பகுதி - 2
(1879-2001)
நாவலரது பிற்கால நிகழ்வுகள்
இராமநாதன் -பிறிற்றோ
இறுதிப் பேச்சு
வண்ணார் பண்ணை சைவப் பிரகாச வித்தியாலயத்தில் 1879 வைகாசி மூல நட்சத்திரத்தன்று வண்ணார் பண்ணைச் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் நாவலர் அவர்களின் இறுதிப் பேச்சு இடம்பெற்றது. அங்கே இருந்த மக்களை நோக்கி, நான் உங்களிடத்திலே கைம்மாறு பெறுதலைச் சிறிது மெண்ணாது நம் சமயத்தவர் களோடும் பெரும்பகையை எடுத்து, முப்பத்திரண்டு வரு காலமாக உங்களுக்கு சைவ சமயத்துண்மையைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயங் குன்றிப்போமென்று பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் நான் உயிரோ டிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். இன்றும் என்னைப் போலவே படித்தவர்களும் சன்மார்க்கர்களுமாய் அனேகர் வருவார்கள். ஆனால் உங்களுடைய வைவைக் கேட்டுக் கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போலே ஒருவர் வரார்.
1879 கார்த்திகை (பிரமாதி வரும்) மாதம் மக நக்ஷத்திரமும் சப்தமி திதியும் பொருந்த வந்த புண்ணியவேளையிலே ஸ்ரீ நடராஜபெருமானுடைய குஞ்சிதபாத நிழலை அடைந்தார்.
வித்தியாசாலையை நிர்வகித்தவர்கள்
1858 இல் திரு. மு. தில்லைநாத பிள்ளை அவர்களும் 1864 இல் வித்துவ சிரோமணி ந.ச.பொன்னம்பல பிள்ளை அவர்களும் 1866 இல் திரு. மா. வைத்தியலிங்கபிள்ளை அவர்களும் வித்தியாசாலைப் பொறுப்பை மேற்கொண்டு நடத்தியிருக்கின்றார்கள் என்று தெரிய வருகிறது. குறித்த வித்தியாலயத்தின் கல்வித் தொண்டில் குப்பிளான் செந்திநாதையர் அவர்கள் நாவலர் பெருமான் காலத்திலேயே அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
முகாமையாளர்கள்
நாவலருக்குப் பின் சீட பரம்பரையினரான திரு. ந.க. சதாசிவப் பிள்ளை தர்ம பரிபாலகராகக் கடமையாற்றினார். அவருக்குப் பின் தம்பு கைலாசப் பிள்ளை அவர்கள் கடமையாற்றினார்1.( 1935 இல் மனேஜர் த. கைலாச பிள்ளை அவர்கள் தமது உரித்தை மருகரான வேலணையூர் மு. சோமசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு வழங்கினார். அவருக்குப் பின்னர் அவரது மனைவியார் (கைலாசப் பிள்ளை அவர்களது மகள்) திருமதி. செல்வம் சோமசுந்தரம் நியமனம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு திரு.வி.முத்துக்குமாரு அவர்கள் மனேஜராக நியமனம் பெற்றார்.
காவியப் பாடசாலை
ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்களது பரிபாலன காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் பண்டித பரீட்சைகள் நடத்தப்பட்டன. கற்றறிந்த மாணவர்களுக்குப் பாரதி பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தார்கள்.
இது ஒருபுறம் இருக்க நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் காவிய வகுப்புகள் ஆரம்பமாயின. அவ்வகுப்பில் சேர்ந்து படித்தவர்களுக்கு உண்டியும் உறையுளும் இலவசமாக வழங்கப்பட்டன. இலங்கைப் பல்கலைக் கழகத்தினரால் இலக்கியக் கலாநிதி என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பெற்ற பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்தினால் இலக்கிய கலாநிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களும் நாவலர் காவிய பாடசாலையில் படித்தவர்களே. புலவர் சிகாமணி ஸ்ரீமத் அ. குமாரசாமிப் புலவர் அவர்கள் குறித்த வகுப்பின் பொறுப்பாசிரியராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்காலத்தில் தலைமை ஆசிரியர்கள்
ஆசிரிய உலகில் புகழ்பூத்த பலர் இப்பாடசாலையில் காலத்துக்குக் காலம் தலைமை ஆசிரியராகளாகப் பணிபுரிந்தார்கள். பூமி சாத்திர நூல்களை அந்தக் காலத்தில் மாணவர்களது நலன் கருதி எழுதி வெளியிட்டவரான திரு. கா. இளைய தம்பி அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்து பணி செய்தார். அவரை அடுத்துத் தலைமை ஆசிரியராக இருந்தவர் திரு. ம. வைத்தியலிங்கம் அவர்கள்.
நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் மிக நீண்டகாலம் ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் சேவையாற்றிய பெருமை வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்களுக்கே உரியது. சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபராக ஒரு காலத்தில் பணியாற்றியவர் மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை புலவர் அவர்கள். அவர்களது முயற்சியாலும் தூண்டுதலாலும் சிதம்பரத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர் வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்கள். இலக்கணத்துறையில் மேதையான வித்துவானவர்கள் 1928 இல் இருந்து 1960 வரை பணியாற்றினார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் வித்துவானது சேவை நீடித்தது. பாடசாலை மாணவர்கள் மாத்திரமின்றி யாழ்ப் பாணத்தில் கல்வியில் ஆர்வமுடைய பலர் வித்துவானவர்களுக்கு மாணவர்களா யிருந்தார்கள். வித்துவானவர்கள் ஓய்வுபெற்ற பொழுது கல்விமான்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்துவான் அவர்களது சேவையை மிகவும் பாராட்டி விழா எடுத்து மகிழ்ந்தனர்.
பாடசாலைகள் சுவீகரிப்பு
பாடசாலைகளை அரசாங்கம் கையேற்கிற ஒரு காலம் பிறந்தது. உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளைச் சேர்ந்த முகாமையாளர்கள், கல்விமான்கள் எதிர்த்தபொழுதிலும் பாடசாலைகளைச் சுவீகரிக்கும் முயற்சியில் விடாப்பிடியாக இருந்தது அரசு. நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையையும் அரசு கையேற்க இருந்த சமயத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாவலர் நோக்கத்துக்கு அமைவாக நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை சுதந்திரமாக இயங்க வேண்டுமென்ற குரல் பரவலாக எழுப்பப்பட்டது. எனினும் 1960 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாந் திகதி அரசாங்கம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையைக் கையேற்றது.
இப்படியானதொரு சூழ்நிலையில் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பதவியை ஏற்றார் பண்டிதர் வித்துவான் சைவப் புலவர் இ. திருநாவுக்கரசு அவர்கள்.
நாவலர் தர்மகர்த்தாசபை
அரசாங்கம் பாடசாலைகளைச் சுவீகரித்த சந்தர்ப்பத்தில், சில பாடசாலைகளின் சொத்துக்களைப் பேணும் வகையில் தர்மகர்த்தா சபைகளை நிறுவியது. நாவலர் பெருமான் அவர்களது தர்மத்தைப் பேணும் நோக்கில் நாவலர் தர்மகர்த்தா சபையும் ஏற்படுத்தப்பட்டது.
தர்மகர்த்தா சபைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு கல்விப் பணிப்பாளர் களுக்குக்குரியது. பாடசாலை அதிபர்கள் செயலாளராகவும் பொருளாளராகவும் பணிபுரிய வேண்டும் என்று அரசு விதி செய்தது. பாடசாலைத் தாபகர் நோக்கத்துக்கு அமைவாக அரங்கத்தவர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.
நாவலர் தர்மகர்த்தா சபையின் தலைவராக உதவி வித்தியாதிபதி திரு.சி.உ.சோம சேகரம் அவர்களும் காரியதரிசியாகத் தலைமையாசிரியர் திரு. இ. திருநாவுக்கரசு அவர்களும், நிர்வாகசபை உறுப்பினர்களாக சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்களவர்களும் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் திரு. ச. பொன்னு சுவாமி அவர்களும் நியமனமானார்கள்.
குறித்த நாவலர் தர்மகர்த்தா சபை செவ்வனே இயங்கி வருகிறது. தற்போது குறித்த சபையின் தலைவராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. செல்வ ராணி மகாலிங்கம் அவர்களும், செயலாளராக நாவலர் மகா வித்தியாலய அதிபர் திரு.ந.சிவராஜா அவர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியமணி அ.பஞ்சாட் சரம் அவர்கள், சைவப் புலவர் வ. கந்தசாமி அவர்கள் ஆகிய இருவரும் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். நாவலர் தர்மகர்த்தா சபை சார்பில் நாவலர் நோக்கங்களுக்கு அமைவாக தமிழ் வகுப்புகள், சமஸ்கிருத வகுப்புகள், திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பண்டித வித்வான் திரு. இ. திருநாவுக்கரசு அவர்களுக்குப் பின்னர் பண்டிதர் க. இராசையா, திரு. த.வேலுப்பிள்ளை, வித்துவான் க.ந.இரத்தினவேல், வித்துவான் இ.வைத்தியலிங்கம், திரு.வ.சிவஞான சுப்பிரமணியம், திரு. ஐ.துரைராசா ஆகியோர் முறையே அதிபர்களாக இருந்து பணிபுரிந்தார்கள். நாவலர் நோக்கங்களுக்கு அமைவாகப் பாடசாலையை நடத்தி வந்த பெருமை இவர்கள் அனைவருக்கும் உண்டு. நாவலர் வித்தியாசாலையில் அதிபராக இருந்து எதிர்பாராத விதமாக அமரத்துவம் அடைந்த திரு. ஐ.துரைராசா அவர்கள் பாடசாலை வளர்ச்சி கருதி நாவலர் தர்மகர்த்தாசபை யூடாக எடுத்த முயற்சிகள் எண்ணில்லாதவை. மேற்படி பாடசாலையின் நூற்றைம்பதாவது ஆண்டு பூர்த்தியை மிகவும் விமர்சையாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் விழா சம்பந்தமான முயற்சிகளில் உன்னிப்பாக ஈடுபட்டார்.
