திருமயிலை திரிபந்தாதி
இராமையர்
முகவுரை :உ.வே.சாமிநாத அய்யர்
கணபதி துணை
முகவுரை
தேவாரம்
திருநாவுக்கரசு நாயனார்
திருச்சிற்றம்பலம்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சள் மாமயி லாடு துறையுறை
அஞ்ச லாளுமை பங்க னருளிலே.
கவிஞர்கள் தாம் பிறந்த இடங்களிலும், பழகிய வேறிடங்களிலும் உள்ள தெய்வங்களையும், தம்மை ஆதரித்தோர்களையும் பாராட்டி முறையே பக்தியாலும் செய்ந்நன்றி யறிவாலும் தங்கள் உள்ளக் கருத்தை அமைத்துப் பிரபந்தங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றை இயற்றுதல் இயல்பு.
அவற்றால் அவர்களுடைய மனநிலைகளும் கொள்கைகளும் சரித்திரங்களும் கால இயற்கையும் பல நீதிகளும் புலப்படும். பெருங்காப்பியங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைப் பிரபந்தங்களால் எளிதில் அறிந்து கொள்ளலாமென்று அறிஞர் கூறுவர். பழைய காலத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பிரபந்த வகைகளும் இன்றியமையாத பாடங்களாகக் கற்பிக்கப் பெற்று வந்தன. அம்முறையால் நாளடைவில் உண்டான பயன் மிக அதிகம்.
அத்தகைய பிரபந்தங்கள் தமிழில் 96 வகைப்படும். அவற்றுள் ஒவ்வொரு வகைகயிலும் அவ்வக் காலங்களுக்கேற்ப பலராற் செய்யப்பட்ட நூல்கள் பல. அந்தாதி யயன்பது அப்பிரபந்த வகைகளுள் ஒன்று. அது முதற் செய்யுளின் ஈற்றடியிலுள்ள இறுதிச் சீர் முதலியவற்றை அடுத்த செய்யுளின் ஆதியாகக் கொண்டு மண்டலித்து வருவது. அது வெண்பாக்களாலேனும் விருத்தங்களா லேனும் கட்டளைக் கலித்துறைகளாலேனும் நூறு செய்யுட்களால் இயற்றப்படும் ; இந்த அளவிற் குறைந்து வருவனவும் உண்டு. கலம்பகம் முதலியனவும் அந்தாதி யாகச் செய்யப்படுமேனும் அந்தாதியாக வருதலொன்றையே சிறப்பிலக்கணமாகக் கொண்டமையால் அஃது அப்பெயர் பெற்றது. மனப்பாடஞ் செய்வதற்கு அனுகூல மாக இருத்ததற்கும் அப்பிரபந்தம் ஏற்பட்டிருக்கலாமென்று தோற்றுகிறது. நிற்க.
திருமயிலை திரிபந்தாதி யயன்னும் இந்நூல் நூறு கட்டளைக் கலித்துறை களாலாகியது. சொல்லணியாகிய திரிபு இதனுள் அமையப் பெற்றிருத்தலின் இஃது இப்பெயர் பெற்றது. ஒவ்வோரடியின் முதலெழுத்தொழிந்த எழுத்துக்கள் சிலவும் பலவும் ஒத்துப் பொருள் வேறுபட்டு வருவது திரிபாகும். திரிபு திருகலென்றும் வழங்கும்.
இதனை இயற்றியவர் இராமையரென்பவர் ; இவர் அந்தண குலதிலகர். இவருடைய ஊர் மாயூரம். இவர் தமிழிலக்கணங்கள் ஐந்தையும் கற்றுத் தேர்ந்தவர். இவை, ‘கயிலையயான் றீசன்’ என்னும் இந்நூற் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். இவர் இயற்றிய வேறுநூல் திருநாகைக காரோணத்தைச் சேர்ந்த நாகூரின் தலபுராணம். அஃது இவருடைய இளமைப் பிராயத்தில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்று அதன் நடையால் தோற்றுகின்றது. அதனாற் சில வழக்கங்களும் ஆலய வழிபாட்டு முறையும் விழாக்களின் நிகழ்ச்சி முறையும் பிற அரிய வியங்களும் விளங்கும்.
குலோத்துங்க சோழனுலாவின் உரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் சேறாடி யயன்பது (விருதாவளி - அரசர் முதலியோர் பெறும் பட்ட வரிசை) விருதாவளியைச் சேர்ந்ததென்று அந்நூலிலுள்ள பிரயோகத்தால் விளங்கிற்று.
இதன் ஆசிரியர் சிவபக்தி மிக்கவரென்பதும் செய்யுட்களை வருத்தமின்றிப் பாடும் இயல்பினரென்பதும் இயற்கை வளத்தை அறிந்து அனுபவித்தவரென்பதும் இவ்வந்தாதியால் விளங்குகின்றன.
