Wednesday, July 20, 2011


அம்மா

கடந்த ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாளிலிருந்தே அம்மா உடல் நலக் குறைவாக இருந்தார்கள். கைப் பேசியில் பேசும் போது என்னம்மா குரல் ஒரு மாதிரியாக இருக்கிறதே! உடம்பு சரியில்லையா என்று கேட்பேன். அதெல்லாம் ஒன்னுமில்லையப்பா. கொஞ்சம் சொரம். இரண்டுமூன்று நாளா இருக்கு என்றார்கள். நாள் தோறும் காலையிலோ அல்லது பிற்பகலிலோ அம்மாவிடமோ தம்பியிடமோ அல்லது அண்ணனிடமோ பேசிவிடுவேன். 14 ஆம் நாள் பிற்பகல் பேசும் போது, தம்பி அம்மாவிடம் கைப்பேசியைக் கொடுத்தான். அம்மாவின் குரல் மெல்லியதாக இருந்தது. என்னம்மா உடம்பு சரியா வர மாட்டேங்குதா என்று கேட்டேன். ஆமாம்மா சரியா வர மாட்டேங்குது என்றார்கள். எப்போதுமே ஒன்னுமில்லையப்பா என்று சொல்கிறவர்கள் இப்படிச் சொல்லுகிறார்களே என்று நினைத்துகொண்டேன்.

டாக்டர்ட போங்கம்மா என்று சொன்னேன். நாளைக்கு பெரியண்ணனுக்கு லீவு. அன்னைக்கு போறம்பா என்று சொன்னார்கள் நான் பேசியது புதன் கிழமை.  மீண்டும் அன்று மாலை பேசும் போது அம்மா தூங்குவதாக தம்பி சொன்னான். சரி சரி எழுப்பாதே என்று கூறி விட்டு , அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டு விட்டு, அம்மாவை பாத்துக்க என்று சொல்லிவிட்டு கை பேசியை அணைத்து விட்டேன். மறு நாள் பேசும் போது அம்மா அன்றும் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என்று தம்பி சொன்னான். திடீரென்று இரு, இரு அம்மா எழுந்துட்டாங்க, பேசு பேசு என்றான். ஆனால் கைப்பேசியை அவர்கள் வாங்கும்போது மயக்கத்தில் தவற விட்டார். நான் தம்பியிடம் ஒன்னும் தொந்தரவு செய்யாதே என்று கூறி டாக்டர்கிட்ட அழைச்சுட்டு போ என்று கூறினேன்.

 மறு நாள் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்ததால் தம்பிக்கு சூலை 17 ஆம் தேதி பணம் அனுப்பி வைத்தேன். நீ எவ்வளவு பணம் அனுப்பியிருக்க என்று அம்மா கேட்டார்கள். மூவாயிரம் அனுப்பியிருக்கான் என்று தம்பி சொன்னான். அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தமாம்.  இன்னும் நிறைய எதிர்ப்பார்த்திருப்பார்கள் போலும். நான் நினைத்தது சாதாரண மருத்துச் சிகிச்சைக்குத் தானே அழைத்துப் போகிறார்கள். அதுவும் நான் சிங்கப்பூரிலிருந்து பணம் அனுப்பினேன் என்றால் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
குழந்தைகளும் அக்கறையாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அத்தொகையை அனுப்பினேன். அம்மாவுக்கு இந்த மாதிரியான வருத்தம் எப்போதும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களுடைய பென்சன் பணத்திலிருந்து சிறு சிறு தொகையாக ரப்பர் பேன்டினால் கட்டி கட்டி ஒரு பெட்டியில் என் தம்பி போட்டு வைத்திருப்பதை அவ்வப்போது அம்மாவிடம் காட்டிக் கொண்டே யிருந்திருக்கிறான்.  

