Tuesday, March 15, 2011

பழங்காலக் கல்வி முறை-5

பழங்காலக் கல்வி முறை - 5
அர்த்தசாஸ்திரம் என்னும் நூலைப் பற்றி பெரியார் அவர்கள், “உதாரணமாகச் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்தை நம்முடைய பொருளாதார ஒழுக்க நூல் என்ற நம்மால் எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போல் இராமாயணம், பாரதம் போன்றவைகளை நம் ஒழுக்க நூல்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன் அரசனுக்கு வருமானம் பெருக வேண்டுமானால் அவன் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் கோயில்களை வைத்து அதற்கு நிறைய திருவிழாக்களையும் நடத்தி அந்த திருவிழாக்களுக்கு மக்கள் அதிகமாக வருவதற்காக அழகிய பெண்களை நாட்டியமாடச் செய்ய வேண்டும் . அப்போது கோயில்களுக்கும் திருவிழாக்களுக்கும் வருகின்றவர்களிடமிருந்து நிறைய பொருட்கள் கிடைக்குமென்றும் கோயில்களில் அதிசயம் அற்புதம் நடப்பதாக ஜாலம் தந்திரம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றார்” என சம்மட்டி அடி கொடுக்கின்றார்.
சாணக்கியன் குறளைப் படித்து இதிலுள்ள நீதிகளையே கையாண்டிருக்கிறான். ஸ்ரீ அப்பா தீட்சிதர் என்பவர் குறள் அறத்துப்பாலைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து  நீதி குசுமமாலா என்று பெயரிட்டுள்ளார். ஸ்ரீ கே.வி. சுப்ரமணிய சாஸ்திரியார் இதைப் பதிப்பித்துள்ளார். (திருக்குறளும்  பெரியாரும் என்னும் நூலில்).
தமிழ் நூலைப் பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்தல்
ஒவ்வொரு துறையிலான அறிவாற்றலும் உன்னதமான நிலையை எட்டிப் படித்திருந்ததை அதன் ஒவ்வொரு ஆச்சர்யகரமான வேலைப்பாடுகளில் இருந்தும் நாம் அறியக் கிடைத்துள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக நாம் அரசியல் , பொருளாதாரம் ஆகியவற்றிற்கு கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தையும், ஜோதிடம் உள்ளடக்கிய அனைத்து பாடங்களையும் விளக்கும் கலை களஞ்சியமான வராக மிகிரரின் பிரஹத் சம்ஹிதா வையும் கட்டடக்கலைக்கான ஆராய்ச்சி நூலாக மனைசாரம், மயமாதா மற்றும் வாஸ்து சாஸ்திரத்தையும் ஓவியந்தீட்டும் சித்திர சூத்திராவையும் சிலை வடித்தல் மற்றும் சிலை செதுக்குதலையும் விளக்கம் ஆகமம் மற்றும் சில்ப சாஸ்திரத்தையும் நாட்டியத்திற்கான பரத முனிவரின் பரத நாட்டிய சாஸ்திரத்தையும் காமத்துப் பாலை விளக்கும் வாத்சாயனரின் காமசூத்திரத்தையும் வானவியலுக்க ஆரிய பட்டரின் ஆரிய பாடீயத்தையம் கணிதவியலுக்கு பிரம்மகுப்தரன் ஆய்வுகளையும், மாதவசாரயாவின் கணித சார சங்கிரயாவையும் காண முடிகிறது.- கட்டுரையாளர் கே.வி. இராமன்.
தேவநேயப் பாவாணர் அவர்கள் தெரிவித்துள்ள பின்வரும் செழுமையான கருத்துக்களை அறிந்தோமானால் கே.வி. இராமனின் வரிகளின் பின்புலம் விளங்கும்.
“முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதன் மொழி பெயர்ப்பென்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்பது தர்மார்த்த காம மோட்சம் என்பதன் மொழிப்பெயர்ப்பென்றும்,  திருக்குறளின் அறத்துப்பால் தரும சாத்திரத்தையும், பொருள் பால் அர்த்த சாஸ்திரத்தையும், காமத்துப் பால் காம சூத்திரத்தையும் தழுவினவையயன்றும் கூறுவது முதனூல் மறைப்பே. இனி பெரியபுராணம், உபமன்யு பக்த விலாசத்தையும், திருவிளையாடற்புராணம் ஆலாஸ்ய மான்மியத்தையும்,  சிவ ஞான போதம் என்னும் மெய்கண்டான் நூல் ரெளரவாகத்தின் ஈற்றிலுள்ள மொழிபெயர்ப்பையும் முதனூலாக் கொண்டவை என்று கூறுவது நெஞ்சழுத்தமும் துணிச்சலும் மிக்க முதனூல் மறைப்பென அறிக. மெய்கண்டான் நூலின் முதன்மையைப் பற்றி ஏற்கனவே மறைமலையடிகளும் கா. சுப்பிரமணியப்பிள்ளையும் வரைந்துள்ள குறிப்புகளைத் தழுவி ம. பாலசுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ள சிவஞான போதம் முழு முதல் நூலே என்னும் தலை சிறந்த மறுப்பு நூலைப் பார்க்க”.  (திருக்குறளும் திராவிடர் இயக்கமும் என்னும் நூலில்)
டாக்டர் ஆனந்த குமாராசாமி, யாழ்ப்பானத் தமிழர், கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். அவர் எழுதிய நூல்களுள் இந்திய இந்தோனேசிய கலைகளின் வரலாறு பற்றிய நூல் சிறந்தது. அதில் சிற்ப கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிட கலைகளில் தோன்றி இந்திய கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள் (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்கள் அல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல் தொழில் புராதன கடல்வழி வாணிகம் அனைத்தும் திராவிடர்களுடையதே என்று தனது ஆராய்ச்சியின் விளைவை எழுதியுள்ளார்.
புத்த கயாவில் உள்ள இந்திர சாந்தி உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றி அமைத்ததின் விளைவாகும். குப்தர் காலப் புத்தர் படிமங்களும் எலி பாண்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும் பல்லவர் காலத்து லிங்கங்களும் நடராஜர் மூர்த்திகளும் இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வ திரு உருவங்கள் உள்ளன. இவையாவும் இந்திய சிற்பக் கலையின் தத்துவங்களாகும். (தமிழர் வரலாறும் பண்பாடும் - நா. வானமாமலை).
(தொடரும்..)

No comments:

Post a Comment