மயிலையயன்பது சோழநாட்டின்கண், காவிரிக்குத் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய ஒரு சிவஸ்தலம் ; மாயூரமென்று இப்பொழுது வழங்கப்பெறும். மயிலை யயன்னும் பெயர் இத்தலத்தின் மற்றொரு பெயராகிய மயிலாடுதுறை யயன்பதன் மரூஉவாகும்.
தொண்டை நாட்டிலுள்ள மியலாப்பூரென்னும் சிவஸ்தலத்திற்கும் மயிலை யயன்னும் பெயருண்மையின், அது வடமயிலை யயன்றும், இது தென் மயிலை யயன்றும் வழங்கும். (இந் நூல், 8,37,70,86,88 ஆம் செய்யுட்களைப் பார்க்க). முருகக் கடவுளின் தலமாகிய மயிலாசலத்திற்கும் மயிலையயன்னும் பெயருண்டு.
இந்த மாயூரம் நாவலந்தீவில் மிகப் புகழ் பெற்றதாதலின் இதன் விசேடங் களைச் சுருக்கமாக இங்கே எழுதலானேன்.
ஸ்காந்தம் முதலிய மகா புராணங்களிலும், மகேதிகாசமாகிய சிவரகஸ்யத்தி லும், துலாகாவேரி மாகாத்மியத்திலும், ஸ்ரீசிதம்பர புராணம் முதலிய தல புராணங்கள் பலவற்றிலும் இத்தலம் பலபடச் சிறப்பித்துப் பாராட்டப் பெற்றுள்ளது. வடமொழியில் ஸ்ரீமாயூர புராணம் ஸ்ரீரிப தீர்த்த மாகாத்மியம் முதலிய நான்கு புராணங்களும், அவற்றின் மொழி பெயர்ப்பாகப் பொன் விளைந்த களத்தூர் ஆதியப்ப நாவலரென்பவர் சற்றேறக்குறைய 350 வருடங்களுக்கு முன்பு இயற்றிய புராண மொன்றும், என்னுடைய ஆசிரியரும் திருவாடுதுறை யாதீனத்து மகாவித்துவானுமாகிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் 60 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்ட புராணமொன்றும், இந்த அந்தாதியையன்றி ஸ்ரீ அபயாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களும், தென்மொழி வடமொழிகளிற் சிறந்த ஸங்கீத வித்துவான்களால் இயற்றப்பட்ட பல கீர்த்தனங் களும், பல ஸ்தோத்திரங்களும், தனிப்பாடல்களும் இத்தலத்திற்கு அமைந்திருக் கின்றன.
பிரமதேவர் பூசித்தமையின் பிரமலிங்கமெனவும், தேவர் முதலியோர் எண்ணியவற்றை வரையாதருளிச் செய்தமையின் ஸ்ரீவதானீசுவரர் அல்லது வள்ளலாரெனவும், தட்சன் புத்திரியாக அவதரித்தமை பற்றி வந்த திருநாமமாகிய தாட்சாயணி யயன்பதை அவன் பாலுள்ள வெறுப்பினால் நீக்கிக கொள்ள நினைத்து மயில் வடிவம் பெற்றுப் பூசித்து வழிபட்ட அம்பிகைக்கு ஆண் மயிலாக வும் ஆடியருளிக் காட்சியளித்துப் பின்பு தாண்டவமாடி அனுக்கிரகம் செய்தமையின் கெளரீ மாயூர நாதர், கெளரீ தாண்ட வேசுவரர் அல்லது மாயூரநாதர் எனவும் ஸ்வாமியின் திருநாமங்கள் இங்கே வழங்கும். இன்னும் வெவ்வேறு காரணங் களால் வந்த விருத்தர் (கிழவர்) முதலிய பல பெயர்களுமுண்டு.
மிகவும் அச்சமுற்றுத் தன்னைச் சரணடைந்த ஒரு மயிலுக்கு அபயமளித்துப் பாதுகாத்தமையின், அபயப் பிரதாம்பிகை, அபயாம்பிகை, அஞ்சல்நாயகி, அஞ்சலை யயன்னும் திருநாமங்கள் அம்பிகைக்கு இங்கே வழங்கலாயின.
இந்த ஸ்தல விருட்சம் மா.
இத்தலத்தின் திருநாமங்கள் : பிரமபுரம், பிரமவனம், கெளரீ மாயூரம், மாயூரம், மயிலாடுதுறை, மயிலை, சூதவனம் முதலியன. துறையயன்பது தீர்த்த விசேட முள்ள இடத்தைப் புலப்படுத்தும் ஒரு பெயர்.
தீர்த்தங்கள் : அகஸ்திய தீர்த்தம், அநவித்யாஸரஸ், விருப தீர்த்தம், கணேச தீர்த்தம், காசியப தீர்த்தம், இந்திரன் முதலிய திக்பாலகர் தீர்த்தங்கள், பாபநாச தீர்த்தம், பிரமதீர்த்தம் முதலிய 86 தீர்த்தங்களுள்ளன.
