வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலை
வரலாறு (1848-2001)
பகுதி ஒன்று : 1848 -1879
நாவலர் காலத்தின் நிகழ்வுகள்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள், தமது பன்னிரண்டாம் வயசிலே ஆங்கிலம் படிப்பதற்காக, பார்சிவல் பாதிரியாரது ஆங்கிலப் பாடசாலையிலே சேர்க்கப்பட்டவர்கள். அன்று தொடக்கம் இருபத்தாறாம் வயசு வரை 14 வருட காலம் இப்பாடசாலையிலே முற்பகுதிக் காலத்தில் மாணவராகவும், பிற்பகுதிக் காலத்தில் தமிழ் ‡ ஆங்கில ஆசிரியராகவும் இருந்தவர்கள். இந்த இடத்திலும் அதன் சூழ்நிலைகளிலும் சாதக பாதக நிகழ்வுகள் பலவற்றைக் கண்டும், கேட்டும், தமது உண்மை நெறியிலே சிறிதேனும் தவறாது செயற்பட்டும் நன்கு அநுபவித்தவர்கள்.
இவர்களது அநுபவ நிலையில் உண்டான அபிலாசைகள் குறிக்கோள்களை, அவற்றின் நல்லெண்ணங்களை, இவர்களுக்கு மாணவரான வே. கனகரத்தினம் உபாத்தியாயர் அவர்கள் நல்லூர் - ஆறுமுகநாவலர் சரித்திரம் என்ற தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :
‘கிறிஸ்துமத அனுசாரிகளாகிய பாதிரிமாராலே தாபிக்கப்பட்ட வித்தியாசாலை களிலே கருவி நூல்களோடு அவர்கள் சமய நூல்கள் படிப்பிக்கப்படுதலையும், சைவ சமயிகளாலே பற்பல விடங்களிலும் தாபிக்கப்பட்டிருக்கும் வித்தியாசாலைகளிலே கருவி நூல்கள் மாத்திரம் படிப்பிக்கப்படுதலையும் அவர் கண்டார். காணவே, சைவ சமயப் பிள்ளைகளுக்குக் கருவி நூல்களோடு சமய நூல்களும் படிப்பிக்கப்பட்டால், அவர்கள் தம் மதத்தில் நிலைத்து நிற்றல் மாத்திரமின்றி பர மதங்களையும் கண்டித்ததற்குச் சத்தியுடையராயும் வருவார்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்டார். அறியவே, அவ்விரு திற நூல்களையும் படிப்பித்தற் பொருட்டு தாம் ஒரு வித்தியாசாலை தாபித்தல் வேண்டும் என்று... தம் கருத்திற் கொண்டார்’.
‘...தமிழ், இங்கிலிஷ் என்னும் இரு பாஷைகளையும் அதிக கவனத்துடன் கற்கும் காலத்திலே, இங்கிலிஷ் கற்பிக்கிறவர்கள் மிக இலகுவாகப் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்கு... ஏது அப்பாஷை நூல்கள் கத்திய ரூபமாயிருத்தல் என்றும், தமிழ் படிப்பிக்கின்றவர்கள் அவ்வாறு செய்யாமைக்கு ஏது, இப்பாஷை நூல்கள் பெரும்பாலும் பத்தியரூபமாயேயன்றிக் கத்தியரூபமாய் இல்லாமையே என்றும், கத்திய ரூபமாயுள்ள அப்புத்தகங்கள் தானும் சுத்தத் தமிழ் நடையன அல்லவென்றும் அறிந்து கொண்டார்’.
‘.... அநேகர் சற்சமயமாகிய சைவ சமயத்தினின்றும் கிறிஸ்து சமயத்திலே பிரவேசித்தற்குக் காரணம், சைவ சமயத்துண்மையை அறியாமையினால் என்று அறிந்தார்... ஆதலால் எங்கள் சமயத்துண்மையை அவர்களுக்குப் போதித்தலின் மிக்க புண்ணியம் பிறிதொன்றும் இல்லை என்றும், அந்நிய தேசத்தார் இத் தேசத்திலே வந்து தமது சமயத்தை நம்மவர்களுக்கும் போதித்து, அவர்களைத் தம் மதத்தவர்களாக்குகின்றார்களே, நம்முடைய சமயம் நம்மவர்களுக்குப் போதிக்கப் பட்டால் அவர்கள் பர மதப் பிரவேசம் செய்ய மாட்டார்களே என்றும் தெளிந்து சைவப் பிரசங்கம் செய்வதற்கு உறுதி கொண்டார்’.
