Tuesday, January 11, 2011

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் - ஒரு பார்வை

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் , மலைக் காடுகளிடையே ஓடும்  பெரியாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. அவ்வாறு அணை மூலம் தேக்கிவைக்கப்பட்ட நீர் பின்னோக்கி திருப்பிவிடப்பட்டு  நிலத்தடி குடைவுப் பாதை மூலம் தமிழகத்துக்கு திருப்பிவிடப்பட்டது.  இதுவே பெரியாறு அணை யாகும்.
1798 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரசில் அமைச்சராக பணியாற்றிய முத்திருளப்பிப்பிள்ளை பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்க முடியுமா என்பதை ஆராய ஒரு அறிஞர் குழுவை அமைத்தார். இத்திட்டம் சாத்தியமே என்று அவர்கள் அறிவித்தனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. 10ஆண்டுகளுக்கு பிறகு 1808 இல் சர் ஜேம்ஸ் கால்டுவெல் இத்திட்டத்தை ஆராய்ந்தார். ஒரு வாய்க்கால் வெட்டி தண்ணீரை திருப்புவது அவரது திட்டமாக இருந்தது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. 1850 இல் சின்ன முல்லைப் பெரியாற்றில் சிறிய அணை கட்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டமும் கைவிடப்பட்டன.
1867 இல் மேஜர் ரைவீஸ் இத்திட்டத்தை ஆராய்ந்தார்.  162 அடி உயரத்திற்கு ஒரு மண் அணையை பெரியாற்றில் உருவாக்கி மலையை வெட்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் மதுரை மாவட்டத்திற்கு திருப்பிவிடும் வகையில் இத்திட்டத்தை வடிவமைத்தார் . உரிய விபரங்கள் இல்லை எனக் கோரி இத்திட்டத்தை ஆராய லெப்டினன்ட் பென்னி குயிக்யை இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்திரவு இட்டது பிரிட்டிஷ் அரசு. இருந்தும் இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை.
1884 இல் பென்னிக்குயிக்கின் பெரிய திட்டம்  பிரிட்டிஷ் அரசால் ஏற்றுக் கொள்eப்பட்டது. பல கிளை ஆறுகள் சேரும் பெரியாறு இருக்கும் இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமானது எனத் தவறாகக் கருதப்பட்டது. எனவே பெரியாற்று நீரைத்திருப்பி விடுவது பற்றி பேச்சு வார்த்தையை பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் தொடங்கியது. அப்போது திருவிதாங்கூரில் ஆட்சியிலிருந்த விசாகத் திருநாள் மன்னர் இதற்கு இசைவு தர மறுத்தார். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மன்னர் மறைவுற்றார். அதைத் தொடர்ந்து  திருவிதாங்கூர் திவான் வி.இராமய் யாங்காருக்கு ஒரு கடிதம் எழுதி முல்லை பெரியாறு அணை உடன்பாட்டில் கையயழுத்திட கூறினார் பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதி. இந்த குத்தகை உடன்பாடு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று ஏற்பட்டது.
 இந்த உடன் பாட்டில் உள்ள விபரம்
• அணையைக் கட்டுவதற்கும் தேக்கம் வெட்டுவதற்கும் பாசனப் பணிகளை மேற்கொள்ளுவதற்கும் 8000 ஏக்கர் நிலத்தை திருவிதாங்கூர் அரசு அளிக்க முன் வந்தது
• இவ்வுடன் பாடு 999 ஆண்டுகளுக்கு உரியது.
• குத்தகை தொகை ஆண்டுக்கு ரூபாய் நாற்பதாயிரம்.
• முல்லை பெரியாற்றில் நீர், 1740 மீட்டர் நீளக் குடைவுப் பாதை மூலமும் 

பள்ளத்தாக்கின் இடையே 1770 மீட்டர் நீளம் அமைக்கப்பட்ட முதன்மைக் கால்வாய் மூலமும் கம்பம் பள்ளத் தாக்குக்குள் விடப்பட்டது.
கர்னல் ஜெ. பென்னி குயிக் பிரிட்டனில் பிறந்து  பழைய சென்னை மகாணத்தில் பணியாற்றியவர். மதுரை தேனி சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் மனதில் இடம் பெற்றவர். கம்பம் பள்eத்தாக்கில் அவருக்கு ஒரு பெரிய சிலையையே மக்கள் வைத்துள்ளனர்.
