06.07.2011
பாத்தென்றல் முருகடியான் அவர்கள் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதி வருகிறார். அவற்றை அச்சடித்து தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன். அந் நூல் தொடர்பாக சில செய்திகளையும் பழைய படங்களையும் பெறுவதற்காக திண்ணப்பனார் வீட்டிற்குச் செல்வதற்காக தயாராக இருந்தேன். அய்யா முருகடியான் கொடுத்த திண்ணப்பனாரின் வீட்டு தொலைப்பேசி எண்ணை தொலைத்துவிட்டேன். எனவே அய்யா புதுமைத்தேனீ மா. அன்பழகனாரிடம் தொடர்பு கொண்டு திண்ணப்பனாரின் வீட்டு முகவரியையும் கைப்பேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டு அய்யா திண்ணப்பனாரைக் காணப் புறப்பட்டேன்.
காலை 7.30 மணிக்கு தமிழறிஞர் சுப.திண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். வாங்க வணக்கம் என்றார். அம்மா அவர்களும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அவர்களின் மகனும் உடனிருந்தார். ஏற்கனவே முருகடியான் என்னைப் பற்றியும் என் வருகையைப் பற்றியும் தெரிவித்திருந்தால் புதியதாக என்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லாமல் போய்விட்டது.அய்யா சுப.திண்ணப்பனாரின் பழைய படங்களைக் கேட்டேன். கணினியில் அந்த கோப்புகள் இருக்கும் இடத்தை அவரது மகன் தெரிவிக்க, நான் கொண்டு சென்றிருந்த தம்டிரைவில் சேமித்துக் கொண்டே அய்யா அவர்களிடம் எனது சொந்த ஊர் திருவாரூர் என்றேன். உடனே அவர், நான் அங்குதான் படித்தேன் என்றார். அதற்குள் கணினியில் எனது வேலை முடிந்துவிட்டதால் அவருடன் அமர்ந்து உரையாடத் தொடங்கினேன். இடையில் நான் வெளியிட்ட வ.உ.சி. அறப்பால் உரை நூலையும் நான் நடத்தி வரும் பெரியார் பார்வை சிறப்பு மலரையும் அளித்தேன். பெரியார் பார்வை சிறப்பு மலரில் தமிழவேளின் தொண்டன் தியாகராசன் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்போது அய்யா கூறியவை...
காலை 4 மணியளவில், வரும் அக்டோபர் மாதத்தில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதற்காக ஒரு மலர் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியர் நான். அந்த மலருக்கான கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்த போது சிங்கப்பூரில் இலக்கியம் குறித்த ஒரு கட்டுரையை படித்த போது சிங்கப்பூரில் பெரியாரின் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்க ஆசிரியர் கி. வீரமணியிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று நினைத்தேன். காலை 7.30 மணிக்கு நீங்கள் தமிழவேள் படத்துடன் கூடிய பெரியார் பார்வை சிறப்பு மலரை கொண்டு வந்திருக்கிறீர்கள்
என்றார்.
தியாகராசனை தெரியுமாய்யா என்று கேட்டேன். நன்றாகத் தெரியுமே. அவர் ஒரு தமிழ் ஆர்வலர்.
நான் இந்த சிறப்பு மலரில் தமிழவேள் அவர்கள் தமிழர் சீர்திருத்த வெள்ளிவிழா மலரில் எழுதியிருந்த கட்டுரை இடம் பெற்றிருக்கிறது என்றேன். மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யாவைப் பற்றியும் தமிழ்த்தாத்தா ச.சா.சின்னப்பனாரைப் பற்றியும் நான் கூறிய போது, அய்யா திண்ணப்பனார் அவர்கள் மீண்டும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலருக்கான கட்டுரைகள் அடங்கிய கட்டைப் பிரித்து அ.சி.சுப்பய்யா பற்றி வந்த குறிப்பை படித்துக் காட்டினார்.
நான் அ.சி.சுப்பய்யா அவர்கள் தன் கையால் எழுதியிருந்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்ததா? அது குறித்து தங்களுக்கு ஏதாவது செய்திகள் தெரியுமாய்யா என்று கேட்டேன். தெரியவில்லை என்று கூறினார். நான் மேலும், அ.சி.சுப்பய்யா அவர்கள் இறந்த பின் நடந்த இரங்கல் கூட்டத்தில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் இந்த செய்தியைப் பதிவு செய்ததோடல்லாமல் அந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் அ.சி.சுப்பய்யாவின் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
பெரியார் பார்வை சிறப்பு மலரின் பின் அட்டையில் அ.சி.சுப்பய்யா, தமிழவேள் கோ.சாரங்கபாணி , வள்ளல் உ. இராமசாமி நாடார் மற்றும் தமிழர் சீர்திருத்தச் சங்கக் கட்டிடம் ஆகியவற்றைப் பார்த்த அய்யா திண்ணப்பனார் அவர்கள், தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
உரையாடலுக்கிடையில் நான் கோவலங்கண்ணன் அய்யா அலுவலகத்தில் பணிபுரிகின்றேன் என்றவுடன், அவரை நன்றாகத் தெரியும். பாவாணர் நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் வாங்கினேன் என்றவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணருடன் தாம் பணியாற்றிய செய்திகளை நினைவு கூர்ந்து கூறியதாவது....