வருந்தோறும் ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு தினத்தும் ஸ்ரீ மாயூரநாதர் ஸ்ரீ அபயாம்பிகையுடன் காவேரிக்கு எழுந்தருளிக் காலையில் விருப தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளும் மகிமை வாய்ந்த ஸ்தலமாதலின், ஐப்பசி மாதம் முப்பது தினங்களிலும் ஸ்ரீ காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களிலிருந்து வந்து ஸ்நானஞ் செய்துவிட்டுச் செல்லும் லட்சக்கணக் கான பக்த ஜனங்களின் தொகுதி யாவருடைய உள்ளத்தையும் கனியச் செய்யும். அக்காட்சி பக்தியில்லாதவர் களுக்குப் பக்தியை யுண்டு பண்ணும்; தெய்வமில்லை யயன்பவர்களுக்கும் புநர்ஜன்ம மில்லை யயன்பவர்களுக்கும் அவை உண்டென்னுங் கருத்தைப் பிறப்பிக்குமென்பதிற் சிறிதும் ஐயமில்லை.
விருப தீர்த்தத்தில் கங்கை வந்து நீராடுவதற்கு அறிகுறியாக ஐப்பசி மாதத்தில் அமாவாசையில் பகல் பதினைந்து நாழிகை வேளையில் இந்த விருப தீர்த்தத்தி லிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்குந் தீர்த்தம் மிகுந்த தூய்மையோடு பல வருடங்களிருத்தலை நேரே அறிந்து பார்த்தோர் பலர்.
இந்த ஸ்தல தரிசனத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் காவேரிப் பிரவாகத்தை வடியச் செய்து துறையைக் காட்டி அவரை இங்கே வரவிடுத்தமையின், கிழக்கேயுள்ள திருவிளநகரில் (1) துறைகாட்டும் வள்ளலெனவும், நல்ல வாக்கை விரும்பித் தவஞ்செய்த ஸ்ரீபிருகஸ்பதி பகவானுக்கு அதனை யருளிச் செய்தமையின் இதன் தெற்கேயுள்ள தாருகா வனத்தில் (பெருஞ்சேரியில்) (2) வாக்குக் காட்டும் வள்ளல் (வாகீசர்) எனவும், ஒரு சமயத்தில் வழிதெரியாமல் மயங்கிய தேவர்களுக்கு வழிகாட்டி யருளினமையின் மேற்கேயுள்ள மூவலூரில் (3) வழிகாட்டும் வள்ளல் (மார்க்கஸகாயர்) எனவும், சிவ ஞானத்தை விரும்பித் தவஞ்செய்த ஸ்ரீ விருபதேவருக்கும் ஏனையோர் பலருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய மோனமுத்திரை காட்டிச் சிவஞானத்தை உபதேசித் தருளினமையின் உத்தர மாயூரத்தில் வள்ளலார் கோயிலில் (4) கைகாட்டும் வள்ளலெனவும் திருநாமங் கொண்டு வள்ளலாகிய ஸ்ரீ மாயூரநாதர் வீற்றிருக்கின்றனர்:
1) ‘காவிரித்துறை காட்டினார்’ (திருவிளநகர்த் தேவாரம்) ; ‘துறை காட்டும் வள்ளலோ வென்றிறைஞ்சினர்’ ; (2) ‘வாக்கருள் வள்ளலென்று, பெருக்க வெவ்வுலகுமேத்தப் பிறங்கினானனைய மூர்த்தி’; (3) ‘வழிகாட்டும் வள்ளலோ வென்றுரைத்தனர்’ ; (4) ‘இடபமுன் பெற்றார் போல வெண்ணிலார்க் கருளுநீரா, லுடனம ரவன்கை காட்டும் வள்ளலென் றொருபேர் பெற்றான்’ (மாயூரப் புராணம், மாயூரவள்ளல் நாற்றிசை வள்ளலாகிய படலம்.)
இதன் எல்லை, ஒரு யோசனையயன்றும், எட்டு வீரட்டத்துள் காலஸம்ஹார க்ஷேத்திரமாகிய திருக்கடவூரும் தட்சயாகஸம்ஹார க்ஷேத்திரமாகிய திருப் பறியலூரும் கஜஸம்ஹார க்ஷேத்திரமாகிய வழுவூரும் காமதகன் க்ஷேத்திரமாகிய திருக் குறுக்கையும் இதனெல்லைக்குள் உள்ளன வென்றும் இத்தலபுராணங்கள் கூறாநிற்கும். இது, ‘பாரவாவுமா, யூரவெல்லையுட், சார வானர்வா, யாரவேத்திட’, ‘இட்ட மாயவீ, ரட்ட நான்கெனிற், பட்ட மான்மியம், சட்ட யார் சொல்வார்’ (மாயூரப் புராணம், காமன் புசைப் படலம், 17‡8) என்பவற்றால் அறியப்படும்.
ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப் பேறு பெற்ற ஸப்த மாதாக்கள் தனித்தனியே பூசித்துத் தவஞ்செய்து கொண்டிருந்த ஏழு சிவஸ்தலங்கள் இதன் பக்கத்தேயுள்ளன. அவற்றுள், 1) பிராமி பூசித்த ஸ்தலம் திருத்தான்றோன்றீசம் (சுயம்புநாதர் கோவில்); 2) மாகேசுவரி பூசித்தது கருணாபுரி (கருணாம்பேட்டை); 3) கெளமாரி பூசித்தது கஞ்சாறு (ஆநந்த தாண்டவபுரம்) ; 4) வைஷ்ணவி பூசித்தது பசுபதீசுவரம் (வள்ளலார் கோவிலுக்கும் தருமபுரத்திற்கும் இடையிலுள்ளது); 5) வாராகி பூசித்தது சக்திபுரி (கழுக்காணிமட்டம்) ; 6) இந்திராணி பூசித்தது தருமபுரம் ; 7) சாமுண்டி பூசித்தது வள்ளலார் கோயில் . இது r புராணத்திலுள்ள சத்தபுரப்படலத்தால் அறியலாகும்.
ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப பேறுபெற்ற இந்திரன் முதலிய திக்பாலர்களும் மற்றைத் தேவர்களும் அகத்தியர் முதலிய பல முனிவர்களும் ஏனையோர் பலரும் தத்தம் பெயரால் பிரதிட்டித்துப் பூசித்த சிவலிங்கங்களும் தீர்த்தங்களும் இத் தலத்தைச் சூழப் பல உள்ளன.
மேற்கூறிய தேவர் முதலியோர்களையன்றிக் கழுகு, கிளி, குதிரை, நரி, பூனை, யானை, வானரம், கரம் முதலிய அஃறிணைகளும் ஸ்ரீ மாயூரநாதரை வழிபட்டுப பேறுபெற்றனவென்றும் அந்த புராணங்கள் தெரிவிக்கின்றன.
மயில் வடிவம் நீங்கி இயற்கையான திருவுருவமுற்ற அம்பிகையின் பிரார்த்த னைப்படி சபையயான்றை நிருமித்து அதில் ஸ்ரீ மாயூரநாதர் தாண்டவமாடி யருளி விஷ்ணு முதலிய தேவர்களின் பிரார்த்தனையின்படி அம்பிகையை இங்கே திருமணஞ் செய்தருளினர். அந்தச் சபைக்கு ஆதிசபையயன்பதும் அத்தாண்ட வத்திற்குக் கெளரீ தாண்டவமென்பதும் திருநாமங்கள்.
மேற்கூறிய திருமணம் வருந்தோறும் துலாமாஸ உத்ஸவத்தில் ஏழாவது திருநாளின் மாலையில் நடைபெற்று வருகின்றது. ‘மயிலாடுதுறையு மணாள னாரும்’ என்னுந் தேவாரமும் இதனை நன்கு புலப்படுத்தும்.
கங்கையின் பிரிவாற்றாமையினால் ஸ்ரீகாசி விசுவநாதர் தம்முடைய பரிவாரங்களுடன் இங்கே எழுந்தருளி விருப தீர்த்தத்தின் தென் பக்கத்திற் கோயில் கொண்டிருக்கின்றனர்.
முக்தியை விரும்பிப் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று தவஞ்செய்து வந்த தம்பதிகளாகிய நாதசன்மா அநவித்தை யயன்பவர்கள் முடிவில் திருவையாற்றை யடைந்து தவஞ்செய்து ஸ்ரீஐயாறப்பர் கட்டளையின்படி இத்தலத்திற்கு வந்து தவஞ் செய்ய, ஸ்ரீ மாயூரநாதர் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ததன்றி எம்மைத் தரிசித்த பலனை உங்களைத் தரிசித்த பின்பே யாவரும் அடையக் கடவரென்றும் அருளிச்செய்ய, கேட்ட அவர்கள் பேரானந்தமுற்றுத்தாம் இங்கே பிரதிட்டித்துப் பூசித்த சிவலிங்கங்களில் ஐக்கியமாயினர்; அவர்கள் பிரதிட்டித்த சிவலிங்கங்கள் அவர்கள் பெயராலேயே வழங்கப்பெற்று வருகின்றன. அவற்றுள் அநவித்தை ஐக்கியமான லிங்கமென்பதற்கு அறிகுறியாக அதற்கு இக்காலத்தும் புடவையே சாத்தப்பட்டு வருகின்றது. ஸ்ரீ மாயூரநாதரையும் ஸ்ரீ அபயாம்பிகை யையும் தரிசிப்போர் ஸ்ரீ சண்டிகேசுவர சண்டிகேசுவரிகளைத் தரிசித்த பின்பு இவ் விரு மூர்த்திகளையும் தரிசிப்பது இத்தலத்தில் வழக்கமாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இஃது இத்தல புராணத்திலுள்ள நாதசன்மா அநவித்தை முக்தி யடைந்த படலத்தால் அறியலாகும். ‘தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்த பின்பும் வேறிருவர்க், கண்டாய்விற் போற்றவருள் காலூரும்’ (திருவிடைமருதூருலா).
