Monday, December 30, 2019

சைவ சமய மாட்சி : டாக்டர் அ.மா. பரிமணம்

சைவ சமய மாட்சி
டாக்டர் அ.மா. பரிமணம்

சமயம்

மனித உள்ளத்தில்  தெய்வ மென்பதோர் சிந்து (திருவாசகம், போற்றித் திரு அகவல், 42) முண்டாகிய நிலை குறிப்பிடத்தக்க சிறப்பமிக்க தொன்றாகும். அந்த நிலை என்று, எங்கு முதன்முதலாகத் தோன்றியது என்பது எளிதில் ஆயந்து கூறுதற்குரிய தொன்றன்று. எனினும், அதன் வளர்ச்சி மானிடவியலிற் பெரியதோர் அகமாற்றத்தினைத் தோற்றுவித்து மனிதகுலம் செம்மையை - மேனிலையை எய்துவதற்கு முயலும் முயற்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அத்தெய்வ சிந்தனை வளர்ச்சி விலங்கு நிலையினும் உயர்ந்து விளங்கிய மனித குலம் மேலும் உயர்வுற்று அமர நிலையினை அடைவதற்கான நெறியினை உருவாக்கியது. தெய்வத்தினை உடன்பட்டு மனித வாழ்க்கையின் செம்மைக்காகப் பல்வேறு இடத்தில் பல்வேறு காலத்தில் தோன்றிய அத்தகு நெறிகள் சமயங்கள் எனப்பட்டன. சமயம் என்பது மனித வாழ்க்கையைச் செம்மையும் நன்மையுமுடையதாக்கச் சமைக்கப்பட்ட வழி என்று பொருள் படும். தெய்வசிந்தனை மிக்கமைந்த நெறிகள் தோன்றிய நிலையில் தெய்வம் இல்லையயன்றும், தேவையற்றது என்றும் கருதும் சிந்தனையும் தோன்றி அஃதுமோர் வாழ்க்கை நெறியாகப் பேசப்படும் செவ்வியும் உருவாகியது.

பழந்தமிழர் சமயநிலை

வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்குத் தோன்றிய சமயம் பற்றிய நிலைமை சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை அறிவதற்கு விளக்கமான சான்றுகள் கிடைக்கவில்லை. இதனை விளக்குவதற்கமைந்த தொல்லியல் அகழ்வாய்வுச் சான்றுகள் தரும் ஒளி குறைவாகவே உள்ளது. ஆனால், சங்க காலத் தமிழகத்தின் சமய நிலையினை உணர்த்துவதில் இலக்கியக் குறிப்புகள் பேருதவிபுரிவனவாக உள்ளன. இன்ன சமயம் எனப் பெயர் சுட்டி அதன் கோட்பாடு இதுவெனக் குறிப்பிடாவிட்டாலும் சமயம் கூறும் தெய்வங்களைச் சுட்டிய குறிப்புகள் பல காணப்படுகின்றன.

மாயோன் சேயோன் போன்ற தெய்வங்கள் திணை நிலைத் தெய்வங்களாகத் தொல்காப்பியத்தில் பேசப்பெறுகின்றன. மேலும் தெய்வ வணக்கம் ‘கடவுள் வாழ்த்து’ (தொல்காப்பியம், பொருள், 85) என்னும் தொடரால் குறிக்கப்படுகின்றது.

‘தெய்வம் உணாவே மாமரம் புட்பதை’ (தொல்காப்பியம், பொருள், 20) என்னும் கருப்பொருள் நிரலின் முதற்கண் வைத்துப் பேசப்பெறும் தெய்வத்தினை உள்ளுறை கூறுங்கால் பேசலாகாது என்னும் மரபினை,
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்
கொள்ளும் என்ப குறியறிந்தோரே (தொல்காப்பியம், பொருள், 49)
என்று தொல்காப்பியம் வரையறுக்கிறது.

இதனால் அக்காலத்தில் சமயம் என்ற பெயரில் அமையாவிட்டாலும் தெய்வத்தின் முதன்மையும் சிறப்பும் அறிய முடிகின்றது.

பழந்தமிழகத்தில் சிவநெறி

சங்க நூல்களில் சமயக் கோட்பாடுகள் பற்றிய நேர்க்குறிப்புகள் இன்றேனும் சமயம் பேசும் திருமால், முருகன், சிவன் போன்ற தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பிற்காலத்தில் அறுவகைச் சமயங்கள் என்ற பருப்பிலடங்கும் வைணவம், கொளமாரம் ஆகிய சமங்களின் முழுமுதற் கடவுளராகப் பேசப்பெறும் மால், முருகன் ஆகியோர் அப்பெயரிலிலேய குறிக்கப்பட, சைவ சமய முழுமுதற் கடவுளாகக் கருதப் பெறும் சிவன் அப்பெயரால் சங்க நூல்களில் குறிக்கப்பட வில்லை.