நாவலர் பாடசாலையின் பழைய மாணவரும், பிரதி அதிபராகப் பணி புரிந்தவருமான திரு. ந. சிவராஜா அவர்கள் தற்போது அதிபராகப் பணிபுரிகின்றார். நாவலர் பெருமான் நோக்கங்கள் நிறைவுபெற முன்னைய அதிபர்கள் எவ்வாறு சேவையாற்றினார்களோ அவர்களது கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு பணியாற்றி வருகின்றார் திரு. ந. சிவராஜா அதிபர் அவர்கள்.
விசேட வகுப்பு
நாவலர் பாடசாலைக்கு மிகவும் அண்மையில் வாழ்ந்தவர் வியாகரண சிரோமணி தி.கி. சீதாராம சாஸ்திரிகள் அவர்கள். கல்விமான்கள் சாஸ்திரிகள் அவர்களைச் சமஸ்கிருதக் கடல் என்று போற்றுவார்கள். பேரறிஞரான சாஸ்திரி களும் கோப்பாய் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்களும் நாவலர் பாடசாலையில் சமஸ்கிருத வகுப்புகளை நடாத்தி வந்தனர். அவர்களிடம் பாடங் கேட்டவர்கள் பலர் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தார்கள் என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. நாவலர் காவியப் பாடசாலையில் சமஸ்கிருதக் கல்வியை பெற்ற அந்தணச் சிறார்கள் சைவக் குருக்கள்மாராக இங்கு விளங்குகின்றார்கள்.
திருமுறை வகுப்பு
சங்கீதபூணம் பே. சந்திரசேகரம், சங்கீதபூணம் உடுவில் ந. சண்முகரத்தினம் (இசைப் புலவர்), சங்கீதத்துறையில் விற்பன்னர்களாக விளங்கிய திருவாளர்கள் எஸ். நமசிவாயம், திரு. க. நடராசா, எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இசை வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தனர். பரதநாட்டியக் கலை வளர்ச்சிக்கு திரு. சி. எஸ். சரவணமுத்து அவர்களும் பக்கவாத்தியக் கலை வளர்ச்சிக்கு மிருதங்க வித்துவான் களான எம்.என். செல்லத்துரை, என். தங்கம் வயலின், எஸ்.வைத்தீசுவர ஐயர், எஸ். சோமாஸ் கந்தா, ஜீ.சண்முகானந்தம் முதலானவர்களும் பேராதரவு நல்கினார்கள்.
தமிழ் வகுப்பு
1953 ஆம் ஆண்டு வித்துவான் ந. சுப்பையா பிள்ளை அவர்கள் தலைமையில் ஆரம்பமான தமிழ் வகுப்பில் வித்துவான் க. வேந்தனார், வித்துவான் வ.பொன்னையா, பண்டிதர் வ.மு.இரத்தினசுவர ஐயர், பண்டிதர் சோ. இளமுருகனார், வித்துவான் க. கணேசன், வித்துவான் க. கார்த்திகேசு ய.பு., , வித்துவான் லு.லு. நடராஜா ஆகியோர்கள் ஆசிரியர்களாக அமர்ந்து கற்பித்தார்கள். சைவ சித்தாந்த அறிஞர் தி.சி.நாகையா ய.பு. சைவ சித்தாந்த வகுப்பினை நடாத்தினார். பண்டித, பால பண்டித, பிரவேச பண்டித பரீட்சைகளுக்கு இங்கு கற்ற மாணவர்கள் தோற்றிச் சிறப்பாகச் சித்தியடைந்தார்கள்.
1961 இல் பண்டித வித்துவான் இ. திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. பண்டிதர் க. சரவணமுத்து, வித்துவான் ந. சுப்பையா பிள்ளை, புலவர் எஸ். கனகரத்தினம், வித்துவான் க. கணேசன், பிரம்மஸ்ரீ வை . ஆத்மநாத சர்மா, சைவப் புலவர் இ. செல்லத்துரை, சைவப் புலவர் வ. கந்தசாமி முதலானவர்கள் ஆசிரியர்களாக அமர்ந்து கற்பித்தார்கள்.