ஆலமர வித்துக்குள் ஆலமரம்
நாவலர் அவர்கள் குறிப்பிடுகின்றதான வித்தியாசாலை தாபித்தல், தமிழ் வசன நடை ஆக்குதல், சைவ சமயப் பிரசங்கம் செய்தல் ‡ முதலான பயன் தரும் குறிக்கோள்கள் எல்லாம், ‘ஆலமர வித்துக்குள் ஆலமரம்’ போல சைவ வித்தியா சாலை மாணவர்களுக்குள்ளும் அவைகள் அடங்கி நிலைபெற்றுத் தோன்றி நின்று, அவர்களது பிற்காலத்திலும் வளர்ந்து விரிந்து பரவி, நற்பயன்களையே பெறுவார்கள் என்ற எண்ணத்தினால் நான், சைவத்தைப் பிரகாசிக்கின்ற ஒரு வித்தியாசாலையைத் தாபிக்க வேண்டியது மிகமிக அவசியம் என வலியுறுத்தினார் போலும்!
சைவப் பிரகாச வித்தியாசாலை தாபிதம்
அவர்கள், அவ்வாறு அவசியம் என வலியுறுத்தினாராயினும், அதற்குரிய மூலதனம், கட்டடம், தளபாடம் முதலான வளங்கள் அவர்களிடத்தில் இல்லாமை யினால், அச்செயலைக் கைவிட வேண்டிய அவலநிலைமையும் உண்டாக்கக் கூடும்; அப்படி அறிந்திருந்தும், கீலக வருடம் ஆவணி மாதம் 5 உ (21.08.1848) சுக்கிர வாரமும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியும் இரேவதி நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்திலே விருச்சிக லக்கனத்தில் வண்ணார் பண்ணை- வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எதிரரேயுள்ள வீட்டிலே, இந்தச் ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’யைத் தாபித்தார்கள். இங்ஙனம் தாபித்தமை, அவர்களது உறுதியான மனத்தூய்மையும் அதன் துணிவும் திருவருளோடு சேர்ந்திருந்த தன்னம்பிக்கையும் சுயதேச‡மத‡ பாஷாபிமானங் களில் நிறைவுற்ற உணர்வும் தருகின்ற நற்றுணையே யல்லாமல், வேறு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சை.பி.வி. சாலையின் இடமாற்றம்
நாவலர் அவர்கள் இவ்வித்தியாசாலையிலுள்ள சைவ சமய மாணவர்களுக்குக் கற்பித்தலிலும், சைவ சமயிகளுக்குப் பிரசங்கம் செய்தலிலும் தமது வாழ்நாள் முழுதையும் போக்கல் வேண்டும் என்ற பேராசையினாலே அடுத்த புரட்டாசி மாதத்தில் தம் உத்தியோகத்தைப் பரித்தியாகம் செய்து, தமது நிலைமையை மாற்றியது போல, இவர்களால் தாபிக்கப்பட்ட வித்தியாசாலையும், ஏழு மாதம் வரை அவ்விடத்தில் நடாத்திய பின், ‘ஏதோ ஒரு காரணத்தினால்’ வண்ணை வைத்தீசுவரன் கோயில் மடத்திலே இடமாற்றம் செய்யப்பட்டது.
இவ்வித்தியாசாலையின் ஆசிரியர் நிலைமை
முன்பு தாபிக்கப்பட்ட வித்தியாசாலையிலும், இவ்வித்தியாசாலையிலும் படிப்பித்தவர்கள், நாவலர் அவர்களும், அவர்களுக்குப் பழைய மாணவர்களுமே யாவார். இந்த ஆசிரியர்கள், நாவலருக்கு மாணவர்களாதலால், வேதனம் இல்லாமலே கற்பித்தவர்கள். ஆயினும் சில நாள்களுக்குப் பின், நாவலர் அவர்கள், இவ்வாசிரியர்களின் வாழ்க்கை நலன் கருதி (தங்கள் ‘வளம்’ இல்லாத காரணத்தி னால்) பிடியரிசி தண்டி, அதன் மூலம் பெற்ற பொருள் கொண்டு வேதனம் கொடுத்து வந்தார்கள். அதற்குப் பின், பிடியரிசி வரவு, தண்டற் கூலிக்குத் தானும் போதாமை கண்டு அதனையும் கைவிட்டமையால், அவ்வாசிரியர்களுக்குள் சிலர், வறுமை காரணமாக நீங்கிவிட, ஏனையோர் படிப்பித்து வந்தார்கள்.