பெரியாறு அணை கட்டும் பொறுப்பு பென்னிக்குயிக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் பெரியாற்றில் அணை கட்டும் பணியை 1874 ஆம் ஆண்டு தொடங்கினார். 1890 இல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அணையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதற்கு மேல் தொடர பிரிட்டிஷ்அரசின் ஆதரவு இல்லாததால் இங்கிலாந்தில் இருந்த தனது சொந்த சொத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
அந்நாளைய சென்னை மகான ஆளுநர் வென்லாக் 1895 அக்டோபர் 11 இல் இவ்வணை கட்டிமுடிக்கப்பட்டத்தை குறிக்கும் வகையில் கல்வெட்டை திறந்து வைத்தார். கற்களாலும் செங்கற்பொடியாலும் இவ்வணை உருவாக்கப்பட்டது. அந்நாட்களில் இதன் மதிப்பு ரூ 65 இலட்சமாகும்.
அணை விபரம்
• அணையின் அடித்தளம் 144 அடி 6 அங்குலம்
• உயரம் 177 அடி
• அணைச் சுவரின் அகலம் 12 அடி
• அணையின் நீeம் 1241 அடி
• நீர்த்தேக்க உயரம் 155 அடி
152 அடி நீர் நின்றால் அணையின் உட்பரப்பில் 26.44 சதுர கிலோ மீட்டர் பரப்பில் நீர் தேங்கி நிற்கும். இது 15.7 டி.எம்.சி. ஆகும். இதில் 8.88 டி.எம்.சி நீரைத்தான் பயன் படுத்த முடியும். 152 அடியில் 104 அடி வரையுள்ள நீரை பயன்படுத்த முடியாது. அதிகப்படியான நீரை வெளியேற்ற அணையின் வலப்புறத்தில் 136 வது அடியில் 10 நீர் வழிந்தோடிகள் அமைக்கப்பட்டுள்eன.
இந்த நீர் பெரியாறு கால்வாய் வழியாக வைகை நதியில் இணைகிறது. இது மேலூர், செக்கானூர்ணி, திருமங்கலம், திருப்பத்தூர், திருபுவனம், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்தப் பகுதிகளில்  மூன்று லட்சத்து ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் பெரியாறு, வைகை நீரினால் பாசன வசதி பெற்றன.
அணைச்சிக்கல் தொடக்கம்
1932 இல் பிரிட்டிஷ் அரசு மின்சாரம் தயாரிக்கப் போவதாக கூறியது. பாசனத்திற்குதான் உடன்பாடு போடப்பட்டது. மின்சாரம் தயாரிப்புக் கென்றால் தனி உடன்பாடு போடவேண்டும் என திருவிதாங்கூர் அரசு கூறியது. இந்த சிக்கல் நடுவர் மன்றக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ் அரசு பாசன பணிகளுக்கு மட்டும்தான் நீரைப்பயன்படுத்தலாம். மின்சாரம் தயாரித்தால் அதை பாசனப்பணிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இதை திருவிதாங்கூர் அரசு ஏற்க வில்லை. இதனால் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஏற்பட்ட உடன்பாடும் செயல்படாமல் போயிற்று.
தமிழகம்1959, அக்டோபர் 12  இல்  அன்றைய முதல்வர் கு. காமராசர் அவர்களால் பெரியாறு நீர் மின் நிலையம் இயக்கி வைக்கப்பட்டது. அதன் உற்பத்தி திறன் 140 மெகா வாட். ஆண்டுக்கு 35 கோடி அலகு வரை மின் சாரம் தயாரிக்க கிலோவாட்டுக்கு ரூ.12 உரிமைத்தொகை தரவேண்டும். அதற்கு மேல் கிலோவாட்டுக்கு ரூ.18 என்ற கணக்கில் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என 1970 இல் உடன்பாடு போடப்பட்டாலும் 1954 நவம்பர் 13 என முன்தேதியிட்டு அமுலாவதாகும் விதி செய்யப்பட்டது.
