Thursday, March 31, 2011

பெரியாரின் புறநானூறு

பெரியாரின் புறநானூறு

பேரறிஞர் அண்ணாவின் ‘தம்பிக்குக் கடிதங்கள்’ (11 ஆம் தொகுதி முதல் 20 ஆம் தொகுதி வரை), இராஜ்யசபை பேச்சு, ஆரிய மாயை, கம்பரசம் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெரியாரின் பக்கம் என் பார்வை திரும்பத் தொடங்கியது. ஏற்கனவே என் தந்தையார் எங்களுக்கு ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்பு, என் குருதியில் ஓடிக்கொண்டிருந்ததால் எளிதாகப் பெரியாரைப் பற்றிக் கொள்ள முடிந்தது


1996 ஆம் ஆண்டு தேர்தலில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்ட நேரம். நான் ‘சங்கொலி’ இதழை விரும்பிப் படிப்பதுண்டு. சென்னையில் நான் பணியாற்றிய காலத்தில், தங்குவதற்கு தன் வீட்டிலேயே இடம் கொடுத்து எனக்கு உதவி புரிந்த  நண்பர் சங்கொலி முகவர் திரு. சுப்பாரவ் அவர்களுடன் புதன் கிழமை தோறும் ம.தி.மு.க அலுவலகமான தாயகம் செல்வேன். அப்போதைய சங்கொலி பொறுப்பாசிரியர் திரு. க. திருநாவுக்கரசு அவர்களுடன் அவ்வப்போது உரையாடிவிட்டு வருவேன்.

சங்கொலியில் ‘திராவிட இயக்க 80 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வைகோ எழுதிய தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. கலைஞர் எழுதிய திருக்குறள் உரைக்கு மறுப்புத் தெரிவித்து, திரு. க. திருநாவுக்கரசு அவர்கள், ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘திராவிடர் இயக்க ஏடுகள்’ கருத்தரங்கு பற்றிய செய்திகள் சங்கொலியில் வெளிவந்தன.

 இவற்றையயல்லாம் படித்து, திராவிடர் இயக்க வரலாற்றை உள்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.வி.இராசதுரை மற்றும் வ.கீதா எழுதிய ‘பெரியாரும் சமதர்மும்’ என்ற நூலும் ‘பெரியார் :ஆகஸ்ட் 15’ என்ற நூலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த ‘பெரியார் ஆகஸ்ட் 15’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு நடந்த பெரியார் ஆய்வரங்கு என்னை புதியதோர் பாதைக்கு இட்டுச்சென்றது.

ஆய்வரங்கில் ஏற்பட்ட எண்ணயோட்டத்தோடு நான் சென்னை அண்ணாசாலையில் நடந்து வந்தபோது ‘கவிதாசரண்’ என்ற இதழின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது. அதில் கோ.கேசவன் அவர்கள் பெரியார் பற்றிக் கூறிய அவதூறுகளுக்கு எஸ்.வி.இராசதுரை எழுதிய மறுப்புக் கட்டுரையைப் படித்தேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ சார்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பெரியாரின் பன்முகத்தை அங்கு பல பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், பெரியாரின் வழித்தோன்றல்கள் பேசினர்.

ஆர்.எம் .வீரப்பன் தொடங்கி வைத்த விழாவில், நீதியரசர் மோகன், ‘பெரியாரின் சிந்தனைகளை’ 3000 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்ட அறிஞர் வே. ஆனைமுத்து ஆகியோர் பெரியார் பற்றி ஆய்வு சொற்பொழிவு நடத்த முதல் அமர்வு முடிவுற்றது. இரண்டாவது அமர்வில் பேரா. அய்யாசாமி தலைமையுரையாற்ற, ‘தன்மானம்’ என்ற தலைப்பில் அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தலைவர் இராமலிங்கம் அவர்களும், ‘பெரியாரின் அரசியல் தத்துவம்’ பற்றி மாநிலக் கல்லூரி பேரா. முத்துச்சாமி அவர்களும் சொற்பொழிவாற்றினர். இத்துடன் இரண்டாம் அமர்வு முடிவுற்றது.