சைவப் பிரகாச வித்தியாசாலையின் நிலையான கட்டடத் தாபிதம்
வண்ணை-வைத்தீசுவரன் கோவில் மடத்தில், இடமாற்றம் செய்திருந்த இவ்வித்தியாசாலையும் தற்காலிகமே. இது நிரந்தரமாய் நிலையானதாய் அமைய வேண்டியிருந்தது. அதற்குத் தேவையான தனம் மாத்திரமன்று, கட்டடத்தைக் கட்டுதற்குரிய ‘காணிநிலம்’ கூட, நாவலர் அவர்களிடத்தில் இல்லை. இவற்றின் நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டவரும், வண்ணார் பண்ணையில் உள்ள வர்த்தகர்களுள் அதி கெளரவம் உடையவருமாகிய திரு. அ.ஆறுமுகச் செட்டியார் அவர்கள், செளமிய வருடம் ஐப்பசி மாதத்தில் (... 10.1849) ஒரு நிலத்தைத் தரும சாதனம் செய்து வழங்கினார்கள். அந்த நிலத்திலே புண்ணியவான்கள் சிலரின் உதவியுடன் அவ்வித்தியா சாலையின் நிரந்தரமான கட்டடத்தைக் கட்டி முடித்து, அதிலேயே சாதாரண வருடம் தை மாதத்தில் (...1.1850) ஆரம்பித்து நடைபெற லாயிற்று.
சைவ வித்தியாசாலைக்குரிய சைவத் தமிழ் வசன நூல்களும் தமிழ்ச் சங்க நூல்களும்
சைவப்பிரகாச வித்தியாசாலை தாபிப்பதற்கு முந்திய பாடசாலைகளில் படிக்கும் புத்தகங்களில், எழுத்துப் பிழை சொற்பிழை வசனப் பிழைகளே பொதிந்தவை களாகக் காணப்பட்டன. இச்சைவப் பிரகாச வித்தியாசாலையிற் படிக்கும் மாணவர் களுக்குக் கருவிநூல் உணர்ச்சியும், சைவ சமய நூல் உணர்ச்சியும் ஊட்டத்தக்க நல்ல புத்தகங்கள் சிலவேனும் காண்பதற்கும் அரியனவாயின. இக்காரணங் களினால் இம்மாணவர்களுக்கு ஏற்றனவும் சிறந்தனவுமான புதிய நூல்களை ஆக்கியும், முந்திய தமிழ்ச்சங்கம் ஆராய்ந்து வழங்கிய அருந்தமிழ் ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்தும் அவற்றை அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் நாவலர் அவர்களுக்கு உண்டாயிற்று. அதனால் ‘வித்தியாநுபாலன இயந்திர சாலை’ ஒன்றைத் தாபித்து, ஆங்கில பாஷையில் இருக்கும் பாலபாடங்கள் போலத் தமிழ்ப் பாஷையிலும் பாலபாடங்கள் செய்தால், அவைகள் சுயசமயமாகிய சைவ சமயத்தையும் நற்றமிழ் மொழியையும் அனுஷ்டிக்கும் தமிழ் மாணவர்க்கும், பெற்றோருக்கும், பிறருக்கும் மிகப்பிரயோசனம் உள்ளனவாய் இருக்குமென நினைத்து, முதலாம் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், மூன்றாம் பாலபாடம், முதற் சைவ வினாவிடை, இரண்டாம் சைவ வினாவிடை, பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் இலக்கணச் சுருக்கம் முதலானவற்றை ஆக்கியும், திருக்குறள் தொல்காப்பியம் முதலானவற்றைப் பரிசோதித்தும் அச்சிட்டு வெளியிட்டார்கள்.