மேல்மலையனூர் பகுதியில் நடந்த தேர்தலுக்காக, தேர்தல்அதிகாரியாக நானும் பாவாணரும் சென்றோம். ஒரு பேருந்து நிலையத்தில் பாவாணர் அவர்கள் தன்னுடைய கைப்பையையும் மெய்ப் பையையும் வைத்து விட்டு கழிவறைக்குச் சென்றார். பின் வந்த போது மெய்ப்பையைக் காணவில்லை. உடனே அங்கிருந்தவர்களிடம் தனது மெய்ப்பையைக் காணவில்லை, யாராவது பார்த்தீர்களா என்று கேட்டார். ஒருவருக்கும் புரியவில்லை. உடனே நான் மெய்ப்பை என்றால் சட்டை என்று கூறினேன் - என்றார்.
மேலும் பொறாமையின் காரணமாக பாவாணரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிசெய்ய விடவில்லை என்றார். அய்யா, தெ.பொ.மீ.யும் இரா.பி.சேதுப்பிள்ளையும் தானே பாவாணரை பணிசெய்ய விடாமல் கெடுத்தார்கள் என்றேன். ஆமாமாம் என்றவர், தெ.பொ.மீ. காங்கிரஸ் காரர். இரா.பி.சேதுப்பிள்ளை கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். இது குறித்து அண்ணாமலை நகர் என் வாழ்க்கை என்ற நூலில் விரிவாக பாவாணர் எழுதியுள்ளார் என்றார் திண்ணப்பனார்.
திரு.கோவலங்கண்ணனாரின் பாவாணர் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட தேவநேயம் இணையத்தளம் பற்றியும் அதில் நான் 10 மாதமாக காலையில் 6.00 மணியிலிருந்து 9 மணி வரை இலவயமாகப் பணிபுரிந்து 5000 பக்கங்களுக்கு மேல் புலவர் இளங்குமரன் அவர்களால் கலைச்சொற்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டவற்றை இணையத்தில் ஏற்றியவற்றை விளக்கினேன். அதில் ஆங்கிலத்தில் ஏதாவது கட்டுரை இருக்கிறதா என்று கேட்டார். ஆமாமய்யா. 14 ஆம் தொகுதி முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது என்று கூறினேன்.
உரையாடலிடையே நான் அய்யா திண்ணப்பனாரை சிங்கப்பூர் முனிஸ்வரர் கோவில் நடந்த திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில் சந்தித்தவற்றை நினைவு கூர்ந்தேன். அந்த நிகழ்ச்சி முன்னாள் துணைவேந்தர் அகத்தியலிங்கம் அவர்களுக்கு இறுதி நிகழ்ச்சியாக அமைந்து விட்டது என்று கூறி வருந்தினார்.
நீங்கள் சிங்கப்பூருக்கு வந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றது என்று அய்யா திண்ணப்பனார் வினவ, நான்காண்டுகள் ஆகின்றன என்றேன். அதற்குள் அ.சி.சுப்பய்யாவைப் பற்றியயல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று வியந்தார்.
சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர்களில் ஒருவரான திரு. சு.தெ. மூர்த்தி அவர்கள் வீட்டிற்கு சென்று அம்மா சுசீலா அவர்களைச் சந்தித்து பேசிய போதுதான் அங்கிருந்த பழைய நூல்களையும் படங்களையும் பார்க்கின்ற, படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது என்றேன். அதற்கு அய்யா அவர்கள், ஆமாமாம், மூர்த்தி பக்கத்தில்தான் இருந்தார். நானும் அவருடன் நிறைய நாட்கள் உரையாடியிருக்கிறேன். மூர்த்தியைப் பற்றி சிங்கப்பூர் திராவிடர் கழகமும் சு.தெ.மூர்த்தியும் என்ற நூல் வந்துள்ளது. நான் அந் நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கினேன் என்றார்.
