை லஸ் - இல் ஓர் அச்சகத்தில் கணக்கராக வேலைக்கு சேர்ந்து 20 நாள்களில், சோழிங்க நல்லூரில் உள்ள ஒரு நிறுவத்திற்கு கணக்கராக போய் அந்த கிராமத்திலேயே (அப்போது கிராமம்) தங்கினேன்.
மாலை நேரத்தில், நிறுவனத்தின் காவலருடன் (Security Gaurd )உரையாடி வந்த போது, அவர், 'அருகில் உள்ள டூரிங் டாக்ஸில் நீங்கள் சினிமா படம் போடுங்கள் சார். அந்த தியேட்டர் உரிமையாளரை எனக்குத் தெரியும். வாங்க சார் உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றார்.
தியேட்டர் உரிமையாளரைச் சந்தித்தேன், 'படப் பொட்டி வாங்கி வருவது உங்கள் செலவு. அன்றைய வருமானத்தில் கிராம பஞ்சாயத்து வரி ரூ 100 போக மீத முள்ள தொகையில் ஆளுக்குப் பாதி பாதி' என்று 'டீல்' பேசினார்.
தியேட்டர் ஆப்ரேட்டர் என்னை அழைத்துக் கொண்டு அண்ணாசாலையில் உள்ள 'கெயிட்டி தியேட்டரு'க்கு அருகில் உள்ள தெருவுக்கு அழைத்துச் சென்றார். ஏகப்பட்ட 'சினிமா டிஸ்ட்ரிபியூட்டர்கள்'. பழைய படப் பெட்டிகளை வைத்திருந்தார்கள்.
தியேட்டர் ஆப்ரேட்டர், 'குறைந்த விலைக்கு உள்ள பெட்டியை வாங்குவோம் சார். மூன்று நாளைக்கு கொடுப்பார்கள். கொஞ்சம் போஸ்டரும் தருவார்கள். அடுத்து நாம் வேறு படம் எடுத்து போடுவோம்' என்று அறிவுரை கூறினார். ரூ 200 க்கு (ஆமாம் இரு நூறுதான்) ஒரு படம் எடுத்து ஓட்டினோம். போட்ட பணம் வந்து விட்டது.
மீண்டும் தொடர்ந்து அய்ந்தாறு படங்கள் போட்டோம். ஒன்றும் கை நட்டம் இல்லை. ரூ 300 க்கு ஒரு படம் எடுத்து போட்டோம். அதுவும் வசூல் பரவாயில்லாமல் இருந்தது.
ஏகாதேசி வந்தது. 'நடு இரவு காட்சிக்கு ஒரே கட்டணத்தில் இரண்டு படம் போடுவோம் சார். நல்ல படமா போடுவோம் சார்' என்று ஆப்ரேட்டர் ஆலோசனை சொல்ல, ரூ 400 க்கு ஒரு படமும் ( சிவாஜி நடித்த 'தீர்ப்பு'என்று நினைவு) இலவயப் படமாக ரூ 150 க்கு ஒரு படமும் போட்டோம்.
நல்ல வசூல். முதல் காட்சி முதல் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. 'கிளைமாக்ஸ் காட்சி'யில் 'கார் சேஸிங்' போது சில காட்சிகளின் பிலிம் ரோல் இல்லை. ஆப்ரேட்டர் 'வணக்கம்' என்ற சிலைட் போட்டார். அவ்வளவுதான் ஒரே ரகளை.
ஆப்ரேட்டர் அறைக்கு ரசிகர்கள் திரண்டு அடிக்க ஓடினார்கள். நான் தப்பித்து வெளியே ஓடிவிட்டேன். ஆப்ரேட்டரும் தப்பி விட்டார். வேறு யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள் மக்கள்!
அதோடு அந்த திரைப்பட டிஸ்ரிபூட்டர் வாழ்க்கை முடிந்தது.
அந்த நிறுவனத்தின் கணக்கர் வேலையையும் விட்டு விட்டு, ஆடிட்டரிடம் ஓர் ஆண்டு வேலை செய்துவிட்டு, தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி மீண்டும் சென்னைக்கு வந்த போது பெரியார் தொண்டனாக வந்தேன்.
சென்னை மீண்டும் வந்த போது ம.தி.மு.க. நண்பர் சுப்பாரெட்டி அவர்கள் கிண்டியில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து உணவும் கொடுத்து விருந்தோம்பினார். ஒரு மாதம் அவர் வீட்டில் இருந்தேன்.
'மருத்துவர்' என்ற சித்த மருத்துவ இதழில் DTP ஆப்ரேட்டராக மாலை நேரத்திலும், நல்லி சில்க்ஸ் குழுமம் , நக்கீரன் அலுவலகம் அருகில் இருந்த ஓர் அச்சகம் மற்றும் ராஜ அண்ணாமலைபுரத்தில் இருந்த ஒரு நிறுவனம் என்று பல்வேறு இடங்களில் கணக்குகளையும் எழுதத் தொடங்கினேன்.