இவ்வித்தியாசாலைக்கு - ஆரம்ப முதலீடும், வர்த்தக சாலையும், ஆசிரியர் களுக்குரிய வேதனமும்
நாவலர் அவர்கள், ‘தமது வித்தியாசலை எந்நாறும் நிலைபெறும் பொருட்டு, ‘முதல்’ சேர்க்க வேண்டுமென்று நினைந்து, இதற்குச் சில வருங்களுக்கு முன்னே நிருபங்கள் எழுதிப் பற்பலவிடங்களுக்கும் அனுப்பியிருந்தார்கள். கொழும்பிலுள்ள சிரேட்ட பிரபுக்களுள் ஒருவராகிய திரு. இ. நன்னித்தம்பி முதலியார் அவர்கள் நள வரும் பங்குனி மாதம் (...........) 400 உ ரூபா அனுப்பியிருந்தார்கள். அத்தொகையையே முதலாக வைத்து பிங்கள வருசம் மாசி மாதம் 14உ (பிப்ரவரி 1858) அவ்வித்தியசாலையிலே ஒரு சபை கூட்டி, அதன் வரலாற்றைப் பிரசங்கித்தார்கள். அப்போது வந்திருந்த பிரபுக்கள் தங்கள் தங்களால் இயன்றளவு உபகரித்தார்கள்’.
இவர்களின் உதவிகளால் வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையின் பொருட்டு ஒரு வர்த்தக சாலையும் விலைக்கு வாங்கப்பட்டது. மேலும், அநேக வருங்களாக வேதனம் பெறாது படிப்பித்து வந்த உபாத்தியாயர்கள், கலாயுத்தி வரும் சித்திரை மாதம் முதலாக, அப்பொருளின் உதவி கொண்டு வேதனம் பெற்றுப் படிப்பித்து வந்தார்கள்.
நாவலர் காலத்தில் நியமிக்கப் பெற்ற வண்-சை.பி.வி.சாலை அதிபர்கள்
நாவலர் அவர்கள் இருக்கும் காலத்தில் வண்ணை- சைவப் பிரகாச வித்தியாசாலைக்கு முதல் உபாத்தியாயராய் (அதிபராய்) இருந்தவர்கள் - இருவர்.
இவர்களுள் ஒருவர் திரு. மு.தில்லைநாத பிள்ளை. இவர் நியமிக்கப் பெற்ற காலம்: 1858.
இவர், பிரபவ வருசம் ஆனி மாதத்தில் தேகவியோகம் அடைந்த பின் நியமிக்கப் பெற்ற மற்றொருவர் திரு. மா.வைத்தியலிங்க பிள்ளை. இவர் நியமிக்கப் பெற்ற காலம் : 1866-67.
வண்‡சை.பி.வி. சாலைக்குத் தொடர்பான வேறு வித்தியாசாலைகள்
இந்தச் சைவப் பிரகாச வித்தியாசாலைக்குத் தொடர்பாய் இருக்கும் வித்தியா சாலைகள் நான்கு. அவை : சிதம்பர- சைவப்பிரகாச வித்தியாசாலை, கோப்பாய் - வித்யாசாலை, புலோலி - வித்தியாசாலை, வண்ணார் பண்ணை - சைவ ஆங்கில வித்யாசாலை என்பன.
இவற்றுள், சிதம்பர சைவப் பிரகாச வித்யாசாலை, சிதம்பரத்திலே உள்ள மேலை வீதியில் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்திலே, இரத்தாட்சி வரும் ஆவணி மாதம் 6 ஆம் நாள் கட்டடம் கட்ட ஆரம்பித்து, அடுத்த புரட்டாதி மாதத்தில் நிறைவேற்றி, ஐப்பசி மாதம் 28 ஆம் நாள் தாபிக்கப்பட்டது.
கோப்பாயிலே ஒரு வித்தியாசாலையை, வண் - சைவப்பிரகாச வித்தியாசாலை யின் பொருள் கொண்டும், புலோலியிலே மற்றொரு வித்தியாசாலையை அவ்வூர் மக்களின் பொருள் கொண்டும், ஆங்கீரச வருடத்தில் தாபிக்கப்பட்டன.
வண்ணார் பண்ணை - சைவ ஆங்கில வித்தியாசாலையை, இவ்வண்ணார் பண்ணையில் உள்ள மக்களின் வேண்டுகோட்படி, பிரசோற்பத்தி வரும் தை மாதம் (1872) அவ்வூரிலேயே தாபிக்கப்பட்டது. இது, பிற்காலத்தில் கற்பித்தற்குரிய வேதன நிதியம் குறைந்தமையினாலும் அக்கால அரசினரது உதவி செய்யாமை யாலும் அக்கால அரசினரது உதவி செய்யாமையாலும் ஸ்ரீமுக வருடத்தில் கைவிடப் பட்டது.
No comments:
Post a Comment