‘நீலமேனி வாலிழை பாகத்தொருவன்’ (ஐங்குறு நூறு கடவுள் வாழ்த்து,1) என்றும், ‘யாழ் கெழு மணியிடற் றந்தணன்’ (அகநானூறு கடவுள் வாழ்த்து, 15) என்றும், ‘சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுள்’ (பதிற்றுப் பத்து, கடவுள் வாழ்த்து,11 ) என்றும், ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோன்’ (புறநானூறு, கடவுள் வாழ்த்து, 13) என்றும், ‘முக்கட் செல்வன்’, ‘மணிமிடற்றோன்’, ‘கறைமிடற்றண்வால்’, ‘நீலமணிமிடற் றொருவன்’, ‘ஆலமர் கடவுள்’, ‘முது முதல்வன்’ (புறநானூறு, 6-18, 56-2, 55-4, 91-6, 198-9, 165-8) என்றும் வரும் தொடர்களால் சிவபெருமான் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளான்.

சிவன் என்ற பெயரோ அதற்கு மூலமாகும் சிவம் என்னும் சொல்லோ காணப்படாதது சிந்திக்கத்தக்கது. இந்நிலையில் சைவம் என்னும் சொல்வினை இங்கு எதிர்ப்பார்ப்பது இயல்பாகாது. மொழிக்கு முதலில் வாரா எழுத்துக்களைச் சுட்டுங்கால்,

சகர ஐகாரம் (சை) விலக்கப்படுவதனை,
‘சகரக் கிளவியும் அற்றோ ரற்றே
அஐஒள எனும் மூன்றலங் கடையே’ (தொல்காப்பியம், எழுத்து, 62)

என்னும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரத்திலும் சிவன் என்ற சொல்லால் அக்கடவுளும், சைவம் என்ற சொல்லால் அச்சமயமும் குறிப்பிடப்படவில்லை.

பெரியோன், உலகு பொதி உருவத் துயர்ந்தோன், செஞ்சடைவானவன், தெண்ணீர் கரந்த  செஞ்சடைக் கடவுள் என வரும் தொடர்களால் சிவபெருமான் குறிப்பிடப்பெற்றுள்ளான் (சிலப்பதிகாரம், 36-55, 26-98, 26-54).

 ஆனால் சிலப்பதிகாரக் காலத்தோடு ஒத்த காலத்தது எனக் கருதப்படும் மணிமேகலையில் ‘சைவவாதி’ (மணிமேகலை, 27-67) என்னும் தொடர் காணப்படுகின்றது.

இங்குப் புத்தம் சமணம் போலக் சிவநெறி ‘சைவம்’ என்று வழங்கப்பட்ட தென்பதையும், அதனைத் தம் சமயமாகக் கொண்டு அந்நெறிக் கோட்பாடு வல்லவர்களாய் அதற்காக வாதம் செய்பவர்கள் சைவவாதி என வழங்கப்பட்டதனையும் உணரமுடிகிறது.

புத்தம் சமணம் போன்ற சமயங்கட்கு அக்காலத்தில் தனித் தனியே மறைநூல், மந்திரம் போல்வன விளங்கிய பாங்கு சிலப்பதிகாரத்தால் புலப்படுகின்றது.

அதனால் தமிழகச் சமயமாகிய சைவத்திற்கும் மறைநூல் மந்திரம் முதலாயினவும், சமய அமைப்பும் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையினை இரட்டைக் காப்பியங் கொண்டு உய்த்துணரலாம்.

இவற்றால், சைவம், சிவன், சிவம் என்ற சொற்களைக் காணமுடியா விட்டாலும் சிவ வழிபாடும், அதனைக் கொண்ட சிவநெறியும் யாதானுமோராற்றால் சங்ககாலத் தமிழகத்தில் நிலவின என்னும் உண்மை தெளிவு பெறுகின்றது.

மொகஞ்சதாரோவிலும், உலகத்துப் பிற சிலவிடங்களிலும் காணப்பெற்ற இலிங்கத் திருமேனிகள் கொண்டு சைவ சமயத்தின் தொன்மை பல்லாயிரம் ஆணடுகட்கு முற்பட்டது எனக் கூறப்படுகின்றது. அஃதெவ்வாறாயினும், பழந்தமிழ் மக்களால் உருவாக்கப் பெற்ற சிவ வழிபாடும் நெறியும் சங்க காலத்திற்கு முற்பட்ட பழமையுடையன என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் சிவநெறிக்குச் சைவம் என்னும் பெயர் சங்க காலத்திற்குப் பின்னும், மணிமேகலை காலத்திற்கு முன்னும் அமைந்திருத்தல் கூடும்.

சைவ சித்தாந்தம்

சைவம் என்னும் சொல் வழக்குப் பிற்காலத்ததாகும். செம்மையினின்றும் தோன்றிய சிவம் என்னும் தமிழ்ச்சொல் சைவமென்னும் சொல்லிற்க அடிப்படை யாதல் கூடும். சிவநெறி என்னும் பொருளில் சைவம் என்னும் சொல்லை முதன முதலாகத் திருமந்திரம் என்னும் நூலிற் காணமுடிகின்றது. ‘சைவ சமயத்தனி நாயகன் நந்தி’ (திருமந்திரம், 1567) என்னும் தொடரில் சிவநெறியினைச் சைவ சமயம் என்றும், அதன் தலைவனை நந்தி என்றும் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. மேலும், ஆன்மா சிவனொடு தொடர்பு கொள்ளுதற்காம் நெறியே சைவம் எனப்படும் என்பதனைச் ‘சைவம் சிவனுடன் சம்பந்தமாவது’ (திருமந்திரம், 1512), என்று அந்நூல் பேசுகின்றது.