 ‘பெரியாறு 1886 உடன்பாடு’ குறித்து கேரளத்தில் மோதல் ஏற்பட்டது. எனவே அந்த உடன்பாட்டில் மூன்று மாறுதல்கள் செய்யப்பட்டன. அதாவது பெரியாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கும் உரிமையைத் தமிழகம்  கேரளாவுக்கு திருப்பித்தந்தது. ஆண்டுக்கு ரூபாய் நாற்பதாயிரம் என்று ஒட்டுமொத்தமாக இருந்த குத்தகைத்தொகையை இனி ஏக்கருக்கு ரூபாய் முப்பது என்று தமிழகம் தர ஒப்புக்கொண்டது.  இத் தொகை முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைத்துக் கொள்eவும் தமிழகம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் இவ்வணையின் பாதுகாப்புக் குறித்து ‘மனோரமா’ என்ற மலையாளப்பத்திரிக்கை 1963 இல் செய்தி வெளியிட்டது. இச்செய்தியே இப்போது காணப்படும் பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாகும். இதன் விçeவாக இந்தியஅரசாங்கம் 1963 இல், மத்திய நீர்ப்பாசனக் கமி­ன் இயக்குநர், தமிழக-கேரள அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கியக் குழுவை அனுப்பி அணையைப் பார்வையிட அனுப்பியது. இந்த அணை நல்ல நிலையில் இருப்பதாக இக்குழு அறிக்கை அளித்தது.
கேரளாவின் கூக்குரல்
1979 ஆம் ஆண்டு பீர்மேடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.எ. குரியன் என்பவர் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது. அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. அணை யுடையும் அபாயம் உள்ளது என்று அபாயச் சங்கு ஊதி போராட்டம் நடத்தினார். கேரள அரசின் மறைமுக ஆதரவோடு இப்போராட்டம் நடைபெற்றது. அணை உடைந்தால் கேரளாவில் உள்ள வல்லக்கடவு, வண்டிப் பெரியார், மஞ்சுமலை, மிளரிமலை, தேக்கங்கால், கருங்குeம், கருந்தருவி, சப்பாத்து, உப்புதுளை, மேழிக்குளம், ஆலடி, இடுக்கி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என பீதிக் கிளப்பப்பட்டது.
1979 இல் முனைவர் கே.சி தாமஸ் (கேரளாவைச் சார்ந்தவர்) தலைமையில் நடுவண் நீர்வள ஆணைக்குழு ஒன்று தொழில் நுட்ப முறையில் இவ்வணையினை ஆராய்ந்தது. இந்த அணையினால் உடனடி பாதிப்பு ஏதுமில்லையயன்றும் அணையைப் பலப்படுத்துவதற்கு சில ஆலோசனைகளையும் கூறியது. நீர்த் தேக்கத்தின் மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது. பின்னர் அணையின் முக்கியப் பகுதியை ஆர்.சி.சி. முறையில் காங்கிரீட்டால் அரண் செய்து வலுப்படுத்துவது. அதோடு நீர்மட்டத்தை (136 அடியிலேயே) கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதல் வடிகால்களை அமைப்பது என்பனவையே அவை. இதற்கு பின்னர் 1980 இல் தில்லியில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகம்மது தலைமையில் தலைமைப் பொறியாளர் ஜார்ஜ் மாத்யு, பொதுப்பணித்துறை பொறியாளர் உன்னிக் கிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலர் பத்மநாபன், அப்போதைய மதுரைமாவட்ட ஆட்சியர் சியாக் (அனைவரும் கேரளாவைச் சார்ந்தவர்கள்) கலந்து கொண்டனர்.  நீர் தேக்கும் உயரத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்றும் ரூபாய் 12 கோடி 51 இலட்சம் செலவில் வலுப்படுத்த வேண்டும் என்றும் உடன் பாடு ஏற்படுத்தப்பட்டது. இதில் கையயழுத்திடாமல் இராஜா முகம்மது திரும்பினார்.  