நானும் ஆமாமய்யா,கவிஞர் செவ்வியன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். கவிஞர் செவ்வியன் அவர்கள் சிங்கப்பூர் தமிழும் தமிழர்களும் என்ற நூலை எழுதுவதற்கு அனைத்து ஆவணங்களையும் தந்தவர் மூர்த்தி அய்யா. அதற்கு நன்றிக் கடனாக மூர்த்தி அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் என்றேன்.
எழுத்துச் சீர்திருத்தம் பற்றி பேச்சு சென்ற போது, அ.சி.சுப்பய்யா அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி தொடர் கட்டுரைகளாக எழுதினார். அது பின்னர் நூலாக வெளிவந்தது. அதில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து ஆர்வம் வருவதற்கு அ.சி.சுப்பய்யாவின் சிந்தனை காரணமாக இருந்ததாக வாழ்த்துரையில் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். நான் அந்த நூலின் போட்டோ காப்பி வைத்திருக்கிறேன் என்றார் அய்யா திண்ணப்பனார்.
மேலும் தன்னிடம் பயிலும் ஒரு மாணவர் ஆங்கிலத்தில் பெரியாரின் தாக்கம் என்ற தலைப்பில் ஓர் ஆய்வு செய்திருப்பதாகவும் அய்யா திண்ணப்பனார் தெரிவித்தார். பெரியார் சிங்கப்பூருக்கு 1929 மற்றும்1954 -இல் வந்திருக்கிறார் என்றும் குடியரசிலும் தமிழ்முரசிலும் இது குறித்து வந்த செய்திகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றார்.
ஏற்கனவே வை. திருநாவுக்கரசு அவர்கள் முயற்சியில் மலாயாவில் பெரியார் என்ற தலைப்பில் ஒரு நூலும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலேசியாவில் பெரியார் என்ற தலைப்பில் ஒரு நூலும் வெளிவந்திருப்பதாக நான் தெரிவித்தேன்.
5.8.2011
இன்று மாலை 7.30 மணிக்கு மீண்டும் அய்யா திண்ணப்பனாரைச் சந்தித்தேன். திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூலின் கணினி அச்சு வடிவத்தைக் கொடுத்து விட்டு நான் எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பு நூலைக் கொடுத்து, இதில் பெரியாரின் மொழிக் கொள்கைக் குறித்தும் நான் எழுதிய ஒரு பகுதி இருக்கிறது என்றேன். என்னை மெல்லியப் புன்னகையுடன் ஒரு பார்வைப் பார்த்து விட்டு, சில நாட்களுக்கு முன்புதான் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெரியாரின் மொழிக் கொள்கைக் குறித்து நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் உடனே பெரியாரின் மொழிக் கொள்கை குறித்த நூல் ஒன்றைத் தருகிறீர்கள் என்றார். அய்யா இது 2005 இல் நான் எழுதியது என்று கூறினேன்.
1. குடியரசு இதழ் வழக்கு பற்றிய விவரங்களைக் கூறினேன்.
2. தமிழர் சீர்திருத்தச் சங்கம் குறித்து கட்டுரை எழுதுங்கள் என்று அய்யா திண்ணப்பனார் கூறிய போது, நான், கிடைத்த ஆவணங்களை வைத்துக் கொண்டு தொகுப்பு நூலாக வெளியிடாலாம் என்றிருக்கிறேன் என்றேன். நல்ல கருத்து. அப்படியே செய்யுங்கள் என்றார்.
3. தமிழர் சீர்திருத்தச் சங்கக் கட்டிடம் உள்ள இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டு வைக்க உதவுங்கள் என்றேன். அதற்கான முன் மாதிரிகளையும் சான்று ஆவணங்களையும் காட்டினேன். முயற்சிப்பதாகக் கூறினார்.
4. அய்யா திண்ணப்பனார் பேச்சினிடையே வள்ளுவரும் பெரியாரும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறினார்.
இத்துடன் இன்றைய பேச்சு முடிவடைந்தது.
6.8.2011
இன்று காலை 7.30 மணிக்கு அய்யா திண்ணப்பனார் வீட்டிற்கு திருக்குறளும் மனுதருமமும் என்ற பெரியாரின் பேச்சு மற்றும் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு குறித்து கட்டுரை ஆகியவற்றை அவரிடம் கொடுப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தேன். நான் நுழைவதற்குள்ளாகவே, பெரியாரின் மொழிக் கொள்கை அறிவுபூர்வமானது என்ற நூலைப் படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பெரியார் மொழியை சயின்டிஃபிக்காகச் சொல்லியிருக்கிறார். பெரியார் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது. நேற்றிரவு அந்த நூலை அவரிடம் கொடுத்துவிட்டு வரும் போது இரவு 9.00 மணி. மறுநாள் காலை 7.30 மணிக்குள் அந்நூலைப் படித்து விட்டு கருத்து கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி கூறி விட்டு உடனே புறப்பட்டு விட்டேன்.