‘சிந்தாந்தம்’ என்னும் சொல் சித்து அந்தம் என்னும் இருசொற்கள் புணர்ந்த வடமொழித் தொடர்ச் சொல்லாகும். சித்து அறிவினையும், அந்தம் முடிவினையும் சுட்டச் சித்தாந்தம் என்பது அறிவின் முடிந்த முடிவாகிய ஒன்றினை ஞானத்தின் முடிந்த எல்லையைக் குறிக்கின்றது. வேதாந்தம் என்னும் தொடர்ச்சொல் வேதங்களின் முடிந்த முடிவு என்னும் பொருள்பட்டு எச்சமய வேதங்களின் முடிவையும் சுட்டுவதாக அமைந்தாலும், வைதிக சமய நான்மறைகளின் முடிந்த முடிவு என்னும் ஒரு குறிப்பிட்ட சமய நெறியினையே சுட்ட வழங்குகின்றது. அவ்வாறே, சித்தாந்தம் என்னும் சொல்லும் எந்தச் சமய ஞானத்தின் முடிவையும் சுட்டத் தக்க பொதுச் சொல்லாக - மெய்யுணர்வினைக் (Philosophy)  குறிக்கும் பொதுச் சொல்லாக அமைந்திருந்த போதிலும் சிறப்பாகச் சிவநெறியாகிய சைவ மெய்ஞ்ஞான நெறியினையே குறிப்பதாக வழங்கப்படுகின்றது. சைவ சித்தாந்தம் என்னும் தொடரும் முதன் முதலில் திருமந்திரத்திலேயே இடம் பெறுகின்றது.

‘சைவ சித்தாந்தம்’ என்னும் வடமொழித் தொடரால் பெயர் பெற்றாலும் அதனால் குறிக்கப்படும் மெய்யுணர்வுக் கோட்பாடு பழந்தமிழ் மக்களின் சிந்தனை யில் உருவாகியதேயாகும். வைதிக நெறிக் கோட்பாடுகள் தமிழ் மக்களின் மெய்யுணர்வுச் சிந்தனையிலும் கலப்புற்ற தன்மையினைச் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கும் சில குறிப்புகள் கொண்டு அறியலாம். கங்கையும் யமுனையும் கலந்த பின்னர்க் கங்கை நீரைப் பிரித்துக் காண்பது இயலாதவாறு போல மெய்யுணர்வில் வடவர் கோட்பாடும் தமிழர் கோட்பாடும் கலப்புற்ற பின்னர்த் தமிழர் கோட்பாட்டினைத் தனியே பிரித்துக் காண்பது மிகமிக அரியதாக உள்ளது.

தமிழ் மக்கள் தங்கள் கலைஞானத்தை வடமொழியில் எழுதி வைக்குமளவு வடமொழி பழங்காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழ் மக்களின் மெய்யுணர்வுக் கோட்பாடுகளும் வடவரின் மெய்யுணர்வுக் கோட்பாடு களும் வடமொழியில் அமைக்கப்பட்டன. வடவர் மொழியும் பண்பாடும் தமிழ் மொழிப் பண்பாட்டில் கலப்புற்ற போது மெய்யுணர்விய லிலும் அக்கலப்புத் தவிர்க்க முடியாமல் பேரளவில் இடங்கொண்டது.

இன்று தமிழர் கோட்பாடான சிவநெறி, வடவர் கருத்தோடு இரண்டறக் கலந்து காணப்படுவதனால் அது தமிழ் மக்களின் சிந்தனைச் சொல்வம் என்பதனைத் தமிழ் மக்களே உணர முடியாத நிலை தோன்றியுள்ளது. சைவ சித்தாந்த நெறி தமிழ் மக்களுடையது என்பதனைச் சமய காழ்ப்பின்றி ஆராய்ந்த அறிஞர்கள் விளக்கியுள்ளனர். கிறித்துவச் சமய அறிஞராய் அச்சமய ஊழியம் புரிய வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்கள் சைவ சமயம் பற்றிக் கூறுவது குறிப்பிடத்தக்கது. ‘சைவ சித்தாந்த நெறி இந்தியாவிலுள்ள சமய நெறிகளில் மிக்க விரிவானதும் செல்வாக்குடையதும் தற்சார்புடையதுமாக விளங்கும் ஒன்றாகும். அது குறிப்பாக தென்னிந்தியர்களின் தமிழ் மக்களின் சமயமாகும்’ (ஜி.யு. போப், திருவாசக ஆங்கில முன்னுரை) என்பது அவர் கருத்து. மேலும் அவர், சைவ சித்தாந்தம் தென்னிந்தியாவிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட சமயமென்றும், ஆரியருக்கு முற்பட்ட காலப் பழமையுடையதென்றும், தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இடம் பெற்றதென்றும் குறிப்பிடுகின்றார். போப் அவர்களின் இம்மதிப்பீடு வடநெறிக் கலப்பார்ந்த சைவ சித்தாந்தத்தினைக் கண்ணுற்று அதன்வழி ஆய்ந்த கண்ட முடிபாகும்.