இதில் அணையை அவசரமாகப் பழுது பார்க்கும் பணிகளும் இடைநிலைப் பாதுகாப்புப் பணிகளும் முடிந்தபின் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 145 அடியாக உயர்த்துவது என்றும் நீர்வe ஆணையம் பரிந்துரைத்தது. (இது குறித்து சி. சுகமூர்த்தி தமிழ்நாட்டு அரசியன் பெரியாறு அணை சிறப்புக் குழுவின் செயற்பொறியாeர், நடுவண் நீர்வe ஆணையம் பரிந்துரைத்த தலையாய நடவடிக்கைகள் அனைத்தும் 1988 இலேயே செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்று கூறுகிறார்.)இந்தக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின் படி கம்பிகளால் முட்டுக் கொடுக்கும் பணியும் கூடுதல் வடிகால்கள் அமைப்புப் பணியும் 1990 முடிவடைந்த பின் தமிழ்நாட்டு அரசு கேரயஅரசை மேற்படி பரிந்துரையைச் செயல்படுத்து மாறு கோரியது.  மத்திய நீர்வய ஆணையத்தலைவர் சொன்னது ஓர் அபிப்பிராயம் தான். அது கட்டுப்படுத்தும் ஆணை இல்லை என்று கூறி நிராகரித்தது கேரளா.( இந்து, 22.12.1997)
கம்பம் பள்eத்தாக்கு உழவர் சங்கத்தின் செயலாளர் கே.எம். அப்பாஸ் அவர்கள், அணையின் பாதுகாப்புதான் தனது பெரிய கவலை என்று கேரள அரசு கூறிவருகிறது. ஆனால் அணையை வலிமைப்படுத்துவதற்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தொடர்ந்து இடையூறு விளைவிப்பதும் அதுதான் என்று கூறுகிறார். கேரள அரசின் நோக்கமெல்லாம் நீரை மேலும் மேலும் இடுக்கி அணைக்கு திருப்பிவிடுவதுதானே தவிர பெரியாறு அணையை வலிமைப்படுத்து வதிலில்லை என்றும் கூறுகிறார்.
1979 இல் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடியாகக் குறைத்ததால் பாசனத்திற்கு வரும் நீர் வரத்து குறைந்து விட்டது. பெரியாறு பாசனத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மொத்தப்பரப்பு 2,08,145 ஏக்கர் ஆகும். வைகை மூலம் பாசனம் பெறும் மொத்த பரப்பு 1,36,109 ஏக்கர் ஆகும். தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்களில் இதனால் பாசன நீர்த்தேவை கடுமையானது.
பொதுவுடமைவாதி வி.எஸ் அச்சுதானந்தனின் மலையாe மாநிலப்பற்று
இப்போது கேரe முதல்வராக உள்e வி.எஸ் அச்சுதானந்தன் (பொதுவுடமைக் கட்சி) 1997 இல், அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேரள அரசு தவறிவிட்டதென்றும் மேலும் அதிக நீரை திருப்பிவிடத் தமிழ்நாடு எடுக்கும் முயற்சியைத் தடுத்துவிடத் தவறிவிட்டதென்றும் தனது இடது சாரி கூட்டணி அரசின் மீதே கண்டனத்தைக் கூறியவர். இதன் காரணமாக சில மாதங்களாக கேரள அரசியலில் பெரியாறு அணைப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. (தினமணி 7.7.1997) தற்போதைய 2006 தமிழக சட்டமன்றத்தேர்தலில் பொதுவுடமைச் சித்தாந்தம் பேசும் அச்சுதானந்தனுக்கு இருக்கும் இந்த கேரe மாநிலப்பற்று தமிழ்நாட்டில் இருக்கும் பொதுவுடைமைக்காரர்களுக்கு இருக்க வேண்டாமா? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தேர்தல் பிரச்சாரங்களில் கேள்வி எழுப்பினார். உடனே தமிழக மார்க்சிஸ்ட் டுகள் ம.தி.மு.க போட்டியிடும் 35 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். 
பெரியாறு அணை பலவீனமானதாக உள்ளதா? தமிழக அரசு 1980 இல் ஒப்புக் கொண்டபடி அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்யவில்லையா? இது குறித்து தமிழர் கண்ணோட்டம்  தனது மார்ச் மற்றும் ஏப்ரல் 2000 இதழ்களிலேயே அலசுகிறது. அக்கட்டுரையின் சுருக்கம் இதோ...
