பெரியார் இஸ்லாம் மதத்திற்கும் சிறுபானமையினருக்கும் எதிரியா?
மதம் என்பதை பெரியார் எவ்வாறு வரையறுக்கிறார்? ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு ஒரு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போல் ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேச வர்த்தமானப்படி மக்கள் சவுகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும், அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின் மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகராறே கிடையாது. கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர், கொள்கை என்றாலும் திட்டம் என்றாலும் மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான் என்றும்’ என்று மதம் குறித்து 1931 இலேயே வரையறை செய்கிறார்.
அப்படியானால் மதத்தை எந்நிலையில் பெரியார் எதிர்க்கிறார்? இதோ அதற்கும் விடையளிக்கிறார் பெரியார். ‘மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது. கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது. அதை உண்டாக்கினது கடவுள் அல்லது கடவுள் அவதாரம் அல்லது கடவுள் தன்மை அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு தெய்வீகத் தன்மை. அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள், சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பிதான் ஆக வேண்டும். அதில் ஒரு வியத்தைக் கூட நழுவ விடக் கூடாது. மாற்றவும்கூடாது. புதிய சவுகரியத்திற்குத் தகுந்த படி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது என்பது போன்ற நீதியையும் நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம் என்று சொல்லப்படுமென்பதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக் கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் முற்போக்கிற்கும் சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவதோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகிறேன்’ என்று கூறிய பெரியார் இஸ்லாம் மதத்தை மட்டும் ஒரு கட்டத்தில் ஆதரிக்கிறார்.
‘இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்த சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் -குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் -கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை’ என்றெல்லாம் கூறிய பெரியார், ‘இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றும் கூறுகிறார்.
‘மனித நேயம் இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்று கூறிய பெரியார், இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை, வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப பூஜை நைவேத்தியம் , உற்சவம், நகை, துணிமணி முதலியவற்றிற்கு கோடிக்கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை’ என்றெல்லாம் கூறுகிறார்.
‘ஆதிதிராவிடர்களை நான் இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். மோட்சம் அடைவதற்காகவென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது சத்தியாகிரகம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொல்லுகிறேன்’ என்று இஸ்லாம் கொள்கையை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்குகிறார்.
அடுத்து கூறுகிறார்,‘ உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது ஒரு வழியேயாகும்’.
உடனே மற்றவர்கள் ஏன் கிறித்துவ மதத்தைத் தழுவக் கூடாது என்று கேட்பவர்களுக்கும் பெரியார், ‘கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன் , வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்’ என்று விடையளிக்கிறார்.
இவ்வளவையும் சொன்ன பெரியார் அடுத்துக் கூறுகிறார், ‘நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். சமாது வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விஷேங்களும் சந்தனக் கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன’ என்றெல்லாம் இஸ்லாம் சமூகத்தில் உள்ள குறைகளையும் பட்டியலிடுகிறார் பெரியார்.
இவைகள் ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கைகள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் பெரியார் (பெரியார் களஞ்சியம் - தொகுதி 4 - பக்கம் 11-14)
இது வரை இஸ்லாம் மதம் தீண்டாமையை நீக்குகிறது என்று கூறிய பெரியார், அடுத்து தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது என்றும் கூறுகிறார்,
‘முகமது நபி மக்கள் யாவரையும் எல்லாத் துறையிலும் சமம் என்றும் சகோதரர்கள் என்றும் எப்படி கருதுகிறாரோ அப்படியே தான் பழந்தமிழ் மக்களும் கருதியிருப்பதாய பண்டிதர்கள் சொல்லுகின்றனர். மண வியத்தில் ஆரிய மதக் கொடுமையில் 100- இல் ஒரு பங்கு கூட இஸ்லாம் மதத்தில் இருப்பதாய் சொல்ல முடியாது’ என்றெல்லாம் கூறிய பெரியார், ‘1500 வருத்திற்கு முன் சொன்னத எதுவோ அதுதான் இன்னமும் லட்சத்து அய்ம்பதினாயிரம் வரும் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்படவும் மாட்டாது என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணரமுடியாமல் செய்து விட்டது’ என்றும் இஸ்லாம் மதத்தை அலசுகிறார்.
இஸ்லாம் மதம் யாருக்கு ? என்பதற்கு பெரியார், ‘முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம் , மதச் சடங்கு இருக்கலாம். சம தர்மமில்லாமலும் இருக்கலாம்? இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்’ .
‘ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற -ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு நாயிலும் மலத்திலும் புழுத்த விக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்’ என்று கூறுகிறார்.
சிலை வணக்கத்தைக் கண்டிப்பது மகமதிய மதமே என்றும் கூறும் பெரியார், முகமது நபிகள பற்றி பல கருத்துக்களை வரிசைப் படுத்துகிறார்,
‘முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என்றார். நான் சொல்லுகிறேன், கடவுள் என்று ஆயிரக் கணக்கான கடவுள்களைக் கட்டியழுகிறவர்களை விட, நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன். முதலில் பல கடவுள்கள் என்பது பொய். ஒரு கடவுள் தான் உண்டு என்ற நிலைக்கு வரட்டும். மேற்கொண்டு அப்புறம் பார்க்கலாம்’ என்கிறார் பெரியார்.
முகமது நபி அவர்கள் சொன்னது, மனித சமூதாயத்தில் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு, பேதாபேதம், வித்தியாசம் இல்லை. யாவரும் சமமான பிறவியே என்று சொன்னார். இதுவும் மிக முக்கியமானதாகும் என்று முகமது நபி கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறார் பெரியார்.
‘அடுத்தாற்போல் முகமது நபி அவர்கள் விக்கிரக ஆராதனையை அந்தக் காலத்திலேயே மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும் என்பதோடு இவை எல்லாம் நம் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு பெரிய படிப்பினை என்பேன்’ என்றும் பெரியார் கூறுகிறார்.
அடுத்து ஒன்றையும் பெரியார் கூறுகிறார், ‘அவர் சொன்னவற்றிலே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார், நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச் சந்தேகமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார் என்பதாகச் சொல்லியிருக்கிறார்’. இங்கு பெரியாரையும் முகமது நபி அவர்களையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இஸ்லாம் மதத்தைப் பற்றி சொன்ன பெரியார் இறுதியில் ,‘ மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள். மக்கள் சமுதாயம் ஒரே குலம். உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. நான் என்ன சொல்லியிருந்தாலும் அவைகளை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள்’ என்பதாக நபி அவர்கள் சொன்னதைத் தொகுத்துக் காட்டுகிறார் பெரியார்.
எனவே மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்காக ஆதரவு கரம் நீட்டுபவர் பெரியார்தான். மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து, சாதியைக் கடந்து நிமிர்ந்து நிற்கக் கூடிய ஒரு மாமனிதர் பெரியார்.
No comments:
Post a Comment