வைதீக நெறி நால் வேத அடிப்படையிலமைந்தது. சைவ நெறி ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகமங்களும் வேதங்கள் போல வடமொழியில் அமைந்துள்ளன. வேதநெறிக் கலப்புற்ற நெறியில் ஆகமங்களும் அக்கலப்பின் அடிப்படையிலமைந்தனவாக அமைக்கப்பட்டன.  வேதநெறி வேதாந்தம் என்று சிறப்பிக்கப்பட்டவாறு, ஆகம வழிச் சைவநெறி ஆகமாந்தம் எனப் பட்டது. இருநெறிக் கலப்பு நிகழ்ந்ததற்குப் பன்னூறாண்டுகட்குப் பின்னர்ச் சிவநெறி ‘சைவ சித்தாந்தம்’ என்னும் கோட்பாடாகச் சாத்திரப்படுத்துங்கால், வேதச் சார்புடைய பாங்கில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் வேதநெறியும் ஆகம நெறியும் ஒன்றே எனக்காட்டும் முயற்சி யினைத் தமிழ் மக்களும் கொண்டனர். வேதமும், ஆகமமும் சிவபெருமானால் படைக்கப்பட்டன என்னும் கருத்துச் செல்வாக்குப் பெற்றது. இக்கருத்தமைந்த திருமந்திரப் பாடல் வருமாறு :

வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைய நாடில் இரண்டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே (திருமந்திரம், 2397)

இதனை, வேதம் பொது நெறியயன்றும், ஆகமம் சிறப்புநெறி என்றும் விளக்கி, இருநெறியும் வேறுபட்டது போலப் பேசப்பட்டாலும் இரண்டும் வேறுபாடற்றனவே - அபேதமானவையே என்று கூறுவர். விளக்கம் எதுவாயினும் ‘நாடில் இரண்டந்தம் பேதமதென்பர்’ என்னும் பகுதி சிந்தனைக்குரியது. வேத நெறியும் ஆகம நெறியும் (இரண்டு அந்தங்கள்) வேறுபாடுடையன (பேதம்) என்று கருதும் கருத்துத் திருமூலர் காலத்திலேயே இருந்தது என்னும் உண்மையினைப் புலப்படுத்துவதால், இது, தமிழர் சமய வரலாற்றில் அரிய புதைபொருள் வெளியீடாக அமைந்த சிறப்பின தாகும். பெரியோர்க்கு அபேதமே என்னும் முடிவு, இருநெறிக்கலப்பின் ஆற்றலால் உருவாகிய புதிய சூழலை ஏற்றுக் கொள்ள நேர்ந்த உண்மையின் வெளியீடாகும்.

இரண்டந்தங்களையும் அபேதமாகக் கருதும் பாங்கு வளர்ந்த நிலையிலும் தமிழ் நலஞ் சான்ற சமய உள்ளங்கள் இந்த வேறுபாடுகளை மிகவும் குறிப்பாகத் தங்கள் படைப்புகளில் புலப்படுத்தியுள்ளன. திருஞானசம்பந்தரின் வரலாறு கூற முற்பட்ட தெய்வச் சேக்கிழார் அதன் தொடக்கத்திலேயே ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க’ ( பெரியபுராணம், சாக்கியர், 5) என்று கூறுகின்றார். சேக்கிழார் காலத்தே தமிழகத்தில் விளங்கிய சைவ சமயம் இருநெறிக் கலப்பின தாயினும், நுட்பமாய்க் காண்பார்க்கு அவ்விரு கூறும் புலனாகும் எனுங் கருத்தில் வேதநெறி என்றும், சைவத்துறை என்றும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். வேத வழியும் சைவ வழியும் ஒன்றாகக் கலக்கப் பெற்றாலும், வேறுபாடுடையன என்பதனை நெறி என்றும் துறையயன்றும் கூறிய சொற்களைக் கொண்டு ணரலாம். ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றும், ‘செந்தமிழோடு ஆரியனை’ என்றும், ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்றும் வரும் அப்படிரகளின் திருவாக்குக்கள் (அப்பர் தேவாரம், 6-23-5, 6-45-10, 6-87-1) இவ்வாறு சிந்திப்பதற்கு உரமூட்டுவனவாக உள்ளன.

அப்பரடிகளின் இத்தொடர்களை மொழி வேறுபாட்டாலமைந்த இரண்டு இன மக்களைக் குறிப்பனவாக மட்டும் சொல்லாமல் சமய நிலையில் அமைந்த இரு வேறு பண்பாடுகளையும் உணர்த்துவனவாகக் கொள்ளல் ஏற்புடையதாகும்.

சைவ சமண மறுமலர்ச்சி

தமிழகத்தில் சமண புத்த சமயங்கள் செல்வாக்கு பெற்ற நிலையில் அதன் விளைவாகச் சைவ சமயம் எழுச்சி குன்றியது. சிலப்பதிகாரக் கவுந்திப்படைப்பும், மணிமேகலை சமயக் கணக்கர் திறம் தெரிந்ததாக அமையும் பகுதியும் தமிழகத்தில் சமண புத்த சமயங்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் வைதிக நெறிப்பட்ட சைவம் வைணவம் ஆகிய சமயங்கள் எய்திய வளஞ் சுருங்கிய நிலையையும் காட்டுவனவாக உள்ளன.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றி வைதிகச் சார்புற்றிருந்த சைவ சமயத்தினைத் தமிழகத்தில் மீண்டும் செல்வாக்குறச் செய்தனர். வேற்றுச் சமயங்களின் தாக்கத்திலிருந்து விடுபட விரும்பிய தமிழ் மக்கள் வேற்று நெறிக் கலப்பினைக் கருதாது சைவ சமயத்தினைத் தங்கள் சமயமாகப் போற்றலாயினர். சைவ மறுமலர்ச்சிக்குத் தேவார அருளாளர்கள் பக்தி நெறியனை அடிப்படையாகக் கொண்ட எழுச்சிமிக்கதொரு இயக்கத்தை உத்தியாக மேற்கொண்டனர்.