1983 முதல் பண்டித வித்துவான் இ. திருநாவுக்கரசு, வித்துவான் க. சொக்க லிங்கம் (சொக்கன்), பண்டிதர் ச. பொன்னுதுரை, கலாநிதி பண்டிதர் மு.கந்தையா, திருமதி. மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம், சைவப் புலவர் க.சி. குலரத்தினம், சைவப் புலவர் வ. கந்தசாமி என்பவர்கள் குறித்த தமிழ் வகுப்புகளில் கற்பித்து வந்தார்கள்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இவ்வகுப்புகளைத் தொடர்ந்து நடாத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. எனினும் திருமுறை வகுப்பு, தமிழ் வகுப்பு, சமஸ்கிருத வகுப்புகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2001 விஜயதசமி முதல் தர்மகர்த்தா சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வகுப்புகளில் சமஸ்கிருத ஆசிரியராக பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் ய.பு. க்ஷிலிஐவி, பண்ணிசை ஆசிரியராக தேவார இசைமணி யூ. திருஞானசம்பந்தன், தமிழ்ப்பாட ஆசிரியர்களாக சைவப்புலவர் சு.செல்லத்துறை, சைவப் புலவர் வ. கந்தசாமி ஆகியோர் கடமையாற்றுகின்றனர். மேலும் வகுப்புகள் விருத்தியடையும் காலத்து வேறும் சில அறிஞர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க தேர்வுகளுக்கமைய பால பண்டித வகுப்புகளும் நடைபெறுகின்றன. குறித்த வகுப்புகள் அபிவிருத்தியடைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம் பெறும்.
முக்கிய நிகழ்வுகள்
1. நாவலர் நூற்றாண்டு விழாவினையயாட்டி திரு. வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய நாவலர் சரித்திரம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையின ரால் மறுபிரசுரமாக நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் வெளியிடப்பட்டது 1968.
2. நால்வர் குருபூசை, நாவலர் குருபூசை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
3. இலங்கைப்பல்கலைக் கழகம், நாவலர் காவிய பாடசாலையின் மூத்த பழைய மாணவரான பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களுக்கு இலக்கிய கலாநிதி என்ற பட்டத்தினைச் சூட்டி கெளரவித்தது. அதனையயாட்டிப் பண்டிதமணி அவர்களது நினைவாக சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமதை அப்பொழுதிருந்த கல்விப் பணிப்பாளர் (1986 இல்) திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
4. பாடசாலையில் அமைந்துள்ள நால்வர் கோயில் புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறத் தர்மகர்த்தாசபை உரிய நடவடிக்கைகளை எடுத்தது. கும்பாபிஷேகம் 03.04.1998 இல் நடைபெற்றது.
5. நாவலர் பெருமானுடைய சிலையைப் பாடசாலை வளவினுள் அமைப்பதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாவலர் தர்மகர்த்தா சபை எடுத்தது.
6. சேதம் அடைந்திருந்த பாடசாலை முகப்பு முன்போலப் புனரமைப்புச் செய்யப் பட்டுள்ளது.
நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட சைவத்தமிழ்ப் பாடசாலையாகும்.
வடமாநில உதவி வித்தியாதிபதியாகவும், நாவலர் தர்மகர்த்தா சபையின் தலைவரா கவும் சேவையாற்றிய திரு. ச. தணிகாசலம் அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின் றார் (1964):
‘ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஈழத் திரு நாட்டிலே அவதரித்தாராயினும் அவர் சைவத் தமிழுலகம் முழுவதும் போற்றும் ஐந்தாம் குரவர் என்பது உண்மையேயாம். அப்பெருமான் சைவத் தமிழுலகம், புறச்சமய இருளின் நீங்கி விழிப்படைந்து உய்தியடையும் பொருட்டு முதன்முதலாக நிலைநாட்டிய இந்தக் கல்விக் கழகம் சைவத் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வருகின்றது’.
(நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை வெளியீடு, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்).
இனி வருங்காலத்தில் இது இன்னும் பல துறைகளிலும் வளர்ந்து சிறந்து விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் திருவருள் பலிப்பாராக.
பெரியவர்களது ஆசியின் பிரகாரம் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை 1967 முதல் நாவலர் மகா வித்தியலயமாகத் தரமுயர்ந்து நிற்கின்றது.
ஆக்கம் : சைவப் புலவர் இ. செல்லத்துரை, ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்
சி. பிறிற்றோ அவர்களின் புகைப்படம் கிடைக்குமா?
ReplyDelete