Tuesday, March 15, 2011

பழங்காலக் கல்வி முறை-4

பழங்காலக் கல்வி முறை - 4
வேதங்கள், வைசியர்களுக்கும் சத்திரியர்களுக்கும் போதிக்கப்பட்டதால்தான் அறிஞர்களும் கட்டிடக் கலை நிபுணர்களம் வால்மீகி, திருவள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் போன்றோர் கீழ்ச்சாதியிலிருந்தும் சமண மதத்திலிருந்தும் தோன்ற முடிந்தது என்றும் அங்கலாய்க்கிறார் கட்டுரையாளர் கே.வி. இராமன்.
இப்பொய்க் கதைகள் குறித்து டாக்டர் டி.எம். நாயகர் தமது புகழ்மிக்க ஸ்பர்டேங்க் சாலை பேருரையில்,
நீங்கெளெல்லாம் வெகுவாகப் புகழும் திருவள்ளுவர், அவ்வை, கபிலர் ஆகியோரின் வம்சாவளி என்வென்று எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா தமிழ்நாட்டு பார்ப்பான்? பார்ப்பான் ஒரவனுக்கு புலச்சி வயிற்றில் பிறந்தவர் வள்ளுவர் என்று! அதே போல் மைசூர் இராஜகுடும்பத்திற்கும் ஒரு கதை. விக்கிரமாதித்தன் தலைவிதியும் அப்படியே. வியாசன் யார்? பார்ப்பனப் பராச்சரனுககும் சத்தியாவதி எனும் மீனவப் பெண்ணுக்கும் கள்ளக்காதல் மூலம் பிறந்ததாக மகாபாரதத்தில் ஆதிபர்வம் கூறுகிறது.
இப்படியே பலப்பல கதைகள், பார்ப்பானுக்கும் சூத்திரச்சிக்கும் பிறந்தவர்களெல்லாம் காலாகாலத்தில் பெரிய மனு­ன்கள் ஆகியிருப்பதாகக் கதையைக் காட்டுகிறானே ஒழிய ஒரு சூத்திரனுக்கும் ஒரு பார்ப்பனத்திக்கும் பிறந்த பெரிய மனு­ன் கதை மருந்துக்காவது உண்டா, இந்தப் புராணங்களில்? (க. திருநாவுக்கரசு, திருக்குறளும் திராவிடர் இயக்கமும்).
திருவள்ளுவர் பற்றிய கீழ்ச்சாதிக் கதை 1926 இலும் நடைபெற்றது என்பதை க.திருநாவுக்கரசு அவர்கள் தமது திருக்குறளும் திராவிடர் இயக்கமும் என்ற நூலில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவைப் புத்தகமாக 1929 இல் வெளியிட்டார். அப்புத்தகத்தின் தலைப்பும் திருவள்ளுவர். அப்புத்தகத்திலன் முதற் பதிப்பின் முன்னுரையில் மதுரைத் தமிழ்ச் சங்கம் , வாலிப கிருத்துவ சங்கம் என்பவற்றின் துணையாதரவில் மதுரை முக்கிய கிறுத்துவ கலாச்சாலையில் சில உபந்நியாசங்கள் நிகழ்த்தப் பெற்றன. அவற்றுள் ஒன்று, 1926 ஆம் வருடம் சனவரி மாதம் 25 ஆம் தேதி ரெவரண்டு எச்.ஏ. பாப்லி துரையவர்களின்  தலைமைக் கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர் சரிதத்தைப் பற்றி நான உபந்நியாசம் செய்ய நேர்ந்தது. அங்கு அப்போது விசயம் செய்திருந்த சேது சமஸ்தான மகா பண்டிதரான உயர்திரு உ.வே.ரா. இராகவையங்காரவர்கள், சோமேசர் முதுமொழி வெண்பா ஒன்றைச் சுட்டி அதனால் வள்ளுவர் கீழ்க் குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார். என்னிடமிருந்து தக்க சமதானங் கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் நன்னோக்கத்துக்கு நான் பண்டிதவர்களுக்கு நன்றி கூறி, அக்கதை அப்பாட்டில் எவ்வித ஆதரவையும் பெறாமையும் அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்ந்து அங்கீகரிக்கும் நோக்குடைய தனறென்பதையும் எடுத்துக் காட்டினேன். பிறகு பண்டிதரவர்களும் பிறரும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள்.