அவ்வுக்தி சிறந்த பயனை நல்கிச் சைவ சமயத்திற்குச் புதியதொரு பொலிவை யும் வலிவையும் தந்தது. பின்னர் வந்த பெரு மக்கள் அனைவரும் சைவ நெறி யினை அதன் வேதத் தொடர்பினை ஏற்றே போற்றுவாராயினர். வேதத்தையும் ஆகமத்தையும் இணைத்துக் காணுமாற்றை,
வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்
ஓதுத்தமிழ் அதனில் உள்ளுறு நெய் - போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்.

(தனிப்பாடல்)

என்னும் வெண்பாவால் உணரலாம். வேதம், ஆகமம், தேவார திருவாசகம், சிவஞான போதம் ஆகியவற்றை இப்பாடலில் ஒன்றிலிருந்து ஒன்று தோன்று வதற்குக் காரணமாம் வகையில் பசு, பால், நெய் அதன் சுவை என்று முற்றுருவகம் செய்து காட்டியிருப்பது நோக்கற்குரியது.

சித்தாந்தச் சிறப்பு

ஆகமாந்தமாகிய சைவம் வேதச் சிறப்புடையது என்பதனைப் பின்னர் வந்த சமய அறிஞர் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.  கி.பி. 17 ஆம் நூற்றாண்டினராகக் கருதப் பெறும் குமரகுருபர அடிகள், தம் ஞான குருவினை இறைவனாகக் கொண்டு பாடிய பண்டாரமும் மணிக் கோவையில் சைவ சமய மாட்சியினை மிகவும் சிறப்பாகக் காட்டியுள்ளார். இறைவனால் படைக்கப்பட்ட வேதம் என்னும் மரம், இலை, தளிர், அரும்பு, மலர், பிஞ்சு, காய் என நிரம்பி நின்றது. பலர் இலை முதல் காய் வரையுள்ள பயன்களையே கைக்கொண்டனர். ஆனால் வேதாந்தம் என்னும் உச்சியிற் பழுத்த, பேரின்ப பெருங்களியைப் பிழிந்து அதன் சாரமாகக் கொண்ட சைவ சித்தாந்தத் தேனை உண்டு பயன் கொண்டவர் சிலரே என்று அடிகள் கூறுகின்றார்.

ஞானசம்பந்த ஞான தேசிக
நல்லருட் டிறத்தால் நம்பிநீயே
பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண்டுய்யயனக்
குடிலை என்னும் நடவயல் நாப்பண்
அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
வேதம் என்னும் பாதவம் வளர்த்தனை
பாதவ மதனிற் படுபயன் பலவே அவற்றுள்
இலைகொண் டுவந்தனர் பலரே இலையயார் இத்
தளிர்கொண் டுவந்தனர் பலரெ தளிரொரீ இ
அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யயன்றியிவை
விரும்பினர் கொண்டுகொண்டு வந்தனர் பலரே
அவ்வாறுறுப்பும் இவ்வாறு பயப்ப
ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த
ஆரா இன்ப அருங்கனி பிழிந்து
சாரல் கொண்ட சைவ சித்தாந்தத்
தேனமு தருந்தினர் சிலரே...
(பண்டார மும்மணிக் கோவை)

இதிலமைந்துள்ள முற்றுருவகம், பல்வேறு பிற சமயங்களின் நிலையினைச் சைவ சித்தாந்த நிலையயாடு பயன் வகையால் ஒப்பிட்டு உணர்வதற்குப் பயன்படுவதாக உள்ளது.

இறைவன் சுத்தமாயையாகிய வயல் நடுவே தன் அருள் எனும் வித்தினை விதைத்தும் கருணையயனும் நீர் பாய்ச்சி வேதம் என்னும் மரத்தை உருவாக்கினான் என்று கூறப்பட்டது. இங்கு வேதம் எனப்பட்டது இருக்கு முதலிய நால் வேதங்களையே குறிக்குமென்றாலும், இறைவனால் அருளப் பெற்ற பொதுவான மறை என்று கொள்வது ஏற்புடைத்தாகும்.

அவ்வாறு கொண்டால் உலகத்துப் பிற சமயங்களெல்லாமும் இறைவன் அருளிய வேத மொழி -மறை மொழி கொண்ட மைந்தன் வென்னும் உண்மை உணரலாம். மேலும் இதனால் பிற சமயங்கள் காட்டும் முத்தி நிலைகள் ஒரு மரத்தின் இலைதளிர் அரும்புமலர் காய் போன்ற ஒன்றினொன்றுயர்ந்த இடைநிலைப் பயன்களைக் கொள்வதனை ஒக்கும் என்றும், சித்தாந்த சைவமே முடிந்த முடிவான பெரும்பயனை அடைவிக்கும் என்றும் உய்த்துணர்தல் கூடும். பிற சமய நெறிகளும் பயன்களும் சித்தாந்த சைவம், உணர்த்தும் நெறியிலும் பயனிலும் அடங்கித் திகழும் என்ற குறிப்பும் இதனால் பெறப்படுகின்றது.

விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாரும்
(அப்பர் தேவாரம், 6-50-9)

என்று சாத்திரமும்,

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்         (சிவஞான சித்தியார், நூ, 2-25)

என்று தோத்திரமும் உறுதி கூறுவதற்குச் சைவ சித்தாந்தம் சமய அருங்கனிச் சாரங் கொண்டமைந்த தேனாய் விளங்குகின்றது என்னும் இவ் உருவகம் விளக்கந் தருவதாக உள்ளது. சைவ சித்தாந்தம் வேதாந்தத்தின் தெளிவு என்பதனை ‘வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிவிக்கலுற்றாம்’ (சிவப்பிரகாசம், பாயிரம் 7) என்று சிவப்பிரகாசம் பேசுகின்றது.

சித்தாந்தப் பொருட் சிறப்பு

சமயங்களை ஒப்பிட்டுக் காண்பவர்கள், வேதங்கள், கடவுள், வினை போன்ற வற்றில் அவை கொண்டிருக்கும் கருத்துக்களைக் கொண்டு வகை செய்து காண்பார்கள். சமயங்களில் சில கண்ணிற்காணும் உலகினை உடன்பட்டுக் காணாத கடவுள் போன்றவற்றை உடன்படார் உயிர் என்பதனை உடன்படாத சமயமும் உண்டு. இவ்வகையில் சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை ஆராயுங்கால் அஃது இறைவன், உயிர்கள், உலகு என்னும் முப்பொருள்களைக் கொண்டுள்ளது என்னும் உண்மை புலனாகும். இம்மூன்றும் அநாதியாகவும், அறிவற்றும் விளங்குவன என்று கூறப்படுகின்றது. சைவ சித்தாந்த நெறியினைச் சாத்திரப் படுத்திய போது இம்முப்பொருளும் பதி, பசு, பாசம் என்னும் மூன்று சொற்களாற் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை சைவ சித்தாந்த முப்பொருட்களை உணர்த்தும் குறியீட்டுக் கலைச்சொற்களாகும். பதி, பசு, பாசம் என்பன முறையே இறை (தலைவன்), உயிர் (ஆன்மா), தளை (பாசம்- கட்டு) ஆகியவற்றைக் குறிக்கும். சைவ சித்தாந்த நெறியினைச் சிவ ஞானபோதம் முதலிய தமிழ் நூல்கள் இலக்கணப் படுத்துவதற்கு முன்னர் ஒழுங்குபடுத்தி வெளியிட்ட சிறப்பு, சாத்திரக் கூறும், தோத்திரக் கூறும் ஒருங்கமைந்து விளங்கும் சமய நூலாகிய திருமந்திரத்திற்கே உரியது. பதி, பசு, பாசமென்னும் சைவ சித்தாந்த முப்பொருட் கோட்பாட்டினைத் தெளிவு பெற விளக்கும் மந்திரங்களில் ஒன்று வருமாறு :

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியனைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப்பசு பாசம்
பதியணுகிற் பசுபாசம் நிலாவே (திருமந்திரம், 115)

திருமந்திரம் தன் முதல் தந்திரத் தொடக்கத்திலே இந்த சித்தாந்த மெய்ப் பொருளுண்மையினைக் கூறியுள்ளது. சைவ சித்தாந்தம் என்னும் பெயரைப் போலவே பதி, பசு, பாசம் என்னும் சைவக் குறியீட்டுச் சொற்களும் முதன் முதலில் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. எனினும் திருமூலரே இக்குறியீட்டுக் கலைச் சொற்களை உருவாக்கினார் என்று கொள்வதற்கில்லை. ‘பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில்’ என்னும்போது இம்முப்பெயர்களும் இக்குறியீட்டுப் பாங்கில் திரு மூலருக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது என்பது புலனாகின்றது. ‘எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்’, ‘குற்றெழுதத் தென்ப’, ‘நெட்டெழுத்தென்ப’ என்னும் போது (தொல்காப்பியம் 1,2,4), அகர முதல் னகர இறுவாய் அமைந்துள்ள தமிழ் எழுத்துக்கள் முப்பதும் குறில் நெடில் என்னும் குறியீடுகளும் தொல்காப்பியத்திற்கு முன்பே அமைந்து கிடந்தமை அறியப்பட்டமை போல ஈண்டும் பதி, பசு, பாசம் என்னும் பெயராட்சி திருமூலருக்கு முன்பே அமைந்து கிடந்தது என்றுணர்தல் வேண்டும்.
பதியினை (இறை) உடன்படுபவர்கள் அஃது ஆதியந்தமற்றது என்பதனை மறுக்க மாட்டார்கள். பசு (உயிர்) பாசம் (தளை) ஆகியனவும் பதியினைப் போலவே அனாதித் தன்மை உடையன என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடாகும். அதனைத் திருமூலர் ‘பூதியினைப் போல் பசு பாசம் அனாதி’ என மந்திரப்படுத்தியுள்ளார். பசு (உயிர்கள்) பாசங்களால் கட்டப்பட்டது.