காங்கிரிட் தொட்டி அமைத்தல்
பிரதான அணையின் நீளம் 1200 அடி. அதன் மேல் முழு நீeத்திற்கும் 3 அடி அகலம் முற்பகுதியிலும் 6 அடி அகலம் பிற்பகுதியிலும் ஒரு மீட்டர் உயரத்திலும் கான்கிரிட் தொட்டி போன்று அமைத்து 12 அடி அகலமுள்e அணையின் மேல் பாகம் 21 அடிக்கு அகலப்படுத்தப்பட்டு அணையின் கன பரிமாணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கான்கிரிட் கட்டுமானம் உரிய கம்பிகள் மூலம் பழைய அணை கட்டுமானத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது.
கேபிள் ஆங்கரிங் செய்தல்
அணையின் மேல் மட்டத்தில் இருந்து அடித்தe பாறையினுள் 4 அங்குல விட்டம் உள்ள துளைகளை போட்டு அதனுள் 34 அதிக இழுவிசைத்திறன் உள்ள 7 மி.மீ. அளவுள்ள இரும்பு கம்பிகளை பாறையினுள் செருகி பிணைக்கப்பட்ட பின் 120 டன் இழுவிசை கம்பிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதேபோல் அணையின் நீeவாக்கில் 9 அடி இடைவெளியில் 95 கேபிள் ஆங்கர்கள் பொருத்தப் பட்டபின் சிமெண்ட் கிரவுட் ஒவ்வொரு துளை மூலமும் செய்யப்பட்டது. 120 டன் இழுவிசையுடன் அணைக்கட்டுப் பாறையுடன் இணைக்கப்படுவதால் அணை மேலும் வலிமை மிக்கதானது.
கைபிடிச் சுவரை உயர்த்துதல்
பெரியாறு பிரதான அணையின் கைப்பிடி சுவரின் மேல்மட்ட  உயரம் 158 அடியாகும். இந்த சுவரில் மோதும் நீரின் அலைகளை தடுக்க மேலும் 2 அடி உயர்த்தப்பட்டு மேல் மட்டம் 160 அடியாக உயர்த்தப்பட்டது. கருங்கல்லினால் கட்டப்பட்ட இந்த சுவர் பிரதான அணையை அடுத்த சிற்றணை வரை நீடிக்கப்பட்டது. பிரதான மற்றும் சிற்றணைக்கு இடைப்பட்ட  பகுதியும் 160 அடி மட்டம் வரை கல்பதிப்பு செய்யப்பட்டது.
மூன்று கூடுதல் நீர்போக்கி அமைத்தல்
பெரியாறு அணையின் பழைய 10 நீர் போக்கிகளின் வெளிபோக்குத் திறன் வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியாகும். ஆனால் எதிர்பார்க்கப்படும் உச்ச நிலை வெள்ள வரத்து  விநாடிக்கு  1 இலட்சத்து 22 ஆயிரம் கன அடியாக  இருப்பதால் கூடுதல் நீரை வெளியேற்ற மூன்று கூடுதல் நீர்போக்கிகள் அமைப்பது அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் படி பழைய நீர்ப்போக்கிகளின் இடது புறம் இருந்த மண், பாறை அகற்றப்பட்டு 40 அடிக்கு 16 அடி என்ற அளவு வீதத்தில் மூன்று நீர்போக்கிகள் கருங்கல்லால் கட்டப்பட்டன. கான்கிரீட்டிலான மற்றொரு வழிந்தோடியும் கட்டப்பட்டது. புதிய மற்றும் பழைய நீர்ப்போக்கிகளிலும் மின் வசதியால் இயங்கக்கூடிய ரேடியல் அடைப்பு சட்டர்கள் பொருத்தப்பட்டன. பழைய வெளிபோக்கிகளின் அடைப்பு சட்டர்களும் பழுது பார்க்கப்பட்டு மின் வசதியுடன் இயங்க கூடியதாய் மாற்றப்பட்டன.
