மலாயா சரித்திரம்
- சுவாமி சத்தியாநந்தா
1.9.1949 இல் எழுதிய முன்னுரை
1937 ஆம் ஆண்டு முதல் சிங்கை விவேகானந்த ஆண் பாடசாலை, சாரதாமணி பெண் பாடசாலை இவற்றிற்கு அத்தியட்சராகவும் மேல் வகுப்பு ஆசிரியராகவுமிருந்து யான் பணி செய்துவந்த வேளையிலே, ‘இந்தியாவுக்கும் மலாயாவுக்குமிடையே தொன்று தொட்டு இருந்துவரும் சரித்திர சம்பந்தமான தொடர்பையும் மலாய் நாட்டின் பொது வரலாற்றையும் விளக்கத்துடன் எடுத்துக் கூறும் இந்நாட்டுச் சரித்திர நூல் ஒன்று மலாயாவிலுள்ள தமிழ்ப் பள்ளிக் கூடங்களின் உபயோகத்திற்கு அவசியம் வேண்டும்’ என்ற கருத்தை திரு. ஹாட்ஜ் அவர்கள் என்னிடம் கூறினார்கள். இக்கருத்தினை என்னால் இயன்ற அளவு நிறைவேற்றலாமென எண்ணங் கொண்டேன்.
எனவே, அறிஞர் ஆராய்ச்சிக்காரர்கள் பலரால் ஆங்கிலத்திலே எழுதப்பட்ட மலாயா சரித்திர சம்பந்தமான நூல்களையும் இன்னும் இவ்வியம் பற்றிப் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் எனக்கு அவகாசம் கிடைத்த போதெல்லாம் படித்து, தகுந்த குறிப்புகளைச் சேகரித்து வந்தேன்.
இக்குறிப்புகளில் பெரும்பாலான என்னிடம் கல்வி பயின்ற உயர்தர வகுப்பு மாணவ மாணவிகளுக்குப் புகட்டப்பட்டவை. பிறகு இக்குறிப்புகள் அனைத்தையும் தொகுத்து, தொடுவாய்ப் பகுதிகளின் தமிழ்ப் பள்ளிக் கூடங்களது உதவிக் கண்காணிப்பாளர் திரு. தி.ப. கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய முகவுரையுடன் திரு. உ.இராமசாமி நாடார் அவர்கள்தம் செலவில் ஒரு நூல் வடிவமாகச் சிங்கை ஸ்டார் பிரஸில் அச்சிட்டு, 1941 இல் வெளியிட்டேன்.
அந்நூலுக்குத் தேவையான கையயழுத்துப் பிரதிகளைத் தயாரிப்பதில் என் மாணாக்கருள் ஐவரான ச. பாலசுப்பிரமணியம், பி.துரைராஜு, மு.காந்திநாதன், கோ.முருகையன், க. சிவநேசன் என்பவர் மிகவும் துணைபுரிந்தனர்.
இவர்களுடன் ஸ்ரீலஸ்ரீ சுவாமி ஆத்மராம், பி.ஏ. அவர்கள் கையயழுத்துப் பிரதிகளைப் பார்வை யிட்டுச் சில திருத்தங்கள் செய்து உதவினார்கள். அந்நூலின் பாங்கிற்குரிய கருத்துகள் சில, திரு.ஹாட்ஜ், திரு. கோபாலாகிருஷ்ணன் இவர்களால் நல்கப் பட்டவை. இனி, அதனுள் அச்சிடப்பட்ட படங்களில் அநேகம் ஜொகூர் பாரு ஆங்கிலக் கல்லூரி ஆசிரியர் திரு. செ. சுப்பிரமணியம் அவர்களால் தந்து உதவப் பட்டவை.
1945 ல் முடிவுற்ற இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு மலாயாவில் பல மாறுதல்கள் நிகழலாயின. எனவே யான் முன்னர் யாத்த மலாயா சரித்திர நூலினை மாறிய நிலைக் கொவ்வ முற்றும் புதுக்கி எழுத முற்பட்டேன். இந்நாட்டுச் சரித்திரம் பற்றி அறிஞர் சிலர் அண்மையிலே எழுதிய நூல்களை ஆராய்ந்து, புது வியங்கள் பல சேர்த்து, மலாயா சரித்திரம் என்ற இந்நூலை எழுதினேன். இவ்வேலையில் அன்பர்களும் என் மாணாக்கர்களுமான திரு. இரா. சண்முகம், திரு. எஸ். மார்ட்டின், திரு. பி.துரைராஜு, திருமதி க.அ.மங்களம் ஆகியோர் பெருந்துணை புரிந்தனர். ஐக்கிய மலாயாக் கல்வி இலாக்கா இந்தியப் பள்ளிக் கூடங்களின் கண்காணிப்பாளர் திரு. லே. தி.ராஜன், பி.ஏ., எல்.டி., அவர்கள் இந்நூலின் இறுதியிலுள்ள சில பாடங்களைத் தொகுப்பதற்குத் துணை புரிந்தது மன்றி, அவற்றிற்குரிய சில ஆங்கில நூல்களும் தந்துதவினார்கள். ஐக்கிய மலாயாப் பொதுஜன உறவு இலாக்காக்காரர் சில பட ‘புளோக்குகள்’ கொடுத்துதவி னார்கள். மலாக்கா திரு. உ.அரு. அருணாசலஞ் செட்டியாரவர்கள் மலாக்கா சம்பந்தமான படங்களின் விவரங்கள் குறித்துக் கொடுத்து உதவி புரிந்தார்கள். கோலாலம்பூர் மனோன்மணி விலாச புத்தக சாலையார் இச்சரித்திரத்தை அச்சிட்டுத் தமிழ்த் தொண்டு புரிய முன் வந்துள்ளனர்.
மேலே சொல்லப்பட்டவர்கள் எல்லோரும் எனது முயற்சியில் பங்கு பற்றியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்நூலின் செம்மைப்பாட்டுக்கான சூழ்தல்கள் எங்கிருந்து வரினும் அவற்றை உவகையுடன் ஏற்றுக் கொள்வேன்.
கோலாலம்பூர் சுவாமி சத்தியாநந்தா
1.9.1949
No comments:
Post a Comment