அனாதியாகிய உயிர் என்றுள்ளதோ அன்றே அது பாசத்தால் பிணிக்கப்பட்டுள்ளது. பாசம் எனப்படும் மலங்களால் உயிர் பிணிக்கப்பட்டுள்ளவரை அது இறைவனைச் சென்றடைய இயலாது. இறை யருளால் பாச நீக்கம் தொடங்கி முற்றுப்பெற்ற நிலையில் அவ்வுயிர் பதியினைச் சென்றடையும். உயிர்கள் தளை நீங்கி -கட்டகன்று பாசமற்று இறைவனை அடைவதனையே சைவ சித்தாந்தம் தனது கொள்கையாக விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகின்றது. அந்த விரிவும் விளக்கமுமெல்லாம், பனித்துளியில் பன்மலைக்காட்சி விளங்குவதுபோல இத் திருமந்திரத்தால் தெளிவுபடத் திருமூலர் காட்டியுள்ளார்.

தானே பதியினைச் சென்றடைய மாட்டாத பசு, பதியருளால் பாசத்தின்று நீங்கு கின்றது. பதியருள் கூடுங்கால் பாசத்தன்மை பசுவிடம் நில்லாது அகல்கின்றது. பாசம் அகன்ற பசு, பதியினைச் சார்ந்து அதனை நீங்காது அதனோடு கலந்தின் புறுகின்றது.

இச்சிந்தாந்த நுட்பம்,
பதியினைச் சென்றணுகாப் பசு பாசம்
பதியணுவில் பசு பாசம் நிலாவே
என்னும் பிற்பகுதியால் விளக்கப்படுகின்றது.

ஆலமர் செல்வனின் சின்முத்திரை வினை விளக்கும்போது, கையிலுள்ள ஐந்து விரல்களில் கட்டைவிரல் பதி என்பதும், சுட்டுவிரல் பசுவென்றும், ஏனைய மூன்று விரல்களும் முப்பருப்புடைய பாசம் (மலம்) என்றும் கூறுவர். சின் முத்திரையில், கட்டை விரலும் சுட்டுவிரலும் வளைத்து ஒன்றுபட்டு நிற்க ஏனைய மூன்று விரல் களும் ஒன்றுபட்டு நெடியதாய் நிற்கும் இயல்பாகக் கையை விரித்தால் கட்டை விரல் தனித்து நிற்க ஏனைய நான்கும் ஒன்றுகூடி நேராய் நிற்கும். இதனை இறைவன் தனித்து நிற்க, உயிர் மும்மலத்தொடும் கூடி நிற்கும் இயல்பான நிலையினை உணர்த்தும் குறியாகக் கொள்ளலாம்.

கட்டை விரலும் சுட்டு விரலும் ஒன்று கூடுதற்கு இரண்டன் முயற்சியும் தேவைப்படும். இஃது ஆருயிர் ஆண்டவனை அடைவதற்கு இறையருள் முன்னின்று தவ வேண்டும் என்பதனை உணர்த்தும் குறியாகும். ஆலமர் செல்வன் காட்டி நிற்கும் சின் முத்திரையினைச் சைவ சித்தாந்த நெறி வழியே ஆருயிர் ஆண்டவனை அடையும் பாங்கினை உணர்த்தும் குறியீடாகக் (றீதீதுணுலியி) கொள்ள வேண்டும்.

இந்தக் குறியீட்டினை உளக்கொண்டு இத்திருமந்திர பாடலை நோக்கினால் இது சொல் வழியாகச் சைவ சித்தாந்தக் கோட்பாட்டினைச் சுருங்க உரைத்த அருமந்திரம் என்பது விளங்கும். முப்பொருள்  (பதி + பசு + பாசம்) இருபொருளாகி (பதி + பசு = பாசம்) இறுதியில் ஒருபொருளாய் (பதி + பசு = சிவசாயுச்சியம்) முடியுமாறு காட்டுவதே சைவ சித்தாந்தப் பெருநெறியாகும். இச் சைவ முப்பொருட் கருத்தினை இக் குறியீட்டுச் சொற்களைத் தவிர்த்து வேறுவாய்ப்பாட்டால் சேக்கிழார் சுவாமிகள்,

செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்

என்று இலக்கியப்படுத்திக் காட்டியுள்ளார்.

இவ்வமைப்புப் பிற சமயங்கட்கில்லாமல் சைவ நெறிக்கே சிறப்பாக உள்ளது என்பதனை, ‘இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக்கில்லை’ என்றும் கூறியுள்ளார். இதன்கட் செய்வினை பாசத்தையும், செய்வான் பசுவையும், பயன் கொடுப்பான் பதியினையும் சுட்டுவனவாகும்.