'மருத்துவர்' இதழ் அலுவலகத்தில் மாலை நேரத்தில் பணியாற்றிய போதுதான் பேரா. தி.வ. மெய்கண்டார், புதுச்சேரி தமிழறிஞர் தமிழமல்லன், உலகதிருக்குறள் மையம் நிறுவனர் மோகனராசு, மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் என்று பல்வேறு அறிஞர்களுடன் தொடர்பு.
ம.தி.மு.க. தலைமையமான தாயகம், பெரியாடர் திடலில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வியாழன் தோறும் நடைபெறும் 'பெரியாரியல்' நிகழ்வுகளில் பங்கேற்றல், சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா உயராய்வு மையம் நடத்திய இரண்டு திராவிட இயக்க ஆய்வரங்கம், பெரியார் பற்றிய ஆய்வரங்கம் என்று என்னை பக்குவப்படுத்திக் கொண்டே வந்தது சென்னை.
பின்பு புதுச்சேரியில் பணி, 'பெரியார் பார்வை' என்ற இதழ் தொடங்கினேன். 'அய்யா ஆயத்த ஆடையகம் 'என்ற துணிக் கடை தொடங்கினேன்.
மீண்டும் அய்யா தமிழமல்லன் அவர்களுடன் தொடர்பு.
இலக்கணக் கடல் அய்யா இரா.திருமுருகனார் அவர்களுடன் கிழமை தோறும் அவருடைய பாவலர் பண்ணையில் சந்திப்பு.
திராவிடப் பேரவை அய்யா நந்திவர்மன், அய்யா ந.மு. தமிழ் மணி, கோகுல்காந்தி என்று நட்பு வட்டம்.
திருமண வாழ்க்கை தொடங்கியது. திருவாரூக்கு சென்று திருவாரூர்காரன் ஆனேன்.
அங்கிருந்து சிங்கப்பூர் சென்றேன். நான்கு ஆண்டுகள் ஓட்டம். அய்யா கோவலங் கண்ணன் அவர்களின் கணக்கு நிறுவனத்தில் பணியாற்றினேன்.
அய்யா தமிழ்மறையான், அய்யா மு.தங்கராசு, அய்யா முருகடியான், பாவலர் க.து.மு. இக்பால், அய்யா அருண்முல்லை, அய்யா பாத்தேறல் இளமாறன், அய்யா முனைவர் இரெத்தின வெங்கடேசன், அய்யா சுப. திண்ணப்பன், அய்யா புதுமைத் தேனீ அன்பழகன் , அய்யா மறைமலை மாறன், அய்யா சங்கம் இலியாஸ் என்று நட்பு வட்டம்.
'வ.உ.சி. திருக்குறள் அறப்பால் உரை' வெளியீடு, 'தேவநேயம் இணையத் தளம்' உருவாக்கம் என்று பொதுப்பணி.
என்னையும் என் குடும்பத்தையும் பெருமை படுத்திய நாடு.
மலேசியாவுக்கு வந்தேன் 9 ஆண்டுகள் பணி.
என் வாழ்வை வளப்படுத்திய நாடு.
மலேசிய திராவிடர் கழக மேனாள் தலைவர் ரெ.சு. முத்தையா, மு.கோவிந்தசாமி, மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக.பஞ்சு, மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் அய்யா திருமா வளவன், மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் அய்யா பெரு.ஆ.தமிழ்மணி ஆகியோருடன் கொள்கை நட்பு.
'மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் ' நூல் வெளியீடு.
ஆண்டு தோறும் மலேசியத் திராவிடர் கழக நண்பரும் என் குடும்ப நண்பருமான அய்யா த.பரமசிவம் அவர்களுடன் இணைந்து பெரியார் விழா, பொங்கல் விழா என்று மலேசியாவில் பெரியார் கொடி பிடித்தல்.
இடையில் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் சென்று வந்தேன்.
கடந்த ஆண்டு 2020 நவம்பர் 22 இல் கொரானாவால் தமிழகம் வந்தேன்.
கடந்த 10 மாதங்களில் என் வீட்டின் முதல் தளத்தைக் கட்டினேன்.
2000 பக்கங்களுக்கு மேல் பெரியார் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு கணிணியில் தட்டச்சு செய்து ஒழுங்கு படுத்தி வைத்திருக்கிறேன்.
வைகோ அவர்களுக்காக 600 பக்கங்கள் கட்டுரைகளை தொகுத்து ஒழுங்கு படுத்தி வைத்திருக்கிறேன்.
என்னுடைய படைப்புகளையும் ஒழுங்குகுபடுத்தி வருகிறேன்.
இனியும் சாகும்வரை அந்தப் பணிகளைத் தொடருவேன்!
No comments:
Post a Comment