நாதன்சன்மா அநவித்தை யயன்பவர்களுடன் இத்தலத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீஐயாறப்பர் இங்கே ஸ்ரீ மாயூரநாதர் கோயிலின் மேலை ரத வீதியின் மேற்கே பரிவாரங்களுடன் கோயில் கொண்டெழுந்தருளி ஸப்தஸ்தான உத்ஸவமும் கொண்டருளிகின்றனர். அந்த உத்ஸவம் இக்காலத்தும் சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகின்றது. அந்த ஸ்தானங்களின் பெயர்கள் வருமாறு : 1) புழுகீசுவரம் (தனியூர்), 2) ஸித்தவனம் (சித்தர்க்காடு), 3) மூவலூர், 4) சோழம்பேட்டை (இது புருஷாமிருகம் பூசித்த விசேமுடைய ஸ்தலம்), 5) வள்ளலார் கோயில், 6) காசி விசுவநாதர் கோயில், 7) ஸ்ரீ மாயூரநாதர் கோயில்.
அகத்திய விநாயகரைக் காப்பிலும், ஸ்வாமியின் திருநாமங்களுள் வள்ளலென்பதை, ‘மயிலையுறை வள்ளல்’, ‘பிறைமோலிதிகழ் வள்ளல்’, ‘செய்சூழ் மயிலையில் வள்ளல்’ (காப்பு, 16,35,40,41,44,70,100) என்பன முதலிய வற்றாலும் மணாளனென்பதை, ‘தனியந கைக்கு மணாளா’, ‘சிலையமலைக்கு மணாளர்’ (29,40) என்பவற்றாலும், மாயூரநாத ரென்பதை, ‘மாயூர நாத மயிலையி லீச’ (11) என்பதனாலும், விருத்தரென்பதை, ‘மயிலைப் பதியகலா முதியன்’ (51) என்பதனாலும், காவிரியின் பெருமையை, ‘உத்தர கங்கையினோங்கிய பொன்னி’, ‘பொன்னித் துறை’, ‘தூயகமான கனகாவிரி நதி’, ‘நித்திலங்க டீரம் பரவுந் திருக்காவிரி’, (7,23,59,88) என்பவற்றாலும், சிவபெருமான் நடனஞ் செய்ததை, ‘அரங்கந்தண் மயிலையிலொன்று கொண்டாடுமையர்’, ‘மயிலைப் பானன்று மன்றுட் கோதினடந்தக வாடினன்’, ‘நடனஞ்சமுகந்தருக்குறச் செய்திடுநாதனும்’, (9,67‡8) என்பவற்றாலும், அகத்தியர் பூசித்ததை, ‘இலைய மலைக்கு, மனமுற யோகத்திருக்கவல்ல, மலைய மலைக்குறு மெய்த்தவன் போற்று மயிலை வள்ளல்’, ‘அன்புடைக்கும் பமுனி பூசை கொண்டவர்’, (40,86) என்பவற்றாலும், இந்திரன் வழிபட்டதை, ‘அங்குலிசன்றாழ் மயிலையி லீசர்’ (99) என்பதனாலும், உமை மயிலாகப் பூசித்ததை, ‘கவுரியயழின் மயிலாய் முன்பரவத்தர்’ (65) என்பதனாலும், உமாதேவிக்கு மயிலுருவத்தை நீக்கி மாயூரநாதர் பழைய உருவத்தை அருளியதை, ‘மயிற்காய மாய வுருத்தீர்த்துமைக்க வடிவளித்தோன்’ (95), என்பதனாலும், திருமால் பூசித்ததை, ‘பலரங்கந்த மலர் கொண்டரி பணிபாதர்’, ‘பணிப் பாயலையகலான்றாழ் மயிலைப் பரமன்’ (9,53) என்பவற்றாலும், நாதசன்மா பூசித்ததை, ‘நாதசன்மா வணங்கற்புத’ (11) என்பதனாலும், பிரமதேவர் பூசித்ததை, ‘பிரமன் பணிமயிலைத் தல சங்கர்’ (22) என்பதனாலும், இத்தலத்தைச் சேர்ந்த வீரட்டானங்களுள் பறியலில் நிகழ்ந்த தக்க யாக சங்காரத்தை, ‘தனைத் தள்ளிச் செய்த மகத்தினத்து வருந்தின மாக்கினன் மாமனுக்கே’, ‘தமையன்றித்தக்க செய்த பொங்குமகந் தகர்த்தார்’ (10,37) என்பவற்றாலும், வழுவூரில் நிகழ்ந்த கஜசங்காரத்தை, ‘முகிலொத்துருமத்தி யன்றீர்ந்தாய்’, ‘மதமுகத்தினந்தத்துவக் கன்றுரித்தோன்’ (6,10,18,25,63, 83,86,96) என்பன முதலியவற்றாலும், குறுக்கையில் நிகழ்ந்த காமசங்காரத்தை, ‘இக்குமதனை வென்றோர்’, ‘காமனைக் காய்ந்தவனும்’ (22,68) என்பவற்றாலும், கடவூரில் நிகழ்ந்த காலசங்காரத்தை, ‘கொடுங் காலனுங் குன்ற மோதினர்’, ‘அந்தகன் வீழ மோதினன்’, ‘முன்பந்தனைய முனிந்தோன்’ (55,84,97) என்பவற்றாலும் இந்நூலுள் ஆசிரியர் புலப்படுத்தி யிருக்கிறார்.