பிற்பகல் அமர்வுக்கு பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவில் ‘பெரியாரின் பொன்மொழிகள் மற்றும் கல்வெட்டு பொறித்தல்’ பொறுப்பைப் பெற்று, பெரும் பணியைச் செய்த பேரா. நன்னன் அவர்கள் தலைமையேற்க, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் ‘மூடநம்பிக்கை’ என்ற தலைப்பிலும், மாநிலக் கல்லூரி பேராசிரியர் இளவரசு அவர்கள் ‘பெரியாரின் மொழிக்கொள்கை’ பற்றியும், மலையமான் அவர்கள் ‘பெண்ணியம்’ பற்றியும் திரு.குருநாதன் அவர்கள் ‘வள்ளுவம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். இறுதியாக பேராசிரியர் நன்னன் பேச, இக்கருத்தரங்கு முடிவுற்றது.

இதன் பின் 1998 ஆம் ஆண்டு ஏப்பிரல் 27 முதல 29 வரை மீண்டும் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பேரா. அன்பழகன் அவர்கள் திராவிடர் இயக்க முன்னோடிகள் பிட்டி.தியாகராயர், சி. நடேசனார் மற்றும டி.எம்.நாயர் ஆகியோர் பற்றியும் நீதிக் கட்சி பற்றியும் விரிவாக சொற்பொழிவாற்றினார். மிகவும் அரியக் கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு.
மறுநாள் நடைபெற்றக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஈ.சா.விசுவநாதன், சிவஞானம், கருப்பையா, சந்திரசேகரன், டாக்டர் பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். மாலையில் ‘தமிழ்வழிக் கல்வி’க் குறித்து மகாதேவன், ‘தமிழிசை வளர்ச்சி’ப் பற்றி சாம்பமூர்த்தி ஆகியோர் பேசினர். பேராசிரியை சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களும் பேரா. மு.க. சுப்ரமணியன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.
இந்த இரண்டு கருத்தரங்குகளும் பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் நான் அறிந்து கொள்ள, செம்மைப்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருந்தது.இவ்விரு கருத்தரங்குகளின் பேச்சுக்களை அப்போது நான் முடிந்த வரை குறிப்பெடுத்தேன்.
அத்துடன் திருவான்மியூரில் வசிக்கின்ற, திராவிடர் இயக்க ஆய்வாளரும், காமரசர் ஆட்சிக்காலத்தில் கல்வி இயக்குநராகவும் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த திரு.நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடன் ஏழரை ஆண்டுகாலம் உடனிருந்து அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுத துணைபுரிந்தவரும், குருவிக்கரம்பை வேலு அவர்களுக்கு ‘குத்தூசி குருசாமி’ என்ற நூல் எழுத துணை நின்றவரும், ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுவர்களில் ஒருவரான மாரிமுத்தா பிள்ளையின் ஏழாம் தலைமுறையைச் சார்ந்தவருமாகிய பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் அவர்களின் தொடர்பும் நட்பும் அவரது ‘இளந்தமிழன்’ இதழும் என்னை திராவிடர் இயக்கச் சிந்தனையில் முழுவதுமாக ஈடுபட வைத்தது.
இந்த பின்னணியில் பெரியாரைப் பற்றிய இன்னொரு கோணமும்  இருப்பதை பலரும் வெளிப்படுத்த விரும்பாத நிலை, ‘ஈ,வே.இரா. சிந்தனைகள்’ என்ற தொகுப்பு நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது தெரிந்தது. பெரியார் நடத்திய போராட்டங்கள், அதறகு அவர் மேற்கொண்ட வழிமுறைகள், அவருக்குக் கிடைத்த சிறை தண்டனைகள், வழக்குமன்றங்களில் அவர் தன்தரப்பு வாதங்களை மட்டும் பதிவு செய்துவிட்டு, எதிர்த்து வழக்காடாமை போன்றவை மக்களிடம் பரவலாக்கம் செய்யப்படாமை என்னுள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசியல் சட்ட எரிப்புப் போர், காந்தி சிலை உடைப்பு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு இவற்றைப் பற்றியயல்லாம் பெரியார் வெளியிட்டிருந்த ஆழமான கருத்துக்கள் என்னை வியக்கவைத்தது.

இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்திய இத்தகைய போராட்டங்களையும் அவற்றின் வரலாற்றையும் மறைக்கின்ற இந்நிலையில், பெரியார் பட்டறை இத்தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.
அன்புடன்
கவி
.

No comments:

Post a Comment