7.8.2011
காலை 7.30 மணிக்கு அய்யா திண்ணப்பனாரைச் சந்தித்தேன். திருக்குறள் குறித்த பெரியார் பேச்சையும் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரையையும் படித்தேன். வியப்பாக இருந்தது என்று பேச்சை தொடங்கி கூறியதாவது,
திருக்குறள் குறித்து பெரியாரின் கருத்துகளில் மூன்று சிறப்பாக இருந்தது.
1. திருவள்ளுவர் தெய்வப்புலவர் அல்ல.
2. திருவள்ளுவர் என்பது அவருக்கு பெயராக இருக்காது.
3. ஒழுக்கத்தையும் மானத்தையும் பற்றி
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்
என்ற குறளில் பொது தொண்டு செய்வார்க்கு மானம் என்பது இல்லை என்று கூறியவர் , தனி மனிதனுக்கு அது ஒழுக்கம் என்பதை
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
என்று கூறியுள்ளார் என்று சிறப்பாக ஒப்பிட்டுக் கூறினார்.
திராவிடர் இயக்கமும் திருக்குறளும் என்ற நெடுஞ்செழியனின் கட்டுரை எப்படி இருந்ததைய்யா என்று கேட்டேன். அதற்கு அய்யா திண்ணப்பனார், நெடுஞ்செழியன் தமிழறிஞர். அக்கட்டுரை எங்களை மாதரியான தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் வைத்திருக்கின்ற கருத்தை ஒட்டியதுதான். ஆனால் பெரியார் மாதிரி திருவள்ளுவர் தெய்வப்புலவர் அல்ல. திருவள்ளுவர் என்பது அவர் பெயரல்ல என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது. அது பெரியாரால் மட்டும்தான் முடியும். பெரியார் ஒரு சிந்தனையாளர். அரிஸ்டாட்டில், சாக்கரட்டீஸ் போன்றவர் என்று புகழ்ந்து கூறினார்.
பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு குறித்தக் கட்டுரை எப்படிய்யா என்றேன். அதற்கு அய்யா திண்ணப்பனார், திரு.வி.க. பேச்சையும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பேச்சையும், நாவலர் சோமசுந்தர பாரதியார் பேச்சையும் எடுத்துக் கூறினார்.
வ.உ.சிதம்பரம் அவர்கள் எழுதிய அறப்பால் திருக்குறள் உரை பின்னணியும் பெரியாரின் குறள் குறித்த கருத்துகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் வெளியிட்ட மறுபதிப்பான வ.உ.சி.யின் திருக்குறள் அறப்பால் உரை நூலில் பெரியாரின் உரையை இணைத்துள்ளேன் என்றேன்.
அய்யா திண்ணப்பனார் அவர்கள், ஆமாமாம். வ.உ.சி. அவர்கள் முதல் மூன்று அதிகாரங்களையும் இடைப்பாயிரம் என்றும் அது வள்ளுவர் எழுதியதல்ல என்னும் கருத்துகளைக் கொண்டிருந்தார் என்றார்.
திருக்குறளில் பாட வேறுபாடு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை வ.உ.சி.
அவர்கள், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
என்பதை,
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு
என்று எழுதியுள்ளார். நாவினால் என்பதை வாயினால் என்று மாற்றியிருக்கிறார் என்றும் நாவை வாய் என்று சொல்லியிருக்கிறார் என்றும் கூறினேன்.
அதற்கு அய்யா அவர்கள், வள்ளுவர் பிறிதொரு இடத்தில் நாகாக்க என்றும் வாய்மை என்றும் குறிப்பிடுகிறார் என்று நுட்பமாக விளக்கம் கூறினார்கள். வியந்து போனேன்.
இராமலிங்க அடிகள் - ஆறுமுக நாவலர் இடையே நடந்த அருட்பா - மருட்பா கருத்து மோதல் குறித்த விவரங்களை நான் விரிவாக அய்யா திண்ணப்பனாரிடம் கூறினேன். அய்யா திண்ணப்பனாரும் அமைதியாக கேட்டு விட்டு, ஆறுமுக நாவலர் சைவ நெறியில் ஊறித் திளைத்தவர். இராமலிங்க அடிகள் மனித நேயத்தோடு மூட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கண்டித்தவர் என்றார். உடனே நான் இதுதான் பெரியாரும் வள்ளலாரும் நெருங்கும் இடம் என்றேன்.