இதன்பாலுள்ள செய்யுட்களிற் சில அகப்பொருளிலக்கண அமைதியையும் சிலப் புறப்பொருளிலக்கண அமைதியையும் பெற்றுள்ளன. ஸ்ரீ மாயூரநாதரைக் கிளவித் தலைவராகக் கொண்டு கூறப்படுவன புறப்பொருளிலக்கணத்துட் பாடாண்டிணை யிலுள்ள கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கம் (புறப் பொருள் வெண்பாமாலை, 236) என்னும் துறையின்பாற் படுவனவாகும். கருத்து விளங்க வேண்டி அச்செய்யுட்களுக்குக் குறிப்புரையில் அகப்பொருட் கிளவித் துறைகளே காட்டப் பெற்றிருக்கின்றன. இம்முறை ஆன்றோர்கள் உரையில் முன்பு கண்டதே.
அகத்துறை பயின்ற செய்யுட்கள் : 4, 9, 15, 18, 9, 23, 25-8, 31, 34, 36-9, 42,44,46-9,52,55-6,60‡63, 65-7, 69-75, 79, 82-6,92, 94, 96-9.
புறத்துறை பயின்றவை : 5, 8, 17, 24, 29, 32‡3, 35, 41, 43, 57‡8, 76, 80, 87, 89, 93,95.
78 ஆம் செய்யுள் யமகமாகவும், 12, 72 ஆம் செய்யுட்கள் இரண்டடி மடக்கு களாகவும் அமைந்துள்ளன.
சில செய்யுட்களில் ஒரே சரித்திரத்தை நான்கு அடிகளிலும் திரிபில் தொடர்ந்து அமையுமாறு இவர் பாடியிருத்தல் அறிந்து மகிழத்தக்கது; இந்த ஆற்றல் கவிஞர்களிற் சிலர்பாலே அமைந்திருக்கும்.
தூதுக்குரியவற்றுள், அன்னப்பறவை 8,57 ஆம் செய்யுட்களிலும், வண்டு 32,93 ஆம் செய்யுட்களிலும், பாங்கி விடுதூது 89 ஆவதிலும் வந்துள்ளன.
இதில் இடையே கூறப்பட்ட வேறு தலங்கள் ; தில்லை 9, கூடல், ஐயாறு 80.
இந்த ஸ்தலத்தைப் பற்றிக் கூறப்படும் வேறு விசேடங்கள் : நீர்வளம், 7,23, 46, 50, 59, 77, 89 ; நிலவளம் 25, 31, 35, 39, 56, 62, 64, 68, 73-4, 76, 89, 98; சோலைவனம், 10, 17,20,29, 44, 49, 61, 66, 73‡4,81, 91, 100 ; கிடங்கு 3 ; மதில், 4; ஆவணம் 5, 14 ; கோபுரம் 4, 58.
மனையிற் பழகுகிள்ளை தாங்கா வியம்புகன் மாமயிலை (32) என்பதனால் இத்தலம் கல்வி மிகுதியாக நிறைந்திருந்த இடமென்பதும், ‘மெய்யர் மகச் சடங்கிடையாகுதி பெய்யுமயிலை’ (85) என்பதனால் வேள்வி புரிபவர் இங்கிருந்தன ரென்பதும் குறிப்பிக்கப்படுகின்றன.
இந்நூலிற் பயின்ற பழமொழிகள் : வெடிப்பிற்கவிழ்ந்த நீர்போல (26) ; ஏரி உடைந்தாற் போல (32); இலவுகாத்த கிள்ளை போல 73.