நால்நெறிச் சிறப்பு

மாந்தர் அனைவரும் ஒரே வித மனவுணர்வுயுடையராகார். இந்நிலையில் மக்கள் அனைவர்க்கும் வீடு பேறளிக்க அவாவும் சமயம் ஒரே நெறியினை- மார்க்கத்தினை காட்டுவதாக இருப்பின், அது அனைவர்க்கும் பொருந்தும் வழியாக அமையாமலும் போதல் கூடும். சைவ சித்தாந்தம் மக்கள் முத்தியயய்த முயல நான்கு நெறிகளை அமைத்துள்ளது. சரியை கிரியை யோகம் ஞானம் என்பன அந்நானெறிகளாகும். இந்நூல் நெறிகளில் முறைகளைக் கூர்ந்து நோக்கினால் இவை உடல் உள்ளம் ஆகிய இரண்டன் ஈடுபாட்டான் அமையுமாறு விளங்கும். மனிதன் உடலியற் கூறும் மனவியற் கூறும் ஒருங்கே அமைந்த கூட்டாகலின், அவனுக்கு உய்தி அளிக்க முற்படும் எந்த நெறியும் அவ்விரு கூறுகளையும் (Physiological and Psychological elemants)  தழுவியவனவாகவே அமைதல் வேண்டும். அவ்வகையில் உடலியற்கூறு மிக்கமையும் சரியை, வளர்ச்சியுற்ற உளவியற் கூறு மிக்கமையும் ஞானம் வரை செல்லும் நால் நெறியாக அவை அமைந்துள்ளன.

 சரியையிற் சரியை, சரியையிற் கிரியை முதலான பாகுபாடுகளால் நால் நெறியும் உடல் உளவியல் கூறுகளின் நுட்பமான செயல்பாடுகள் அமைந்த பல்வேறு வழிகளாக அமைந்து, பல்வேறு மனப்பாங்கும் உடற்கூறும் அமைந்த மக்கள் பலரும் தங்கட்குகந்த நெறி பேணிப் பயன்கொள்ள வாய்ப்பாகின்றன.
ஏணிப்படி போல (சோபானம்) அமைந்த இந்நெறிகள் மாந்தர்க்குத் தனித்த நிலையிலும், வளர்ந்து முழுமையுற்ற மேனிலையிலும் ஆன்மப் பயனளிக்க வல்லனவாகும். சரியையில் மட்டுமே நின்று பயனடையலாகும்.

அன்றிப் படிப்படியாக வளர்ந்து ஞானத்தாலும் பயனடைதல் கூடும். இத்தகு படிப்பயன் நல்கும் பாங்கறிந்து இந்த நால்நெறிச் சிறப்புரைக்க வந்த தாயுமானவர் இவற்றை அரும்பு, மலர், காய்கனிகட்கு உவமைப்படுத்திக் காட்டியுள்ளார்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பு மலர் காய்கனி போல் அன்றோ பராபரமே
(தாயுமானவர், பராபரக்கண்ணி, 157)

அரும்பு முதலிய ஒவ்வொன்றும் தனித்தனியே பயன்விளைக்கும் நெறியாகும். அரும்பு மலர் ஒரு பகுதியாகவும், காய்கனி ஒரு பகுதியாகவும் கருதக் கிடப்பது போலச் சரியையும் கிரியையும் ஒரு பகுதியனவாய் உடற்கூறு மிக்கனவாகவும், யோகமும் ஞானமும் மற்றொரு பகுதியனவாய் உளக்கூறு மிக்கனவாகவும் அமைந்துள்ளன. இவ்வாறு எந்நிலை மக்கட்கும் செந்நிலை நெறிகாட்டி அவர்கள் உய்தி பெறுவதற்கு வழி வகுப்பது சைவ சித்தாந்தமாகும்.

கட்டடக் கலை நுட்பங்கள் (Architectonics) அனைத்தும் அமைந்து  கவினுறத் திகழ்ந்து பயன்மிக நல்கும் அரியதோர் அரண்மனைப் போலத் தன் தத்துவ நுட்பத்தாலும், செயற்பாட்டு நெறியாலும் சிறந்து விளங்கும் ஒரு சமயமாகச் சைவ சித்தாந்தம்  விளங்குகின்றது. கிறித்துவ சமய ஞானியராய் அச்சமய ஊழியம் புரிவதனைத் தம் வாழ்க்கைத் தொண்டாய்க் கொண்டொழுகிய மறைதிரு போப்பையர், கெளடை (யூeஸ. ளீலிழdஷ்e) போன்ற மேனாட்டுச் சான்றோர்கள் சைவ சித்தாந்த நெறியினைச் சிறப்பித்துப் பாராட்டியதற்குத் தத்துவ நிலையில் அந்நெறியமைப்பின் சீர்மையே சிறந்த காரணமாகும்.

(இக் கட்டுரை ஆசிரியர், திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்கல் பாளையத்தில் 15.1.1923 இல் பிறந்தார். வித்துவான் தேர்வில் மாநில முதல்வராய தேறி ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றவர்; இவர் தமிழ்த்துறையில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து பூண்டி புட்பங் கல்லூரி தமிழ் முதுகலைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ‘இயற்கை நாட்டியம்’ முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்திற்குச் சில நூல்களையும் பதிப்பித்துத் தந்துள்ளார். இப்பொழுது திரு புட்பங்கல்லூரி, சென்னைத் தமிழ் வடமொழி பிற இந்திய மொழியின் ஆராய்ச்சி நிறுவனம் இவற்றில் மதிப்பியல் பேராசிரியராகவும் தமிழ்ப்பல்கலைக் கழகச் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

-தமிழவேள் உமா மகேசுவரனார் நூற்றாண்டு நினைவு கட்டுரைப் பூங்கா மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 1984) 

No comments:

Post a Comment