Friday, December 27, 2019

திருக்குறளும் மொழிபெயர்ப்புகளும் - பேரா. ரெ. மகேந்திரன், ஆங்கிலத்துறை

திருக்குறளும் மொழிபெயர்ப்புகளும் 
-பேரா. ரெ. மகேந்திரன், ஆங்கிலத்துறை 


தமிழ் இணையப் பல்கலைக்கழக உரை

தொல்காப்பியர் மொழிப்பெயர்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். அவை 1. மூல நூல் 2. வழிநூல்.

சா. கந்தசாமி அவர்கள் மொழி பெயர்ப்பின் மூலம் உள்ளுர் இலக்கியம் உலக இலக்கியமாகிறது என்கிறார்.

ந. முருகேச பாண்டியன் அவர்கள் மொழி பெயர்ப்பு என்பது வாழையடி வாழையாக வர வேண்டும் என்கிறார்.

1971-2019 வரையிலான காலக்கட்டங்களில் உலக அளவில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த அகதா கிருஷ்டி. 7236 முறை அவருடைய எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் ஷேக்ஸ்பியர் உள்ளார்.

உலகில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட மொழி ஜெர்மன். 3,01,935 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 44 ஆவது இடத்தில் இந்தி உள்ளது. இந்தியாவில் இரவிந்திரநாத் தாகூர் இலக்கியங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழில் திருக்குறள் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று யுனஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.

82 உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் 57 முறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

என் உள்ளத்திற்கு நெருக்கமானது திருக்குறள். திருக்குறளிலிருந்து நான் பெற்ற அறிவை வேறெந்த நூலும் தரவில்லை என்றார் மகாத்மா காந்தியடிகள். திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகப்படுத்தியது ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்.

உலகிற்கு தமிழ் மொழி வழங்கிய மிக பெரிய கொடை திருக்குறள் என்றார் கவிஞர் பாரதியார்.

கி.பி. 1272 இல் திருக்குறளை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒழுங்குப்படுத்தி உரை எழுதினார் பரிமேலழகர்.

18 நூற்றாண்டில் தமிழகம் வந்த கிறித்துவ மதக் குருக்கள், திருக்குறளில் கிருத்துவ மதப் போதனைகள் நிரம்ப இருப்பதைக் கண்டு லத்தீன், பிரஞ்ச், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர்.

1730 இல் முதன் முதலாக லத்தின் மொழிக்கு திருக்குறளை மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்க்கி. அவர் அறத்துப் பாலையும் பொருட்பாலையும் மட்டும் மொழி பெயர்த்தார். காமத்துப் பால் கிருத்துவ மதக் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததாக அவர் கருதியதால் அதை அவர் மொழி பெயர்க்க வில்லை.

1767 இல் பெயர் தெரியாத ஒருவரால் பிரஞ்சு மொழிக்கு திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

1848 இல் மான்சியர் ஏரியல்(Monsieur Ariel) என்பவரின் பிரஞ்சு மொழிபெயர்ப்புதான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
இம்மொழிப்பெயர்ப்புகள் அனைத்தும் உரைநடை வடிவிலேயே மொழிபெயர்க்கப்பட்டது.

கார்ல் க்ராவ்ல் (Karl Graul) என்பவர் ஜெர்மன் மொழியில் 1856 இல் மொழிப்பெயர்த்து லண்டன் மற்றும் லீபிஜிங்கில் வெளியிட்டார்.

1952 இல் நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட்  சுவைட்சர் (Albert Schweitzer) அவர்கள் கார்ல் க்ராவ்லின் திருக்குறள் மொழிப் பெயர்ப்பை படித்துவிட்டு, திருக்குறளின் பெருமைகளைப் பற்றி ‘இந்திய சிந்தனைகளும் அதன் வளர்ச்சியும்’ என்ற நூலில் எழுதினார்.

ஜி.யு. போப்பின் திருக்குறளின் ஆங்கில மொழிப் பெயர்ப்பிலிருந்து ஜப்பான் மொழிக்கு சுஸ்வ் மாட்சுனாகா (Shuzo Matsugaga)  மொழிப் பெயர்த்தார்.