கான்கிரீட் முட்டுச் சுவர்
இந்தப் பணிதான் பெரியாறு அணைக்கு நிரந்தர பலம் கொடுக்கக் கூடியதாகும். அணையை ஒட்டி பின்புறமாக அடித்தளத்திலிருந்து 34 அடி அகலத்திற்கு கான்கிரீட் முட்டுச் சுவர் எழுப்பி அதை நடு உயரத்தில் 27.36 அடி அகலத்திற்கு கொண்டு வந்து பின் அணையின்  145 அடி மட்டத்தில் இணையுமாறு கட்டப்பட்டது. முட்டுச்சுவரின் அடித்தளம் கடின பாறைமேல் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் துளையிடப்பட்டு பிணைப்பு கம்பி பொருத்தி சிமெண்ட் கிரவுட் செய்யப்பட்டுள்ளது. முட்டுச் சுவர் கட்டுமானத்தினுள் 10 அடி மற்றும் 45 மட்டங்களில் ஆய்வு செய்வதற்காக வடிகால் கேலரிகள் அமைக்கப்பட்டன. அணையிலிருந்து கசியும் நீர் மற்றும் மெல்லிசை நீர இக்கேலரிகளில் சேகரிக்கப்பட்டு ‘வி‘ நாட்ச் என்னும் அளவுகோல் மூலம் கணக்கிடப்படுகிறது.
அணையின் பாதுகாப்பை பார்வையிட நிபுணர் குழு
கேரளத்தின் அச்சத்தைத் தவிர்க்க தமிழகம் மேற்கொண்ட இத்தகைய பணிகளை பார்வைவிட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என். சந்தோஷ் யஹக்டே, எஸ்.பி. புகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய தண்ணீர் கமி­னைச் சேர்ந்த பாசன நிபுணர்கçeக் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழு முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதனால் நூறு ஆண்டுகள் பழமையான அந்த அணைக்கோ அணையின் கீழ்ப்பகுதியல் உள்ள வசிப்பிடங்களுக்கோ எந்த ஒரு ஆபத்தும் நேர்ந்துவிடாது என்று உச்சமன்றத்திடம் அறிக்கை அளித்துள்ளது ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு.
142 அடி நீரைத் தேக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பேச்சுவார்த்தை
அறிவுரையும்
 இந்த அறிக்கையின் அடிப்படையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என 2006 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளை கொண்ட  உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு இத்தீர்ப்பை ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பின் அதனையே புதிய ஆற்று நீர் சட்டத் திருத்தமாகவும் சட்டமன்றத்தில் இயற்றியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த மீண்டும் தமிழகம் வழக்கு தொடர்ந்தது. உடனே உச்ச நீதி மன்றம் சொல்கிறது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று.
இதே போன்று ஒரு நிலை 1996 இல் காவிரி பிரச்சனையில் ஏற்பட்டது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த உத்திரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றது உச்ச நீதிமன்றம். இடைக்கால நடுவர்மன்றத் தீர்ப்பு வந்து அய்ந்தாண்டுகள் கழித்து அமுல்படுத்த வழக்கு போட்டால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றது உச்ச நீதிமன்றம். இப்போது பத்து வருடங்கள் ஆன நிலையில் இடைக்கால நடுவர் மன்றத் தீர்ப்பும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. இறுதித் தீர்ப்பும் வர வில்லை. அப்போதும் இதே பிழையை செய்தவர் கலைஞர்.
இப்போது பெரியாறு அணையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நிபுணர் குழு அமைத்து அணையின் வலுத் தன்மையை ஆராய்ந்து 142 அடி நீர் உயர்த்தலாம் என அக்குழு அறிக்கை அளித்த பின் தீர்ப்புக் கூற 2006 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை ஆகியிருக்கிறது.
அந்த தீர்ப்பை செயல்படுத்த உத்தரவு கேட்டால் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் கூறப்பட்ட தீர்வுக்கு மதிப்பில்லையா? மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தை இப்படித்தான் பின்பற்ற வேண்டுமா? தமிழக முதல்வர் கலைஞர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
உச்ச நீதிமன்றம் கூறிய அறிவுரை படி பேச்சு வார்த்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. அதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தலாமா? இதே போல் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி கர்நாடகத்திடம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமுல் படுத்த பேச்சுவார்த்தை நடத்தி இன்றeவும் காவிரிப் பிரச்சனை தீராமல் இருக்க கலைஞர்தானே காரணம்? எனவே கலைஞர் அவர்கள் பேச்சுவார்த்தை என்னும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தமிழனின் உரிமையைக் காக்க முன்வரவேண்டும்.கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்.
- கவி

No comments:

Post a Comment