மேலும் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவரைப் பற்றிய உபந்நியாசங்களில் கலந்து கொண்ட மகாமகோபத்தியாய உயர்திரு வே. சாமிநாதையரவசர்கள் பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள், சென்னை சர்வக் கலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் திரு. வையாபுரி பிள்ளையவர்கள் , மதுரை தமிழ்ச்சங்கக் காரியதரிசி திருவாளர் டி.சி. சீனிவாசையங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியோர் பலர் கேட்டு உடன்பாடு கூறி என்னை ஊக்கினார்கள். உபந்நியாச முடிவில் மகாமகோபத்தியாய ஐயரவர்கள் என்னை ஆசிர்வதித்து அன்போடு ஆதரவு கூறினார்கள் என்பதையும் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதியதையும் க.திருநாவுக்கரசு அவர்கள் மேற்கோள் காட்டியிருந்தார்.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என பாரதியாரால் போற்றப்பட்ட நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் பற்றிய கதையும் பொய்யே.
செங்குட்டுவனும் இளங்கோவும் உடன்பிறந்தவர்களாக உள்ள நிலையில் மூத்தவனான செங்குட்டுவனக்கு அரசாளும் வாய்ப்பு இல்லை. இளையவனான இளங்கோவுக்கே உண்டு என ஒரு சோதிடன் கூறிய கூற்றைப் பொய்ப்பிக்கவே இளங்கோ துறவு பூண்டார் என்பது வரலாற்றுச் செய்தி. இளங்கோவடிகள் செங்குட்டுவனின் தம்பி என்பதை சிலப்பதிகாரமே எடுத்தியம்புவதாக மா. இராசமாணிக்கனார் தனது ஆய்வு நூலில் கூறியுள்ளார். பார்ப்பனக் குருதி இளங்கோவடிகளுக்கு  ஓடியிருந்தால் இந்த சிந்த சிந்தனை வந்திருக்குமா?
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில், அரங்கின் அமைதி, கூத்தின் அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசை ஆசிரியன் அமைதி, கவிஞன் அமைதி, குழலோன் அமைதி, யாழ் ஆசிரியன் அமைதி, கூத்தி ஆடும் இயல்பு என்பன போன்ற பல செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சேர நாட்டில் கூத்தச் சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் நடனத்தை நடித்தான் என்பதைக் கூறும் பகுதி இளங்கோவடிகளுக்கு நடனக் கலையின் மேல் உள்ள அறிவு புலனாகிறது. (மா. இராசமாணிக்கனார், ஓர் ஆய்வு நூல்). இந்த அறிவுக்கும் பார்ப்பனனுக்கும் என்ன தொடர்பு?
பூம்புகார் கடற்கரையில் கோவலனும் மாதவியும் பாடிய கானல் வரிப்பாடல்கள் இசைக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இளங்கோவடிகள் தனித்திருந்த மாதவி யாழ் வாசித்த திறந்தினை வேனிற்காதையில் கூறியுள்ளமை இக்கலையின் சிறப்பினை அறிவிக்கும் மற்றோர் சான்றாகும்.
மலைநாட்டில் கேட்கப்படும் ஓசைகள் மலைவாணன் செங்குட்டுவனுக்கு காணிக்கையாகக் கொண்டுவந்த மலை நாட்டுப் பொருள்கள் பற்றிக் கூறும் பகுதி, இளங்கோவடிகளாரது குறிஞ்சி நில அறிவைத் தெள்ளெனத் தெரிவிக்கிறது. செங்குட்டுவன் கனக விசயரோடு புரிந்த போரினை விவரிக்கும் பகுதி (காதை 26) ஆசிரியரது போர் அறிவை விவரிக்கிறது.
இந்த அறிவிக்கும் பார்ப்பனனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?
(தொடரும்..)

No comments:

Post a Comment