வேறு சில வியங்கள் : மணஞ்செய்கையில் ஆறு கணிதல், 70 ; துயரக் கண்ணீர் சுடுதல், 60 ; தேயம் பதினெட்டு, 16 ; பஞ்சாக்கினி மத்தியில் தவஞ் செய்தல், 34.
இதனுள் ஆதங்கம், சித்தம், நீடம் முதலிய வடசொல் ஒரு மொழிகளும், அதிகாந்திச் சிகரம், தனுபங்குரம் முதலிய பல தொடர்மொழிகளும் காணப் படுகின்றன. இதனால் ஆசிரியர் வடசொற்களை ஏற்றவாறு அமைத்துப் பாடும் இயல்புடையாரென்பது அறியப்படும். சில வடசொற்கள் திரித்தும் வழங்கப் பட்டுள்ளன. அவற்றில் சில வருமாறு : அவத்தர் 65, அவராதி 13 ; இரமை 31 ; இலாவம் 17 ; கணிகம், 87 ; கந்தர்ப்ப வேள்வி, 52 ; சருமந்தர, 43 ; சிரசு, 54 ; பத்தசனம், 15 ; பறுவதந்நதனை, 71 மனது 96 ; வாதை 75.
சில சொற்களும் சொற்பிரயோகங்களும் : ஆட்டி, 96 ; ஆயல் , 66 ; உரும்,6 ; ஒடிச்சு, 56 ; ஒயில், 95 ; கண்ணிவாய்க்கால், 87 ; கமைந்து, 60 ; கெஞ்ச, 3 ; சனியன், 24 ; சினை ‡ கர்ப்பம், 62 ; தத்து, 10 ; தனம், 30, 46 ; தூரி ‡ தூரிகை, 85; தெறுகுது, 87 ; படவு, 72 ; படுகை 76 ; லக்கு, 42.
இவர் சில சிலவிடங்களில் ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றை இறுதி குறைத்தும் வழங்குவர்.
இந்நூற் செய்யுட்களுள், சிலவற்றில் தந்நகரம் வரவேண்டிய விடத்தில், றன்னகரமும் றன்னகரம் வரவேண்டிய இடத்தில் தந்நகரமும் திரிபலங்காரம் நோக்கி வந்தனவெனக் கொள்க. பிற வேறுபாடுகளுக்கும் அவ்வலங்காரமே காரணமாகும்.
இந்நூலாசிரியர் வாக்காகிய நாகூர்ப் புராணத்தில் இந்நூலிற் கண்ட சில சொல்வழக்கும் கருத்தும் காணப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு :
மயிலையந்தாதி
காப்பு, பிதாமகன்பால் வருகும்பமாமுனி; (இது பிரமன் அகத்தியரை நோக்கிக் கூறியது; ‘தந்தை யாகிநாந் தனையனா நின்னிற் றன்னிலெய துவததி சயமோ’ நாகூர்ப் புராணம், சமுத்திர ராசன் பூசித்த.32.
ஒரு கோட் டிருகும்ப மும்மத நால்வாய்க் களபம் ; ‘ஒருமருப் பிரண்டு கும்பத், தருவிமும் மதத்து நால்வாயைங்கர னடிகள் போற்றி’ r கடவுள். 4.
2. தத்துவந்தனை யாய்ந்தே ... பிறவாமை பெறுதி நெஞ்சே : ‘தத்துவங்க ளாய்ந்து சிவ ஞானமெய்திச் சார்வர்முத்தி’ r சந்திரதீர்த்த 51.
16. பதிதன் : பவமுறு பதிதரே r புன்னாக. 63.
34. அஞ்சாரலின் மெயத்தவஞ் செய்யினும் ; ‘பஞ்சாக்கினி யினாப்பண் மானவர் தவமுயன்றால்’ r புன்னாகவன .71.
42. லக்கிட்ட... அம்பு ; ‘அம்பிலக்கை நோக்கி யயய்யின்’ r நாகராசன். 58.
52. கந்தர்ப்ப வேள்வி : ‘கந்தர்ப்பர் சங்கீதம் பாட’ r இந்திரன் பூசித்த.50.
54. சிரசு : ‘சிரசின்மீது கொடு’ r நாகராசன் பூசித்த.66.
61. மலினம் ‡ கருமை. ‘விடஞ்சேர் மலின கந்தரம்’ r சமுத்திர. 38.
76. மிக்கென் றோதப் படுகை வலியமன்பர்க் கருளுத்தமனே : ‘நற்கைவல்லிய, முத்தியைக் கொடுக்கு மீச’ r நாகரசா. 56.