திருக்குறளை ஆங்கில மொழிப் பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் பிரான்சிஸ் வைட் எல்லீஸ்(Francis White Ellis). சென்னை புனித ஜார்ஜ் கல்லூரி, அரசு அச்சகம் ஆகியவற்றை தோற்றுவித்தவர். 

120 திருக்குறள்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதில் 69 குறள்பாக்களைத் தவிர மற்றவை உரைநடையில் மொழி பெயர்க்கப்பட்டவை.
1840 இல் வில்லியம் யஹன்றி ட்ரெவ் (William Henry Drew) 630 திருக்குறள் பாக்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதில் பரிமேலழகர் உரை மற்றும் ராமானுஜ கவிராயரின் விளக்க உரைகளும் இணைக்கப்பட்டிருந்தன. பிற குறள்களை ஜான் லாசரஸ் மொழிப் பெயர்த்தார்.

ஜி.யு.போப் (George Uglow Pope) அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிப்பெயர்ப்புதான் முழுமையானதாகும். ‘Victorian English’ இல் மொழிப்பெயர்த்தார். இது புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருக்கும். இவர் திருவாசகம், நாலடியார் மற்றும் சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.

தமிழறிஞர்கள் மொழிப்பெயர்ப்பு

வி.வி.எஸ். அய்யர் 1915 இல் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்தார்.
1927 இல் மைக்கேல், பாப்புலே (1931), ரெங்கநாத முதலியார் (1933), இராஜகோபாலாச்சாரி (1937), பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை (1942),  வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (1949), பாலசுப்பிரமணியன் (1962), சுத்தானந்த பாரதி (1968), கஸ்தூரி ஸ்ரீனிவாசன் (1969), வான்மிகி நாதர் (1969), அருளப்பா (1976), கே.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் (1988), எஸ்.எம். சுந்தரம் (1989), எஸ்.என். ஸ்ரீராம தேசிங்கன் (1991), ராசிபுரம் ஆர். ராமபத்ரன் (1994), கண்ணபிரான் (1995), எஸ். எம். இலியாஸ் (2000), வரதராஜ வி. இராமன் (2000), பி. வரதராஜன் (2004), அகமுடை நம்பி (2004), ஜே. நாராயண சாமி (2008), வி.முருகன் (2009), எம். இராஜாராம் (2006) ஆகியோர் மொழி பெயர்த்துள்ளனர்.

இந்திய மொழிகளில் திருக்குறள்

1595 இல் பாஷா என்பவர் பேச்சு வழக்கில் மலையாளத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். 

இந்திய அளவில் முதல் மொழிப் பெயர்ப்பு என கொச்சின் அகழ்வாராய்ச்சி நிறுவனம் 1993-94 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் மொழிப் பெயர்ப்பாளர் பெயர் தெரியவில்லை.

வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, செளராஸ்ட்ரா, தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் சென்னை செம்மொழி ஆய்வு நிறுவனம், அஸாமி, பெங்காலி, போடோ, டோகி, இந்தி, காஷ்மிரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், ஒடியா, சமஸ்கிருதம், சாந்தணி, சிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வி. இராமசாமி என்பவர் திருக்குறள் மொழி பெயர்ப்புகளில் ஆராய்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதில் தனது ஆய்வாக திருக்குறள் சரியாக மொழிப் பெயர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அந்தணர் -  ஜி.யு. போப் அப்படியே எழுதினார்.  நாராயணசாமி ‘Disiciplined Person’ என்று மொழிப்பெயர்த்தார்.

அணிச்சம் - அப்படியே பயன்படுத்தி, ‘Transliterature script’ எழுதியுள்ளனர்.

குவளை மலர் - ஜி.யு. போப்‘Lotus’ என்று எழுதியுள்ளார். நாராயணசாமி ‘Lily’என்று எழுதியுள்ளார்.

யாழ்- ஜி.யு. போப் ‘Lute’ என்று எழுதியுள்ளார். ‘Lute’ என்றால் புல்லாங்குழலைக் குறிக்கும்.

அறம் - இதை ராஜகோபாலாச்சாரி ‘Dharma’ என்று மொழிபெயர்க்கிறார். இது சரியான மொழி பெயர்ப்பு என்று வி.சி.குழந்தைசாமி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. https://www.youtube.com/watch?v=y5uhWNbKVQM&t=1760s

    ReplyDelete