அய்யா திண்ணப்பனாரின் ஆசான் பழ. முரு.இரத்தினம் செட்டியார் அவர்கள் சொற்பொழிவாற்றும் படம் 1975 ஆம் ஆண்டு தமிழ்முரசில் வந்த செய்தியை அவரிடம் காட்டினேன். அய்யா அவர்கள் உடனே படித்து விட்டு தனது கருத்தைத் தெரிவித்தார்.
தந்தை பெரியார் அவர்களை சந்தித்து இருக்கிறீர்களா அய்யா என்று கேட்டேன். அதற்கு அய்யா திண்ணப்பனார் அவர்கள் 1962 அல்லது 1963 ஆண்டு வாக்கில் பட்டுக்கோட்டை பேராவூரணியில் வி.எஸ்.கே. குழந்தை அவர்கள் மகனும் எனது அண்ணாமலைப் பல்கலைக் கழக அறை நண்பருமான மாஸ்கோ என்பவரின் திருமணத்தில் சந்தித்தேன். குத்தூசி குருசாமி அவர்கள் ருஷ்யா சென்று வந்த சமயத்தில் அவருக்கு மாஸ்கோ எனப் பெயரிட்டார். என்னுடைய நண்பர் தனது பெயரை பின்னாளில் மாற்றிக் கொண்டார். திருமணத்தில் நான் வாழ்த்துரை வழங்கும் போது , வையத்தில் வாழ்வாங்கு வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவர் குறளை மனதில் நிறுத்தி வாழ வேண்டும் என்று வாழ்த்தினேன்.
உடனே தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்த்துரையில் எனது உரையை மேற்கோள் காட்டி, பேராசிரியர் மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையில் தெய்வத்துள் வைக்கப்படும் என்றால் வானுறை எங்குள்ளது? இங்கு பேறும் புகழும் பெற்று வாழ்ந்தால் போதாதா? பேராசிரியர்கள் இம்மாதிரியான கருத்துகளைக் கூறக் கூடாது என்று கூறினார் என்றார் அய்யா திண்ணப்பனார்.
இறுதியாக பெரியாரும் திருக்குறளும் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள் அய்யா என்று வேண்டுகோள் விடுத்தேன். அய்யாவும் சரி என்றார்.
இச் சந்திப்புக்குப் பின்னர் 20 நாட்கள் கழித்து அய்யா திண்ணப்பனார் அவர்கள் கைப்பேசியில் மீண்டும் என்னை அழைத்தார். மு.வ. அவர்கள்கள் பற்றிய கட்டுரை ஒன்றைக் கொடுத்து கணினியில் தட்டச்சு செய்ய சொன்னார். உடன் தட்டச்சு செய்து உடன் அனுப்பினேன். அப்போதும் பெரியாரும் குறளும் என்ற கட்டுரையை நினைவுப்படுத்தினேன்.
பின் ஒரு வாரம் கழித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றைக் கூறி கட்டுரையைத் தந்தார். அது பெரியாரும் குறளும் என்ற கட்டுரை. மறுநாளே அதை கணினியில் தட்டச்சு செய்துவிட்டு, அய்யா திண்ணப்பனார் அவர்களிடம் அளிக்கும் போது, அய்யா கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது. தமிழகத்தில் திராவிடர் கழத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா மலர் வெளியிடுவார்கள். அதற்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பினால் உடனே போடுவார்கள். எனினும் இப்போது கடந்து விட்டது என்றும் நினைக்கின்றேன் என்று கூறினேன்.
அய்யா அவர்கள், இன்றே ஆசிரியர் வீரமணியிடம் பேசுகின்றேன் என்று கூறினார். மறுநாள், ஆசிரியர் வீரமணியிடம் பேசிவிட்டேன். கட்டுரையை அனுப்பச் சொன்னார். அதையும் அனுப்பிவிட்டேன் என்றார்.
எனக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது. பிறகு அதையயல்லாம் மறந்து விட்டேன்.
திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் தங்கவேலு அவர்கள் என்னிடம் தொலைப்பேசியில் பேசும் போது திண்ணப்பனாரின் கட்டுரை பெரியார் விடுதலை மலரில் வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது என்று பாராட்டி பேசினார்கள். அப்போது தான் எனக்குத் தெரியும் அந்த கட்டுரை மலரில் வந்த செய்தி. தமிழகம் திரும்பி பெரியார் மலரைப் பார்த்த போதுதான் அந்த கட்டுரையையும், அய்யா திண்ணப்பனாருக்கு சிங்கப்பூரில் பெரியார் விருது வழங்கப் பட இருக்கும் செய்தியையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.


No comments:
Post a Comment