இந்நூல் சம்பந்தமாக இரண்டு நிகழ்ச்சிகள் உண்டு. அவற்றுள் ஒன்று :
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது இளம் பிராயத்தில் பல ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுத் திருவாடுதுறை ஆதீனத்தில் 14 ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரவர்களைத் தரிசிக்கப் போகும் வழியிற் பட்டீச்சரத்தில் தங்கிய காலத்து அவ்வூரார் பசுபதி பண்டாரமென்னும் ஒரு தமிழ் வித்துவானைக் கொண்டு பரீட்சித்த பொழுது அவர் இந்நூலிலுள்ள, ‘நன்கொடிச்சிக்கை’ (56) என்னும் செய்யுளைக் கூறிப் பொருள் வினவினார். பிள்ளையவர்கள் இந்நூலை அதுவரையிற் பாராமலிருந்தும் உடனே அச் செய்யுளின் பொருளைத் துறையுடன் விரைவில் நன்கு விளக்கவே, அதைக் கேட்டவர்கள் பலரும் அவர்களுடைய கல்விப் பெருமையை அறிந்து பாராட்டுவா ராயினர். அதன்பின்புதான் அவர்கள் புகழ் கும்பகோணம் முதலிய இடங்களிற் பரவியது. இது, பட்டீச்சரத்திலிருந்த வெள்ளைவாராணம் பிள்ளை யயன்பவராலும் பிள்ளையவர்களாலும் கூறப்பட்ட செய்தி.
மற்றொன்று :
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் சிதம்பரத்தில் இருக்கும் பொழுது பிள்ளையவர்களுடைய மாணாக்கர்களில் ஒருவராகிய தேவிகோட்டை வன்றொண்டச் செட்டியாரென்பவர் அவர்களிடம் இந்நூற்சுவடியைக் காட்டினார். நாவலரவர்கள் அதைப் பிரித்துப் பார்க்கையில், ‘வலவருமைக்கு’ (30) என்னும் செய்யுள் அகப்பட்டது. அதைப் படித்துப்பார்த்து நடையின் நயம் முதலியவற்றை உணர்ந்து மகிழ்ந்து வேறு சில செய்யுட்களையும் படித்து இன்புற்று, ‘இந்நூலை அச்சிட்டால் தமிழ் படிப்பவர்களுக்கு நல்ல பயனை அளிக்கும்’ என்றார்களாம். இச்செய்தியை அச்செட்டியாரவர்கள் வாயிலாய் அறிந்தேன்.
இந்த இரண்டு செய்திகளுமே இந்நூலை யான் தேடுவதற்கும் படித்ததற்கும் காரணமாயின.
இந்நூலின் மூலத்தை மட்டும் சென்ற சருவசித்து வருடம் பங்குனி மாதம் (1888) கும்பகோணத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.
பிள்ளையவர்களிடத்தில் படிக்கப் போய் முதலிற் சிலமாதம் இருந்து பாடங்கேட்ட இடம் மாயூரமாதலால் அத்தல சம்பந்தமான இந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்ததைக் குறித்து மிகவும் இன்புறு கின்றேன்.
இந்நூலின் ஏட்டுச் சுவடிகளைக் கொடுத்துதவியவர்கள் : 1) சோழன் மாளிகை ஸ்ரீ இரத்தினம் பிள்ளையவர்கள், 2) மாயூரம் கீழைவீதி ஸ்ரீ வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள், 3) ஸ்ரீ முத்துச்சாமி பிள்ளையவர்கள், 4) பட்டீச்சரம் ஸ்ரீ வெள்ளைவாரணம் பிள்ளையவர்கள். முத்துச்சாமி பிள்ளையவர்களின் ஏட்டுப் பிரதி மிகப் பழையதாக இருந்தது. அதிற் சில சொற்களுக்குப் பொருளும் வரையப் பட்டிருந்தன. முத்துசாமி பிள்ளையவர்களின் ஏட்டுப் பிரதி மிகப் பழையதாக இருந்தது. அதிற் சில சொற்களுக்குப் பொருளும் வரையப்பட்டிருந்தன. அவை இந்நூலாசிரியரால் எழுதப்பட்டனவோ அன்றி அவரிடம் பாடங்கேட்டவரால் எழுதப் பட்டனவோ தெரியவில்லை.
இக்காலத்திற் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பொருட்டு இந்நூல் குறிப்புரையுடனும் ஸ்தல விசேம் முதலிய செய்திகளுடனும் இப்பொழுது பதிப்பிக்கலாயிற்று.
இதனை ஆராயுங்காலத்தும் பதிப்பிக்கும் காலத்தும் உடனிருந்து ஸஹாயஞ் செய்தவர் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா.ஜகந்நாதையர்.
இப்படியே நான் பாடங்கேட்டனவும் ஆராய்ந்து வைத்திருப்பனவுமாகிய பல பிரபந்தங்கள் முதலியவற்றைக் குறிப்புரைகளுடன் முறையே பதிப்பித்து வெளிப்படுத்த எண்ணியிருக்கிறேன். திருவருள் நிறைவேற்ற வேண்டும்.
சென்னை, 29.5.30
இங்ஙனம்
வே. சாமிநாதையர்.
No comments:
Post a Comment