அன்று மாலை மருத்துவர் நீலகண்டனிடம் காட்டிய போது மருந்து கொடுத்தவர் காலையில் கீழ வீதியில் உள்ள இரமேஷ் மருத்துவரிடம் காட்டி விட்டு அங்கேயே சேர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். மருத்துவரிடமிருந்து இரவு திரும்பும் போது அம்மா நன்றாகவே இருந்துள்ளார்கள். 15 நாட்களுக்கு முன் பெரிய அண்ணன் மகள் தேவியிடம் அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த நகையை அவளிடம் கொடுத்து இனிமே நீயே பத்திரமாக வைத்துக்கொள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள். மறு நாள் அதாவது சனிக்கிழமை காலை தேவி பள்ளிக்குச் செல்லும் போது வழக்கம் போல் நெற்றியில் திருநீறு வைக்கச் சொல்லி, கையில் திருநீற்று தட்டுடன் செல்ல அம்மா மயங்கிய படியே எழுந்திருக்க முயற்சி செய்து கையை அசைத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆயி நீங்க அப்படியே படுத்துக்கோங்க. சாயந்திரம் வந்து பாத்துக்கிறேன் என்று கூறி விட்டு தேவி பள்ளிக்குச் சென்று விட்டாள்.
மருத்துவர் இரமேசின் மருத்துவமனையில் சேர்த்து விட்டு மருத்துவர்க்காக காத்திருந்தார் என் பெரிய அண்ணன். சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஓர் ஊசியை செலுத்திவிட்டு சென்றுவிட்டார். 11.30 மணி அளவில் போய் சாப்பிட்டு வாப்பா என்று பெரிய அண்ணனிடம் கூறியுள்ளார். அதுதான் கடைசியாக அம்மா பேசியது என்று பெரிய அண்ணன் சொன்னார். சின்ன அண்ணனும் தஞ்சாவூரிலிருந்து தனது இரண்டாவது மகள் சிவரஞ்சனியை அழைத்துக் கொண்டு இயல்பாக வந்தார். பிற்பகல் இரண்டுமணியளவில் அம்மா நினைவிழந்து விட்டார்கள். அவரைக் கண்ட மருத்துவர் அதிர்ச்சியடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் கூறி பரிந்துரைக் கடிதமும் கொடுத்தார். அங்கிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் அழைத்து வரும் போது அம்மா அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.


அக்கா அம்மாவின் வாயில் கையை விட்டு எதையோ எடுத்துக் கொண்டே யிருந்ததை பள்ளியிலிருந்து அண்ணன் மகள் தேவி பார்த்திருக்கிறாள். காலையில் ஆயியை (என் அம்மாவை) நன்றாகப் பார்த்தவள், பிற்பகலில் நடப்பவற்றவைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். தஞ்சாவூரிலிருந்து சின்ன அண்ணன் மகள் சிவரஞ்சனி வருவதால் மகிழ்ச்சியடைந்திருந்த தேவி அதன் காரணமாக பள்ளியிலிருந்து வந்தவளுக்கு இந்நிகழ்வு பெருத்த துன்பத்தை ஏற்படுத்தி விட்டது.
அரை மணி நேரத்திற்குள்ளாக டாட்டா சுமோ அத்தான் தம்பி இராஜா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு  வீட்டிற்கு அம்மாவை அழைத்து போக வந்தது. அம்மா, அக்கா, அண்ணன்கள் என்று எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருக்க வந்து சேர்ந்தான் கடைசி தம்பி காரல் மார்க்ஸ். அங்கு நடப்பவற்றை கண்டு அதிர்ச்சியடைந்த அவன், தானும் அந்த சுமோவில் ஏறிக் கொண்டான். சுந்தரும் ஏறிக்கொண்டான்.
கடலூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு சேர்த்தார்கள். அம்மாவுக்கு நினைவு திரும்பவில்லை. கையை காலை ஆட்டிய படியும் நீட்டியபடியும் இருந்தார்கள். கையை அக்காவும் காலை அண்ணன் சுப்பையாவும் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
சிதம்பரம் மருத்துவமனையிலிருந்து கடலூர் மருத்துவமனைக்கு செல்லும் போது நான் பெரியண்ணனிடம் பேசிய போது, கடலூருக்கு போய் கொண்டிருக்கிறோம். அம்மா கை காலை ஆட்டிய படி முரண்டு பிடிக்கிறார்கள். சின்ன அண்ணன்தான் அம்மாவை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறினார். அப்போது சிங்கப்பூரில் மணி மாலை 4.30. சனிக்கிழமை. உடனே மாலை ஐந்தரை மணிக்கு அய்யாவிடம் தொடர்பு கொண்டு நிலையை எடுத்துக் கூறி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கூறினேன். அனுமதி வழங்கினார். உடனே என் சகலையின் உறவினர் திரு.இராஜாவிடம் கூறி ஒருவழி சீட்டு டைகரில் சென்னைக்கு பதிவு செய்து தருமாறும் பணம் வந்து தருகிறேன் என்றும் கூறினேன். அவருடம் உடனடியாக ஞாயிற்றுக் கிழமை இரவு புறப்படும் வகையில் பதிவு செய்து அனுப்பினார். சீட்டு பதிவு செய்யப்பட்டது உறுதியானவுடன் ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு அலுவலகம் சென்று , இருந்த ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்வதற்கு நிலுவையில் இருந்த வேலையை காலை 10.30 மணி வரை செய்து விட்டு திரும்பும் நேரத்தில் அய்யா மு.தங்கராசனாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.


அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையயன்று ஊருக்குச் செல்கின்றீர்களே ஏதாவது பணம் வேண்டுமா என்று கேட்டார். எண்ணோட்டத்தில் துன்ப நிலையில் இருந்த எனக்கு ஆசிரியர் தங்கராசனாரின் செயல் மன நிறைவைத் தந்தது. இருந்தால் கொடுங்கள் என்றேன். மாலை எத்தனை மணிக்கு செல்கின்றீர்கள் என்று கேட்டார். ஆறு மணிக்கு செல்கிறேன் என்று சொன்னேன். மாலை ஆறுமணிக்கு சரியாக வந்து ஐந்து நூறு வெள்ளித் தாள்களை கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு மாற்றுவதற்குக் கூட மனம் வரவில்லை.
இரவு சென்னையில் இறங்கியவுடன் தொலைபேசியில் அண்ணன் சுப்பையாவிடம் தொடர்பு கொண்டு கோயம்பேடு போய்கொண்டிருக்கிறேன் என்ற செய்தியை சொல்லிவிட்டு அம்மாவின் உடல்நிலை பற்றிக் கேட்ட போது அப்படியேதான் இருக்கிறது. முன்னேற்றம் இல்லை என்று கூறினான். நான் கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டு, புதுச்சேரி யிலிருந்து விடியற்காலை 4.00 மணி யளவில் கடலூரில் போகின்ற வழியி லேயே இறங்கி கிருஷ்னா மருத்துவ மனை நோக்கி அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடந்து கொண்டிருந்தேன்.

எதிரே அண்ணன் சுப்பையா வந்தான். என்னை அழைத்துக் கொண்டு போய் அம்மா படுத்திருப்பதைக் காட்டினான். அந்த காட்சியை கண்டதும் அதிர்ந்து போனேன். மூக்கில் சுவாசத்திற்கான குழாய் இணைக்கப்பட்டிருந்தது. குளுகோஸ் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. தலைமாட்டில் அக்கா இருந்தார். ஒரு கையை பிடித்து அழுத்திக் கொண்டிருந்தான் சுந்தர். மாக்ஸ் இருந்தான். அம்மாவின் காதில் சென்று அம்மா விநாயகம் வந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து விநாயகம் வந்திருக்கிறேன் என்று கூறினேன். ஒரு அதிர்வும் தென்படவில்லை. கையைப் படித்து பார்த்தேன். கன்னத்தை தடவி பார்த்தேன்.  என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது. தொண்டையை அடைக்கும் என்பார்கள். அன்றுதான் உணர்ந்தேன். பிறகு அப்படியே வெளியே வந்தேன்.


பொழுது விடிந்ததும் பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் இரவு சிதம்பரம் சென்றவர்கள் காலையில் வந்தவிட்டார்கள். அம்மாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்தார்கள். மருத்துவரிடம் சொல்லி ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தார்கள். அம்மாவை டிஸ்சார்ஜ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்றன. அதற்குள் என் துணைவியாரும் திருவாரூரிலிருந்து வந்து விட்டாள். அம்மாவை ஆம்புலன்ஸில் ஏற்றி நாங்களும் அமர்ந்து கொண்டோம். நான் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். சத்தம் போட்டுக் கொண்டே ஆம்புலன்ஸ் சென்றது. வழிநெடுக உரிய முறையில் மக்களே வழிவிட்டார்கள். ஒரு சாலை சந்திப்பில்  போக்குவரத்து காவலர் எல்லா வாகனங்களையும் நிறுத்திவிட்டு எங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை போக வழிவிட்டார். அந்த அரைமணி நேர பயணத்தில் மனித நேயத்தை கண்டு மனநிறைவடைந்தேன்.

புதுச்சேரி நெருங்கியவுடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் கூறி ஜிப்மர் மருத்துவமனையில் அம்மாவை சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு கோரினேன். அவரும் புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் அவர்களிடம் கூறி என்னை தொடர்பு கொள்ளச் செய்தார். நானும் நிலைமைகளை கூறினேன். ஒன்றும் பயப்படாதீர்கள். ஜிப்மரில் உரிய முறையில் செய்வார்கள் என்று ஆறுதல் கூறினார்.   .......2

No comments:

Post a Comment